இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் உருவாக்கப்பட்டுள்ள இராவணா-1 என்ற செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக ஆர்தர் சீ.க்ளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்மதி கடந்த தினம், ஜப்பான் விண்வெளி ஆய்வு முகவர் நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
1.5 கிலோ கிராம் நிறையுடைய குறித்த செய்மதி, இது இலங்கையின் சார்பில் அனுப்பப்படும் முதலாவது செய்மதியாகும்.
பம்பலப்பிட்டி – காலி வீதியில் உந்துருளியில் பயணித்த காவற்துறை அதிகாரியொருவரை வௌ்ளை நிற டிபென்டர் வாகனத்தில் மோதி விட்டு தப்பிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பம்பலபிடிய காவற்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
WP- FZ -9143 எனப்படும் டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதுடன், இலக்கம் 727 எனும் வீடு ஒன்றில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
UPDATE…
பம்பலப்பிட்டி – காலி வீதியில் உந்துருளியில் பயணித்த காவற்துறை அதிகாரியொருவர் மீது வௌ்ளை நிற டிபென்டர் வாகனமொன்று மோதி தப்பிச் சென்றுள்ளது.
பொரளை காவற்துறையின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் பணிநிமித்தம் கொள்ளுபிட்டி காவல் நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் , இதன் போது காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தினை ஏற்படுத்தி தப்பிச் சென்ற டிபென்டர் வாகனத்தை தேடி தற்போதைய நிலையில் சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக நாளை திங்கட்கிழமை வடமாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றினை நடத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீர்மானித்துள்ளனர். இது குறித்து தமது ஆதரவை வழங்குவது தொடர்பில் வவுனியா வர்த்தக அமைப்புக்கள் குழப்பமடைந்துள்ளன.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு இதுவரை இலங்கை அரசாங்கத்தினால் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.
தொடர்ச்சியாக கடந்த 10 வருடங்களாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசின் செயற்பாட்டை கண்டித்தும், சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுத் தர வலியுறுத்தக் கோரியும் வடமாகாண ரீதியில் பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விட்டுள்ள நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்றினையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அந்த வலிகளை உணர்ந்தும், அவர்களது கோரிக்கைகளை ஏற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும், பல்கலைக்கழக சமூகமும் பூரண ஹர்த்தாலுக்கும், அவர்களது போராட்டத்திற்கும் ஆதரவினை வழங்கி அதனை வலுப்படுத்தி வரும் நிலையில் வவுனியா மாவட்ட வர்த்தக நிலையங்களுடன் தொடர்புடைய இரு அமைப்புக்களும் வெளியிட்டுள்ள அறிக்கை வர்த்தகர்கள், மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா வர்த்தக சங்கம், வடபகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் நீண்ட போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் நாளை திங்கட்கிழமை காலை கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குகின்றது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் இடம்பெறுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது அவ்வாறு தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால் நாம் போராட்டத்திற்கு ஆதரவு எனத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கயில், எதிர்வரும் 25 ம் திகதி வடக்கு கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமையம் கிளிநொச்சியில் மாபெரும் ஆர்பாட்டபேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன், அன்றையநாள் முழுவதும் வடமாகாணம் தழுவிய ஆதரவினை கேட்டிருந்த நிலையிலே வவுனியா வர்த்தக நலன்புரி சங்கம் இப் போரட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்துள்ளது.
இவ் அமைப்பின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு வவுனியாவில் ஹர்த்தால் இடம்பெறுமா எனக் கேட்ட போது, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு எனத்தெரிவித்து ஹர்த்தால் தொடர்பில் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
இவ்வாறு பொறுப்பு வாய்ந்த வர்த்தக அமைப்புக்களுடன் தொடர்புடைய குறித்த பொது அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையானது வவுனியாவில் ஹர்த்தாலா, இல்லையா என்ற குழப்பத்தை வர்த்தகர்கள், அதில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் உள்ள பெரிய நந்தி அப்படி இல்லை. அந்த நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இந்த வித்தியாசமான வடிவமைப்பின் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு கூறப்படுகிறது.
வரலாற்று நிகழ்வு: முகலாயர்கள் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை கோவிலை ஒரு முகலாய மன்னன் கைப்பற்றினான். அவன் கோவிலுக்குள் நின்று கொண்டிருந்தபோது 5 சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர்.
உடனே முகலாய மன்னன், ‘‘எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள்?’’ என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், “இது எங்களது ஈசனை சுமக்கும் வாகனம். ஈசனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார்கள்.
இதை கேட்டதும் முகலாய மன்னனுக்கு கோபம் வந்தது. “நான் இந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டுகிறேன். உங்கள் ஈசன் வந்து அதை ஒன்றாக சேர்க்க முடியுமா?” என்று ஏளனமாக சொன்னான். அத்தோடு மாட்டை இரண்டு துண்டாகவும் வெட்டினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அசரீரி ஒலித்தது.
வடக்கு திசை நோக்கி செல்லுங்கள். அங்கே என் பக்தன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி அமர்ந்து இருப்பான். அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்று அசரீரியில் அண்ணாமலையார் கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான்.
அவனைப் பார்த்ததும், சிவ பக்தர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. “இந்த சிறுவனா வந்து காளை மாட்டுக்கு உயிர் கொடுக்க போகிறான்” என்று நினைத்தனர். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் சிவ பக்தர்களுக்கு அந்த சிறுவன் மீது நம்பிக்கை வந்தது.
அண்ணாமலையார் ஆலயத்துக்குள் நடந்ததை கூறினார்கள். உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்றாலும் அவன் சிவ பக்தர்களை பார்த்து, “இந்த வாலிபன் ஏதோ சித்து விளையாட்டு விளையாடுகிறான். இதை நான் நம்ப மாட்டேன். இன்னொரு போட்டி வைக்கிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன்” என்றான்.
அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுபடி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர்.
அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிசங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின. இதையும் முகலாய மன்னனால் நம்ப முடியவில்லை. ராஜகோபுரம் அருகில் உள்ள நந்தி அருகில் வந்தான். அந்த நந்தியை பார்த்தவன், “இந்த நந்திக்கு உன்னால் உயிர் கொடுக்க முடியுமா? அப்படியே கொடுத்தாலும் அதன் கால்களை மாற்றி அமர வைக்க முடியுமா?” என்று சவால் விட்டான்.
இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை – கால்கள் நடுங்கியது.
அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான். அவனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறினார்.
திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. இப்படி பல அதிசயங்கள் திருவண்ணாமலை தலத்துக்குள் உள்ளன.
ஆசிய தகுதிகாண் போட்டியில் ஹட்டன் வெலிஓயா புதுகாட்டைச் சேர்ந்த கே.சண்முகேஸ்வரன் அசத்தலான வெற்றி பெற்றுள்ளார்.
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22.02.2019) ஆரம்பமாகிய ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்த அவர், தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவுசெய்தார்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22.02.2019) காலை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாயின.
போட்டியின் முதல் நாள் காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்து 2019ஆம் ஆண்டில் தனது முதலாவாது வெற்றியைப் பதிவுசெய்தார்.
இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹட்டனைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் கடந்த வருடம் மாத்திரம் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருந்தார்.
அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் தங்கப் பதக்கம் வென்ற அவர், கடந்த வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று தனது முதலாவது சர்வதேச வெற்றியையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், குறித்த போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான வட்சன் (31 நிமி. 03.78 செக்.) இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப்படையின் பி. மதுரங்க (31 நிமி. 22.57 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை – தென்னாபிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர் ஓஷத பெர்ணாண்டோ குறித்து தெரியவந்துள்ளது. இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுவதுமாக 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.
இலங்கை அணி சார்பாக இத்தொடரில் களமிறங்கிய புதுமுக வீரராக ஓஷத பெர்ணாண்டோ சிறப்பாக விளையாடினார். குறிப்பாக இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் குவித்தார்.
பெர்ணாண்டோ மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவராவார். ஒரு சமயம் தன்னுடைய சொந்த ஊரான கடுவெலவில் இருந்து கொழும்புவில் உள்ள இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்து தன்னுடைய கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டிய சூழல் பெர்ணாண்டோவுக்கு ஏற்பட்டது.
ஆனால் அதற்கு கூட வாகனத்தில் வர அவரிடம் பணம் இல்லாமல் இருந்தது. அப்படி கஷ்டப்பட்டவர் இன்று தனது விடாமுயற்சியால் முதல்தர போட்டிகளில் சிறப்பாக ரன்கள் குவித்து அதன் மூலம் சர்வதேச அணியில் இடம்பிடித்தார். தற்போது முதல் தொடரிலேயே அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஓமானில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மலைப் பாதையில் பயணிக்கும் போது இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக ஓமான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த கணவனும் இன்றுமொரு பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பொத்துவில்லை சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக தெரியவருகிறது.
அமைதிக் கல்வித்திட்டமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (23.02) வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஆசிரிய மாணவி எம்.அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா கலந்துகொண்டிருந்தார்.
வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த அமைதிக் கல்வித்திட்டத்தின் இறுதி நாளான இன்று அவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்களில் ஆசிரிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற நூறு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஆசிரிய மாணவர்களால் குழுப்பாடல், நாடகம் மற்றும் விரிவுரையாளர் ந.பார்தீபன் தலைமையில் அமைதி குறித்த பட்டிமன்றம் ஒன்றும் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா
அமைதி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத அளவுக்கு தமிழ் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அமைதி என்பது யுத்தம் இல்லாத நிலையல்ல, அது ஆயுதம் தாங்கியவர்களை பொறுத்தவரையிலே யுத்தம் இல்லாத சூழல் எமது மூதாதையர் சொத்தாக விட்டுச் சென்ற அமைதியை நாங்கள் இழந்துள்ளோம் என தெரிவித்தார்.
இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், அமைதிக்கல்வித்திட்ட இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி. கீத்தா கரந்தவல, உப பீடாதிபதிகளான எஸ்.பரமானந்தம், பொ.சத்தியநாதன், விரிவுரையாளர்களான திருமதி நி.அரவிந்தன், திருமதி அ.இரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந் நிலையில் இந்த வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் மற்றும் முகநூல் வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் அதில் தெரிவித்திருப்பதாவது, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களது மண்ணில் வெற்றி பெற்ற முதல் ஆசிய என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.
அத்துடன் எங்கள் அணி வீரர்களின் சக்தியானது ஆச்சரியமாகவுள்ளதாகவும் குசல் பெரேராவின் துடுப்பாட்ட முறையானது சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய உத்வேகத்துடன் முன்னோக்கி பயணித்து தாய் நாட்டுக்காக இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளை பெறுவதற்கு சக்தியும், தைரியமும் கிடைக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆசீர்வதித்துள்ளார்.
வடமாகாணத்திலுள்ள 6 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள் இன்று காலை 6.35 மணியளவில் வடமாகாணத்தில் வவுனியாவில் இரண்டாவது தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலை நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரமவினால் ஆரம்பமாகி 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களாக நகரசபை மைதானத்தில் இடம்பெறுவதுடன் வடமாகாணத்திலுள்ள 6 பிராந்திய பிரதான பொலிஸ் நிலையங்களான காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நாளை மாலை 3 மணியளவில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றொசான் பெர்ணான்டோ தலைமையில் நிறைவு பெறவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம, கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரட்ண, வன்னி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.என்.தென்னக்கோன், வடமாகாணத்திலுள்ள 6 பிரதான பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்கின்றனர்.
இதன்போது அவர்களிடமிருந்து நுட்பமான முறையில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளுக்கு செல்லும் வெளிநாட்டவர்களின் பணத்தை திருடும் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹிக்கடுவ சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த பயணிகளின் பணம் திருடப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் உணவு பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லும் போது, அவர்கள் தங்கியிருந்த அறைகளின் ஜன்னல்களை உடைத்து திருடர்களை கைவரிசையை காட்டுகின்றனர்.
பயணிகள் அறையில் இருந்து வெளியே செல்லும் ஐந்தாவது நிமிடம் முதல் இந்த குடும்பல் உள்ளே நுழைந்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குடும்பல் பணத்தை இலக்கு வைத்தே செயற்படுவதாக ஹோட்டல்களை நடத்தும் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.. பணம் கொள்ளையிடும் திருடர்களிடம் மிகவும் கவனமாக செயற்படுமாறு இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அறவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் காதலன் மற்றும் அவருடைய நண்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்கிற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய காதலி ஜோதியுடன் வெளியில் செண்டிருக்கிறார். அப்போது மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கிவிட்டு ஜோதியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையிலும் எந்த தடயமும் கிடைக்காததால் பொலிஸார் பெரிதும் திணற ஆரம்பித்தனர்.
பிரேத பரிசோதனை சரியாக நடைபெறவில்லை என ஜோதியின் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சுமத்தியதை அடுத்து அவர்களின் முன்னிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரும்பு கம்பியை கொண்டு ஜோதியின் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்திருப்பதும், அதற்கு முன்பு பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்த ஆரம்பித்தனர். அப்பொழுது ஸ்ரீநிவாஸ் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. பல பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்த ஸ்ரீநிவாஸ், அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்திருப்பது தெரியவந்தது.
அந்த வரிசையில் விழுந்த ஜோதி, திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்ரீநிவாஸிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவன், தன்னுடைய நண்பன் பவானுடன் சேர்ந்து கடந்த 11-ம் தேதி தீர்த்து கட்டியுள்ளான். இந்த சம்பவத்தில் யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக தன்னை தானே தாக்கிக்கொண்டுள்ளான்.
மேலும், ஸ்ரீநிவாசன் செல்போனில் இருந்து பல பெண்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியிருக்கின்றனர். இந்த நிலையில் பொலிஸார் பவான் மற்றும் ஸ்ரீநிவாஸை கைது செய்துள்ளனர். அதேசமயம் சரியாக பிரேத பரிசோதனை செய்யாத அரசு மருத்துவமனை மருத்துவர் விஜயபாரதியை பணியிடை நீக்கம் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ரம்யா. இவர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்து விட்டு . தனது வகுப்பில் 3 மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கையில் நீளமான கத்தியுடன் பள்ளிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் ரம்யாவிடம் தகராறு செய்து, கத்தியால் ஆசிரியை ரம்யாவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ந்து போன 3 மாணவர்களும் அங்கிருந்து அலறியபடியே ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிசார் விசாரணையில், ரம்யா கல்லூரியில் படித்து வந்த போது, பேருந்து பயணத்தில் ராஜசேகர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாறி ஒருவரை ஒருவர் விரும்பியதாகத் கூறப்படுகின்றது.
கல்லூரிப்படிப்பு முடிந்து ஆசிரியர் பணியில் சேர்ந்த பின்னரும் இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்ததாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவின் வீட்டுக்குச் பெண் கேட்டு சென்ற ராஜசேகரிடம் சாதியை சுட்டிக்காட்டி ரம்யாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பின்னர் தனது பெற்றோரின் பேச்சை கேட்டு ரம்யா, காதலன் ராஜசேகருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. பலமுறை முயன்றும் ரம்யா மனம் மாறாததால் ராஜசேகர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ரம்யா, பள்ளிக்கு நேரத்துடன் சென்று வகுப்பறைகளை திறந்து வைப்பது வழக்கம் என்பதை தெரிந்து வைத்திருந்த ராஜசேகர், வெள்ளிக்கிழமை காலை ரம்யாவை பின் தொடர்ந்து சென்று இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ரம்யாவின் தந்தை சுப்பிரமணியன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பொலிசார் கொலைக்காண காரணம் குறித்து முதல் கட்ட தகவலை தெரிவித்துள்ள நிலையில் ராஜசேகரை பிடித்து விசாரித்தால் கொலை குறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு சடலத்துடன் தூங்கிய மனநலம் பாதித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருணாச்சலப்பாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், பிரபா (7) என்ற மகனும் உள்ளனர்.
குடிபோதைக்கு அடிமையான அருணாச்சலப்பாண்டி கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தியும், ஊர் சுற்றியும் வந்துள்ளார்.
சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மது அருந்த பணம் கேட்டு தாயிடம் அருணாச்சலப்பாண்டி தகராறு செய்துள்ளார். ஆனால் ஈஸ்வரி பணம் தரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தாயின் சடலத்துடனேயே தூங்கியுள்ளார்.
பின்னர் அருணாச்சலப்பாண்டியின் அப்பா சின்னகணபதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அருணாச்சலப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானிய சிறுமி ஒவ்வாமையால் மரணமடைந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது.
பிரித்தானியாவில் பல் மருத்துவராக பணியாற்றும் வஜித் சிஷ்டி என்பவர் தமது மனைவி மற்றும் 9 வயது மகள் ஹபீபா சிஷ்டி உள்ளிட்ட குடும்பத்தாருடன் கோஸ்டா டெல் சோல் பகுதிக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற சில மணி நேரங்களில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஹபீபா சிஷ்டி ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி ஹபீபா சிஷ்டி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி ஹபீபாவுக்கு நட்ஸ் தொடர்பான ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால் அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த ஐஸ் கிரீம் உணவகத்தில் விசாரித்துள்ளார். அவர்களும் ஹபீபாவுக்கு வழங்கப்பட்ட ஐஸ் கிரீமில் நட்ஸ் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, சிறுமி ஹபீபா உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மரண காரணம் ஒவ்வாமை என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மருத்துவர் வஜித் சஷ்டி குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கொலை செய்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு மன்னர் உரும்பிராய் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மகனைத் தேடிச் சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். எனினும் பிரதான சந்தேக நபர்களான மூவரை பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சூத்திரதாரிகளான இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குள் நடமாடுவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விசேட சுற்றி வளைப்பின் மூலம் குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.