வவுனியா பொலிஸாரால் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் சிரமதானம்!!

சிரமதானம்

வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்ட சிரமதானம் இன்று(07.04) காலை பழைய பேருந்து நிலையம், பஜார் வீதிகளில் வன்னி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.தென்னக்கோனின் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற நகரின் சிரமதானத்தில் பஜார் வீதி, பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளிலிருந்து சிரமதானத்தில் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இச் சிரமதானப் பணியில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே, வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி அசோக் பிரியந்த, நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி, வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், செயலாளர் ஆ. அம்பிகைபாகன், பொருளாலர் சுந்தர்தாசன், 50க்கும் மேற்பட்ட பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இச் செயற்பாடு பொலிஸாரின் பங்குபற்றுதலுடன் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது!!

கஞ்சா கடத்திய இருவர் கைது

வவுனியாவில் நேற்று(07.04) இரவு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினர் போதை ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது 750 கிராம் கேளர கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் கஞ்சாவினைக் கடத்த முற்பட்ட நபர்கள் பயணம் மேற்கொண்ட காரினையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு நொச்சிமோட்டை பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையின்போது 750கிராம் கேரளா கஞ்சாவினை காரில் ஒன்றில் மறைத்து வைத்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து நொச்சியாகம நோக்கிச் சென்ற 31, 36வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

அவர்கள் பயணித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றல் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மகளுக்கு பணம் கொடுத்த பெண்ணை வாளால் வெட்டிய தாய்!!

வாளால் வெட்டிய தாய்

தனது மகளுக்கு பகுதி நேர வகுப்புக்கு செல்ல 200 ரூபாய் பணத்தை வழங்கியதால், ஆத்திரமடைந்த அனுராதபுரம் நகரில் நடைபாதையில் வியாபாரம் செய்து வரும் பெண்ணை வாளால் வெட்டிய மற்றுமொரு நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணை அனுராதபுரம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் விமான நிலைய பிரதான வீதியில் வைத்தியசாலை நடைபாதையில் மென் பானம் மற்றும் துணி விற்பனையில் ஈடுபட்டு வரும் இரண்டு பெண்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஏற்பட்ட மோதலில் மென் பானம் விற்பனை செய்யும் பெண் மற்றைய பெண்ணை வாளால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய வாளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய பெண்ணின் மகள், ரம்பவ பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நகருக்கு பகுதி நேர வகுப்புக்கு செல்ல தாயிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் மகளை திட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் பணம் கொடுக்காததால், மகள் அழுதுக்கொண்டு திரும்பிச் செல்லும் போது துணி விற்பனை செய்யும் பெண், அம்மா பணம் கொடுக்கவில்லையா என்று கேட்டுள்ளார்.

தாய் பணம் கொடுக்கவில்லை எனவும் பேருந்தில் செல்லவும் பணமில்லை எனவும் மற்றைய பெண்ணின் மகள் கூறியுள்ளார். அந்த பிள்ளை மீது அனுதாபம் ஏற்பட்டதால், துணி விற்பனை செய்யும் பெண் தன்னிடம் இருந்த 200 ரூபாயை கொடுத்து வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளார்.

அப்போது மென் பானம் விற்பனை செய்யும் பெண், பணத்தை கொடுத்த பெண்ணை கடுமையாக திட்டியுள்ளதுடன் போத்தல் ஒன்றை போட்டு உடைத்துள்ளார். இதன் பின்னர் துணி விற்பனை செய்யும் பெண்ணிடம் சென்று அவருடன் சண்டையிட்டுள்ளதுடன் கையில் இருந்த வாளால் தலையில் வெட்டியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் உயிரிழந்த இலங்கையர் : 25 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் கொண்டு வந்த சடலம்!!

ஐரோப்பாவில் உயிரிழந்த இலங்கையர்

25 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அன்னாரின் சடலம் மக்களின் அஞ்சலிக்காக சாவகச்சேரியில் உள்ள அவரது இன்று வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைககளின் பின்னர் அவரது விருப்பத்திற்கமைய சடலம் சாவகச்சேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த எம்.ஸ்ரிபன் ஜோகி என்பவரின் சடலமே 25 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பணியாற்றிய ஸ்ரிபன் 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி 49ஆவது வயதில் உயிரிழந்தார். அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது சடலத்தை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு கொண்டுச் சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

அப்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக அவரது உடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் சிக்கில் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவரது சடலத்தை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சடலத்தை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால், மீள பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது 25 வருடங்கள் நிறைவடைந்தமையினால் அவரது சடலத்தை பெற்ற உறவினர்கள், அதனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

வவுனியாவில் கடும் வெப்பத்தை தணித்த மழை!!

வெப்பத்தை தணித்த மழை

இன்று வவுனியாவின் பல பகுதிகளில் திடிரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (07.04.2019) பிற்பகல் 4.30 மணி தொடக்கம் மழை சிறிய அளவில் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருகின்ற வேளையில் இம் மழையால் மண்ணும் மக்களும் சிறிதளவு நன்மையடைந்துள்ளனர்.

வலைப்பந்தாட்ட பயிற்சிக்கு சென்ற மாணவியை காணவில்லை!!

மாணவியை காணவில்லை

ஹூங்கம தெற்கு பட்டஹத்த பகுதியை சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவியை கடந்த 2 ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர் ஹூங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விஜயபா தேசிய பாடசாலையில் 9 ஆம் ஆண்டில் பயிலும் இந்த மாணவி கடந்த 2 ஆம் திகதி வலைப்பந்தாட்ட பயிற்சிக்காக விளையாட்டு உடையில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறுமி பாடசாலைக்கு செல்லவில்லை எனவும் அன்றைய தினத்தில் இருந்து மகளை காணவில்லை என தாய் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சிறுமி வேறு ஒரு வீட்டுக்கு சென்று ஆடைகளை மாற்றியதாக தகவல் கிடைத்துள்ளதுடன் பொலிஸார் அது சம்பந்தமாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி பற்றிய தகவல் அறிந்தால், ஹூங்கம பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0715991663 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்புக்கொண்டு சிறுமியின் தாயாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவன் மகேந்திரன் ஷரூபன் வரலாற்று சாதனை!!

வரலாற்று சாதனை

வெளியாகியுள்ள கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பெறுபேறுகளின்படி வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவன் மகேந்திரன் ஷரூபன் 9A சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனையினை புரிந்துள்ளார்.

2018ம் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தின் தெற்கு வலயத்திற்குட்பட்ட வவுனியா பெரியகோமரசன் குளம் மகா வித்தியாலயம் தனது வரலாற்றில் முதல் தடவையாக 9A பெறுபேற்றை பெற்று சாதனையினை நிலைநாட்டியுள்ளது.

இப் பாடசாலை மாணவர்களான மகேந்திரன் ஷரூபன் 9A சித்திகளையும், ரமணன் யூட்சன் மற்றும் மோகனசுந்தரம் சயந்தன் ஆகிய இருவரும் 8AB சித்திகளை பெற்று பாடசாலையின் வரலாற்று சாதனையினை புரிந்துள்ளதாகவும் இவர்களின் பெறுபேற்றுக்காக உழைத்த ஆசிரியர் மனதார பாராட்டுவதாக பாடசாலையின் அதிபர் சி.வரதராஜா தெரிவித்தார்.

இப் பாடசாலை வவுனியா நகரிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒர் கிராமபுற பாடசாலை என்பதோடு 114 வருட வரலாற்றினையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் இரத்ததான முகாம்!!

இரத்ததான முகாம்

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய 2007 மற்றும் 2010 பழைய மாணவர்களின் இரத்ததான முகாம் நேற்று (06.04.2019) காலை 1 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெற்றது. இவ் இரத்ததான முகாமில் பாடசாலையின் பழைய மாணவர்கள் , அயல் பாடசாலை மாணவர்கள் , நலன் விரும்பிகள் என 25க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்

இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

வடக்கில் ஊடுறுவும் பாரிய ஆபத்து!!

பாரிய ஆபத்து

மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு இத்தகைய நிதி நிறுவனங்கள் எமது மக்களை இலக்கு வைத்து பாரிய நெருக்கடிக்குள்ளும் ஆபத்துக்களுக்குள்ளும் தள்ளப்படுகின்ற நிலைமைகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நுண்கடன் தொல்லை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், வடக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்ற சுமார் 45ஆயிரம் பெண்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள சுமார் 140 கோடி ரூபா பெறுமதியான நுண் நிதிக் கடன்களை இரத்துச் செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது தற்போதைக்கு எந்த நிலையினை எட்டியிருக்கின்றது

மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற பிரமிட் முறையிலான நிதி நிறுவனங்கள் மீளவும் வடக்கிலே தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றன.

இது தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்பட்டு, இத்தகைய நிதி நிறுவனங்கள் எமது மக்களை இலக்கு வைத்து பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்ற நிலைமைகள் தடை செய்யப்பட வேண்டும்.

அத்துடன் எமது மக்களின் பொருளாதார ரீதியிலான மேம்பாடுகளை எமது மக்கள் எட்டிக் கொள்வதற்கென எமது பகுதிகளில் இருக்கின்ற வளங்களைக் கொண்டதான உற்பத்திக் கிராமங்களை அமைக்க வேண்டியதன் அவசியம் நிலவுகின்றது.

இத்தகைய உற்பத்திக் கிராமங்கள் சிறு தொழில் முயற்சிகளாக கூட்டுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படத்தக்க ஏற்பாடுகளாக வலுப்பெறுமாயின் அது எமது மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பாரிய தீ விபத்து : இலங்கை தமிழ் இளைஞன் பாதிப்பு!!

பாரிய தீ விபத்து

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை அகதி ஒருவர் காயமடைந்துள்ளார். இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.

ஆபத்தான நிலைக்குள்ளான விக்னேஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீயை கட்டுப்படுத்துவதற்கு 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தீயணைப்பு வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்ற விக்னேஷ், அந்நாட்டில் புகலிடம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு காலி முகத்திடலில் மிதந்த சடலத்தினால் பரபரப்பு!!

சடலத்தினால் பரபரப்பு

கொழும்பு கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. காலி முகத்திடல் கடற் உள்ள கடல் பிரதேசத்தில் சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மிதந்த சடலம் ஆண் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட கடற்கரை விஜயத்தின் போது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சடலம் கொழும்பு துறைமுக பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் கொழும்பு பொலிஸாரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள தகவல்!!

மின்விநியோக தடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக சமகாலத்தில் மின்சார விநியோகம் பகுதியளவில் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளாந்தம் துண்டிக்கப்படும் மின்விநியோக தடை நேரத்தை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினை காரணமாக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனாலும் நாட்டில் அதிகரித்த மின்சார கோரிக்கை மற்றும் அதற்கு ஏற்ப மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலைக்கு மத்தியில் மின்சார துண்டிப்பு நேரம் நீடிக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது. தற்போது பகல் நேரத்தில் 3 மணித்தியாலங்களும் இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலமும் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதனை மேலும் சில மணித்தியாலங்களால் நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக சபை அறிவித்துள்ளது.

நாட்டில் கடும் வெப்பநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் மின்சார துண்டிப்பும் மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வெப்பமான காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்!!

அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்

சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிப் பிதுங்க வைத்துள்ளார். இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்லும் எனக்கு ஹிந்தியில் பேசியது தவறு. தமிழ் மொழியில் பேசியிருக்க வேண்டும் என்று கூறுகின்றார். முதலில் ஆங்கிலம் இருந்தது அதனை அழுத்தி அதன் பின்னர் தமிழ் மொழியினை தெரிவு செய்திருந்தேன். ஆனால், என்னிடம் ஹிந்தியில் தான் பேசினார்கள். அது தவறு என்றும் குறித்த நபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சம்பவத்தினை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த சமூகவாசிகள் அவரை பாராட்டியுள்ளனர். ஒவ்வொரு தனி மனிதனும் விரும்பிய மொழியில் பேசும் உரிமை உண்டு. அது மாத்திரம் இன்றி அவரின் உரிமை மீறப்படும் போது அதனை தட்டி கேட்கும் சுதந்திரமும் உண்டு.

இதேவேளை, தமிழர்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் வாடிக்கையாளர் நிலையத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : பரிதாமாக உயிரிழந்த 18வயது இளைஞன்!!

கோர விபத்து

வடமராட்சி – கொடிகாமம் வீதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி – கொடிகாமம் வீதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். எனினும் பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்தவர் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் கஜீபன்18 என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, படுகாயமடைந்த இளைஞர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இவ் விபத்து தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இளம்மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

நாடகமாடிய கணவன்

சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய விவகாரத்தில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில நாட்களாகவே கனவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மாரியப்பன் மனைவியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்வரி நேற்று திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விக்னேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் விக்னேஷ்வரி கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரின் மாரியப்பனை காவல் நிலையம் அழைத்து சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், விசாரணையை தீவிரப்படுத்தும் போது, விக்னேஷ்வரியின் கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதற்கும் முன் ஒரு கடிதம் எழுதி வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

இன்று நண்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இது பின்னர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் பரவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்ளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அந்த வகையில் இன்று நல்லுருவ, பெல்லப்பிட்டிய, போத்தலே, கஹவத்தை, கதுருகல்ல, கொங்கெட்டிய, ஹபெஸ்ஸ மற்றும் தொம்பகஹவெல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.”

எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இக்காலப்பகுதியில் தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.