உணவில் புழு : கிளிநொச்சி உணவக உரிமையாளருக்கு ஒரு வருட சிறை!!

உணவில் புழு

கிளிநொச்சிக்கு ஆளுநரின் சென்ற சமயம் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்த்தாகக் கூறப்பட்ட உணவக உரிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் காணப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உணவகத்தை மூடி சுத்தம் செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதமன்றம் கட்டளையிட்டது.

உணவகம் சுத்தம் செய்யப்பட்ட நிலையிலான அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட உணவக உரிமையாளருக்கு 5 வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, உணவகத்தில் இவ்வாறான நிலமை மீண்டும் காணப்பட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசா இன்றி கனடா செல்ல முயற்சித்தவர்களே நேற்று கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கனகபுரம் பிரதேசத்தில் உள்ள வீட்டினை சுற்றிவளைக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கெள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

லண்டனில் கணவனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை!!

பெண்ணுக்கு சிறைத்தண்டனை

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73 வயதான பாக்கியம் ராமநான் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை பிரித்தானிய நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கொலையாளிக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

சொத்துப் பிரச்சினை காரணமாக கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எனினும் திருமணம் செய்த நாள் முதல் கணவன், மனைவியை அடிமையாக நடத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மன விரக்தி அடைந்த மனைவி, படுகையில் இருந்த கணவனை அடித்து கொலை செய்துள்ளார். கணவனின் கொடுமைகளை இதற்கு மேலும் பொறுக்க முடியாமையினாலும், கணவன் மீது ஏற்பட்டகோபத்தினாலும் இந்த கொலையை செய்ததாக பாக்கியம் ஒப்புக் கொண்டார். பாக்கியத்தின் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வறட்சியிலும் வற்றாத நீரூற்று : இயற்கையின் அதிசயம்!!

இயற்கையின் அதிசயம்

கடும் வறட்சியான காலநிலை ஏற்பட்டாலும் வற்றாத நீரூற்று ஒன்று மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ தலஹகம, அளுகெட்டிய என்ற பகுதியில் அமைந்துள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் பெரிய நீர் குமிழி இருந்துள்ளது. அந்த இடம் மக்களை உயிர் பலியெடுக்கும் இடம் என்ற பீதி மக்களுக்கு இருந்துள்ளது.

இதனால், யானைகளை பயன்படுத்தி, பெரிய மரக்கட்டைகளை போட்டு அதனை மூடியுள்ளனர். இதனையடுத்து சில இடங்களில் நீரூற்றுகள் தோன்றியதாக முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தலஹகம கிழக்கு கமத்தொழில் அமைப்பு, கொங்கீரீட் வலயங்களை பயன்படுத்தி நீரூற்றுள்ள இடத்தை அபிவிருத்தி செய்துள்ளது.

பிரதேசத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலையில், தலஹகம மற்றும் அதனை சூழவுள்ள உக்கஸ்ஹேன, கம்பி அடிய, வில்பிட்ட போன்ற கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்த நீரூற்று பேருதவியாக அமைந்துள்ளது.

கடற்கரையில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீரூற்றில் ஊற்றெடுக்கும் தண்ணீர் சற்று உவர் தன்மை கொண்டது எனவும் இந்த நீரூற்றுக்கும் கடலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என நம்பபடுகிறது.

சில நேரங்களில் இந்த நீரூற்றின் ஊடாக சிப்பிகளும் வெளி வருவதாகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஏற்பட்ட போது, நீரூற்றில் சேறுடன் கூடிய தண்ணீர் வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்!!

ஈழத்துச் சிறுவன்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை(04.04) அன்று பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புலம்பெயர்ந்து குடும்பத்துடன் பின்லாந்து நாட்டில் வசித்து வரும் குறித்த சிறுவன் கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி குடும்பமாக வாகனத்தில் சென்றபோது விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூளைச்சாவு அடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்று அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியரின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவனின் இறப்பிற்கு ஈழத்தில் உள்ள செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், பின்லாந்தில் உள்ள அன்னை பூபதி தமிழ்கலைக்கூடம், பின்லாந்து தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்கள் சார்பாக இரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!!

பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு வல்லியானந்தம் பகுதியைச் சேர்ந்த 51 வயதான சிவபாதசுந்தரம் சிவசோமக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கரணவாய் தெற்கு வீரப்பிராய் பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்து ஒன்றில் மின் கம்பம் உடைந்துள்ளது. இதனை சீரமைக்க சென்ற நபர் மீது கம்பம் வீழ்ந்துள்ளது. கரணவாய் வீரப்பிராய் பகுதியில் உள்ள வீதி வழியாக லொறி ஒன்றும் மகிழுந்து ஒன்றும் எதிர் எதிர் திசையில் வந்துள்ளன. வளைவு ஒன்றில் திரும்பும் போது, வீதியோரமாக நடப்பட்டிருந்த மின்சார, தொலைபேசி கம்பத்தில் லொறி வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

கம்பங்கள் முறிந்து லொறி மீது சாய்ந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பில் மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் என்பவற்றுக்கு நெல்லியடி பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பணியாளர்கள் அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது லொறியில் சாய்ந்திருந்த மின்கம்பம் மின்சாரசபை ஊழியரின் தலை மீது விழுந்தது. மின்சார சபை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்

தம்பியின் கடனை செலுத்தாத குற்றத்திற்காக குத்திக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்!!

கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மின்சார சபை ஊழியரான 28 வயதான குடும்பஸ்தர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்பலாங்கொட பிரதேசத்தில் நடந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேச்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் தம்பி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். அவர் பெற்றுக்கொண்ட கடனை, கொல்லப்பட்ட நபரிடம் பல முறை கேட்டுக்கும் கொடுக்காத காரணத்தினால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த போது கொல்லப்பட்டவரின் மனைவி வீட்டில் இருந்துள்ளதுடன் கொலை செய்த இரண்டு நபர்களை அவர் அடையாளம் கண்டுள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் மகனும் இந்த கொலையை செய்துள்ளனர்.

இதேவேளை, கொலை செய்த சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இரு்து தப்பியோடியுள்ளனர். அவர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : எரியூட்டப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்கள்!!

இரு குழுக்களுக்கிடையில் மோதல்

வவுனியா ஓமந்தையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

நேற்று இரவு வவுனியா ஓமந்தை சின்னப்புதுக்குள வீதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இம்மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டு முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அத்தோடு இம்மோதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை இச்சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கசந்த திருமண வாழ்க்கை : 12 வயது மகள் மீது பெட்ரோல் ஊற்றிய தந்தை : நடுங்க வைக்கும் சம்பவம்!!

நடுங்க வைக்கும் சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க 12 மகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தாயார் மற்றும் உறவினர்களின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினரால் கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கொச்சி நகரில் உள்ள திருக்காக்கரை பகுதியில் குடியிருந்து வருபவர் 43 வயதான அபுபக்கர். மதுவுக்கு அடிமையான இவர், மனைவியையும் பிள்ளைகளையும் தொடர்ந்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அபுபக்கரின் மனைவி தமது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கடந்த வாரம் உறவினர் வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் புதனன்று இரவு அந்த குடியிருப்புக்கு சென்ற அபுபக்கர், 12 வயதான தமது மகளை கசேரை ஒன்றில் வலுக்கட்டாயமாக அமர்த்தி, தாம் கொண்டுவந்த பெட்ரோலை அந்த சிறுமி மீது ஊற்றியுள்ளார்.

பின்னர் தீ கொளுத்த முயன்ற அவரை மனைவியும் உறவினர்களும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனிடையே அலறல் சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினரை கண்டதும் அபுபக்கர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

தொடர்ந்து அபுபக்கரின் மனைவியும் உறவினரும் சேர்ந்து பொலிசாரை அணுகி புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் அபுபக்கரை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

மலேசியாவில் 100 சட்டவிரோத குடியேறிகள் அதிரடியாக கைது!!

சட்டவிரோத குடியேறிகள்

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே குடிவரவுத்துறை நடத்திய திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட சுமார் 100 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேடுதல் வேட்டை கோலாலம்பூருக்கு மிக அருகாமையில் உள்ள பேட்டலிங் ஜெயா என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 94 இந்தோனேஷியர்கள், இரண்டு இந்தியர்கள், இரண்டு பாகிஸ்தானியர்கள், ஒரு கம்போடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள சிலாங்கூர் குடிவரவுத்துறையின் இயக்குனர் முகமது சுக்ரி நவி, இந்த தேடுதல் வேட்டையில் 76 அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், பொதுவான புகார்களின் அடிப்படையிலும் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையிலும் இத்தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த 31ம் திகதி அதிகாலை 12.45 தொடங்கப்பட்ட தேடுதல் வேட்டை 2.30 மணிக்கு நிறைவடைந்தது. 180 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதில் குடிவரவுத்துறை அதொடர்பான குற்றங்களில் 100 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்,” என சுக்ரி நவி தெரிவித்திருக்கிறார். இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலநிலையில் மாற்றதால் பாரிய சவாலுக்கு மத்தியில் பொது மக்கள்!!

கடுமையான வறட்சி

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இன்றைய காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய திடீர் காலநிலை மாற்றத்தால் பல மாவட்டங்களில் பொது மக்கள் குடிநீர் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வறட்சியில் பல சவால்களை எதிர் நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக 117 என்ற தொலைபேசி இலக்கமும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் இன்றி பாதிக்கப்படும் மக்களுக்கு பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடனும் அவர்களின் தேவைகள் முடியுமான வரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள அதே வேளை நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை களுத்துறையில் 50 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் கடல் நீர் தண்ணீருடன் கலந்திருப்பதால் பிரச்சினையை எதிர் கொண்டுள்ளனர்.

பல மாவட்டங்களுக்கு குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 குடிநீர் தாங்கிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 8000 நீர் தாங்கிகளையும் தமது அமைச்சு வழங்கியுள்ளது.

காட்டுத்தீ தற்பொழுது பரவி வருகிறது என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும். 24 மணித்தியாலமும் தற்போதைய நிலைமை தொடர்பில் இடர் முகாமைத்துவம் மத்திய நிலையம் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வறட்சியால் அதிக வெப்பத்தை தாக்கு பிடித்துக் கொள்ள முடியாமல் நேற்றைய தினம் முல்வைத்தீவு பகுதியை சேர்ந்த ஒரு இனைஞர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப்படியும் மனித சமூதாயம் : வீதியில் வீசப்பட்ட இரண்டு மாத சிசு!!

வீதியில் வீசப்பட்ட இரண்டு மாத சிசு

மாத்தளை – கந்தேநுவர பகுதியில் இரண்டு மாதங்களுக்கும் குறைந்த வயதுடைய சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்டகந்தகம பகுதியின் பிரதான வீதியில் நேற்று அதிகாலை இந்த சிசு கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சிசு மீட்கப்பட்டு, மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து : உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி!!

வான் விபத்து

நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். வீதி செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீதி செப்பனிடும் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தடைகளையும் மீறிச்சென்ற குறித்த வான், தொழிலாளர்கள் மீது மோதியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் இருந்து வந்த பேருந்தின் கல்லெறி தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பயணிகள் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கழிவறையில் கிடந்த மிகப்பெரிய மலைப்பாம்பு : நள்ளிரவில் பார்த்ததும் மயங்கி விழுந்த பெண்!!

கழிவறையில் மலைப்பாம்பு

கழிவறையில் பதுங்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை பார்த்து பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் பந்தப் பகுதியை சேர்ந்த வினய்டோபிள் என்பவர் வியாழக்கிழமையன்று நள்ளிரவில் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது 7 அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று அடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்த தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களை அழைத்து வந்து பாம்பை காட்டியுள்ளார்.

இதனை பார்த்ததும் அவருடைய மனைவி மயங்கி தரையில் விழுந்திருக்கிறார். பின்னர் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த அக்ஷய் பாட்கர் உதவியுடன் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். 45 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு பாம்பு பிடித்து செல்லப்பட்டது.

பின்னர் இதுகுறித்து பேசிய வினய்டோபிள், அந்த சம்பவத்திற்கு பின்னர் நள்ளிரவு முழுவதுமே நாங்கள் யாரும் தூங்கவில்லை. எங்கள் அனைவருக்குமே இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் விசா கிடைக்காத கோபத்தில் மனைவியை 50 முறை கத்தியால் குத்தி எரித்த கணவன்!!

மனைவியை 50 முறை கத்தியால் குத்தி எரித்த கணவன்

பிரித்தானியாவில் புகலிக்கேரிக்கையாளர் ஒருவருக்கு தனது மனைவியை குத்திக்கொலை செய்த குற்றத்திற்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த தனா அப்துல்லா என்பவருக்கும், பிரித்தானிய பெண்ணான நாஜ்மைதீன் என்ற பெண்மணிக்கும் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

பிரித்தானிய நாட்டில் புகலிடம் கோரி ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்த அப்துல்லாவின் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது மனைவியின் உதவியிடன் அந்நாட்டில் விசா பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.

இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளார் நாஜ்மைதீன். இருப்பினும், பிரித்தானியாவில் தனது கணவருக்கு விசா பெறுவதற்கான விண்ண படிவத்தை ஆதரிக்க நாஜ்மைதீன் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி Fenton நகரில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு சென்று 50 முறை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின்னர், சமையலறையில் வைத்து அவரது உடலை தீவைத்து எரித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை Stafford Crown நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறிய தனது மனைவியை அவமதிப்பு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து நீதிபதி Michael Chambers கூறியதாவது, இது ஒரு திட்டமிட்ட கொலை, பிரித்தானிய நாட்டிற்குள் உங்கள் குடியேற்ற முறையீடு தோல்வியடைந்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நீங்கள், மிக கடுமையான குற்றத்தை செய்துள்ளீர்கள்.

மேலும், சாட்சியங்கள் உங்களுக்கு எதிராக இருந்த காரணத்தால் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து நாஜ்மைதீனி சகோதரி கூறியதாவது, அவளின் இழப்பு எங்கள் குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

அப்துல்லா எனது சகோதரியை மட்டும் கொலை செய்யவில்லை, அவளுடன் சேர்த்து எங்கள் குடும்பம் மற்றும் அவளது குழந்தைகளின் உணர்வுகளையும் கொலை செய்துவிட்டார். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்த Staffordshire காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.