தந்தை வெளிநாட்டில் : தாயுடன் காரில் பயணித்த மகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் விபத்திற்கு உள்ளானதில் சிறுமியொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (23.06.2025) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியை சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய், 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த பெண் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் : வெளியாகிய காரணம்!!

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(22) மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த 19 வயதுடைய வைரவநாதன் டிலக்க்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் குறித்த ஹோட்டலில் பயிற்சியாளராக இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற மின் தூக்கியானது திறந்த வெளியான மின் தூக்கியாக காணப்படுகிறது. அதனை இயக்கும் ஆழியும் (switch) கீழேயே காணப்படுகிறது.

குறித்த மின்தூக்கியை கீழிருந்து ஒருவர் இயக்கும்போது அது மேலே செல்லும். மின்தூக்கியினுள் இருப்பவரால் அதனை இயக்க முடியாது.

அந்தவகையில் குறித்த இளைஞன் அந்த மின் தூக்கியில் ஏறிய பின்னர் அவர் தயார் நிலையில் இருப்பதற்கு முன்னர் அந்த மின் தூக்கியை இயக்கினார் இதன்போது குறித்த இளைஞனின் தலை இரும்பு கேடர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் பெண்ணாக மாறிவிட்டேன் : அதிர்ச்சியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

அதோடு தனது பெயரையும் ‘அனயா’ என மாற்றினார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துது. அவர் ஆணாக இருந்த சமயத்தில் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார்.

சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரோடு அவர் விளையாடியிருக்கிறார். அவர்களோடு அவர் நட்பிலும் இருக்கிறார்.

அதன்பின் தன்னை பெண்ணாக உணர்ந்து அதற்கான உடல் ரீதியான மாற்று சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முழுமையான பெண்ணாக தான் மாறியதாக அனயா அறிவித்துள்ளார்.

அதோடு தன்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கும்படி ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த ஆண்டு மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஒரு விதியை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அனயா பங்கர் தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதற்கான மருத்துவ அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், தான் முழுவதுமாக ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையாக மாறிவிட்டதற்கான அறிக்கை இது எனவும், கடந்த ஓராண்டாக ஹார்மோன் சிகிச்சை ஆரம்பித்து அங்கிருந்து பல்வேறு ஆய்வுகளை செய்து இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆய்வு அறிக்கை தனது கருத்துக்களையோ, அனுமானங்களையோ சொல்லவில்லை. ஆனால், உண்மையான தகவல்களைச் சொல்கிறது எனவும் அவர் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

எரிபொருளை பதுக்கி வைக்கவேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

எரிபொருள் தட்டுபாடு ஏற்படலாம் என பொதுமக்கள் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

அதோடு இது எங்களுடைய பிரச்சினை அல்ல என்றும், உலகின் சக்திவாய்ந்தவர்களின் பிரச்சினை என தெரிவித்த அவர், அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மினி சூறாவளி : தூக்கி எறியப்பட்ட கதிரைகள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.06) அன்று மாலை திடீரென கடும் காற்றுட ன் மினி சூறாவளி வீசியது. இதன்போது பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததுடன், மின்சாரமும் சில இடங்களில் தடைப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் சிரமங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டனர். அதேவேளை தென்னிந்திய பிரபலங்களின் இசை நிகழ்ச்சியும் (22) மினி சுறாவளியால் இடை நிறுத்தப்பட்டது.

இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக , மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் , நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள் அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால் , பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் : தாய் கண் முன்னே பலியான 15 வயது மகள்!!

கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று,

இன்று (23.06.2025) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த 15 வயது சிறுமி, சாரதி உயிரிழந்ததுடன் சிறுமியின் தாயார் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில், உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான இன்று

அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேககட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கிணற்றில் பெண்ணின் சடலம் : தவிக்கும் பிள்ளைகள்!!

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

உயிரிழந்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும் நேற்று (22) காலை அவரை காணவில்லை என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

அந்தவகையில் அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படுள்ளது. இதனையடுத்து சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இந்நிலையில் குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் திடீரென உச்சம் தொட்ட பச்சைமிளகாய் விலை!!

ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை மீண்டும் 1,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1,200 ரூபாயாக அதிகரித்திருந்தாலும், தம்புள்ளை பொருளாதார மையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 500 முதல் 600 ரூபாய் வரையான மொத்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக பச்சை மிளகாய் அறுவடை குறைந்திருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலையும் 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பு கண்டுபிடிப்பு : ஆளுநர் பாராட்டு!!

கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கள் கிழமை (23.06.2025) சந்தித்து தமது புத்தாக்கம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த லின்டன் ஜெனிஸ் அறோன் அஜேய் மற்றும் திருச்செல்வம் செர்வின் ஆகிய தரம் எட்டில் கற்கும் மாணவர்களே மேற்கொண்டனர்.

கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பை இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு பல்வேறுபட்ட வசதிகளை மேம்படுத்தி அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் சட்ட விதிமுறைகளுக்கு அமைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் கண்பார்வையற்றவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறன.

இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு தொடர்பில் கண் மருத்துவ சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மு.மலரவன் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய மாணவர்களின் கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு உதவ தயார் என தெரிவித்தார்.

இயலாமைக்கு உள்ளானவர்களுக்கான தேசிய சபை அங்கத்தவர் வெ.சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், கண்டுபிடிக்கபட்ட கருவியில் இன்னும் சிறிய மேம்படுத்தவேண்டிய செயல்பாடு உள்ளது என்றும், அதனை நிவர்த்தி செய்து பயன்பாட்டிற்கு வந்தால் விழிப்புலன் அற்றவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும் எனகூறினார்

இம் மாணவர்கள் இருவரையும் ஆளுநர் வாழ்த்தியதோடு இவ்வாறான புத்தாக்க கண்டுபிடிப்புகள் எமது மாணவர்கள் மத்தியில் இருந்து இன்னும் பல தோற்றம் பெறவேண்டும். அவை எமது மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும். என கோரிக்கை விடுத்ததோடு,

இம்மானவர்கள் மேலும் இதனை மேம்படுத்தி கண்பார்வை அற்றவர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவு அளிப்போம் எனவும் ஆளுனர் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விஷேட பேரூந்து சேவை!!

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (23.06.2025) காலை முதல் நாளை (24.06.2025) காலை வரை இந்த விஷேட பேரூந்து சேவை நடைபெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

கோடிக்கணக்கில் பணம் மோசடி : இன்ஸ்டா பெண் பிரபலம் கைது!!

குஜராத் மாநிலம் காந்திநகரில், தன்னிடம் நெருங்கிப் பழகிய தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கிர்தி படேல் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.

சுமார் 13 லட்சம் பாலோயர்களைக் கொண்ட கிர்தி படேல், டிக்டொக் செயலி பயன்பாட்டில் இருந்த காலத்திலேயே, ஆந்தையை கையில் ஏந்தி வீடியோ வெளியிட்டு வனத்துறையிடம் ரூ.25,000 அபராதம் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் இன்ஸ்டா பிரபலம் கிர்தி படேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம் : கதறும் தோழிகள்!!

வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மீண்டும் ​​​​​​கனடாவில் இந்தியவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்யா என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாணவி உயர்படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் ஜூன் 17ம் தேதி மர்மமான முறையில் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இதுகுறித்து கனடாவுக்கான இந்திய துணைத் தூதரகம் கால்கரி பல்கலைக்கழக இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.

இவரது திடீர் மறைவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகளை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் குடும்ப பெண்ணுக்கு எமனான எரிபொருள் பவுசர் : வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்!!

புத்தளம் , பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார். பாலாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய அபூதாலிப் பாத்திமா ரிஸானா எனும் ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ளது. விபத்தில் பெண் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார்.

விபத்துச் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி!!

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே வாகன விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய சிறுவர்கள்!!

யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி வியாழக்கிழமை (19) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு , நுகேகொடை , கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி,

குருணாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளைஞன் : காதலிக்கு கொடுத்த அதிர்ச்சி!!

நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவியான, இளம் பெண்ணின் தகாத புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, காதல் உறவை முறித்துக் கொண்டதாக கூறிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தேகொட, குடமடுவ வீதி, சிஷில் செவன பூங்காவில் வசிக்கும் இளைஞன் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதனடிப்படையில், முறைப்பாடு அளித்த பெண் மற்றும் மற்றொரு பெண்ணின் தகாத புகைப்படங்கள் மற்றும் தகாத வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன், மடிக்கணினியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.

இதன்போது அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும்​​, குறித்த இளைஞனை சந்தித்து பின்னர் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.