வவுனியா ஒமந்தையில் ஆரம்பமான நல் நிலைக்கான விழிப்புணர்வு இரண்டாம் நாளுக்கான நடைபயணம்!!

நல் நிலைக்கான விழிப்புணர்வு நடைபயணம்

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினால் நல் நிலைக்கான பயணம் எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று (23.02.2019) காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி மாலை ஒமந்தையினை சென்றடைந்தது.

இதன் இரண்டாம் நாளுக்கான நடைபயணம் ஒமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று (23.02.2019) காலை 9 மணியளவில் ஒமந்தை கிராம சேவையாளர், பொது சுகாதார பரிசோதகர் தலமையில் ஆரம்பமாகி புளியங்குளம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இப் பயணமானது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு வரையுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்துசென்று எமது சமூக மத்தியில் உள்ள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நடைபயணம் 26 ம் திகதி மாலை 3.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

கொழும்பிலிருந்து காரில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

விபத்து

கொழும்பிலிருந்து சென்ற காரொன்று கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை ஹட்டன் – நுவெரலியா பிரதான வீதியின் கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை நோக்கி பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

விபத்து ஏற்பட்ட போது காரில் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர், அதில் காயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபையின் அசமந்தபோக்கு : வர்த்தகர்கள் சிரமம்!!

வர்த்தகர்கள் சிரமம்

வவுனியா நகரசபையின் அசமந்த போக்கினால் சூசைப்பிள்ளையார்குள வீதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அமைந்துள்ள கால்வாயினால் செல்லும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் அதிலிருந்து டெங்கு நுளம்புகள் பெருகுவதுடன் மாலை நேரங்களில் அப்பகுதியில் நுளம்பு தொல்லைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இதன் காரணமாக தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் வவுனியா நகரசபை உபதலைவர் , உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லையெனவும்,

வர்த்தக நிலையத்தினுள் டெங்கு பரவும் விதமாக சிறு பொருட்கள் இருந்தவுடன் தண்டப்பணம் விதிக்கும் சுகாதாரப் பிரிவினர் ஏன் இவ்விடயத்தில் மௌனமாக இருக்கின்றனர் என வர்த்தகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி அவர்களுடன் கொண்டு வினவிய போது, குறித்த விடயம் தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஒர் இரு தினங்களில் தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

கொள்ளையிட்ட பணத்தில் ஆடம்பர பொருட்கள் : யாழில் வசமாக சிக்கிய சகோதரர்கள்!!

யாழில் வசமாக சிக்கிய சகோதரர்கள்

யாழில் உணவு விடுதியொன்றில் பணத்தை கொள்ளையிட்டு அதில் ஆடம்பர பொருட்களை வாங்கிய சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவர் வசமாக சிக்கியுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மட்டுவில் மற்றும் உடையார்கட்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டி ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாவகச்சேரி நகரிலுள்ள குறித்த உணவு விடுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முகநூல் மூலமாக, உணவு விடுதியின் உரிமையாளரிடம் சிக்கியுள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவிலைச் சேர்ந்த சந்தேகநபர் குறித்த உணவு விடுதியில் கொள்ளையடித்த பணத்தில் மோட்டார்சைக்கிளையும், உடையார்கட்டை சேர்ந்தவர் அந்த பணத்தில் தொலைக்காட்சி, அலுமாரி, றைஸ் குக்கர், தோடுகள், கதிரை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களையும் வாங்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பொருட்களை சாவகச்சேரி குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் சந்தேகநபர்களில் ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் குண்டகசாலை சிறைச்சாலையில் ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பி வந்தவர் எனவும், வவுனியாவில் இடம்பெற்ற இரு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் முதியவர் பலி : மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்!!

மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன்

கிண்ணியா – சூரங்கல், கற்குழி பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சம்பவ இடத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சூரங்கல், கற்குழி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டள்ளதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா – முனைச்சேனை பகுதியை சேர்ந்த எம். எஸ். எம். இத்ரீஸ் என்ற 63 வயதுடைய முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடத்திக் கொலை செய்யப்பட்ட வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு!!

வர்த்தகர்களின் எலும்பு கூடுகள் மீட்பு

காலி-ரத்கமயில் கடத்தப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்ட இரு வர்தகர்களின் எலும்கூடுகள் வலஸ்முல்ல- மெதகொடவில் மீட்க்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் மற்றும் 33 வயதுடையவரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த இரண்டு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்டு, பின்னர் வலஸ்முல்ல, மெதகொட பிரதேச வனப்பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடத்தப்பட்ட இருவரும் கொலைசெய்யபட்ட நிலையில் அவர்களின் எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து 5 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் செல்லலாம் : மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி

கொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேரத்தை மீதப்படுத்தவே பயணிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் புதிய ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் முடிவாக பொல்கஹவெல ரயில் நிலையத்தில் இருந்து குருணாகல் ரயில் நிலையத்திற்கும், குருணகால் ரயில் நிலையத்தில் இருந்து மஹவ ரயில் நிலையம் வரையிலும் விரைவில் இரண்டு ரயில் வீதியாக மாற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் மஹவ ரயில் நிலையத்தில் இருந்து ஓமந்தை ரயில் நிலையம் வரையில் ரயில் வீதி ஒன்றை அமைத்து, மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஓடும் பேருந்தில் தேரருக்கு ஏற்பட்ட நிலை : முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு!!

முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு

ஓடும் பேருந்து ஒன்றில் திடீர் சுகயீம் அடைந்த நிலையில், சுயநினைவை இழந்து போராடிய பௌத்த தேரர் ஒருவருக்கு முன்வந்து உதவிய முஸ்லிம் நபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துள்ளன.

மடவளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்தில் பயணித்த பௌத்த தேரர் திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் சுயநினைவை இழந்தார்.

இதனால் அந்த தேரருடன் வந்த தேரர்களும் செய்தவறியாது திகைத்து நின்றனர். அத்துடன், குறித்த பேருந்தில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் பயணித்த போதிலும், தேரருக்கு உதவ எவரும் முன்வரவில்லை.

பலரும் உதவுங்கள், உதவுங்கள் என சத்தமிட்டனரே தவிர யாரும் உதவ முன்வரவில்லை. எனினும், பேருந்தில் பயணித்த குறித்த முஸ்லிம் நபர் விரைந்து செயற்பட்டு தேரருக்கு உதவினார்.

அத்துடன், குறித்த தேரரை கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கும் வகையிலும், அந்த நபர் உதவி செய்திருந்தார். இது குறித்த காணொளி ஒன்று சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில், தேரருக்கு உதவிய அந்த நபருக்கு முஸ்லிம் நபருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு மழை குவிந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நல் நிலைக்கான விழிப்புணர்வு நடைபயணம்!!

விழிப்புணர்வு நடைபயணம்

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தால் நல் நிலைக்கான பயணம் எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் ஆரம்பிக்கபட்டது.

இப் பயணமானது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு வரையுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்துசென்று எமது சமூக மத்தியில் உள்ள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நடைபயணம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பமாகி 26 ம் திகதி மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆரம்பநிகழ்வில் அரசஅதிபர் எம்.ஹனீபா, குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் லகிரு பெரேரா, சுகாதார வைத்திய அதிகாரி லவன், பிரதேச செயலர் கா.உதயராஜா, அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இளம் குடும்பஸ்தரின் சடலம் வெட்டு காயங்களுடன் மீட்பு : வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்?

வெளியாகியுள்ள மரணத்திற்கான காரணம்?

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இருவேறு குடும்பங்களிற்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இன்று காலை மீட்கப்பட்டிருந்த குறித்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தில் வெட்டு காயங்கள் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் சம்பவத்தில் தர்மபுரம் மேற்கு 6 யூனிட்டை சேர்ந்த 28 வயதுடைய கரன் என அழைக்கப்படும் அரசசிங்கம் கௌவுரியனந்தம் என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச ரீதியில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்ப் பெண்!!

இலங்கை தமிழ்ப் பெண்

இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய ஆசிரியையான யசோதை செல்வகுமாரன் ஒரு மில்லியன் டொலர் சர்வதேச ஆசிரியர் பரிசுக்கான பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தெரிவாகியுள்ளார். 179 நாடுகளில் இருந்து கிடைத்த 10,000 விண்ணப்பங்களில் இருந்து இந்த தமிழ் பெண் தெரிவாகியுள்ளார்.

மிஸ் செல்வா என்று மாணவர்களால் அறியப்படும் இந்த ஆசிரியை மேற்கு அவுஸ்திரேலியாவின் ரூட்டி ஹில் என்ற மனித நேய பாடசாலையில் கற்பிக்கிறார். இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இந்த பரிசுக்காக தெரிவு செய்யப்பட்ட தனி ஒருவராக யசோதை செல்வகுமாரன் பெயரிடப்பட்டுள்ளார்.

10 வயதாக இருக்கும் போது யசோதை அவுஸ்திரேலியாவுக்கு பெற்றோரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஒரு மில்லியன் டொலர் பரிசுக்கான தெரிவுக்காக யசோதை செல்வகுமாரன் எதிர்வரும் மார்ச் மாதம் துபாய்க்கு செல்லவுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞன் : தாயகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்!!

சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016ம் ஆண்டின் இறுதியில் சவுதி அரேபியாவுக் சென்ற கந்தசாமி நேசராசா விபத்து ஒன்றில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு – செங்கலடி – மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான கந்தசாமி நேசராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

ஜித்தாவிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ரியாத்தில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்ததாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி நேசராசாவின் 15 வயது மூத்த மகன் குடும்ப வறுமை காரணமாக ஆடு மேய்த்து வருவதோடு, 3 வயது இளைய மகன் விசேட தேவையுடையவராகக் காணப்படுகின்றார்.

13 வயது மகன் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 9 ஆம் தரத்திலும் 12 வயது மகன் மாவடிவேம்பு சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்திலும் கல்வி கற்கின்றனர்.

நான்கு மகன்கள், மனைவி, தாய் மற்றும் மனைவியின் பாட்டி ஆகியோரை இதுவரை காலமும் கந்தசாமி நேசராசாவே பராமரித்து வந்துள்ளார்.

நேசராசாவின் திடீர் இறப்பால் தற்போது நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த குடும்பத்தினர், அவரின் உடலை விரைவில் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதி அரசாங்கத்தின் அரச நடவடிக்கைகள் நிறைவடையாத காரணத்தினால் உடலை இலங்கைக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம்

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 26 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை : ஐவர் கைது!!

அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (22.02) காலை 7.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போகஷ்வெவ பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான தங்கூசி வலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 75,000 பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சுற்றிவளைப்பினை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும்,

மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹரா நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இவ் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரினசெய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன், தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடிப்பதன் மூலம் நன்நீர் மாசடைவதாகவும், குளங்களில் மீன்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொது கழிப்பறையில் தங்கியபடி சமைத்து சாப்பிடும் விதவைப் பெண் : மனதை உருக்கும் காரணம்!!

விதவைப் பெண்

இந்தியாவில் விதவை பெண்ணொருவர் பொது கழிப்பறையில் தங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் லஷ்மி. இவரின் இரண்டு மகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் மகன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் லஷ்மியின் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். இதன்பின்னர் தனது பழைய வீட்டில் லஷ்மி தனியாக தங்கி வந்தார். ஆனால் வீடு பெரியளவில் பழுதடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

வீட்டை பழுது பார்ப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் சில காலமாக பொது கழிப்பறையில் தங்க வேண்டிய மோசமான நிலைக்கு லஷ்மி தள்ளப்பட்டுள்ளார். சிறியளவில் உள்ள கழிப்பறையில் அவர் தங்கியுள்ள நிலையில் பொதுவெளியில் சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்.

அரசாங்கம் கஷ்டப்படுகிறவர்களுக்கு கட்டி தரும் வீடுகளை லஷ்மிக்கு இன்னும் கட்டிதரவில்லை. இது குறித்து ஊடகம் வாயிலாக அரசாங்க அதிகாரிகளுக்கு லஷ்மியின் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டது. சந்திரா நாயக் என்ற அதிகாரி கூறுகையில், விதவை பெண்ணான லஷ்மி, இலவச வீடு திட்டத்துக்கு தகுதியானவராக இருந்தால் அவருக்கு விரைவில் வீடு கட்டித்தரப்படும் என கூறியுள்ளார்.

200 அடி குழிக்குள் சிக்கிய சிறுவன் : 16 மணி நேர போராட்டம் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

சினிமாவை மிஞ்சிய சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 6 வயது சிறுவன் 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள கிராமத்தில் நேற்று சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருந்துள்ளது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெற்றோரின் 6 வயது ஆண் குழந்தையான ரவி பண்டிட், திடீரென மாலை 5 மணியளவில் மாயமாகியுள்ளான்.

சுற்றி முற்றிலும் தேடி பார்த்த பெற்றோர், அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மகனின் அழுகுரல் சத்தம் கேட்பதை கவனித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிஸார் கயிற்றின் மூலம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதில் குழந்தை காயமடைந்ததை அடுத்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வந்த மீட்பு படையினர் குழிக்குள் ஆக்சிஜனை செலுத்தி மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதற்கிடையில் கிராம மக்களும் மீட்பு படையினருக்கு உதவி செய்யும் விதமாக குழிக்கு அருகில் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டெடுத்தனர். அதன் பிறகு அவசரமாக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.