வவுனியா பரக்கும் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (06.03) காலை 10.30 மணி தொடக்கம் 11 மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், கல்விக்கான பணத்தை 6 வீதத்தால் உயர்த்த வேண்டும், ஆசிரியர்கள் போராட்டத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட தாக்குதலை கண்டனம் செய்கிறோம் போன்ற பல்வேறு கோசகங்களை எழுப்பியவாறு சுமார் 30நிமிடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா இரேசேந்திரங்குளம் விக்ஸ்காடு பகுதி மக்கள் வீட்டுதிட்டம் வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர். காலை 10 மணிக்கு வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. இதன்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 10 வருடங்களாக எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. தற்காலிக கொட்டகைகளிலேயே வசித்துவருகின்றோம். 47 குடும்பங்கள் வசித்துவருகின்ற எமது கிராமத்தில் பலருக்கு வீட்டுக்கான பதிவுகள் பிரதேச செயலகத்தால் மேற்கோள்ளபட்டபோதும் அது வழங்கப்படவில்லை.
காணிகளிற்கு ஆவணங்கள் இன்மையால் வீட்டுதிட்டம் வழங்க முடியாதென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே நீண்டகாலமாக வீடில்லாமல் வசிக்கும் எமக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிரந்தரவீடும் அடிப்படை வசதியும் வேண்டும், காணிக்கான போராட்டம் முடிந்தது இது வீட்டிற்கான போராட்டம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிரதேச செயலாளர் கா.உதயராஜா சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
வவுனியாவில் உள்ள சிவ ஆலயங்களில் முதன்மையானதும் சிறப்புமிக்கதுமான கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருமளவிலான பக்த அடியார்கள் புடை சூழ மிகவும் சிறப்பாக 04.03.2019 திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சதா சங்கரதாச குருக்கள் தலைமையில் விசேட அபிடேகம் மற்றும் ஆறுகால பூஜைகளும் இடம்பெற்றது.. பெருமளவிலான பக்தர்கள் மூல மூர்த்தியாகிய சிவலிங்கத்திற்கு தண்ணீர் வார்த்தும், பால் வார்த்தும் தமது நிவர்த்திக் கடன்களை நிறைவு செய்ததுடன், அகிலம் கலையரங்கில் இரவு முழுவதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
காலையில் 6.00 மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சமேதராய் எழுந்தருளி அமிர்தவர்சினி தீர்த்தகரையில் தீர்தோற்சவம் இடம்பெற்றது.
இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணையும் தம்பதியருக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக திருமணம் செய்து கொள்வோருக்கு 25 வருடங்களில் செலுத்த கூடிய “Home Sweet Home” என்ற கடன் முறையை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 25 வருடங்கள் செலுத்தி நிறைவு செய்ய கூடிய இந்த கடனுக்கு 6 வீத வட்டி அறிவிடப்படும்.
வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு “கனவு மாளிகை” என்ற கடன் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்த கடனை இரண்டு வருடங்களுக்கு பின்னர் செலுத்த முடியும் எனவும், 15 வருடங்களுக்குள் அதனை செலுத்தி நிறைவு செய்ய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாகனங்களில் விலைகள் பெருமளவில் அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று முன்வைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுல் திட்ட யோசனைக்கு அமைய இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் hybrid வாகனங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக விலை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். அதற்கமைய Wagon R ரக கார் ஒன்று 250,000 ரூபாயிலும் எல்டோ ரக கார் ஒன்று 150,000 ரூபாயிலும் அதிகரிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக எக்சியோ ரக கார் ஒன்று 600,000 ரூபாயில் அதிகரிக்கவுள்ளது. பிரிமியர் மற்றும் CHR ரக கார் 700,000 ரூபாயிலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்தில் சொகுசு வரி ஒன்று முதல் முறையாக விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவும் வாகனங்களின் விலை அதிகரிக்குமா என்பதனை ஆராய்ந்து விரைவில் பொது மக்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளர். 36 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஜெனிவாவிற்கு செல்லவிருந்த நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாகீசன் தங்கவேல் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் பயங்கரவாதிகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எர்ல்ஸ் கோர்ட்டில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்குக் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் இரவு 11 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாகீசன் தங்கவேல் சுதந்திரத்திற்கான பறையின் குரல் எனும், இசைக்குழுவின் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்கு சென்ற போதே வாகீசன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனையிலிருந்து கல்விச் சுற்றுலா வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கண்டி – மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்து கடுகண்ணாவில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து நடத்துனரே உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்குக் காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்து உட்பட வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பாடசாலை மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவ்வீதியில் வேகத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
சிதம்பரபுரம் மயிலங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பேருந்துகள் உட்பட வாகனங்கள் அவ்வீதியால் அதிக வேகமாகச் செல்கின்றன. இதனால் ஆசிகுளம் பகுதியிலுள்ள அரசினர் தமிழக்கலவன் பாடசாலைக்கு மாணவர்கள் சென்றுவருவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பாடசாலை நேரத்திலும் இவ்வீதியூடாகச் செல்லும் பேருந்துகள் அதிக வேகத்துடன் செல்கின்றன. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் வாகனத்தின் வேகத்தை கைக்கட்டுப்படுத்தியும் மாணவர்களின் பாதுகாப்புக்கருதியும் வேகத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் , மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் , டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கொடிகாமம் மிருசுவில் ரயில் நிலையத்திற்கு அண்மையில் நிகழ்ந்துள்ளது.
மிருசுவில் ப் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தை மறு பக்கத்தில் பயணித்துக் கொண்டிருந்த வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்துள்ளனர்.
இதனால் டிப்பர் சாரதி சடுதியாக பிரேக் பிடித்தனால் பின்புறமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும், தாயும் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற பகுதி வளைவான வீதிப் பகுதி, அத்துடன் டிப்பர் பயணித்த பகுதியின் மறு பக்கத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாறே வீதிப் போக்கு வரத்து பொலிஸார் டிப்பர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்தமையினால், பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிளை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிய வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் கவனயீனத்தால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உத்திரபிரதேசத்தில் இருவேறு இடங்களில் கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான மோகித் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அனுராதா (26) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ரியா என்கிற மகளும் மற்றும் ஒரு வயதில் தியன்சச்சாஷ் என்கிற மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அனுராதா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பணியில் இருந்த மோகித்திற்கு இந்த தகவல் சென்றடைந்ததும், வீட்டிற்கு செல்கிறேன் என கூறி கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் அவருடைய இருசக்கர வாகனம் தோட்டத்திற்கு வெளியில் இருப்பதை பார்த்த சிலர், உள்ளே சென்ற போது மோகித் அங்கிருந்த மரத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பை அண்மித்த பகுதியில் வைத்து மிகப் பெரிய பெறுமதியுடைய இரத்தினகல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மன்னன் மதுஷின் சகாக்களை தேடும் விசேட நடவடிக்கையின் போது குறித்த நபர் சிக்கியுள்ளார்.
பன்னிப்பிட்டிய, ஆரவ்வல பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் இரத்தினகல் மீட்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை கெசெல்வத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரத்தினகல்லின் பெறுமதி 500 முதல் 700 கோடி ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் பேலியகொடை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெழும் இந்திக்க சம்பத் எனப்படும் கெழுமா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் பிட்டிகல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டினை சோதனையிட்டப்பட்ட போது ஒன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷினால் இந்த இரத்தினகல் கொள்ளை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவுக்கு சென்ற விமானம் ஒன்று நடுவானில் சுமார் 15,000 அடிகள் திடீரென்று சரிந்து விழுந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இருந்து QF706 என்ற க்வண்டாஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று கான்பெர்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது.
சம்பவத்தின்போது குறித்த விமானமானது 25,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தில் பலத்த சத்தம் ஒன்று பயணிகளை உலுக்கியுள்ளது.
மட்டுமின்றி ஆக்ஸிஜன் மாஸ்குகளும் வெளியாகியுள்ளது. அதேவேளையில் விமானம் சரசரவென குத்திட்டு சரிந்துள்ளது. சுமார் 9 நிமிடங்களில் 15,000 அடி சரிந்த விமானம் அப்போது 25,000 அடியில் இருந்து 10,000 அடிக்கு வந்துள்ளது.
இதனிடையே சுதாரித்துக்கொண்ட விமானிகள் உடனடியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் விமானத்தை கொண்டு வந்துள்ளனர். இதில் விமானத்தில் உள்ள அழுத்தம் தொடர்பான பிரச்னை காரணமாகவே விமானிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தவறியதாகவும்,
அது உடனடியாக சீர் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், குறித்த சம்பவத்தின்போது பயணிகள் அனைவரும் விமானியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதி காத்ததாகவும் க்வண்டாஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோர டீ கடைக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்து, பொலிசார் பாதுகாப்புடன் மரணமடைந்த இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மனைவி மணிமேகலை என்பவரே இந்த விபத்தில் கொல்லப்பட்டவர். சம்பவம் நடந்த இரவு, மணிமேகலை தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். இதேபோன்று அதேபகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் பத்தாம் வகுப்பு படித்துவரும் மகன் கமல்ராஜ், அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நங்கவள்ளி பகுதி நோக்கி கார் ஒன்று சாலையில் தாறுமாறாக வந்துள்ளது. இதில் பீதியடைந்த மணிமேகலை மற்றும் கமல்ராஜ் ஆகிய இருவரும், அங்குள்ள டீ கடைக்குள் புகுந்துள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அதே டீ கடைக்குள் புகுந்து இருவர் மீதும் மோதி நின்றுள்ளது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரையும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவரும் மருத்துவமனை செல்வதற்குள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த மூவரும் இந்த சம்பவத்தை அடுத்து தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை விரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, கைதான மூவரிடமும் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம் – கல்பொத்தேகம – திம்பிரிகடவல பிரதேசத்தில் கால்வாய் வீதி ஒன்றுக்கு அருகில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் முண்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த முண்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநிறுத்துவதாக பாதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் ப.சுஜீபன் வேதனையுடன் கூறியுள்ளார்.
குறித்த மாணவன் இது தொடர்பில் தனது முகநூல் வாயிலாக பகிரங்கமாக தனது வேதனைகளையும், பிரச்சினைகளையும் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டும் , அவமானப்படுத்தப்பட்டும் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட முதலாம் வருட மாணவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது தனது உயிருக்கே ஆபத்தானது என்னும் நிலையில் தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை இடைநிறுத்தியுள்ளார்.
கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து கஸ்டப்பட்டு பாடசாலைக் கல்வியைக் கனவுடன் கற்ற போதிலும் தொடர்ந்தும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை சிரேஸ்ட மாணவர்களது மனித உரிமை மீறல்களால் தொடர முடியவில்லையே தான் கண்ட கனவு வீணாகியுள்ளதாக வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் வாழ்ந்து பல்வேறுபட்ட வளப்பற்றாக்குறைகளுடன் பல கஸ்டங்களை எதிர்நோக்கி கல்வி கற்றவர் என்பதும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து அனைத்தையும் இழந்து கஸ்டப்பட்டு அவலங்களை எதிர்நோக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களின் அடித்துத் துன்புறுத்தல் தாங்க முடியாது ஏன் எனக்கு அடிக்கிறியள்? நான் என்ன குற்றம் செய்தேன் என்று வினவிய போது திருப்பிக் கதைக்காதை எனக்கூறி மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளதாகவும், வீதியில் வைத்து அவமானப்படுத்தியுள்ளதாகவும் தனது முகநூலில் இம்மாணவன் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றும் சிரேஸ்ட மாணவர்கள் சிலரால் இம்மாணவனது முகநூல் போன்று இன்னொரு முகநூலை உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவனது ஒழுக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் சில பதிவுகள் இடப்பட்டுள்ளது.
மேற்படி மாணவனை பல தடவைகள் தாக்கி வன்கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அதனால் யாழ்.போதனா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். யுத்த காலம் உட்பட தற்போது வரை ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாணவன் மீது வதை புரிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வருவதுடன். பாதுகாப்புடன் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ள உயர்கல்வி அமைச்சு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கால் வைக்கும்போது நான் கண்ட கனவுகள் இலட்சியப் பாதைகள் அனைத்தும் என் கண்முன்னே வந்தது! அவை அனைத்தும் வந்த சில நொடிகளில் என் கன்னத்தில் இடி விழுந்தது போன்று சத்தம். யார் என்று பார்த்தால் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களாம் அடித்ததற்கும் காரணம் எதுவும் சொல்லாது நகர்ந்து சென்றார்கள் என பாதிக்கப்பட்ட மாணவன் கண்ணீருடன் பதிலளித்துள்ளார்.
இவை அனைத்திற்கும் மேலாக பகிடிவதை என்னும் போர்வையில் தாங்கள் தங்கும் அறைகளில் எங்களை கூட்டிச்சென்று இரக்கம் இன்றி தாக்குகின்றனர்.
எனினும் பல்கலைக்கழகம் சென்றால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எனக்கே தோன்றுகின்றது. எனது கனவுகள் அனைத்தும் புதைந்தது பகிடிவதையால் பட்டப்படிப்பும் இடையில்முற்றுப்பெற்றது. எனவும் தெரிவித்துள்ளார்.
நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டால் பெண்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதனை கண்டித்தும் நுண்நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ள பெண்களை அரசு மீட்க வேண்டியும் உழைக்கும் பெண்கள் முன்னணியினால் ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் 8ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக நாம் பல போராட்டங்களை நடத்தியிருந்தோம். எனினும் இதுவரை ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு சில பெண்களின் ஒரு லட்சத்திற்குட்பட்ட கடன் மாத்திரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏனைய கடனைப்பற்றிய அறிவுறுத்தல்களும் எங்கள் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படவில்லை.
வட மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பெண்களை குழுவாக தயார் செய்து அவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது வருமானம் பற்றி எந்தவிதமான ஆய்வும் இன்றி கடன்கள் வழங்கப்படுகின்றது.
பெண்கள் ஒரு வங்கியில் எடுத்த கடனை கட்டமுடியாமல் இருக்கும்போது மற்றைய வங்கியில் கடனைப்பெறுகின்ற நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு கடனைக்கட்டமுடியாத பெண்கள் பலர் சீரழியும் நிலை காணப்படுகின்றது. பிள்ளைகளுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை. பாடசாலைக்கு ஒழுங்கான முறையில் அனுப்புவதில்லை என தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி அனைத்துலக பெண்கள் தினத்தில் பாரியளவில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்த நாம் தீர்மானித்துள்ளோம்.
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும், மட்டக்களப்பிலும், பொலனறுவையிலும் இப் போராட்டம் சம நேரத்தில் இடம்பெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.