ஐதராபாத் மாநிலத்தில் ஒன்றரை வருடங்களாக கணவனை விட்டு பிறந்து வாழ்ந்த மனைவி, விவகாரத்து கடிதத்தை பார்த்ததும் மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மேகனா (30) என்பவர் டி.சி.எஸ்ஸில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு வினய் குமார் (32) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த 6 மாதங்களிலே வினைக்குமார் மற்றும் அவருடைய பெற்றோர் வரதட்சணை கேட்டு மேகனாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் கோபித்துக்கொண்ட மேகனா தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தங்கிய மேகனா, கணவரின் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் வினய்குமார் தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கடிதம் அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மேகனா, மனவிரக்தியிலேயே இருந்துள்ளார். இருப்பினும், அடுத்த நாளன்று ஆவருடைய மாமியார் குடியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க வினய் குமார் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மேகனா கட்டிடத்தின் 9வது மாடிக்கு சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் மேகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற இளம் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த நித்யா, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற தேர்தல் பயிற்சியில் நித்யா கலந்து கொண்டார்.
அப்போது திடீரென மயக்கம் அடைந்த நித்யாவை சக ஆசிரியர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரியவந்த நிலையில் சக ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடந்தி வருகிறார்கள். தேர்தல் பணி காரணமாக கடந்த சில நாட்களாக, நித்யா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரகதி என்ற கல்லூரி மாணவி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவரை நேற்று முன் தினம் முதல் காணவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் உள்ள ஏ நாகூர் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் அங்கு விரைந்த பொலிசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அது மாயமான ஒட்டன்சத்திரத்தை சேர்த்த கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பேரில் சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சதீஷ், மாணவியின் தூரத்து உறவினர் என்பது தெரியவந்துள்ளது. மாணவி பள்ளி படிக்கும்போதே சதீஷ், மாணவியின் வீட்டில் பெண் கேட்டுள்ளார்.
அதற்கு பிரகதி பள்ளி தான் படிக்கிறார். இப்போது திருமணம் செய்துவைக்க முடியாது என பெற்றோர் மறுத்துள்ளனர். இருப்பினும் அவருக்கு பிரகதியை அடைவதில் தீவிரமாக இருந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு திருமணமும் ஆகியுள்ளது. திருமணம் ஆன பின்பும் கூட, பிரகதியை பெண் கேட்டு மீண்டும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, பெற்றோர்கள் வற்புறுத்தியதாலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், பிரகதியை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியும் பிரகதியின் பெற்றோரிடம் சதீஷ் கேட்டுள்ளார்.
ஆனால் இந்த முறையும் சுதாவின் பெற்றோர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். எப்படி திருமணம் ஆனவருக்கு மகளை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதனிடையே பிரதிக்கு, அவர் விரும்பிய இளைஞருடன் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில் தான் பிரகதி கல்லூரி விடுதியை விட்டு வழக்கம்போல வீட்டிற்கு செல்ல வந்த நிலையில் காணமல் போயுள்ளார், அதன் பின்னரே அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
யாழ் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சம்பியன் கணித செயன்முறை மொபைல் அப் செயலி உருவாக்கம்.
டயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால் நடத்தப்பட்ட அலைபேசி செயலி வடிவமைப்பு போட்டியில் (Dialog App Challenge 2018) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயிலும் மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து தயாரித்த கணித செயன்முறை செயலி (Mathematics Mobile App) முதலிடத்தைப் பெற்றது.
கணிப்பான் (Calculator) சாதனத்தின் தொழிற்பாட்டுக்கு மேலதிகமாக தரவுகளைப் பயன்படுத்திப் பெறும் விடையுடன் செய்கை வழித் தரவுகளையும் ஒரே நொடியில் காண்பிக்கும் வகையில் இந்தச் செயலியை மாணவன் பிரவீனனுன் அவரது சகோதரியும் இணைந்து வடிவமைத்திருந்தனர்.
வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த இவர்களின் தந்தை ஆசிரியராவார். அலைபேசி செயலிகளை உருவாக்குவதில் அதிக அக்கறைகாட்டி வந்த தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் பிரவீனுக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர் இராமநாதன் சுகுமார் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
ஆசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் தான் தயாரித்த அதிதிறன் அலைபேசி செயலியை (Smart Phone App) மாணவன் பிரவீனன் சமர்ப்பித்திருந்தார். அதிலும் அவரது செயலிக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.
இந்த நிலையில் அலைபேசி செயலி வடிவமைப்பு 2018ஆம் ஆண்டுக்கான போட்டியில் தான் புதிதாக உருவாக்கும் செயலியை சமர்ப்பிக்கவிருந்தார் பிரவீனன். போட்டி விதிகளின் படி அவர் தனிப்பட இந்தச் செயலியை சமர்ப்பிக்க முடியாத நிலையில் பாடசாலையில் சக மாணவர்களின் உதவியைக் கோரினார். எனினும் எவருமே முன்வராததால் பிரவீனன் தனது சகோதரி தர்க்ஷிகாவை தனது குழுவில் இணைத்து செயலியை உருவாக்கினார்.
செயலி சமர்ப்பிக்கப்பட்ட நடத்தப்பட்ட நேர்முகத் தேர்விலும் தமது செயலி தொடர்பில் முழுமையான விளக்கத்தை இருவரும் முன்வைத்தனர்.
இந்த நிலையில் தேசிய மட்டத்தில் 11 பாடசாலை அணிகள் தமது செயலியை முன்வைத்திருந்தன. இறுதிப் போட்டி கொழும்பு றோயல் கல்லூரியில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் 11 அணிகளில் முதலாமிடத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது. செயலியை வடிவமைத்த மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரியான மாணவி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் கிண்ணைத்தை சுவீகரித்ததுடன் அவர்களுக்கு 3 லட்சம் ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அது தொடர்பான சுற்றுநிரூபத்தையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதன் படி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவது கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடக பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக அரச ஊடகமொன்று சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,
குறிப்பிட்ட வருமானத்திலும் பார்க்க குறைந்த வருமானத்தை கொண்ட பயனாளிகளின் குடும்பங்களில் கற்றலுக்கு ஆற்றல் கொண்ட பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்காகவும், பாடசாலைகளில் தரம் 5 இற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காகவும் தரம் 5 புலமைப்பரிசிலுக்கான பரீட்சை வருடாந்தம் நடத்தப்படுகிறது.
இருப்பினும் தற்பொழுது இந்த அடிப்படை நோக்கத்துக்கு அப்பால் புலமைப்பரிசில் பரீட்சை ஊடாக புலமை ஆற்றல் மற்றும் அறிவு வளர்ச்சியில் முரண்பாடுகளை கவனத்தில் கொள்ளாது சிறு பிள்ளைகளின் மனதிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேவையற்ற போட்டியாக உருவெடுத்திருப்பதாக சிறுவர் உளவியல் வைத்திய துறை விசேட வைத்தியர்கள் உள்ளிட்டோரின் நிலைப்பாடாக அமைந்துள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானத்தை கொண்ட பயனாளிகளில் புலமைப்பரிசை பெற்று கொள்ள வேண்டிய குடும்பங்களிலும் பார்க்க பொதுவான தேசிய பாடசாலை மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகுவதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயங்களை கொண்டு எதிர்காலத்தில் புலமைப்பரிசில் தகுதியை பெறும் வருமான வரையறைக்கு உட்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட பயனாளிகளின் குடும்ப மாணவர்களை தவிர ஏனைய அனைத்து மாணவர்களும் அந்த பரீட்சைக்கு சமர்பிப்பது கட்டாயம் அல்ல என்றும் இதற்காக எந்த வகையிலும் மாணவர்களுக்கு அழுத்தங்கள் ஏற்பட கூடாது என இது தொடர்பாக வெளியிடப்படும் 08/2019 சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மாணவர்கள் விருப்பத்துக்கு அமைய பெற்றோரின் விருப்பத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதா இல்லையா குறித்து என்பது தீர்மானிக்கப்படும். சில சந்தர்ப்பத்தில் தரம் 5 நிறைவு செய்யும் ஆரம்ப பாடசாலை ஒருவருக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றாத சந்தர்ப்பத்தில் அவருக்கு ஆரம்ப பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுக்கும் அதிகாரம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபேறை அடிப்படையாக கொண்டு போட்டி தன்மையை அதிகரிக்கும் வகையில் பதாதை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று இந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை சித்தி எய்திய, சித்தி அடையாத பிள்ளைகளாக வேறுபடுத்தும் பிளவுக்குள் சிறு பிள்ளைகள் பாரிய அளவில் உளவியல் ரீதியிலான நெருக்கடிக்கு உள்ளாகுவதாகவும் அவர்களது மனநிலை அபிவிருத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், புலமைப்பரிசில் தொடர்பான மதிப்பீட்டு குழு ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் தரம் 5 மாணவர்களை உள்வாங்கும் பொழுது சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை ஆலோசனைக்கமைய வசதிகள் மற்றும் சேவை கட்டண பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணம் போன்ற அங்கீகரிக்கப்பட கட்டணங்களை தவிர்ந்த ஏனைய நிதி உதவி வசூலிப்பது அல்லது ஏனைய நன்கொடைகளை பெற்றுக் கொள்வது தடையாகும் என்றும் சுற்று நிரூபனத்தில் சுட்டிகாட்டப்படடுள்ளது.
சில பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் முறைக்கேடாக பணம் வசூலிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
புலமைப்பரசில் பரீட்சை மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி புலமைப்பரிசில் பரீட்சையில் மீண்டும் மதிப்பீடு செய்து அதற்காக பொருத்தமான மாற்று பரிந்துரையை பெற்று கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட புலமைப்பரிசில் மீளாய்வு குழுவின் சிபாரிசின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் இறுதி தீர்மானத்திற்கு இந்த குழு இன்னும் எட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாலை வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை(06.04) யாழ்.மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது. குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அன்று மாலை நிறைவுக்கு வந்தது.
இந்நிலையில் குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் குளித்துவிட்டு தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது அவர் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன்(வயது-40) என்பவரே உயிரிழந்தவராவார்.
இதேவேளை,இவர் அகில இலங்கை இந்து மகாசபாவின் சுன்னாகம் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பன்னிபிட்டிய – கலல்கொட பிரதேசத்தில் காரொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்து கொட்டாவ – பொரளை பிரதான வீதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற போது காரை செலுத்திய இராணுவ உத்தியோகத்தர் மது போதையில் இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேகநபரான இராணுவ உத்தியோகத்தர் தங்கலம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய, வைத்திய சேவை உதவியாளர்கள் மற்றும் குறைநிரப்பு வைத்திய சேவையினரும் இணைந்து இன்று (08.04.2019) காலை 8.30 மணி தொடக்கம் 24 மணிநேர இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6 வருடங்களாக தர உயர்வுகளை பெறவும், தாதிய பட்டதாரிகள் சம்பளத்தை உத்தியோக ரீதியான தொழிலுக்குரிய சம்பள அளவுத்திட்டத்தை பெறவும், சம்பள முறன்பாட்டைத் தீர்க்க ஐனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையினை அமுல்படுத்தவும், இழந்த பதவி நிலையை மீளப்பெறல், ரூபா 3000 ஆகவுள்ள விஷேட படியை ரூபா 6000 ஆக உயர்த்துதல், மேலதிக நேர கொடுப்பனவை 1/80 ஆக பெறவும், மீதி மேலதிக நேர கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல், சுகாதார நிர்வாக சேவையினை உருவாக்குதல் ஆகிய கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் மற்றும் இரத்த சோதனை போன்ற சேவைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்மையினால் நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் நோயாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றும் நேற்று முன்தினமும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி சென்ற பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி பயணப் பொதிகள் அடையாள அட்டைகளை சோதனை மேற்கொண்ட விஷேட அதிரடிப்படையினர் 15 நிமிடங்களின் பின்னர் செல்ல அனுமதியளித்துள்ளனர்.
நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து 7.15மணியளவில் கண்டி சென்ற இ.போ.ச பேருந்து இரவு 9.25மணியளவில் புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாக அமைக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கை நிலையத்தில் வழிமறிக்கப்பட்டு பயணிகளை அவர்களது பயணப்பொதிகளுடன் இறங்கிவருமாறு தெரிவிக்கப்பட்டு பயணப்பொதிகள் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் பேருந்தை செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் சென்றவர்களை கீழே இறங்குமாறு தெரிவிக்கப்பட்டதையடுத்து படையினர் எதற்காக இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்கின்றார்கள் என்ற விடயங்களை அறிவதில் பயணிகள் ஒருவருக்கிடையே பேசிக்கொண்டனர்.
எனினும் வழிமறித்த விஷேட அதிரடிப்படையினரிடம் எதற்காக இவ்வாறு வயது வேறுபாடுகளின்றி பயணிகளை கீழே இறக்கி சோதனை நடவடிக்கை மேற்கொள்கின்றீர்கள் என்ற கேட்டபோது தமது வழமையான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம் படையினரின் சோதனை நடவடிக்கை முடிவடைந்து ஓமந்தை நொச்சிமோட்டை பாலத்தில் கடமையிலிருந்த பொலிசார் தமது சோதனை நடவடிக்கைக்காக பேருந்தை வழிமறித்து உட்சென்றபோது அங்கு நின்றவர்கள் புளியங்குளம் முகாம் விஷேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர் எனத் தெரிவித்ததையடுத்து பொலிசார் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.
வவுனியா, ஓமந்தை, பறநாட்டங்கல் பகுதியில் உள்ள தற்காலிக வீடும் அதனுள் இருந்த 40 நெல் மூடைகளும் எரிந்துள்ள போதும் அப்பகுதி கிராம சேவகர் சென்று பார்வையிடவில்லை. இதனால் வீட்டு உரிமையாளர் இழப்பீடுகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தை, பறநாட்டாங்கல் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக வீடு கடந்த வியாழக்கிழமை தீ விபத்தினால் முழுமையாக எரிந்து நாசமாகியது. இதன்போது குறித்த வீட்டிற்குள் அடுக்கப்பட்டிருந்த 40 நெல் மூடைகள் மற்றும் வீட்டு உடமைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியது.
அயலவர்கள் தீயை அணைக்க முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் ஓமந்தை பொலிசில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆனால் தற்காலிக வீடும் நெல் மூடைகளும் எரிந்து மூன்று தினங்கள் கடந்துள்ள போதும் அப்பகுதி கிராம அலுவலர் வருகை தந்து எரிந்த வீட்டையோ அல்லது நெல் மூடைகளையோ பார்வையிடவில்லை.
எமது வயலில் விளைந்த நெல் முழுமையாக எரிந்துள்ளது. இதனால் நாம் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கிராம அலுவலர் வருகை தந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையால் நாம் இழப்பீடுகளை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வைரஸ் நோய் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களே இந்த நோய் தொற்றிற்கு அதிகமாக பாதிக்கப்படுவதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய நோய் அறிகுறிகளுடன் மக்கள் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். அவர்களில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வறட்சியான காலநிலை காரணமாக பெற்றுக் கொள்ளும் நீரை கொதிக்க வைத்து ஆற வைக்காமல் அருந்துகின்றமையினால் இந்த வைரஸ் தொற்று பரவுகின்றதென சந்தேகிக்கப்படுகின்றது. நன்று நீரை கொதித்து ஆற வைத்து பருகுமாறும், மலசல கூடம் சென்று வந்ததன் பின்னர் சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் படும் வகையில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கேக் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பம் படும் வகையில் வைக்கப்படும் கேக்களின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் கேக்கினை குளிர்சாதன பெட்டியில் அல்லது குளிரான இடத்தில் வைத்து விற்பனை செய்யுமாறு வர்த்தகர்களிடம் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுள்ளது.
அத்துடன், கேக் கொள்வனவு செய்யும் மக்கள் காலவதியாகும் திகதிக்கு மேலதிகமாக கேக்கின் தரம் தொடர்பில் அதிக அவதானத்தை செல்லுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குருணாகலில் இரு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அலவ்வ பகுதியை சேர்ந்த 14 மற்றும் 11 வயதுடைய இனோகா சச்சினி மற்றும் திரோஷா ஜீமேஷிகா என்ற சிறுமிகளே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலகும்புர சங்கிலி பாலத்திற்கு அருகிலுள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் பொல்கஹவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு சிறுமிகளும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்செயலாக எதுவும் நடந்ததா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணிக்குள் பெண்ணொருவரின் ஊடுருவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் இலங்கை கிரிக்கெட் அணியின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டதுடன், திட்டமிட்டு அணியின் தோல்விக்கு பிரதான காரணமாகவும் செயற்பட்டுள்ளார்.
இந்தியாவில் செயற்படும் பிரபல சூதாட்டக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணும் இந்தப் பெண், அவர்களின் தேவைக்கு ஏற்ப செயற்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை அணியின் பல வீரர்களுடன் பாலியல் உறவுகளையும் இவர் பேணியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2017 இல் ஸிம்பாப்வே அணியுடனான அதிர்ச்சி தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கட் அணியில் ஊழல்கள் இடம்பெற்று வருகின்றதா என்பது தொடர்பில் ஐசிசியினால் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டன. இந்த விசாரணகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத சனத் ஜெயசூர்ய உட்பட இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் ஐசிசியினால் தடை செய்யப்பட்டனர்.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டையில் இலங்கை – ஸிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் ஊழல்கள் இடம்பெறுவதாக சந்தேகம் கொண்ட ஐசிசி 18 தடவைக்கு மேல் விசாரணைகளை மேற்கொண்டது. இதன்போது சூதாட்டக்காரர்களின் பினாமியாக பெண்ணொருவர் செயற்படும் தகவல் அம்பலமாகி உள்ளது.
40 வயதான குறித்த பெண் இலங்கை கிரிக்கட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து, கிரிகட்டிற்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வந்துள்ளமை ஐசிசியின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தோல்வியடைந்த போட்டிகளில் இந்த பெண் மூலம் மோசடிகள் எவ்வாறு , எங்கு செய்யப்பட்டு இருக்கும் என்ற கோணத்தில் தற்போது ICC ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா சிறைச்சாலைக்கு ஐ. நா. அதிகாரிகள் இன்று (07.04) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த ஐ.நா அதிகாரிகள் 5 பேர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடனும் சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு மணி நேரம் சிறைச்சாலைக்குள் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் குறித்த ஐ. நா அதிகாரிகள் குழு அங்கிருந்து சென்றிருந்தது.
குறித்த விஜயம் தொடர்பாக ஐ. நா அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத ஐ. நா. அதிகாரிகள் தமது விஜயம் தொடர்பாக செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தனர்.
வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்ட சிரமதானம் இன்று(07.04) காலை பழைய பேருந்து நிலையம், பஜார் வீதிகளில் வன்னி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.தென்னக்கோனின் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற நகரின் சிரமதானத்தில் பஜார் வீதி, பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளிலிருந்து சிரமதானத்தில் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இச் சிரமதானப் பணியில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி அசோக் பிரியந்த, நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி, வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், செயலாளர் ஆ. அம்பிகைபாகன், பொருளாலர் சுந்தர்தாசன், 50க்கும் மேற்பட்ட பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இச் செயற்பாடு பொலிஸாரின் பங்குபற்றுதலுடன் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.