வட மாகாணத்தில் தமிழ் மொழிக்கு வந்த சோதனை!!

தமிழ் மொழிக்கு வந்த சோதனை

வட மாகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தமிழ் மொழிப் பயன்பாடு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படடது. இந்நிலையில் விடுமுறை அளிக்கப்பட்ட தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலை நடைபெறும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேஷ் ராகவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழிப் பயன்பாடு எழுத்துப் பிழைகளோடு தட்டச்சு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ் மொழியின் பயன்பாட்டை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் அறிக்கையில் கூட இவ்வளவு கவனக் குறைவாக பிழைகள் விடப்பட்டுள்ளமையானது கண்டிக்கத்தக்கது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கின் புதிய ஆளுநராக பதியேற்ற கலாநிதி சுரேஸ் ராகவன், தமிழ் சிங்களம் ஆங்கில என மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் தொடர்பில் மேற்கோள்கொண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி அறிக்கையில் இவ்வாறு தவறுதலாக எழுத்துப் பிழைகள் விடப்பட்டிருப்பதானது விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் மக்களினை அதிகம் கொண்டிருக்கும் வடக்குப் பகுதியில் தமிழ் மொழிக்கு இப்படியொரு சோதனையா என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா பாடசாலையில் தேன்கூடு அச்சம் காரணமாக மாணவர்கள் வெளியேற்றம்!!

மாணவர்கள் வெளியேற்றம்

வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் தேன் கூடு காரணமாக அதனை அகற்றுவதற்காக இன்று பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலுள்ள அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் இன்று காணப்பட்ட தேன்கூடு காரணமாக பாடசாலையிலுள்ள மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படவாய்ப்புக்கள் காணப்படுவதாக பாடசாலையின் அதிபர் வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இன்றைய தினம் பாடசாலைக்கு விடுமுறை வழங்கி தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபருக்கு கல்வி வலயப்பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் இன்றைய விடுமுறை தினத்தை வேறு ஒரு தினத்தில் பாடசாலை நடாத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று காலை மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக நடவடிக்கைக்காக அதிபர் ஊடாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது தற்போது தேனீயை அகற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவப்பிரிவிற்கு வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு வெளியிலிருந்து உதவி பெற்றுக்கொள்வதற்கு பாடசாலை அதற்குரிய பணம் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாடசாலையிலிருந்து தேனீயை அகற்றுவதற்குரிய நடவடிக்கையை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரின் விடுதலைத் திகதி அறிவிப்பு!!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணியான புகழேந்தி இந்திய ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது விடுதலை குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூற முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா இவர்களை விடுவிக்க முடிவு செய்திருந்தார். அத்துடன், இது குறித்த அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்தார். எனினும், மத்திய அரசு இவர்களது விடுதலைக்கு தடையாகவே இருந்த வந்தது.

எனினும், குறித்த ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசு முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து குறித்த ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், அதற்கும் இதுவரையில் முடிவு கிடைத்ததாக இல்லை. இந்த நிலையில்தான் எதிர்வரும் 10ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து சட்டத்தரணி புகழேந்தி இந்திய ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில், “எதிர்வரும் 10ம் திகதிக்குள் அவர்கள் அனைவரையும் விடுவிப்பார்கள் என்று முக்கியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தகவல் மத்தியிலிருந்து வந்த தகவல் என்று நம்மிடம் கூறியவர் இப்போதைக்கு இதற்கு மேல் எதுவும் கூற முடியாது. மிக முக்கியமான நபரிடம் இருந்து வந்த தகவல் இது என்பதால் இதற்கு மேல் உள்ள தகவல்களை கூற இயலவில்லை எனத் தெரிவித்தார்.

7 பேரையும் விடுவிக்க கோரி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதாக இருந்தோம். இந்த நிலையில் மிக முக்கியமான நபரிடம் இருந்து 7 பேரும் வரும் 10 ம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது அதனால் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம்” என கூறியுள்ளார்.

இளம் நடிகைகள் இருவரின் மோசமான செயற்பாடு : காதலர்களால் ஏற்பட்ட விபரீதம்!!

மோசமான செயற்பாடு

கண்டியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட இளம் நடிகைகள் இருவருக்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு நடிகைகளும் போதைப்பொருளுடன் உடுநுவர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை கம்பளை நீதிமன்றில ஆஜர்படுத்திய வேளையில், பத்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஒருவருட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் இளம் சிங்கள நடிகைகள் இருவருக்கே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு நடிகைகள் மற்றும் மேலும் சிலரும் தங்கள் பணிக்காக இடம் ஒன்றை தேடிச் சென்றுள்ளனர். இதன் போது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை போது இருவரிடமும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இள வயதுடைய இந்த நடிகைகள் தங்களின் காதலர்களினால் போதைப்பொருளுக்கு அடிமையானதாக தெரிவித்துள்ளார். குறித்த இரு நடிகைகளும் கடந்த 6 மாதங்களாக ஹெரோயின் போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பணியின் நிமித்தம் வெளியில் செல்லும் நாட்களில் கொழும்பில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்வதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் விலை அதிகரிப்பு : விபரங்கள் இதோ!!

வாகனங்களின் விலை அதிகரிப்பு

வரவுசெலவுத்திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக வாகனங்களின் விலைகள் குறைந்தது 150,000 ரூபாவால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பினால் வாகனங்கள் 150,000 ரூபா முதல் 600,000 ரூபாவரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 800CC சுசுக்கி அல்டோ, டெய்சு மிரா, டொயோட்டா பிக்ஸிஸ், ஹொன்டா என் பொக்ஸ் போன்றவை 150,000 வரை அதிகரித்துள்ளது. 1000CC டொயோட்டா வியோஸ், டொயோட்டா பாஸோ போன்றவை 250,000 வரை அதிகரித்துள்ளன. 1300CC வாகனங்கள் 500,000 வரை அதிகரித்துள்ளன.

1500CC ரக டொயோட்டா பீரிமியோ போன்ற வாகனங்கள் 600,000 ரூபா வரை அதிகரித்துள்ளன. ஹைப்பிரைட் 800CC வெகனார் வாகனங்கள் 250,000 ரூபா வரை அதிகரித்துள்ளன. ஹைபிரைட் 1500CC வாகனங்கள் 500,000 ரூபாவரை அதிகரித்துள்ளன. எனினும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் 175,000 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

முச்சக்கர வண்டியில் நீண்ட தூரம் பயணித்து உயிரிழந்த பெண் : மிரண்டுபோன சாரதி!!

மிரண்டுபோன சாரதி

முச்சக்கரவண்டியில் உயிரிழந்த பெண்ணொருவரை ஏற்றிச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாரவிலயில் இருந்து ஹட்டன் நோக்கி உயிரிழந்த பெண்ணை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றமை தொடர்பில் ஹட்டன் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டிக்கோயாவை சேர்ந்த 66 வயதான நோயாளி பெண் ஒருவரை அழைத்து செல்வதாக கூறிய இருவர், சடலம் ஒன்றை கொண்டு சென்றுள்ளனர். மாரவில பிரதேசத்தை சேர்ந்த இருவரே இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

20000 ரூபா வாடகை அடிப்படையில் முச்சக்கரவண்டியை பெற்று மோசடி நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளனர். பெண்ணின் சடலத்தை நோயாளி ஒருவரை அமர வைத்து அழைத்து செல்வதனை போன்று நேற்று காலை டிக்கோயாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி டிக்கோயா பிரதேச வீடு ஒன்றிற்கு வரும் போது, அந்த வீட்டில் இறுதி அஞ்சலிக்காக ஏற்பாடு செய்திருந்ததனை அவதானித்துள்ளார். இதன் போதே முச்சக்கர வண்டியில் இருப்பது பெண் அல்ல சடலம் என சாரதி அறிந்து கொண்டுள்ளார்.

சடலத்தை வீட்டு உரிமையாளர் பெற்றுக் கொண்டதன் பின்னர் முச்சக்கர வண்டி சாரதி சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் ரயில்வே திணைக்களம் பொதுமக்களுக்கு இழைத்த அநீதி!!

பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை

வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியில் நான்கு உயிர்களைக்காவு கொண்ட பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி தற்போது அகற்றப்பட்டுள்ளது. அப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு தண்டவாளம் போட்டு போக்குவரத்து மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியிலுள்ள புகையிரதக்கடவைக்கு பாதுகாப்பு வேலி இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்புடன் அமைத்துக்கொடுக்கப்பட்டு ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, புளியங்குளம் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரினால் திறந்து மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பாதையில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு வேலியை உடனடியாக அகற்றுமாறு கோரி பிரதேச செயலாளர், ஈஷி மிஷன் ஆயலத்தின் பிரதான பிஷப், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கு எதிராக வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய நிலையில் கடந்த 5ஆம் திகதி வவுனியா ரயில்வே திணைக்களம் பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியை மக்களின் பயன்பாட்டிலிருந்த புகையிரதப் பாதையை மக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டு இரு பக்கமும் தண்டவாளம் போட்டு தடை அமைக்கப்பட்டு முற்றாக மக்களின் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான காரணமாக அப்பாதை ரயில்வே திணைக்களத்திற்குள் உள்வாங்கப்படவில்லை அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிஸில் புகலிட கோரிக்கை தொடர்பில் புதிய நடைமுறை : இலங்கையர்கள் பலருக்கு ஆபத்து!!

இலங்கையர்கள் பலருக்கு ஆபத்து

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரியாளர்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறை குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக, சுவிட்சர்லாந்து நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளின் மூலம், புகலிடம் பெற தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படவுள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு தேவையில்லை என அடையாளம் காணப்படுவோர் உடனடியாக நாடு கடத்தப்படவுள்ளனர்.

புதிய விதிகளுக்கு அமைய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் முதல் நாளிலிருந்து இலவச சட்ட ஆலோசனையை பெறுவதற்கு உரிமையை பெற்றுள்ளனர். இது அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும்.

அந்த ஆலோசனைக்களுக்கான விடயங்கள் சுவிட்சர்லாந்து மத்திய அரசிடம் வழங்கப்படும். அற்கமைய புகலிடம் கோருவோருக்கு சட்ட ஆதரவாளர்களால் வழங்கப்படும் சட்ட ஆலோசனைக்களுக்கமைய செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் 140 நாட்களுக்குள் ஃபெடரல் புகலிட கோரிக்கை மையங்களில் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் பெருமளவு இலங்கையர்கள் புகலிடம் கோரியுள்ளனர். அவர்களில் பலரின் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முச்சக்கரவண்டியில் பெண்ணின் சடலத்தை ஏற்றிச் சென்ற அதிர்ச்சி சம்பவம்!!

அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் அட்டன் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாரவில பகுதியில் இருந்து அட்டனுக்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ள பெண்ணொருவரை கொண்டு செல்ல வேண்டும் என முச்சக்கரவண்டி சாரதியிடம் கூறி,உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இரண்டு பேர் முச்சக்கரவண்டியில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் பயண முடிவின் போது மரண வீட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்ததை அவதானித்த பின்னரே, தான் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை ஏற்றி வந்ததை முச்சக்கரவண்டி சாரதி அறிந்துள்ளார்.

பின்னர் அவர் இது தொடர்பில் அட்டன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகளும், அவரது பேரணுமே இவ்வாறு முச்சக்கரவண்டியில் சடலத்தை கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அட்டன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்மம்!!

சிக்கிய மர்மம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
75 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 கிலோ கிராம் கொக்கொய்னை கடத்த முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெவிலியா நாட்டைச் சேர்ந்த நபரை, விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் பயண பையில் சூட்சுமமான முறையில் ஒழித்து வைத்து கொக்கொய்ன் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனினும் விமான நிலைய சுங்க அதிகாரிகளின் தீவிர சோதனை காரணமாக குறித்த கொக்கொய்ன் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – சி.சி.டி.வி காணொளி!!

கோர விபத்து

அநுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் மொரகொட பகுதியில் தனியார் பேருந்தொன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும், பாரவூர்தியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 5.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

அவதானம் : வட மாகாணத்தில் நாளை கடும் வெப்பமான காலநிலை!!

கடும் வெப்பமான காலநிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், நிழலான இடங்களில் தரித்திருத்துக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், வீட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். அத்துடன், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கடத்தல் : காதலனுக்காக காத்திருந்தவருக்கு நேர்ந்த கதி!!

காதலனுக்காக காத்திருந்தவருக்கு நேர்ந்த கதி

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பகுதியில் வைத்து வெளிநாட்டு பெண்ணை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலனை அழைத்து வருவதற்கு வேன் ஒன்றிற்காக காத்திருந்த ஹங்கேரி நாட்டு பெண்னே இவ்வாறு கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பெண்ணை கடத்தி சென்றதாக கூறப்படும் வேனையும் ஹிக்கடுவை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பயாகல பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி நாட்டை சேர்ந்த 31 வயதான சிசேவென்கா ரெனெட்டா என்ற பெண் ஹிக்கடுவ பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி இந்த பெண்ணை தொடன்துவ பாலத்திற்கு அருகில் வாகனத்திற்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண மீனவர்களுக்கு வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்!!

வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்

யாழ்ப்பாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அதிர்ஷ்டமாக மீன் ஒன்று சிக்கியுள்ளது. யாழ்ப்பாணம் – பாசையூர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கே நேற்று காலை இந்த மீன் சிக்கியுள்ளது.

104 கிலோ கிராம் நிறையுடைய பாரியளவிலான மீன் சிக்கியதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். அதிர்ஷ்டமாக பாரிய மீன் கிடைத்த போதிலும், அதனை ஏலத்தில் எடுக்க எவரும் முன்வராமை ஏமாற்றம் அளிப்பதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த மீனை பாரிய விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மீன் சந்தைக்கு கொண்டு செல்வதாக மீன்வர்கள் தெரிவித்துள்ளனர்.

வீதியை கடந்து சென்ற பூனையைக் காப்பாற்ற முயற்சித்து தன் உயிரை தியாகம் செய்த சாரதி!!

உயிரை தியாகம் செய்த சாரதி

வீதியைக் கடந்து சென்ற பூனை ஒன்று விபத்துக்குள்ளாவதனை தடுப்பதற்கு முயற்சித்த சாரதியொருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். அம்பலங்கொட, ஹங்கம மித்தெனிய பிரதேசத்தில் அண்மையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபர், வீதியைக் கடந்து சென்ற பூனை விபத்தில் சிக்குவதனை தவிர்க்க முயற்சித்த போது, சாரதி முச்சக்கரவண்டியிலிருந்து கீழே வீழ்ந்துள்ளார். இவ்வாறு வீதியில் வீழ்ந்த முச்சக்கர வண்டி சாரதி எதிரில் வந்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

40 வயதான கமகே நிசாந்த என்ற நபரே சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் வண்டியின் சாரதியான அஜித் சிசிர குமார என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளன.

வவுனியாவிலுள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு அமைச்சர் ரிஷாட் திடீர் விஜயம்!!

அமைச்சர் ரிஷாட் திடீர் விஜயம்

வவுனியா நெளுக்குளம் சந்தியிலுள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு இன்று(06.03) காலை கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

கைத்தொழில் வாணிபத்துறை மத்திய அமைச்சர் சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னறிவித்தலின்றி சென்று அங்குள்ள விற்பனை பொருட்களின் தரம், பாவனையாளர்களுக்கு சரியான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்து அவதானம் செலுத்தியுள்ளதுடன் சதொச விற்பனை நிலையத்தின் தூய்மை தொடர்பாகவும் அவதானம் செலுத்தியுள்ளார்.

இன்று காலை பல்வேறு நிகழ்வுகளுக்காக மன்னார் நகருக்குச் சென்ற அமைச்சர் நெளுக்குளம் பகுதியிலுள்ள சதொச விற்பனை நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். அமைச்சருடன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹமட், நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.