மட்டக்களப்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டவர்களே உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பம் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுசாதரணப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் எமது பாடசாலை மாணவர்களும் சிறப்பான சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அந்தவகையில், முகுந்தரதன் கேசிகன், ஜெகதீஸ்வரன் தனுகாசன், ஸ்ரீசங்கர் கணேசன் ஷரனன், பிரியந்தன் சகீதரன் ஆகிய நான்கு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.
அத்துடன் 8ஏ,பீ சித்திகளை தியாகராஜா தனுஜன், சுதா அருள்வாசன் ஆகிய இரு மாணவர்களும் பெற்றுள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்கக்கூடிய வகையில் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.
வவுனியா ஓமந்தை பகுதியில் இரண்டு யானை தந்தங்களை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை மாங்குளம் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் யானை தந்தங்களை ஒருவர் கைவசம் வைத்திருப்பதாக மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பகுதியிலுள்ள காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இரண்டு தந்தங்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட தந்தங்கள் வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனை மறைத்து வைத்திருந்த குற்றசாட்டில் நெல்வேலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டிருந்தார். அத்தோடு நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. S13 மற்றும் M11 ரக தொடருந்துகள் இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் அவற்றை பாரம் தூக்கிகளைக்கொண்டு தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தரையிறக்கப்படும் தொடருந்துகளில் இரட்டை விளக்குகளைக்கொண்ட S13 தொடருந்தின் 14 பெட்டிகள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவிடமிருந்து கட்டம் கட்டமாக தொடருந்துகளை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை தொடருந்துத்திணைக்களம், ஏற்கனவே முதலாவது கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி ஒருதொகுதி தொடருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் அவற்றுள் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுப்பெற்றுள்ளன என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படியே குறித்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
கணனி கட்டமைப்புக்குள் இரகசியமாக பிரவேசித்து 5 மணி நேரத்தில் ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி, நிறுவனத்தின் உரிமையாளரிடம் 50 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய, தகவல் தொழிற்நுட்பம் பயின்று வரும் பல்கலைக்கழக மாணவனை, திருகோணமலை தலைமையக பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் கிளைகளை கொண்டுள்ள, திருகோணமலையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கணனி உதிரிப்பாகங்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றின் கணனி கட்டமைப்புக்குளேயே இந்த மாணவன் இரகசியமான முறையில் பிரவேசித்துள்ளார்.
இந்த மாணவனின் செயல் காரணமாக பிரித்தானியா, இந்தியா, இலங்கையில் இருக்கும் 36 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதால், மேற்படி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நிறுவனத்தின் உரிமையாளர் பாலகுமாரன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர், கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொழிற்நுட்ப பாடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றிருந்ததுடன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழிற்நுட்ப பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
சந்தேக நபரின் மூத்த சகோதரர் இந்த நிறுவனத்தில் தொழில் புரிந்து வருவதுடன் கணனி கட்டமைப்பு இரகசிய கடவுச்சொல்லை, சந்தேக நபருக்கு வழங்கியுள்ளார். சந்தேக நபர் மடிக்கணனியை பயன்படுத்தி இந்த குற்றத்தை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் டாக்கா நகரில் தொடர் மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் போது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்ப முயற்சித்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிரோஷ் விக்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட மேலும் 88 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள 19 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியானது. பரீட்சை முடிவுகளின்படி ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இப்பாடசாலையிலிருந்து இம்முறை பரீட்சைக்கு195 மாணவர்கள் தோற்றியுள்ளனர். தோற்றிய 195 மாணவர்களுள், 194 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதுடன், 194 மாணவர்கள் க.பொ.த உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ் மொழி மூலம் 17 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 02 மாணவர்களும், மொத்தமாக 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களான பீ.சாய்பிரசாத், பி.மதுஷ்கர், ஜீ.ஹரின் ஜெசிகா, பி.மிதுலாஷினி, எஸ்.கிருஷிகா, ஏ.மதுர்ஷிதா, கே.பவிஷாந்த், எஸ்.வேந்கர், கே.பூஜிதா, கே.சர்மினா, ஏ.எப்.எஸ்.கேசியா, ஜி.தினுஷன், ஆர்.நிவேதன், எச்.மதுஜா, வீ.அபிஜா, எஸ்.ஸ்ரீயாலினி, கே.சாருகேஷ் ஆகியோரும், ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவன் கே.பிரனவ், மாணவி ஆர்.பிரவிஷா உள்ளிட்ட 19 மாணவர்கள் 9 பாடங்களில் 9ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பாடசாலையில் 100 சதவீத மாணவர்கள் இம்முறை உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி காரைதீவுக் கோட்டத்தில் 9 மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுச் சாதனை படைத்துள்ளனர். காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் 8 மாணவிகளும், காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவனும் சித்தி பெற்றுள்ளதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் லோகநாதன் புவித்திரா, சகாதேவராஜா டிவானுஜா, லோகநாதன் வித்யாஷினி, சிவயோகராஜா லக்க்ஷிகா, இளஞ்செழியன் ரிலக்க்ஷினி, இரவீந்திரன் திஜஸ்வினி, மேகநாதன் நிலுக்சிகா, விஸ்வலிங்கம் டோமிகா ஆகிய எட்டு மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இது அப்பாடசாலை வரலாற்றில் இந்தச் சித்தி சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்கு முதல் 5 மாணவிகள் 9ஏ சித்தி பெற்றதே வரலாறு ஆகும். எனவே இம்முறை உச்சக்கட்ட சாதனையாக 8 மாணவிகள் சித்தி பெற்றுள்ளதையிட்டு கல்விச் சமூகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
இதேவேளை காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் மகேந்திரன் குவேந்திரன் என்ற மாணவன் 9ஏ சித்திப் பெற்றுள்ளார். காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியில் 8ஏ,1பி என்ற சித்தியை இரு மாணவர்கள் பெற்றுள்ளதாக அதிபர் தி.வித்யாராஜன் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் திறமைச்சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதன்படி சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு : V.E.M.ஜஷீத் 7ஏ2பி , S.M.சும்ரி 7ஏபி சி, த.ஜமீன் 7ஏ2சி, ஜெ.அக்ரீனா 7ஏ, 2சி ஆகிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 51 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன்படி சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.
ராஜ்குமார் சுலோஜன் 9A, துஷானிக்கா விஜயகுமார் 9A, நிகாருன்யா திருமூர்த்தி 9A , டில்சியா திலீப்குமார் 9A அத்துடன் யாவேஸ்ட்டா ஏழுமலை 8AC, வத்ஷனா ராஜரட்ணம் 7A2B, கலையருவி சுதாகரன் 7A2B, டினோசிகா ராமர் 7A2C ஆகிய மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை பரிட்சைக்கு தோற்றிய 141 மாணவர்களில் 106 மாணவர்கள் கா.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். விகிதாசார அடிப்படையில் 75வீதமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ஒன்பது பாடசாலைகளில் இருபது மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இது குறித்து முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி,
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்களும், விசுவமடு மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், இரணைப்பலை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் 1 மாணவரும் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், செம்மலை மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், குமுழமுனை மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், கலைமகள் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், வித்தியானந்தா கல்லூரியில் 3 மாணவர்களும், சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் 1 மாணவரும் என 20 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
ஒரு கருவில் பிறந்து வளர்ந்த சகோதர சகோதரிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்து வாழ்த்துக்களைப் பெற்றுவருகின்றனர். குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஜானக குமாரசிங்க மற்றும் அச்சலா திஸாநாயக்க ஆகிய தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் மகனும் ஒரே கருவில் பிறந்தவர்கள்.
பிறந்த நாளில் இருந்து இம்மூன்று பேரும் தனித்துப் பிரிந்து சென்றதில்லை. எங்கு சென்றாலும் மூவரும் தங்கள் உறுதியோடும், நம்பிக்கையோடும் வலம்வருவார்கள். ஆரம்பக் கல்வியை நாஹொல்லாகொட மகாவித்தியாலத்தில் கல்வியை தொடங்கினர். புலமைப் பரிசில் பரீட்சையில் மூன்று பேரும் சித்தி பெற்றனர்.
இதனையடுத்து குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலத்தில் தமது மேலதிக கல்வியைத் தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மூவரும், ஒன்பது ஏ திறமைச் சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஈ.எம். திவ்யாஞ்சலி தெவ்மினி குமாரசிங்க, ஈ.எம். நவாஞ்சலி தெத்மினி குமாரசிங்க, ஈ.எம். பிரியங்ஞ்ஜன பியுமன்ன குமாரசிங்க ஆகிய சகோதர சகோதரிகளே இத்திறமைச்சித்தியைப் பெற்று இலங்கையில் சாதித்திருக்கிறார்கள்.
தங்களின் வெற்றியின் இரகசியம் குறித்துப் பேசிய அவர்கள், நாங்கள் ஒன்றாகப் பிறந்தோம். ஒன்றாகவே வளர்ந்தோம். ஆரம்பக் கல்வியில் ஒன்றாகப் பயின்று, புலமைப் பரிசிலில் விசேட சித்தியைப் பெற்று குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலத்தில் சேர்ந்த காலத்திலிருந்து நாங்கள் அனைவரும், முதல் இரண்டு மற்றும் மூன்றாம் பிள்ளைகளாக வகுப்பில் மதிப்பெண்களைப் பெறுவோம்.
எமது ஆசிரியர்கள் எங்களுக்கு அர்ப்பணிப்புடன் கல்வி புகட்டினர். படிப்பித்தலும் அதனை கிரகித்தலும் மிக முக்கியமானது. நாங்கள் எப்பொழுதும் வகுப்பறைகளுக்குச் செல்லாமல் இருந்ததில்லை. நண்பர்களுடன் தேவையற்ற இடங்களுக்குச் செல்வதில்லை. நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
எமது தந்தையார் எங்களுக்குச் சிறந்த நண்பராக இருந்தார். படி படி என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொந்தரவு கொடுத்ததில்லை. வாழ்க்கையில் பிறர் என்ன சொன்னாலும் அதற்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று கூறுவார்கள். அதேபோன்று அம்மாவும் அப்பாவும் எங்களுடன் ஒன்றாக அமர்ந்து சமூகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்வார்கள்.
இச்சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்வதற்கு வரையறைகளை தெளிவுபடுத்திக் கூறுவார்கள். பெற்றோர்கள் எம் பின்னால் இருந்தாலும் எமது சுதந்திரத்திற்கு எந்தத் தடையும் இருந்தில்லை. எமக்கு முகநூலில் கணக்குகள் எதுவும் இல்லை. கைத்தொலைபேசி கூட எம்மிடம் இல்லை. ஆனாலும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டதாக நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. எங்களை அனைவரும் அளவிற்கதிகமாக நேசித்தனர்.
இந்நிலையில் குறித்த மாணவர்களின் தந்தையார் பேசிய போது, நானும் என் மனைவியும் இவ்வுலகில் மிகச்சிறந்த அதிஷ்டசாலிகள். இச்சந்தர்ப்பத்தில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரே பிரசவத்தில் என் மனைவிக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. துரதிஷ்டவசமாக ஒரு மகள் இறந்து போனாள். அவளும் உயிரோடு இருந்திருந்தால், மொத்தமாக 36 ஒன்பது ஏ சித்திகள் கிடைத்திருக்கும்.
நாங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை இணையத்தில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. காரணம் எமது குழந்தைகள் வீட்டில் படித்த விதத்தில் இப்பெறுபேறுதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். அவ் எதிர்பார்ப்பினை அவர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
எமது பிள்ளைகள் கடுமையாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களில் சிறிது நேரமாவது விளையாடுமாறு கூறுவோம். ஆனால், அவர்கள் அவர்களின் இலக்கை குறிவைத்து அடைந்துள்ளனர் என்றார் பெருமிதத்தோடு.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தேசிய ரீதியில் முதல் பத்து இடத்திற்குள் எந்த தமிழ் மாணவர்களும் இடம்பெறவில்லை, என்பது தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
கடந்த கால யுத்தத்தின் பின்னர் தமிழர் தாயக பகுதிகளில் கல்வியில் மாணவர்கள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வருடாவருடம் பொதுப்பரீட்சை பெறுபேறுகள் வரும் போதெல்லாம் தமிழர்கள் அனைவரும் தேசிய ரீதியில் தமிழ் மாணவர்கள் முதல் இடங்களை பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இன் நிலையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் முதல் பத்து இடத்தில் எந்த தமிழ் மாணவர்களும் இடம்பெறாதது அனைவருக்கும் ஏமாற்றத்தையளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் பின்னடைவை சந்தித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.
மேலும் பெறுபேற்று விகிதத்தின் அடிப்படையில், மன்னார் 69.34%, வவுனியா 68.28% , யாழ்ப்பாணம் 67.02%, முல்லைத்தீவு 60.4%, கிளிநொச்சி 54.3% சதவிகித தேர்ச்சியே பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மற்றும் காலி மாவட்டங்கள் 77 சதவிகித சித்தியையும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்கள் 79 விகித பெறுபேற்றையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியாகிய பெறுபேறுகளுக்கு அமைய முதல் பத்து இடங்களில் எந்தவொரு தமிழ் மாணவர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த கால சூழல்களுடன் ஒப்பிடும்போது கொடிய யுத்தத்தின் பிடியில் இருந்த நேரத்திலும் கூட வடமாகாணத்தின் கல்வி நிலை அதி உச்சத்தில் இருந்தது.
எனினும் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளமை பேரதிர்ச்சியைக் கொடுக்கின்றது, கல்வி நிலையில் இவ்வாறு வடமாகாணம், தமிழர் பிரதேசம் என்பன பாரிய பின்னடைவை அடைந்திருப்பதற்கான காரணம் என்னவென்பது தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்புகின்ற நிலைமை தற்போது எழுந்துள்ளது.
மேலும், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 16 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன் விதுர்சன், வேனுகாந், துலசியன், கபின்சா, கிஷாலன், வரதராஜன் சூர்ஜயன், சகோபிதசர்மா ஆகிய 7 மாணவர்களும் 8A,B பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 228 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.