இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு : விலை அதிகரிக்கும் சாத்தியம்!!

சந்தையில் சம்பா, கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகள் கிடைக்காததால் நுகர்வோர் கடுமையான சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிறு அரிசி ஆலைகளினால் சந்தைக்கு கிடைக்கப்பெறும் அரிசியின் இருப்பு தீர்ந்துவிட்டதால் இவ்வாறான பற்றக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாரியளவிலான அரிசி ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் இருந்து கடந்த நாட்களில் சந்தைக்கு குறைந்தளவிலான அரிசியே கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறிய அளவிலான அரிசி வியாபாரிகள் சந்தைக்கு வெளியிடும் அரிசி இருப்பு தீர்ந்ததால், பெரிய அளவிலான அரிசி வியாபாரிகள் சந்தையில் அரிசி விலையை அதிகரிக்க தயாராகி வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!!

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி அங்குள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம் : சாரதி தப்பியோட்டம்!!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நானுஓயா பகுதிதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தானது நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பெண் பாதசாரி உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள், பாதசாரி மீது மோதியவுடன் சாரதி மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபரை கைது செய்யவதற்கு விபத்து ஏற்பட்ட இடத்தில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்து குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் மாதாந்தம் ஒருவருக்கு தேவைப்படும் பணம் எவ்வளவு தெரியுமா?

தனிநபர் ஒருவர் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 16342 ரூபா தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்மூலமாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது. தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கமைய இந்த தொகையில் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளின் அடிப்படையில், 25 மாவட்டங்களில் அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 17,625 ரூபாவாக காணப்படுகின்றது. குறைந்த செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் தனி நபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, மாதாந்தம் 16,626 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

வவுனியாவில் இரு மாதங்கள் கடந்தும் பூர்த்திசெய்யப்படாத பாலம் : வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம்!!

வவுனியா எ9வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமடைந்துள்ளமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

எ9வீதியில் வவுனியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக உள்ள பகுதியில்இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்பட்டது.

பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடக்கின்ற நிலையில் பாலம் பூர்த்திசெய்யப்படாமையினால் அந்த வீதியூடாக போக்குவரத்துச்செய்யும் பொதுமக்களும் வாகனமோட்டிகளும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த வீதி பிரதான வீதியாக உள்ளமையினால் அதிகமான வாகனங்கள் அந்த வீதியை பயன்படுத்திவருகின்றது. இந்த சூழ் நிலையில் பாலம் அமைக்கும் பணி தாமதமாகின்றமையால் அந்த பகுதியில் தினமும் நெருக்கடி நிலை ஏற்ப்பட்டுவருகின்றது.

எனவே குறித்த விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபையில் எமது கூட்டு ஆட்சியமைக்கும் : ப.சத்தியலிங்கம்!!

வவுனியா பிரதேசசபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நாளையதினம் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் உபதவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்த வகையில் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று(24.06) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கிய மக்கள் சக்தி), இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ஶ்ரீரெலோ(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆகிய கட்சிகளிற்கிடையில் ஏற்ப்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் செட்டிகுளம் பிரதேசசபையில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம்.

அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்படவுள்ளதுடன், உபதவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் செட்டிகுளம் பிரதேசசபையின் ஆட்சியை எமது கூட்டு நிச்சயமாக கைப்பற்றும். பலதேவைகள் அந்த பிரதேசத்தில் இருக்கின்றது.
அந்த தேவைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை இந்த கட்சிகள் கூட்டாக மேற்கொள்ளும்.

வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம். அந்த சபையின் தவிசாளர் யார் என்பது தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளது. அவற்றை நாம் ஆராய்ந்து பொருத்தமான முடிவினை எடுப்போம் என்றார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் முத்து முகமது, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!!

செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பாடசாலையில் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், விஞ்ஞான பாடம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக நியமிக்கப்படவில்லை, அத்துடன் பாடசாலைக்கு ஒழுங்கு முறையான தளபாடங்கள் இல்லாமல் உள்ளது,

இதன் காரணமாக மாணவர்கள் மிகக் குறைந்தளவிலான புள்ளிகளையே பெற்று வருகின்றனர். எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பாடசாலையின் ஒழுங்கற்ற அதிபரே காரணம் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து மாணவர்களின் நலன்கருதி உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளை ஆயுதம் தாங்கிய பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் : பயணிகள் விசனம்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ளூர் சேவை கட்டிடத்திலுள்ள இருக்கைகள் பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அதில் அமருவோர் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாதவர்கள் குறித்த இருக்கையில் அமரும் போது உடலில் காயங்கள் ஏற்படுவதாகவும், இருக்கைகளில் இருந்து விழ வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பேரூந்து நிலையத்தின் மாகாணக்களுக்கிடையிலான கட்டிடத்தின் பயணிகள் அமரும் இருக்கைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதிதாக மாற்றப்பட்ட போதிலும் உள்ளூர் சேவை கட்டிடத்தின் பயணிகள் இருக்கைகள் நீண்டகாலமாக மாற்றப்பட்டவில்லை.

எனவே உரிய அதிகாரிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழுள்ள வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினை துரித கதியில் புணரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாணத்தின் பிரதான நுழைவாயிலாகவும், பல மாவட்டங்களில் வந்து செல்வோர் அதிகமாக கூடும் இடமாகவும் உள்ள பிரதான பேரூந்து நிலையத்தின் இருக்கைகளே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து : இரு மாணவர்கள் உட்பட மூவர் காயம்!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து திங்கட்கிழமை (23) காலை நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும், இதில் பயணித்த இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் முச்சக்கர வண்டி கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தநாளன்று நேர்ந்த துயரம் : குளிக்க சென்ற மாணவி திடீர் மரணம்!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மாணவியொருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியருவதாவது,

சிராவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த ஸ்ரேயா, கல்லூரி பயணத்தை தொடங்க உள்ள சந்தோஷத்தில் இருந்தார். அவரது பிறந்த நாளன்று காலை குளிக்க சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

அதை பார்த்த தாய் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் ஆரம்பமான மதிப்பீட்டுப்படி, மாரடடைப்பு காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியான பிறந்தநாள் ஒன்று, ஒரே நொடியில் துயர நினைவாக மாறியுள்ளது.

முல்லைத்தீவில் கடலில் மாயமான நபர் உயிரிழந்ததாக அறிவிப்பு!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த 18ஆம் திகதி இரவு கடலுக்கு கடற்றொழிலுக்காக சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த நபர், கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் கடற்றொழிலுக்காக கடலில் தேடுதல் நடத்தியும் அவர் கிடைக்காத நிலையில் குறித்த நபர் இறந்திருப்பதாக உறவினர்கள் அறிவித்து கண்ணீர் அஞ்சலி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளார்கள்.

62 வயதுடைய வின்சன்ரிப்போல் அன்ரனி கர்னல் என்ற 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரின் இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.

அதேவேளை, குறித்த கடற்றொழிலாளர் காணாமல் போனமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந் அதிரடியாக கைது : காரணம் இதுதான்!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 202,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,875 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார் விபத்தில் பலர் காயம்!!

குருணாகல் – கிரிஎல்ல வீதியில் போபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது காரில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில்,

சிகிச்சைக்காக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்!!

மட்டக்களப்பு நகரில் பாடுமீன் வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன் போது வேன் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கொட்டாஞ்சேனையில் இருந்து மட்டக்களப்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு குறித்த வேனில் வந்தவர்கள்,

வேனை வீட்டின் முன் நிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றுள்ள நிலையில் வேன் அதிகாலை 1.30 மணியளவில் தீப்பற்றியதை கண்டு உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதும் வேன் முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக குற்றதடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2025இல் நடக்கும் போர்கள் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு : மனித குலத்திற்கு நடக்க போவது என்ன!!

2025ஆம் ஆண்டில் போர் போன்ற மோதல் காரணமாக உலக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்று பாபா வங்கா (Baba Vanga) கணித்துள்ளார்.

அதன் பின்னர் 2028ஆம் ஆண்டில், மனிதர்கள் புதிய வளங்களைத் தேடி வெள்ளி கிரகத்தை அடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, 2033ஆம் ஆண்டில் பாரிய அளவில் பனிக்கட்டிகள் உருகும் என்றும், இதனால் கடல் மட்டம் அதிகரித்து பாரிய அலைகள் தாக்கி பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நூறு ஆண்டுகளுக்கு பின்னர், வேற்று கிரகவாசிகளுடனான மனித தொடர்பையும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2170 இல் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவை ஏற்படுத்தும் என்றும், பூமியில் வறட்சி அதிகரித்து மனித வாழ்க்கையை மோசமாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணிப்புகள்

மேலும், செவ்வாய் கிரத்திற்கும் நமது பூமிக்கும் இடையே 3005 இல் போர் ஏற்படும் எனவும், 3797ஆம் ஆண்டில் பூமியில் இருந்து உயிர்கள் பிரியும் என்றும், இறுதியாக 5079 இல் உலகமே அழிந்து மனித இனமும் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கணித்துள்ளார்.

பால்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் இன்றும் உலகளவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.