30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு சேவையாற்றிய வைத்தியர் விபத்தில் உயிரிழப்பு : சோகத்தில் மக்கள்!!

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் எரிபொருள் பௌசருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் (17.06.2025) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் சேருவில பகுதியில் இருந்து தோப்பூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதிர் திசையில் அதே பக்கத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த நபருடன் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக மறுபக்கத்திற்கு முச்சக்கர வண்டியை செலுத்த முற்படுகையிலேயே எதிர் திசையில் வந்த எரிபொருள் பௌசருடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவர் சேருவில வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் நிமால் கெல்வின் (வயது 59) எனவும் படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த அவருடைய நெருங்கிய உதவியாளர் என்.லாபீர் (வயது 55) எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்த வைத்தியரின் பூதவுடல் சேருவில வைத்தியசாலையில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை அவரது சொந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

உயிரிழந்த வைத்தியர் மிகுந்த சேவை நோக்கம் கொண்ட வைத்தியர் எனவும் அவருடைய இழப்பு பாரிய இழப்பு எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியர் தனது சொந்த இடத்தை விட்டு வந்து 30 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும் அவருடைய இழப்பு அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூந்து – லொறி மோதி விபத்து : பலர் காயம்!!

இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் எஹெலியகொடை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (18.06.2025) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் லொறியின் சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் கேக் சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த சோகம்!!

யாழில் கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட பின் இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.

பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் எனோ அசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் இன்றையதினம் தனது வீட்டில் கேக் மற்றும் தேநீர் என்பன உட்கொண்டு சிறிது நேரத்தில் மயக்கமுற்றுளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து குறித்து வெளியான தகவல்!!

அகமதாபாத் குஜராத் விமான விபத்தில் பலியான, 270 பேரில், 162 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 120 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, கடந்த 12ம் திகதி புறப்பட்ட, ‘ஏர் – இந்தியா’ விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்தார். 241 பேர் பலியாகினர். மேலும், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், 29 பேரும் உயிரிழந்தனர்.

விபத்தின்போது, விமானம் தீப்பிடித்து எரிந்ததால், இறந்தவர்களை அடையாளம் காண முடியாததுடன், உடல் உருக்குலைந்தது. இதனால் அவர்களை அடையாளம் காண, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை நடத்தப்பட்டது.

இது குறித்து ஆமதாபாத் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ”நேற்று காலை வரை நடத்தப்பட்ட மரபணு சோதனையில், 162 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.

இதில், 120 பேரின் உடல்கள் குஜராத், மஹாராஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான் மற்றும் டையு பகுதிகளை சேர்ந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில், ஐந்து பேர் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள்,” என்றார்.

வட்ஸ்அப் பயனர்களை கவரும் வகையில் ஸ்டேடஸில் புதிய அப்டேட்!!

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது.

அதன்பிறகு பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் மேற்கொண்டு வருகிறது. முதலில் குறுஞ்செய்தி மட்டும் பகிரும் வசதி இருந்தது.

அதன்பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதி கொண்டு வரப்பட்டது. அதேபோல, 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிரும் வசதியையும் வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ் அப்பின் இந்த ஸ்டேட்ஸ் வைக்கும் வசதியை பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்களை ஒளிபரப்ப வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே விளம்பரங்கள் வருவது போல வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்கள் தோன்றும். தனிப்பட்ட சாட்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வைத்தியசாலையில் வாங்கிய சாப்பாடு பொதியில் காத்திருந்த விருந்தாளி!!

குருநாகல், மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து வாங்கிய சாப்பாட்டு பொதியில் நத்தை ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சகோதரியைப் பார்க்கச் சென்ற போது மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து சாப்பாட்டு பொதி ஒன்றினை வாங்கியுள்ளார்.

இந்த சாப்பாட்டினை குறித்த நோயாளி உண்ணும் போது பொதியில் இறந்த நத்தை ஓட்டுடன் இருப்பதை கண்டுள்ளதுடன் குறித்த நோயாளிக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டுள்ளது.

இது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தபட்டதுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளரை கடுமையாக எச்சரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரவை சந்தித்த விமானப் பணிப்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்!!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை விமானத்தில் சந்தித்த விமானப் பணிப்பெண் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார். “என் தாய்நாடான இலங்கைக்குச் செல்லும் வழியில் நமது ஜனாதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் தோஹாவிலிருந்து கொழும்புக்கு செல்லும் விமானத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். நானும் எனது நண்பர் இமாரத்தும் அவருடன் புகைப்படம் எடுக்கச் சென்றோம், ஆனால் அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார், அதனால் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.

சிறிது நேரம் கழித்து, அவர் விழித்தெழுந்து குளியலறைக்கு புத்துணர்ச்சி பெறச் சென்றார், அதனால் நாங்கள் வெளியே காத்திருந்தோம். அவர் எங்களுடன் புகைப்படம் எடுக்க அனுமதி தந்தார், மேலும், அவர் நின்றுகொண்டே எங்களுடன் 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார்.

அவர் மிகவும் அன்பானவர், நாங்கள் ஜனாதிபதியுடன் பேசுகிறோம் என்பதைக் கூட மறந்துவிட்டோம். சில நிமிடங்கள் கழித்து, எங்கள் மேற்பார்வையாளர் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்கிறோமா என்று பார்க்க வந்தார்.

ஆனால் ஜனாதிபதி சிரித்துக்கொண்டே, “இல்லை, பரவாயில்லை, இவர்கள் என் மக்கள்” என்றார். அந்த நேரத்தில் நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.

நான் பணிபுரியும் அதே விமானத்தில் இருந்த நமது நாட்டின் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவது ஒரு உண்மையான பாக்கியம் என அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

குழந்தையை கொலை செய்யப் போவதாக 2 மில்லியன் கப்பம் கோரிய கும்பல்!!

குழந்தைகளை கொலை செய்யப் போவதாக மிரட்டி 2 மில்லியன் ரூபா கப்பம் கோரிய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். படல்கம பொலிஸ் பிரிவில் உள்ள மல்லவகெதரவில் வசிக்கும் நபரின் குழந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கபபட்டுள்ளன.

இது தொடர்பாக, நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, சீதுவ பொலிஸ் பிரிவில் உள்ள தம்பத்துரை பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.

இதன்போது 10 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரிய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து படல்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தேக நபர்கள் 32 மற்றும் 46 வயதுடையவர்களாகும்.

விசாரணையில், இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை எனவும் முறைப்பாட்டாளரை மிரட்ட இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவந்தது.

மேலும், இந்த குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட போலி துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் கப்பமாக பெற்ற பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆகியவை பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பல கையடக்க தொலைபேசிகள், அந்த தொலைபேசிகளில் உள்ள அனைத்து சிம் அட்டைகள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ATM அட்டைகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

படல்காமா பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் இரு சகோதரிகளின் உயிரை பறித்த சாரதி : மகள்கள் படுகாயம்!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், பாதசாரி கடவை ஊடாக பாதையைக் கடக்கும்போது மது போதையில் சாரதியொருவர் செலுத்திச் சென்ற காரொன்று மோதி உயிரிழந்துள்ளனர்.

இறந்த பெண்களில் ஒருவரின் இரண்டு பிள்ளைகளும் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹொரணை – கொழும்பு வீதியில் உள்ள கோரளயிம பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு வந்த இரண்டு பெண்களும் இரண்டு பிள்ளைகளும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மற்றொரு

உறவினர் வீட்டிற்குத் திரும்புவதற்காக பாதசாரி கடவையில் பாதையைக் கடக்கும் கோனபொலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் உட்பட நான்கு பேர் உடனடியாக வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒரு பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து மரணித்த பெண்ணின் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்களும், அவரது சகோதரியும் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டனர். இதன்போது சகோதரியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் 45 வயதான பண்டாரகம, ஹேன்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உயிரிழந்த அவரது சகோதரி பேருவளை, மாகல்கந்த, அலுத்ஹேன பகுதியில் வசித்துவந்த மூன்று பிள்ளைகளின் தாயான 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்தவர்கள் விபத்தில் உயிரிழந்த சுரங்கிகா தமயந்தியின் இரண்டு பிள்ளைகளாவர். அவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகத்திற்குரிய வாகன சாரதி தனது மூன்று வயது மகளுடன் உணவு வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​பாதசாரிகள் கடவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்துக்குப் பிறகு, அவர் தனது மகளை அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைத்துவிட்டு, பொலிஸார் அங்கு வந்தவுடன் சரணடைந்தார். விபத்து தொடர்பாக 28 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக மொரகஹஹேன பொலஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இன்று (16) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பசுவுடன் விளையாடிய சிறுவனுக்கு காத்திருந்த ஆபத்து : சோகத்தில் தவிக்கும் குடும்பம்!!

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் (14.06.2025) உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அனுராதபுரத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுவனே கடந்த 13.06.2025 மாலை இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளான்.

சிறுவன் வேறு சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​குழப்பமடைந்த பசு அங்கிருந்து வீதியில் ஓடியுள்ளது.

அங்கு, துரதிர்ஷ்டவசமாக குறித்த சிறுவனும் பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, கிட்டத்தட்ட 900 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளான்.

மெதுவாக சாப்பிட்ட 3 வயதுக் குழந்தையை அடித்தே கொலை செய்த பெற்றோர்!!

அமெரிக்காவில் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதி தங்களுடைய குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடினர்.

அமெரிக்காவில் வசித்து வந்த ஜான்சன் ரேமண்ட் தம்பதியினர் அவர்களுடைய 3 வயது மகள் விமானத்தில் ஏறும்போது தவறி விழுந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை மெதுவாக சாப்பிட்ட காரணத்திற்காக பெற்றோர் அடித்துக் கொலை செய்துவிட்டு தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது.

அந்த குழந்தையுடன் விளையாடிய மற்ற குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அந்த தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிறந்த நாளில் மயங்கி சரிந்து கல்லூரி மாணவி பலி : கதறித் துடிக்கும் பெற்றோர்!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிராவட்டம் கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ராஜன்-பிந்து. இவர்களுடைய மகள் ஸ்ரேயா 12 ம் வகுப்பு படித்து முடித்துள்ளாள்.

இவர் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பில் சேர தயாராக இருந்தார். அன்றைய தினம் காலை நேரத்தில் குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற நிலையில் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பிந்து உடனடியாக தன்னுடைய மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ஸ்ரேயா உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். மாணவி இதய பிரச்சினை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தநாள் அன்றே மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் குடும்பமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண் : தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன்!!

திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணைக் கொன்று, தோட்டத்தில் புதைத்த காதலனைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் பெட்டகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட நாராயணபுரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (27). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அதே கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு மதுஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மதுஸ்ரீயை ஹெதலகெரே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 16ம் தேதி மதுஸ்ரீ உறவினர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பெற்றோர் பெட்டகேரி போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சதீஷ் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் கூறினர்.

இதையடுத்து சதீசை அழைத்து விசாரித்தபோது, மதுஸ்ரீ உறவினர் வீட்டுக்கு சென்ற பின்னர் நான் பார்க்கவில்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் போலீசாருக்கு சதீஷ் மீது சந்தேகம் எழுந்தது. அவரது நடவடிக்கையை கண்காணித்தனர்.

இந்நிலையில், 6 மாதம் கழித்து கடந்த 13ம் தேதி சதீஷ், மதுஸ்ரீயை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது. அதை வைத்து சதீசிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மதுஸ்ரீயை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அதாவது சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மதுஸ்ரீயை அழைத்து சென்ற அவர் தனது தோட்டத்தில் தங்க வைத்தார்.

இந்நிலையில் ஜனவரி 12ம் தேதி மதுஸ்ரீ, சதீசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதனால் கோபம் அடைந்த சதீஷ், துப்பட்டாவால் மதுஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் உடலை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். மேலும் உடல் எலும்பு கூடாக மாறியது. அதை தோண்டி எடுத்து வெவ்வேறு இடத்தில் புதைத்து வைத்தது தெரியவந்தது. இவ்வாறு கடந்த 6 மாதமாக செய்து வந்ததாக தெரிய வந்தது.

தற்போது அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுஸ்ரீயின் எலும்பு கூடுகளை கைப்பற்றியுள்ள போலீசார் அதை மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கைதான சதீஷிடம் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர் : ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள்!!

கடந்த வாரம், அதாவது, ஜூன் மாதம் 12ஆம் திகதி, அஹமதாபாதில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணித்த 241 பயணிகளுடன், விமானம் விழுந்த கட்டிடத்திலிருந்தவர்களையும் சேர்த்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அந்த விமானத்தில் விமானியை ஹீரோ என புகழ்கிறார்கள் சிலர். ஆம், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விழுந்த இடத்தில் ஒரு மருத்துவக்கல்லூரியின் ஹாஸ்டல் இருந்ததால், அதிலிருந்தவர்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள்.

ஆனால், அந்த ஹாஸ்டலுக்கு சற்று தொலைவிலேயே, 18 குடும்பங்கள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் வாழும் மக்கள், தங்கள் கட்டிடத்தின் மீது விமானம் மோதாமல் தவிர்த்ததற்காக, விமானியை ஹீரோ என புகழ்கிறார்கள்.

விமானம் அந்த ஹாஸ்டலில் மோதாமல் தங்கள் குடியிருப்பில் மோதியிருக்குமானால், உயிரிழப்பு மேலும் நூற்றுக்கணக்கில் அதிகமாகியிருந்திருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

விமானம் விபத்துக்குள்ளாகப்போகிறது என்பதை அறிந்த விமானியான சுமீத் சபர்வால் (Captain Sumeet Sabharwal), கடைசி நேரத்தில் தங்கள் குடியிருப்பின்மீது மோதாமல்,

வெறுமையாக இருந்த புல்வெளி ஒன்றில் விமானத்தை இறக்க முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.

அப்படி அந்த புல்வெளியில் விமானத்தை இறக்கும்போது விமானம் அந்த ஹாஸ்டல் மீது மோதியிருக்கலாம் என்று கூறும் அவர்கள், தங்கள் குடியிருப்பின்மீது மோதாமல் தவிர்த்த விமானி சுமீத் தங்கள் உயிரைக் காத்த ஹீரோ என புகழ்கிறார்கள்.

மரத்தில் இருந்து சுற்றுலா பயணியின் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு!!

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகளை பறித்துச் சென்ற குரங்கு மரத்தின் மீதிருந்து அதனை பறக்க விட்டுள்ளது.

தமிழக மாவட்டமான திண்டுக்கல், கொடைக்கானல் குணா குகைப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி குணா குகைப் பகுதியை பார்வையிட வந்தார்.

அவர் கையில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளை வைத்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த குரங்கு ஒன்று சுற்றுலா பயணி கையில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகளை பிடுங்கிச் சென்று மரத்தின் மீது ஏறி அமர்ந்தது.

பின்னர் அங்கு இருந்து கொண்டே ரூபாய் நோட்டு கட்டுகளை பிரித்து ஒவ்வொரு தாளாக கீழே வீச தொடங்கியது. அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ரூபாய் தாள்கள் கீழே பார்ப்பதை ஆச்சரியமாக பார்த்தனர்.

இதையடுத்து, பணப் பையை பறிகொடுத்த சுற்றுலாப் பயணி பொறுமையாக காத்திருந்து மேலிருந்து கீழே விழும் ரூபாய் தாள்களை சேகரித்தார். அவருக்கு அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளும் உதவினர்.

தானியங்கி கேட்டில் சிக்கி பரிதாபமாக பலியான நபர்!!

பேருவளை, சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர், தானியங்கி வாயிலில் (Gate) சிக்கி உயிரிழந்துள்ளார்.

தொலை இயக்கி (Remote Control) மூலம் இயக்கப்படும் வீட்டின் பிரதான வாயிலில் சிக்கி இந்த நபர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பேருவளை, மஹகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.