வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூராக காணப்பட்ட 88 கட்டாகாலி மாடுகளை கைப்பற்றிய நகரசபை!!

88 கட்டாகாலி மாடுகளை கைப்பற்றிய நகரசபை

வவுனியா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாகாலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களினால் நகரசபை மீது முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டது.

அதற்கமைவாக நேற்று முன்தினம் (17.02.19) இரவு வவுனியா பூந்தோட்டம், குருமன்காடு, தாண்டிக்குளம், பட்டாணிச்சூர் மற்றும் நகரப்பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த 88 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடுகளின் உரிமையாளர்கள் 1600 ரூபாவைச் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்குப் பராமரிப்புச் செலவாக 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோர விபத்தில் 4 பேர் படுகாயம்!!

4 பேர் படுகாயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை சென்.பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று (18.02.2019) இரவு 11.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில்,

அதில் பயணஞ் செய்த 8 பேரில் 4 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு நுவரெலியா பகுதிக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வேனில் பயணித்த 8 பேரில் 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு ஏனைய 4 பேருக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோர விபத்தில் இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!!

கோர விபத்தில் இருவர் பலி

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இன்று (19.02.2019) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பளையிலிருந்து கினிகத்தேனை நோக்கி, சென்ற முச்சக்கரவண்டியும் கினிகத்தேனை பகுதியிலிருந்து கம்பளை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த பயணியுமான கினிகத்தேனை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய எஸ்.எஸ்.ஐ.கலப்பத்தி மற்றும் மீதலாவ குருந்துவத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய திலக்சிரிகே அமல் குணரத்ன என தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. முச்சக்கரவண்டியை தவறான பக்கத்தில் செலுத்தியதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையின் சட்ட மருத்தவ அதிகாரியின் பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள நாவலப்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியை காப்பாற்ற போராடிய காதலன் : இருவரும் நீரில் மூழ்கி மரணம்!!

இருவரும் நீரில் மூழ்கி மரணம்

புத்தளத்தில் இளம் காதலர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்த போது நேற்று மாலை நீரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நவத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த காதலர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞன் மற்றும் 17 வயதான யுவதியுமே நீரில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்த இருவரும் தங்கள் வீடுகளுக்கு தெரியாமல் ஓடி வந்தவர்கள் எனவும், அவர்கள் உறவினர்களின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

உயிரிழந்த 17 வயதான யுவதி காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் மாரவில, கொஸ்வத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் உயிரிழந்த இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மாலை வேளையில் குளிக்க சென்ற போது, இளம் பெண் முதலாவதாக ஏரியில் விழுந்துள்ளார், அவரை காப்பாற்ற சென்ற இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னாரில் வாகன விபத்து : இளைஞன் பரிதாபமாக மரணம்!!

இளைஞன் பரிதாபமாக மரணம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க முஹம்மது ஜே.ரமீஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி , 2 ஆம் கட்டை பகுதியில் நேற்று நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞன் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன்,விபத்து தொடர்பில் உண்மை விபரங்கள் வெளியாகவில்லை.

குறித்த பெக்கோ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2019!(படங்கள்,வீடியோ)

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடைசூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய ஸ்ரீசக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம் 18.02.2019 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தேர்த் திருவிழா இடம்பெற்றது.

காலை 5.30 மணிக்கு கோவிலின் பிரதமகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாதகுருக்கள் தலைமையில் காலைக் கிரியைகள் ஆரம்பமாகி காலை எட்டுமணிக்கு வசந்த மண்டபபூஜை இடம்பெற்று பின்னர் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் உள்வீதி வலம்வந்து சரியாக காலை 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.00 மணியளவில் ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமும் வடம் பிடிக்க அம்பாள் மயான வீதி ஊடாக கொரவபொத்தான வீதியை நூறுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க வந்தடைந்தாள். .

கற்பூரச் சட்டிகள் மற்றும் அங்கபிரதட்சனம் செய்துகொண்டும் கொண்டு அம்பாளின் அடியார்கள் தம் நேர்த்திகடன்களை நிறைவேற்றிய வண்ணம் அம்பாளின் பின்னால் வலம்வந்தனர். காலை 11.00 மணியளவில் அம்பாளின் ரதம் இருப்பிடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று மதியம் ஒருமணியளவில் அவரோகணம் என்று சொல்லகூடிய பச்சைசாத்தல் உற்சவம் இடம்பெற்றது.

 

கொள்ளி வைக்க யாருமில்லை : சொன்ன மாதிரி செத்து போயிட்டான் : தீவிரவாதிகளின் தாக்குதலால் மகனை பறிகொடுத்த தந்தை கண்ணீர்!!

மகனை பறிகொடுத்த தந்தை கண்ணீர்

என் மகன் சொன்ன மாதிரியே நாட்டிற்காக இறந்துவிட்டான் என்று தமிழகத்தைச் சேர்ந்த சிவசந்திரனின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலினால் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.

இறந்த குடும்பத்தினருக்கு தங்களால் இயன்ற உதவியை பலரும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்த தாக்குதலில் இறந்தவருமான சிவச்சந்திரனின் தந்தை தன் மகனைப் பற்றி பெருமையாக, பறிகொடுத்த விரக்தியில் கண்ணீர்மல்கவும் கூறியுள்ளார்.

அதில் என் மகனுக்கு சிறு வயதில் இருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்பது ஆசை. ஏதோ சின்னப்பையன் பேசுறான். பெரியபையனாக மாற்றிக் கொள்வான் என்று தான் நினைத்தேன். ஆனால் அவன் பெரியவன் ஆக இராணுவத்தில் சேர வேண்டிய அவனின் லட்சியம் அதிகரித்து கொண்டே சென்றது. ஒரு முறை அவனின் தாய் இது குறித்து அவனிடம் கேட்ட போது, பெற்ற கடமைக்கு தான் நீ, நாட்டை காப்பாற்றும் கடமைக்கு நான் இருக்கிறேன் என்று கூறினான்.

நாங்க ஒன்னும் அவ்வளவு பெரிய பணக்கார வீடு கிடையாது. எங்கள் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு தான் எரியும். அப்படி அவன் ஒருமுறை விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்த போது, நான் அவனிடம் எண்ணெய் ஊத்தாட்டி திரி கருகிப் போயிரும். அதுமாதிரிதான் நான் எண்ணெய். நீ திரி. நான் உன்னைப் படிக்க வைப்பேன். நீ படிக்கணும் என்று கூறினேன்.

அதுமட்டுமின்றி நீ நல்லா படிச்சு பெரியாளாகி, சின்னையா மவன் யாருன்னு யாரும் கேட்கக் கூடாது. சிவச்சந்திரன் அப்பன் யாருன்னுதான் கேட்கணும் என்று கூறினேன். அன்று நான் சொன்னது போலவே இன்று இங்கு வருபவர்கள் எல்லாம் சிவச்சந்திரன் அப்பா யாருன்னுதான் கேக்குறாங்க. நான் சொன்னதை 20 வருஷத்துக்கு அப்புறம் நிறைவேத்திட்டான் என் மகன்.

அவன் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது கூட, எங்களிடம் அதிகமாக காசு கேட்கமாட்டேன். மூட்டை தூக்கி தான் படிச்சான், அப்போ கூட அவன் நான் நாட்டுக்காகச் சாகவும் தயாரா இருக்கேன். அதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை. நான் இங்கு விடுமுறையில் இருக்கும்போது ஏதாவது நடந்தால் என்னால பார்க்க முடியும். மத்தப்படி நான் செத்தாதான் இங்கே வருவேன் என்று கூறினான்.

இரண்டு வருடத்திற்கு முன்பு தம்பி இறந்தப்ப கூட அவன் வரவில்லை, அந்தளவுக்கு தன் வேலையில் வைராக்கியமா இருந்தான். இப்போதான் லீவு முடிஞ்சு போனான். அவன் சொன்ன மாதிரியே செத்துப்போய்தான் வந்திருக்கிறான். எங்களோட ரெண்டு பிள்ளையையும் பறிகொடுத்துட்டோம். இப்போ எங்களுக்குக் கொள்ளி வைக்கக் கூட வாரிசு இல்லை என்று கண்கலங்கி கூறியுள்ளார்.

இறந்த சிவச்சந்திரனின் மனைவி நர்சிங் முடித்துள்ளார். அவருக்கு சிவமுனியன் என்ற குழந்தையும் உள்ளது. சிவச்சந்திரன் இறந்துவிட்டதால், அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கனேடிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்!!

சிறுமியின் தந்தை ராஜ்குமார் தன்னைத்தான் சுட்டுக் கொண்டார்

இந்திய வம்சாவளி சிறுமியான ரியா ராஜ்குமாரைக் கொலை செய்ததாக அவளது தந்தையான ரூபேஷ் ராஜ்குமார் குண்டுக்காயங்களுடன் கைதாகி இருக்கும் நிலையில், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தாயுடன் வாழ்ந்து வந்த ரியா ராஜ்குமார் (11) தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது தந்தையை சந்திக்க சென்ற நிலையில், வெகு நேரமாகியும் அவள் வீடு திரும்பாததால் கவலையுற்ற அவளது தாயார் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.

தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்த ரூபேஷ், ஏற்கனவே மனைவியுடனான வாக்குவாதத்தின்போது தனது மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். எனவே அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பொலிசாரை தொடர்பு கொண்டார் ரியாவின் தாய்.

உடனடியாக பொலிசார் பொது மக்களின் தொலைபேசிகளுக்கு இப்படி ஒரு நபரைக் குறித்து எச்சரிக்கும் ஆம்பர் அலர்ட் என்னும் எச்சரிப்பை அளித்து, ரூபேஷ் மற்றும் அவரது வாகனம் குறித்த தகவல்களை அளித்து, யாராவது அவரையோ அவரது வாகனத்தையோ கண்டால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் ரூபேஷின் காரைக் கண்ட ஒரு நபர் பொலிசாருக்கு தகவலளிக்க, Orillia என்ற இடத்தில் பொலிசார் ரூபேஷைக் கைது செய்தனர். அதே நேரத்தில் ரூபேஷின் வீட்டுக்குள் நுழைந்த பொலிசார் அங்கு ரியா உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர்.

ரூபேஷைக் கைது செய்யும்போது, அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்த பொலிசார், அவரை சோதனையிட்டபோது அவர் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதைக் கண்டனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூபேஷ், அபாயகரமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ரூபேஷ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளதால் அவர் ஏற்கனவே தனது மனைவியை மிரட்டியதுபோலவே மகளைக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக்கொண்டதாக கருதப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூபேஷ் இன்னும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், தாங்கள் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கோள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே மருத்துவமனையில் தீவிர பொலிஸ் கண்காணிப்பில் இருக்கும் ரூபேஷ் தற்போதைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்றும் அவர் நலம் பெற்ற பிறகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியாவின் உடல் புதன்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பதற்றநிலை : சம்பவ இடத்தில் பொலிசார்!!

வைரவப்புளியங்குளத்தில் பதற்றநிலை

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18.02.2019) மாலை 5.30 மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதற்றநிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியின் மறுபக்கத்திற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் மோட்டார் சைக்கில் ஒன்று வந்துள்ளது. முச்சக்கரவண்டி திரும்புவதனை தீடிரென அவதானித்த மோட்டார் சைக்கில் சாரதி மோட்டார் சைக்கிலினை வீதியினை விட்டு கீழே இறக்கியுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தினால் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்ததுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் இடம்பெறவில்லை.

இதன் போது அவ்விடத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் மோட்டார் சைக்கிலை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் தான் திருத்தித் தர வேண்டுமேன தெரிவித்தனர். இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். முச்சக்கரவண்டி திரும்புவதை அவதானிக்காமல் வந்தமை மோட்டார் சைக்கில் ஓட்டுனரின் தவறாகும். முன்னால் செல்லும் வாகனத்தினை அவதானிக்க முடியாமல் வந்திருந்தால் குறித்த மோட்டார் சைக்கில் அதிவேகமாகவே வந்திருக்க வேண்டும்.

அத்துடன் மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதவுமில்லை அவ்வாறு மோதி விபத்து ஏற்பட்டிருந்தாலும் ஒர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியமை மோட்டார் சைக்கிலில் ஓட்டுனரின் தவறே ஆகும்.

வீதியினை விட்டு விலகி கீழே விழ்ந்தமை மோட்டார் சைக்கிலின் சாரதியின் கவனயீனமே என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த மோட்டார் சைக்கிலை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்வதற்குறிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மாணவியிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!!

ஆசிரியருக்கு விளக்கமறியல்

மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியிடம் தகாத முறையில் நடந்த சம்பவம் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இவ் விடயம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியரை இன்றைய தினம் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியர் கருத்து தெரிவிக்கையில்,

“ தான் குறித்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ளவில்லை. மாணவியின் முதுகில் தான் தாக்கினேன் எனவும், நான் இந்த பாடசாலையில் முறையாக உரிய நேரத்தில் வேலைகளை செய்வதால் எனக்கு எதிராக இவ்வாறு ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பொய்யான முறையில் குற்றம் சுமத்தியுள்ளனர்” எனவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து சென்ற பேரூந்து விபத்தில் 4 பேர் பலி : சாரதி கைது, நடத்துனர் தப்பியோட்டம்!!

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி

நான்கு பேர் உயிரிழப்பதற்கு காரணமான சிலாபம் – மஹவௌ பகுதியில் பேருந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில். மாரவில மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இதேநேரம், குறித்த விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ள பேருந்தின் நடத்துனரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து மஹவ சந்தியில் வைத்து இன்று அதிகாலை 4.30 அளவில் விபத்துக்குள்ளானது.

குறித்த பேருந்து, பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது, சாரதியினால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாதமையினால், அருகிலிருந்து மின்சார பரிமாற்றி இயந்திரக் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது பேருந்திலிருந்த 19 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மின்சார பரிமாற்றி இயந்திரம் பொறுத்தப்பட்டிருந்த கம்பம் பேருந்தின் மீது வீழ்ந்திருந்ததன் காரணமாக, விபத்துக்குள்ளான பேருந்துக்குள் சிக்குண்டிருந்தவர்களுள் மூன்று பேரை மீட்க, சுமார் மூன்று மணிநேரம் எடுத்ததாக சம்பவ இடத்திலிருந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்தின் சாரதி, அதிக வேகத்துடன் பேருந்தை செலுத்திச் சென்றமையே இந்த விபத்திற்கு காரணமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நோயாளர் காவு வண்டி விபத்து : விபத்தில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில்!!

நோயாளர் காவு வண்டி விபத்து

மட்டக்களப்பு – மண்டூர், பாலைமுனையில் நோயாளர் காவு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மண்டூர் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியமையே இவ்விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபையின் உடல் வலுவூட்டல் நிலையம் பயிற்சியாளர் இல்லாத நிலையில்!!

உடல் வலுவூட்டல் நிலையம் பயிற்சியாளர் இல்லாத நிலையில்

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவருவதாகவும் அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு தகுதியான பயிற்றுவிப்பாளர் எவரும் இல்லை என்றும் உடல் வலுவூட்டல் நிலையத்திற்குச் செல்லும் அங்கத்தவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

வவுனியா நகரசபையிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு அண்மையில் உபகரணங்கள் சில கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தரமற்றவையாகவும், உபயோகிக்க முடியாமலும் நீண்டகாலமாக பாவனையற்ற நிலையில் அங்கு காணப்படுகின்றது.

நகரின் மத்தியிலுள்ள நகரசபையினரின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபா முற்பணமாகவும் மாதாந்தம் 750 ரூபாவும் நகரசபையினரால் பணம் அறவிடப்பட்டு வருகின்ற நிலையிலும் அங்கு பயிற்றுவிப்பாளர் உட்பட நிலையம் சுகாதாரம் இன்றியும் காணப்படுகின்றது.

உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பயிற்றுவிப்பாளர் இன்மையால் பலர் அங்கு செல்வதில்லை தற்போது இருக்கும் அங்கத்தவர்களுக்குச் சரியான முறையில் பயிற்றுவிப்பதற்கு பயிற்றுப்பாளர் இன்மையால் கடந்த பல வருடங்களாக வவுனியா நகரிலிருந்து உடல் வலுவூட்டல் போட்டியிற்கு செல்லவில்லை.

இது வவுனியா நகரிற்கு ஒரு குறைபாடாகவே காணப்படுகின்றது. பல திறமையாளனவர்கள் இருந்தும் நகசரபையினரால் இனங்கண்டு அவர்களை பயிற்றுவிப்பாளர்களாக இணைத்துச் செயற்பட முடியவில்லை. நகரின் மத்தியிலுள்ள உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பலர் செல்வதற்கு தயார் நிலையிலிருந்தும் அங்குள்ள குறைபாடுகளினால் பலர் செல்வதைத்தவிர்த்து வருகின்றனர்.

நகரசபையின் இக்குறைபாடுகள் தொடர்பாக நகரசபை உப நகர பிதா சு.குமாரசாமியிடம் இன்று வினவிய போது, உடல் வலுவூட்டல் நிலையத்திற்கு பயிற்றுவிப்பாளர்களாக பணிபுரிவதற்கு 21பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் இவ்விடயங்கள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மலசல கூடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நகரசபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. மலசலகூடத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. துப்பரவுப் பணியாளர்கள் இருவர் கடமையாற்றி வருகின்றனர். எனவே துப்பரவின்மை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபாதை வியாபாரத்தால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்!!

டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்

வவுனியா – இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதால் கழிவுகள் சென்று கால்வாய்களை அடைத்து நீர் தேங்கி டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதால் இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் பொது மக்கள் தெரிவிக்கையில்,

இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளிலுள்ள கால்வாய்கள், நடைபாதையின் இருபகுதி ஓரங்களில் சிலர் கால்வாயில் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமது கழிவு குப்பைகளை அப்பகுதியில் வீசி வருகின்றனர்.

இதனால் கால்வாயினால் செல்லும் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து டெங்கு நுளம்புகள் பெருகுவதுடன் மாலை நேரங்களில் அப்பகுதியில் நுளம்பு தொல்லைகள் அதிகரித்து காணப்படுகின்றன. சுகாதாரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபாதை வியாபாரத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதால் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன. நடைபாதையில் வியாபார நடவடிக்கையினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த மாணவி மரணம்!!

மாணவி மரணம்

வவுனியா – மடுக்கந்தை, மயிலங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த அனர்த்தம் நேற்றுமுன் தினம் மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட 16 வயது பாடசாலை மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த மாணவி சமைப்பதற்காக சமையலறைக்கு சென்று அடுப்பினை உபயோகித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக அயலவர்களால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் நிலைமை நேற்று கவலைக்கிடமாக காணப்பட்ட நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

142 பயணிகளுடன் கொழும்பிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து!!

விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று பாரிய ஆபத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்துள்ளதாக தெரிய வருகிறது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL 121 விமானம் ஒன்றிற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து பயணித்த விமானம் ஒன்று நேற்று காலை 8.40 மணியளவில் சென்னையை சென்றடைந்துள்ளது.

142 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறக்கும் போது விமானத்தின் டயர் வெடித்துள்ளது. எனினும் பயணிகள் காயமின்றி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.