இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மின்சார தடை தொடரும்!!

மின்சார தடை

இலங்கையில் தொடர்ந்தும் மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் கடந்த 18ம் திகதி மின்சக்தி அமைச்சின் செயலாளரினால், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக முன்னறிவித்தல் எதுவும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மின்தடை காரணமாக எந்தவித அறிக்கையையும் மின்சார சபை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் நாட்டில் சீரான மழை பெய்யும் வரை மின்சார விநியோகம் தடை செய்ய நேரிடலாம் என குறிப்பிடப்படுகின்றது.

முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது!!

முன்னறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு

முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. முன்னறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதை எதிர்த்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சாரசபைக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த 18 மற்றும் 19ஆம் திகதிகளில் முன்னறிவித்தல் இன்றி பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, எவ்வாறு அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை துண்டிக்க வேண்டுமாயின் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை : கடும் வெப்பத்தினால் யாழில் இருவர் பலி!!

மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான காலநிலை நிலவும். இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தாகம் தீர்க்க மென்பானம் வாங்கிய மாணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தாகம் தீர்க்க கடையொன்றில் வாங்கிய உள்ளூர் மென்பானத்தில் தலைமுடியை ஒத்த பொருள் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உணவருந்திய பின்னர் குறித்த மாணவன் இன்று மதியம் யாழ்.புறநகர் கடை ஒன்றில் குளிர் மென்பானத்தை கொள்வனவு செய்துள்ளார். அதனை குடிப்பதற்கு முற்பட்ட வேளை சுவைமாறுபட்டிருந்ததை உணர்ந்துள்ளார்.

இதனால் மென்பானத்தின் மேல் உறையை அவ்விடத்தில் இருந்து அகற்றிய வேளை உள்ளே சளி போன்ற திரவத்துடன் தலைமுடியை ஒத்த பொருள் காணப்படுவதை கண்டு பேரதிர்ச்சியடைந்துள்ளார்.

இவ்விடயத்தை கடை உரிமையாளரிடம் குறிப்பிட்டும் எந்தவொரு திருப்தியான பதிலையும் கூறவில்லை. இதேவேளை, இது குறித்து உரிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

வவுனியாவில் வீட்டுத்திட்ட கடனில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்

வவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தினர்.

வவுனியா பாரதிபுரத்தில் 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தற்போது இவ்வீட்டுத் திட்டங்களிற்கான நிதியானது சீரான முறையில் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிபுரம் பலநோக்கு மண்டபத்திற்கு முன்னால் குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (22.03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது வீடமைப்பு அதிகார சபையே நுண்கடன் போல் பாதிக்கப்பட்டோம் உன் வீட்டுத்திட்டத்தால், சஜித் அமைச்சரே வீட்டுத்திட்ட கடனில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள், ஐந்து இலட்சம் தந்து விட்டு கடனாளி ஆக்கி வங்கிப்புத்தகத்தையும் காணி அனுமதி பத்திரத்தையும் பறித்து விட்டாயே என பல்வேறு வாசகங்களை எழுதியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர், ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வருடம் நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் போன்ற பல்வேறு விடயங்களால் குறித்த வீட்டுத்திட்டத்திற்கான அடுத்த கட்ட நிதிகள் இதுவரை வழங்கப்படாமையினால் எமக்கு வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க முடியாமல் உள்ளோம்.

மேலும் 2018ம் ஆண்டு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் போது காணப்பட்ட மணல், சீமெந்து போன்ற கட்டட பொருடகளின் விலைகள் தற்போது உயர்ந்துள்ளமையினால் குறித்த ஐந்து இலட்சம் ரூபாவில் எவ்வாறு மிகுதி வேலைகளை முடிப்பது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதுடன், நாம் தற்போது மேலும் கடனாளியாகியுள்ளோம் என தெரிவித்தனர்.

வவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊஞ்சல்கட்டு பகுதியில் புதையல்களுடன் முச்சக்கரவண்டியில் சென்ற நால்வரை புளியங்குளம் பொலிஸார் நேற்று (22.03.2019) மாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர்.

குறித்த நான்கு நபர்கள் ஊஞ்சல்கட்டு காட்டுப்பகுதியில் பேக்கோ மூலம் புதையல் தோண்டியுள்ளனர். இதன் போது பழைய காலத்து புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு போன்ற பல பொருட்களை எடுத்துள்ளனர்.

பொருட்களை முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட சமயத்தில் புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் குறித்த நான்கு நபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த வாகனம் மற்றும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 35,35,40,42 வயதுடைய தலவாக்களை , திருகோணமலை , மட்டக்களப்பு, நெடுங்கேனி பகுதியினை சேர்ந்த நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களிடமிருந்து கைப்பற்ற பொருட்கள் மற்றும் பேக்கோ, முச்சக்கரவண்டி போன்றவற்றை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

எச்சரிக்கை

நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பமான காலநிலை நிலவுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிக நீரை பருகுமாறும், நிழலான இடங்களில் தரித்திருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

வவுனியாவில் நீதவான் முன்னிலையில் கழுத்தினை அறுத்துக்கொண்ட நபரினால் பரபரப்பு!!

கழுத்தினை அறுத்துக்கொண்ட நபரினால் பரபரப்பு

வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நபர் ஒருவர் தனக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (22.03.2019) மாலை 3.30 மணியளவில் கழுத்தினை அறுத்தக்கொண்டமையினால் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழங்குகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இதன் போது வழங்குக்காக சென்றிருந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தின் செயற்பாட்டினை குழப்பும் விதத்தில் நடந்து கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதவான் குறித்த நபருக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதன் நிமித்தம் பொலிசாரால் அவர் நீதிமன்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்டார். இதன் போது தனது பையில் வைத்திருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்த பொலிஸார் குறித்த நபரை வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சம்பவத்தில் கற்பகபுரத்தை சேர்ந்த 33வயதுடைய நபரே காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : பொதுமக்கள் விசனம்!!

பற்றி எரியும் வயல்கள்

வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டு வருகின்றன. அதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின்றன.

பூந்தோட்டம் வீதியின் இருபுறமும் உள்ள வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி வவுனியா பொது வைத்தியசாலைக்குப் பின்புறமாக உள்ளது.

வயல்கள் எரியூட்டப்படுவதால் வைத்தியசாலையின் சுற்றுப்புறம், பேருந்து நிலையப் பகுதி, ஏ9 வீதி என்பன புகைமூட்டமாகக் காட்சியளிக்கின்றன. அதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றது. அந்தச் சமயத்தில் இவ்வாறு வயல்கள் எரியூட்டப்படுதால் மக்கள் சிரமக்களுக்கு உள்ளாவதை அவதானிக்க முடிகின்றது.

74 வயது நபரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் 21 வயது இளம் பெண் : என்ன காரணம் தெரியுமா?

இளம் பெண்

செரிபியாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் 74 வயது நபரை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள ஆசை இருப்பதாக கூறியுள்ளார். செரிபியாவைச் சேர்ந்தவர் Milojko. 74 வயதான இவரும், 21 வயதான Milijana Bogdanovic என்ற பெண்ணும் ஒரு முறையான உறவு இல்லாமல், அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஜோடி இப்போது(வரும் செப்டம்பர் மாதம்) திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Milojko மற்றும் Milijana Bogdanovic இருவரும் காதலித்து வருகின்றனர்.

இருவருக்கும் இடையே 54 வயது இடைவெளி இருப்பதால், இணையதளங்களில் பலரும் இவர்களின் உறவு எப்படி இருக்கும் அதற்கு வயகாரா தான் தேவை என்பது போல் கிண்டல் செய்யும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எங்களின் உறவு நன்றாகவே இருக்கிறது. அவரால் தினந்தோறும் என்னை சந்தோஷமாக வைத்து கொள்ள முடியும்.

மற்றவர்கள் என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை, அவர் எனக்கு பேர்பெக்ட்டாக இருக்கிறார். எங்கள் உறவினர்களும் உதவுகின்றனர். ஆனால் என் பெற்றோர் தான் இதில் வருத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

Milojko கூறுகையில், Milijana Bogdanovic என்னாலே என்னை நம்ப முடியவில்லை. இந்த வயதிலும் காதல் வரும் என்பதை Milojko எனக்கு உணர்த்தியுள்ளார். எனக்கு தெரிகிறது அவள் வயதில் மிகவும் சிறியவள், இருப்பினும் என்னால் முடிந்த அளவிற்கு அவளை நான் சந்தோஷமாக பார்த்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் Milojko -க்கு ஏற்கனவே முதல் திருமணத்தின் மூலம் 40,35 மற்றும் 30 வயதில் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி 13 மற்றும் 11 வயதில் பேரன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்கு முந்தையநாள் பிச்சையெடுக்கும் மணமகன் : என்ன காரணம் தெரியுமா?

பிச்சையெடுக்கும் மணமகன்

தமிழகத்தின் மதுரையில் வாழும் ஒரு பிரிவினர் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது மணமகனை குலசாமியாக அழகு பார்ப்பார்கள் என தெரியவந்துள்ளது.

மதுரையில் வாழும் சௌராஸ்ட்ரா மக்களில் முசுவாதி என்ற வீட்டுப் பெயரைக் கொண்டவர்கள் தங்கள் வீட்டு ஆண்களுக்கு திருமணம் செய்யும் போது முதல் நாள் மணமகனை நன்கு அலங்கரித்து அதாவது முகத்தில் திருநீறு மற்றும் கண் மை பூசி தங்கள் குலசாமி யாக அழகு பார்ப்பார்கள்.

பின்பு பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்ட பின்பு மணமகன் பட்டினபிரவேசம் என்ற நகர்வலம் வந்து பிச்சை எடுக்க வேண்டும். அப்போது உறவினர்கள் பாதாபிசேகம் செய்து வணங்குவர். மணமகனிடம் அனைவரும் வயது வித்தியாசம் இன்றி ஆசி பெறுவார்கள்.

பின் மண்டபம் திரும்பிய பின் பெற்றக் காணிக்கை யில் ஒரு பகுதி திருமண செலவாக வைத்துக்கொள்ளப்படும். மீதம் சாமிக்கு சேர்க்கப் படும். இந்த வழக்கம் இன்றும் அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

மனைவியை கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தி உயிருடன் தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன்!!

தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன்

புதுச்சேரியில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜெயநாதன் (50) – வனஜா (40) தம்பதியினர். இவர்களுக்கு பன்னீர்செல்வநாதன் என்கிற மகன் இருக்கிறான்.

கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால், 2 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து வனஜா தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் மனைவியின் வீட்டிற்கு சென்ற ஜெயநாதன், சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மகன் கல்லூரிக்கு சென்ற நேரம் பார்த்து மீண்டும் கணவன் – மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயநாதன் திடீரென வனஜாவை தாக்கியுள்ளார். வலிதாங்க முடியாமல் தப்ப முயன்ற மனைவியை, ஏணிப்படிக்கட்டில் கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத ஜெயநாதன் மோட்டார் சைக்கிளுக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவியை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்துள்ளார்.

இதில் அலறியபடியே வனஜா துடிதுடித்து இறந்துள்ளார். இவர்களுடைய வீடு அப்பகுதியில் தனியாக இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு இந்த சத்தம் கேட்கவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், கருகிய நிலையில் கிடந்த வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மீது கோபம் : காருக்குள் வைத்து எரிக்கப்பட்ட கணவன்!!

காருக்குள் வைத்து எரிக்கப்பட்ட கணவன்

மொனராகலை பொலிஸ் பிரிவில் உள்ள வீதி ஒன்றில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. அந்த வாகனத்தில் பயணித்த நபர் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

50 வயதான டிப்போ வீதி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் இந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட மோதலினால் கெப் வாகனம் ஒன்றில் வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயில் : நபர் ஒருவர் பரிதாபமாக பலி!!

சுட்டெரிக்கும் கடும் வெயில்

வட மாகாணத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 52 வயதான ஜீவகடாட்சம் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடும் வெப்பத்தால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர் கடும் வெயிலில் கட்டட அமைப்புப் பணியில் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

அவர் உடனடியாகப் பருத்தித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை!!

பெண்ணுக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை

திருகோணமலை, உப்புவெலி சுற்றுலா எல்லைக்குட்பட்ட ஹோட்டலில் ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த ஹோட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான இளம் பெண் ஹோட்டலில் தனியாக இருந்த வேளை ஹோட்டலின் உரிமையாளர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்குள்ளான ஸ்பெயின் நாட்டு பெண் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் உப்புவெலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1980ஆம் ஆண்டுக்கு பின் இன்று இலங்கையில் : 8000 அடி உயரத்திற்கு சென்ற விமானம்!!

8000 அடி உயரத்திற்கு சென்ற விமானம்

மவுசாகலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பிரதேசத்தில் செயற்கை மழை பெய்ய வைக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை மின்சாரசபை இன்று ஆரம்பித்துள்ளது. இலங்கை விமானப்படையின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான வை 12 ரக விமானம் மூலம் மவுசாகலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 8000 அடி உயரத்திற்கு சென்று மேகங்கள் மீது இரசாயனம் தெளிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட வை 12 ரக விமானம் வானத்தில் 8 அடி உயரத்தில் மேகங்களுக்கு மேலாக 45 நிமிடங்கள் செயற்கை மழையை பொழிய செய்ய இரசாயனத்தை தூவியதாக விமானப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையின் கோரிக்கைக்கு அமைய தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விசேட பொறியியலாளர்கள் குழு செயற்கை மழையை பொழிய திட்டத்தை ஆரம்பித்தனர். இதற்கு முன்னர் 1980ஆம் ஆண்டு காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்க பகுதிகளில் செயற்கை மழையை பெய்ய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.