சீனாவில் குட்டையில் மூழ்கிய சிறுவன் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நின்று போன இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Yibin நகரை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது வீட்டருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்தான். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவனை வெளியில் எடுத்த நிலையில் அவசர உதவி எண்ணுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் நின்று போன சிறுவன் இதயத்தை மீண்டும் இயக்க CPR சிகிச்சை செய்தனர். ஆனால் 40 நிமிடங்கள் சிகிச்சை கொடுத்தும் அவன் இதயம் இயங்கவில்லை. ஆனால் அருகிலிருந்த சிறுவனின் தாய், மீண்டும் சிகிச்சை தரும்படி கெஞ்சினார்.
இதையடுத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவனின் இதயம் துடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மருத்துவர் வெயின் கூறுகையில், சிறுவன் உயிர் பிழைத்துள்ளது உண்மையில் அதிசயம் ஆகும். நான் 14 வருடங்களாக மருத்துவராக பணியாற்றுகிறேன், ஆனால் இது போன்ற ஒரு விடயத்தை இதுவரை பார்த்ததில்லை என கூறியுள்ளார்.
அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்ற கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த இடங்களையும், வீடுகளையும், காணிகளையும் விட்டு வந்து வேறு பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர்.
வாடகை வீடுகளிலும், அரச விடுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். இவ்வாறு சொந்த வீடு, வாசல் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரச ஊழியர்களுக்கும் காணிகளற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் 2011ம் ஆண்டளவில் ஓமந்தை பகுதியில் உள்ள அரச காணியில் இருந்த காடுகளை வெட்டி அரச ஊழியர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 பரப்பு காணி வீதம் பல்வேறு அரச திணைக்களங்களில் வேலை
செய்யும் உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வீடமைப்பதற்காக அரச மானியமாக 5 லட்சம் ரூபா சில குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும், 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று காடாய் காட்சியளிக்கின்றது.
600 அரச ஊழியர்களுக்கு ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தில் காணிகள் வழங்கப்பட்ட போதிலும் 65 காணிகளில் மாத்திரம் அரச ஊழியர்கள் வீடுகளை அமைத்து குடியமர்ந்து வருகின்றனர். மிகுதி 155 காணிகளில் முழுமையாக காடுகளாக காணப்படுவதுடன் , 200 காணிகளில் கிணறு மாத்திரம் கட்டப்பட்ட நிலையிலும் , 130 காணிகள் வீடு மாத்திரம் கட்டப்பட்ட நிலையில் மொத்தமாக 485 காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றன.
இவ் விடயம் தொடர்பாக ஓமந்தை அரச விட்டுத்திட்டத்தில் வசிக்கும் அரச ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில், இங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வவுனியாவில் வேறு இடங்களில் காணிகள் இருப்பதினால் இங்கு அவர்கள் வருவதில்லை. 600 அரச ஊழியர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் தற்போது 65 அரச ஊழியர்களே வசித்து வருகின்றோம்.
மிகுதி காணிகள் பற்றைக்காடுகளாக காணப்படுவதினால் நாங்கள் பாரிய அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். பாம்புகள் , காட்டு உயிரினங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. மற்றும் அனைவரும் அரச ஊழியர்கள் என்பதினால் நாங்கள் வேலைக்கு சமூகமளிக்கும் சமயத்தில் திருடர்களின் தொல்லைகள் காணப்படுகின்றது.
எனவே காடுகளாக காணப்படும் காணிகளை அரசாங்கம் மீள அவர்களிடமிருந்து கையகப்படுத்தி காணிகள் , வீடுகள் அற்று வவுனியாவில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டுமென ஊழியர்கள் விசனம் தெரிவித்தனர்.
வவுனியாவில் சொந்த நிலம், சொந்த வீடுகள் அற்ற நிலையில் பலர் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் இந் நிலையில் காணப்படுவது மனதிற்கு வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தின் விசாரணை ஒன்றிற்கு அழைக்கப்பட்டு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் ஒழுக்கம் தொடர்பாக கருத்திற்கொண்டு செயற்படாமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் வவுனியா பதில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் வவுனியாவிலிருந்து இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் புசல்லாவை சென்று சட்டபூர்வமாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவ்விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த யுவதி கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முறையற்ற விதத்தில் வழக்கு தாக்கல் செய்த வவுனியா பதில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியை நேற்றைய தினம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு விளக்கமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு சென்ற பதில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விசாரணைக்கு முகம் கொடுக்காமலும் , ஒழுக்கம் தொடர்பான விடயங்களையும் பின்பற்ற தவறியமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் அவருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வவுனியா அலுவலகத்தின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எல்.வசந்தராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா நெடுங்குளத்தில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14.03) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வின் முன்னதாக அதிதிகள் கண்டிய நடனத்துடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.
சூரிய மின்சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நெடுங்குளத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து ஏழு ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி பெறப்படுகிறது.
பெறப்படும் மின்சக்தியானது இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டு தேசிய ரீதியில் பயன்படுத்தப்படுகிறது.
நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனும் கலந்து கொண்டு சூரிய மின்கலத் தொகுதியின் கட்டிடத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சூரிய மின்கலத் தொகுதியின் செயற்பாடு தொடர்பான தகவல்கள் அமைச்சர்களுக்கு நிலையத்தின் அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.
நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 09,10,11 ஆகிய தினங்களில் நடைபெற்ற செயற்பாட்டு மகிழ்வோம் 2018ஆம் ஆண்டு தேசியப் போட்டிகளில் வவுனியா வடக்கு கல்வி வலயம் ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளிப்பதக்கம், நான்கு வெண்கலப்பதக்கம், என மொத்தமாக 06 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் 2018ஆம் ஆண்டிற்கான செயற்பாட்டு மகிழ்வோம் தேசியப் போட்டியில் வவுனியா வடக்கு கல்வி வலயம் தேசிய சாதனைகளை ஈட்டியுள்ளது.
வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தரம் 05 கலவன் அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டு தங்கப்பதக்கத்தினை தனதாக்கிக்கொண்டது.
தரம் 04 கலவன் அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் தேசிய ரீதியில் இருபதாம் இடத்தையும் தனதாக்கி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது. தரம் 03 அணியில் 72 அணிகள் பங்குபற்றியதில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டது. வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் தரம் 03 ஆண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தையும் தரம் 04 பெண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கியது.
வவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம் தரம் 05 ஆண்கள் அணியில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுள்ளது. அத்துடன் வரலாற்றுச்சாதனை படைத்த வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தேசிய சாதனை புரிந்த மாணவர்களுக்கான சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் (12.03.2019) பாடசாலையின் அதிபர் கோ. குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் கேட்டக்கல்வி அதிகாரி ஆசிரிய வள நிலைய முகாமையாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆரம்பக்கல்வி, செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் இ.பகீரதன், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் நேற்று தனது தாயுடன் வீதியில் சென்று பாதசாரிக்கடவையில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றான்.
நேற்று தனது தாயுடன் வீதியில் சென்றபோது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள பாதசாரிக்கடவையை கடந்த சென்று கொண்டிருந்த போது அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி வேகமாகச் சென்ற பட்டா ரக வாகனம் தாயுடன் சென்ற சிறுவன் இருவரையும் மோதித்தள்ளியது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த தாயும் சிறுவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. தாயார் விபத்துப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இவ்விபத்தை ஏற்படுத்திய சாரதியைக் கைது செய்துள்ள போக்குவரத்துப் பொலிஸார் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். இவரை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் 16 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் காவல்துறை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 வயதான மாணவி ஒருவர் அரை நிர்வாணத்துடன், முகம் கழுத்து ஆகிய பகுதிகள் பாதி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், மரிபாகோ நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி சிலாவன் என தெரியவந்தது.
மாலை பள்ளி முடிந்த பிறகு அங்கிருக்கும் தேவாலயத்தில் வேலை செய்வார். கடந்த ஞாயிற்றுக் கிழமையும் வழக்கம் போல தேவாலயத்துக்குச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தான் சிலாவன் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் வெளியான தகவல் கொடூரத்தின் உச்சமாக இருந்துள்ளது.
சிலாவனின் உடல் பாகங்களில் பாதி காணாமல் போயுள்ளது . நாக்கு, சுவாசக் குழாய், உணவுக் குழாய், தொண்டை, வலது காது ஆகியவற்றைக் காணவில்லை. மேலும், சிலாவனின் முகத்தில் உள்ள தோல் கிழிக்கப்பட்டு எலும்பு வெளியில் தெரியும் அளவுக்கு கொடுமையான முறையில் இருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் செய்வதற்கு முன் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், சிலாவனை யாரேனும் கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசியிருக்க வேண்டும். இரவில் விலங்குகள் அவரின் உடலைச் சிதைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்
இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை கண்டித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு பிலிப்பைன்ஸ் பண மதிப்புப் படி ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை தனிஷா முகர்ஜி அமெரிக்காவில் தான் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். பிரபல ஹிந்தி நடிகை கஜோலின் தங்கை தனிஷா முகர்ஜி. இவர் தமிழில் ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்தில் 2வது கதாநாயகியாக நடித்தவர் தனிஷா. ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது டி.வி.நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், தான் அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது ஒருவர் என்னை அருவெருப்பாக பார்த்தார்.
கேவலமான வார்த்தைகளால் பேசினார். அவரது செயல் குரூரமாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தது. என்மீது இனவெறியோடு நடந்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், நான் பொறுமையாக இருந்தேன். ஓட்டல் ஊழியர் ஒருவர் நான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அந்த நபர் அப்படி பேசியதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் இனவெறி அனுபவத்தை நான் சந்தித்தேன். இதற்கு முன்பு இதுபோல் நடந்தது இல்லை. என்னுடன் வந்த தோழிகளும் இதை பார்த்து அதிர்ச்சியானார்கள்’ என தெரிவித்துள்ளார்.
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் மயில்வாகனம் சிறிரஞ்சன் அவர்களின் 50 ஆவது அகவை தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இம் மாதம் 23 ,24ம் திகதிகளில் யங் ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இப் போட்டிகள் அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம்பெறவுள்ளன.
இப் போட்டிக்கு நுழைவுக்கட்டணம் இல்லை. கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 0764156365 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.
பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் ஏற்பட்ட முடக்கம் சில நாடுகளில் தற்போதும் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செயலிகள் மீது பாரிய வைரஸ் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதனை பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.
இது வைரஸ் தாக்குதல் இல்லை என்பதனை எங்களால் உறுதியாக கூற முடியும், தொழில்நுட்ப கோளாரினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட செயலிகள் வழமை நிலைக்கு கொண்டு வரப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை ஏற்பட்டு 6 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரமாகியுள்ளது. பல நாடுகளில் பேஸ்புக், மெசென்ஜர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பேஸ்புக்கிற்குள் நுழைய முடிந்த போதிலும் அதற்குள் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் உரிமை கோரும் வட்ஸ்அப் செயலியிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பிரதான சமூக வலைத்தளங்களின் முடக்கம் காரணமாக அதன் பயனர்கள் கவலை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக மணமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்த பசவண்ணா கொள்கையின்படி, நேற்று இரண்டு திருமணங்கள் விஜயபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
பசவண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் திருமணத்தின் போது வேத மந்திரங்கள் ஓதமாட்டார்கள். கன்னியாதானம், அட்சதை தூவுவது போன்றவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள். இங்கு பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என கருதப்படுவதால், தாலி காட்டும் முறைகூட மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரபுரா- அங்கிதா, அமித் -பிரியா ஆகிய இரண்டு ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருமணத்தில் இரண்டு மணப்பெண்களும் தங்களுடைய கணவருக்கு தாலி கட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றையே இவ்வாறு ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இல்லாத நிலையில் பேருந்தை ஓட்டி சென்ற அடையாளம் தெரியாத நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடுகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து நீர்கொழும்பு நோக்கி செல்வதற்கு உடுகம டிப்போவில் இருந்து பயணித்துள்ளது. எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திய சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். இதன்போது பேருந்தில் ஏரிய மர்ம நபர் பயணிகளுடன் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை பேருந்தை ஓட்டி சென்ற நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் முச்சரவண்டி ஒன்றின் உதவியுடன் பேருந்தை துரத்தி சென்று பிடித்துள்ளனர். சந்தேகநபரை எல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறான செயலை செய்தது ஏன் என்பது தொடர்பில் உரிய தகவல் கிடைக்காத நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பேருந்தில் பெருமளவு பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் அச்சம் காரணமாக அபாய குரல் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மெக்சிகோவில் ரத்தம் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை, அவருடைய காதலி கட்டிப்பிடித்து இறந்துவிடாதே என கெஞ்சியபடியே கதறி அழும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவில் ஹோட்டல் ஒன்றிற்கு வெளியே சோனியா (22) என்கிற பெண்ணுக்கும், அவனுடைய 29 வயது காதலன் எரிக்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வயிற்றில் ரத்தத்துடன் எரிக் தரையில் சரிந்து விழுந்தார். அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே, இறந்துவிடாதே என சோனியா கெஞ்சுகிறார்.
அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர், என்ன நடந்தது என கேட்கும்பொழுது, “அவன் என்னை அடித்தான், என்னை கொலை செய்ய முயற்சித்தான்,” என கூறினார். உடனே எரிக் திரும்பி, “உண்மையை சொல்லு, அவள் என்னை என்னை கொலை செய்ய விரும்புகிறாள்” என கூறினார்.
அழுதுகொண்டிருந்த அந்த பெண், நான் உன்னை கொலை செய்ய முயற்சிக்கவில்லை. ஏனென்றால் நான் உன்னை காதலிக்கிறேன். நான் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன். ஆனால் நீ எனக்கு என்ன செய்தாய் என்பதை மறந்துவிட்டாய் என கூறினார். உடனே காயங்களுடன் கிடந்த எரிக், “கடவுள் தான் இதற்கு சாட்சி” என கூறிக்கொண்டிருந்தார். அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எரிக் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சோனியாவை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனியில் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை மதுரைக்கிளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு, காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
ஆரம்பத்தில் இந்த வழக்கினை விசாரித்த பொலிஸார் தற்கொலை என முடிக்க நினைத்தனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் தொடர் அழுத்தத்தினால், மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளபட்டது.
அதிலும் முன்னேற்றம் ஏற்படாததால், எழில் தரப்பினரால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தான் கட்டவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காட்டுப்பகுதியில் இருந்த காதல் ஜோடியிடம் பணம் கேட்டு பறித்துள்ளார். அதன்பிறகு கஸ்தூரியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற எழிலை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிக்க முயன்ற கஸ்தூரியையும் காலில் வெட்டியுள்ளார். பின்னர் கீழே விழுந்தவரின் முதுகில் வெட்டி, ரத்தவெள்ளத்துடனே கஸ்தூரியை துஸ்பிரயோகம் செய்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.
இந்த வழக்கானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது குற்றவாளிக்கு, 7வருட கடுங்காவல் தண்டனை, ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று மதுரைக்கிளை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.
கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொரட்டுமுல்ல, பிலியந்தலை பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகனின் நண்பர் உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்த நிலையில் மொரட்டுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 76 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, பின்ச் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கவாஜா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. 102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார்.
சதம் அடித்த அவர் 104 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவருக்கு இணையாக ஆடிய ஹேண்ஸ்ட்காம்ப் 52 ஓட்டங்களில் வெளியேற, அவுஸ்திரேலிய அணி இறுதியில், 9 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
அதன் பின் 273 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா-ஷிகர் தவான் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். அப்போது தவான் 12 ஓட்டங்களிலே வெளியேறி, இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்க, அடுத்து இறங்கிய விராட் கோஹ்லி 20 ஓட்டங்களிலும் ரிஷப் பந்த் 16 ஓட்டங்களிலும், விஜயசங்கர் 16 ஓட்டங்களிலும் என அடுத்தடுத்து வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலு ரோகித் சர்மா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய கேதார் ஜாதவும், 7-வது விக்கெட்டுக்கு இறங்கிய புவனேஸ்வர் குமாரும் நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடி 91 ஓட்டங்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 46 ரன்னிலும், கேதார் ஜாதவ் 44 ரன்னிலும் வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதியானது.
இறுதியில், இந்தியா 237 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்ததால் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் சம்பா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம், அவுஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 3 – 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 ஆண்டுகளாக கோப்பையை தன் வசம் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் தோல்வி மூலம் தற்போது கோப்பை அவுஸ்திரேலியாவுக்குச் செல்கிறது.
இந்திய மண்ணில் தொடர்ந்து ஆட்டம் காட்டி வந்த இந்திய அணியின் ஆட்டத்தையும் அவுஸ்திரேலியா அடக்கியுள்ளது.