வவுனியாவில் தமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று(17.02) பட்டப்பகலில் வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம் என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பட்டகாடு பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர் தமது தேவை நிமித்தம் குடும்பமாக நேற்று (26.02) காலை 8 மணிக்கு வெளியே சென்றிருந்த சமயத்தில் அவ் வீட்டின் முன் கதவினையுடைத்து 5 பவுண் தாலிக்கொடி, நகை, இருபதினாயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

தமது தேவைகளை முடித்த பின்னர் குடும்பமாக மாலை 3 மணியளவில் வீடு திரும்பிய சமயத்தில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து வீட்டார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றினை மேற்கொண்டனர்.

முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். எனினும் இச் சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் முடிவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞனின் சாதனைப் பயணம்!!

 

நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்லுறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரியும் நாடு பூராகவும் செல்லும் வகையில் யாழில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் இன்று (16.02.2019) வவுனியாவில் முடித்து கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளியான மக்கீன் முகமட் அலி என்பவர் கடந்த முதலாம் திகதி இந்தப் பயணத்தை யாழில் ஆரம்பித்திருந்தார். யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் கொழும்பு காலி மாத்தறை என நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று 15 நாட்களுடன் இன்று வவுனியாவில் முடித்துக் கொண்டார்.

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் செல்லும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பயணமானது 1400 கிலோ மீற்றர் தூரம் சென்று வந்த நிலையிலையே இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் போது தனக்கு ஆதரவை வழங்கிய தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் அத்தோடு ஊடகங்களுக்கும் இதனை ஏற்பாடு செய்த அமைப்பிற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கோரிக்கைகள் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் நிதியில் மாற்றுத்திறனாளியான மக்கீன் முகமட் அலிக்கு முச்சக்கரவண்டி ஒன்று வழங்கி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!

மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. இன்று காலை 6.10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது தூக்கத்தில் இருந்துள்ளார்.

இதனையடுத்து ரயில் சாரதி திடீரன ரயிலின் வேகத்தை குறைத்து கடவை கதவுக்கு அண்மையில் ரயிலினை நிறுத்தினார். இந்நிலையில் வாகனங்கள் சென்று 10 நிமிடங்கள் பின்னரே ரயில் சென்றது.

குறித்த ரயில் சாரதியின் சமயோகிதத்துடன் செயற்பட்டமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடவை காப்பாளரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் : ஊரே சோகத்தில்!!

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன்

மன்னார், மாந்தை மேற்கு பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருங்கண்டல் ம.வி பாடசாலையில் கல்வி கற்று வரும் ஜே.நிர்மலன் என்ற மாணவரே நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிர்மலன் வழமை போல் நேற்று காலை பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நிர்மலனை காணவில்லை என தேடிய போதே மணல் காட்டு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா ஈச்சங்குளத்தில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்!!

இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்

வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவர் மீது இராணுவம் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கல்மடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஈச்சங்குளம் இராணுவ முகாமின் முன்னால் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிவிட்டு அதன் முன்னால் இராணுவத்தினர் நடத்தும் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற சமயம், அங்கு நின்ற இராணுவ வீரர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் நின்ற இராணுவத்தினர் ஒன்றிணைந்து தன்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த ஈச்சங்குளம் பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன், இராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஈச்சங்குளம் பொலிசாரால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் மீண்டும் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலை வாகனத்தரிப்பிடத்தில் பாய்ந்த ஹயஸ் வாகனம் : 30 மோட்டர் சைக்கிள்கள் சேதம்!!

30 மோட்டர் சைக்கிள்கள் சேதம்

வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் இடம்பெற்ற விபத்தில் 30 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை முடிந்து வீடு திரும்ப முற்பட்டவேளை வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஹயஸ் ரக வாகனத்தில் ஏறி அதனை திருப்ப முற்பட்டவேளை கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்படும் வாகனத் தரிப்பிடத்திற்குள் பாய்ந்தது.

இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியா நெளுக்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!!

முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு வீதியில் இன்று (16.02.2019) அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த முதியவர் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டின் மேல் மாடியில் ஏறி கயிற்றினை போட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். முதியவரை காணவில்லை என உறவினர்கள் தேடிய சமயத்தில் வீட்டின் மேலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுள்ளனர்.

இதனையடுத்து உறவினர்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த குற்ற தடயவியல் பொலிஸாரும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்களுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் 68 வயதுடைய கிருபாகரன் கோபால கிருஸ்னன் என பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபை பொது மலசலகூடத்திலிருந்து வெளியேரும் தூர்நாற்றம் : வர்த்தகர்கள் அசௌகரியம்!!

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் நகரசபை பொது மலசலகூடத்திலிருந்து தூர்நாற்றம் வீசுவதினால் பழைய பேரூந்து நிலைய கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் வியாபாரம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சலம் கழிப்பதற்கு ரூபா 10, மலம் கழிப்பதற்கு ரூபா 20 கட்டணம் அறவிடப்படுகின்ற போதிலும் மலசல கூடத்தினை சீரான முறையில் பராமரிப்பதில்லை எனவும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தீர்வினை பெற்றுத்தருமாறு வர்த்தகர்கள் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மோடியின் பதிவினால் இந்தியாவின் மருமகளான இலங்கைப் பெண்!!

இந்தியாவின் மருமகளான இலங்கைப் பெண்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கீச்சகப் பதிவுக்கு தனது விரும்பத்தை (like) செய்திருந்த இந்திய இளைஞனும், அதே பதிவிற்கு தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்திய இலங்கைப் பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குச்ரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் மகேஷ்வரி, பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு கீச்சகப் பதிவினை (டிவீட்டை) இவர் லைக் செய்துள்ளார். அதே டிவீட்டை இலங்கையை சேர்ந்த ஹர்ஷினி எதீரிசிங்கே என்ற பெண்ணும் லைக் செய்துள்ளார்.

இந்த லைக் மூலமாக இருவரும் கடந்த 2015-இல் நண்பர்களாகியுள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் 2017-ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

இந்திய கலாச்சாரத்தை புரிந்துகொள்வதற்காக ஹர்ஷினி இந்தியாவில் படிக்க விரும்பினார். அதேசமயம், கோவிந்த் பொறியியல் படிப்பை முடித்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவர்களது காதல் விஷயத்தை அறிந்து கொண்ட ஹர்ஷினியின் தந்தை, கோவிந்தை இலங்கைக்கு அழைத்து 2 மாதம் தங்களுடன் தங்கவைத்தார். அப்போது, ஹர்ஷினியின் குடும்பத்தாருக்கு கோவிந்தை பிடித்துள்ளது.

அதன்பிறகே, இவர்களது காதலுக்கு ஹர்ஷினியின் தந்தை சம்மதம் தெரிவித்துள்ளார். ஹர்ஷினியின் குடும்பத்தினர் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். கோவிந்தும் சைவம் என்பதால் அவர்களுக்கு இந்த விவகாரமும் தடங்கலை ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து, இவர்கள் இருவரும் காதலர் தினத்துக்கு 4 நாட்கள் முன்னதாக கடந்த 10-ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் திடீர் தாக்குதல் 18 வீரர்கள் உயிரிழப்பு!!

18 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற (Central Reserve Police Force) வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 18 வீரர்கள் உயரிழந்துள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மிரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலை வழியாக மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

இதன்போது வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.

குறித்த வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றநிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

திருமணமான இளம் பெண்ணுக்கு அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி : பரிதவிக்கும் கணவன்!!

பரிதவிக்கும் கணவன்

சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிலாபம் தாப்பவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஜெராட் ரொஷான் மலிந்த என்ற 27 வயதான இளைஞனே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். கடந்த மாதம் 25ஆம் திகதி ராகம பிரதேசத்தை சேர்ந்த மதீரா செவ்வந்தி என்பவரை திருமணம் செய்து சிலாபம் பிரதேசத்தில் குடியேறினோம். 27ஆம் திகதி மாலை வெளியே சென்று இரவு 7 மணியளவில் வீடு திரும்பும் போது மனைவியை காணவில்லை.

அவரை எல்லா இடத்திலும் தேடி விட்டேன். அதனால் முறைப்பாடு செய்ய வந்ததாக கணவர் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் கடத்திச் சென்று பெண்ணின் தாயார் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்வதற்கு சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். திருணமாக அடுத்த நாளில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமையானது கணவனை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் தாய்பால் புரையேறி மரணித்த குழந்தையின் மரணத்தில் மர்மம்!!

குழந்தையின் மரணத்தில் மர்மம்

வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஓரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரையேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை உடற்கூற்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா, சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றின் ரங்கநாதன் ரவீன் என்ற ஒரு மாதக் குழந்தைக்கு தாய்பால் புரையேறிய நிலையில்
உடனடியாக குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் முயற்சி பலனின்றி குழந்தை மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குழந்தையின் உடற்கூற்று மருத்துவ பரிசோதனையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாய் வவுனியா வைத்தியசாலையிலேயே குழந்தையை பிரசவித்த அதேவேளை, வைத்தியசாலை வைத்தியர்களின் மருத்துவ அறிக்கையிலும் குழந்தை ஆரோக்கியமனது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது குழந்தை இறந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் இதயத்தில் துவாரம் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமை பெற்றோர், உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பிறந்த பின் வைத்தியர்கள் சரியான முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாமையே தமது குழந்தையின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, மேலதிக உடற்கூற்று மருத்துவ பரிசோதனைக்காக குழந்தையின் உடல் பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாடசாலை மதில் சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் : பெற்றோர் விசனம்!!

காதலர் தின வாழ்த்துக்கள்

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்ட வாசகங்களை காணமுடிந்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது. எனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர்.

இன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும் வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இவ்வாறு பாடசாலையின் மதிலில் குறிப்பாக அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களினால் பாடசாலையின் மதில் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதையிட்டு அவ்வீதியால் செல்லும் பெற்றோர்கள், பழைய மாணவர்களுக்கு பாடசாலை மீது அவ நம்பிக்கையை மேலும் ஏற்படுத்தியுள்ளது.

ஒழுக்கத்துடன் கல்வியைக் கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பாடசாலை சமூகத்தினால் ஒழுக்கமான மாணவ சமூதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சமூகச் சீரழிவுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய பொறுப்பு கல்வியலாளர்களிடம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் – 2019 (16.02.2019)

எதிர்வரும் 16.02.2019 திகதி அன்று வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் உள்ள YMCA மண்டபத்தில் காலை 09:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் அழைக்கின்றோம். வட மாகாணத்தை சேர்ந்த மத்திய மற்றும் மாகாண அரச சேவைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அனைவரும் எம்முடன் இணைந்து செயற்படலாம்.

புதிதாக எமது சங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினையும் வரவேற்கின்றோம்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதோடு உங்கள் அனைவரது மனப்பூர்வமான ஒத்துழைப்புக்களைத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்

தொடர்புகளுக்கு:

வட மாகாண அபிவிருத்தி

உத்தியோகத்தர்கள் சங்கம்,

இல: 59, சங்கிலியன் வீதி,

நல்லூர்.

ஈ – மெயில் (E-Mail) :  npdouion@gmail.com
தொலைபேசி இல(Telephone No) : 077-3760039 / 077-9072894
எமது வலைத்தளம் https://douninp.blogspot.com
எமது முகப்புத்தகம் https://www.facebook.com/douionnp

 

வவுனியாவில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

வவுனியாவில் 4.1 மில்லியன் ரூபா செலவில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் சுஜாத்தா குலத்துங்கவினால் நேற்று (13.02.2019)  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உதவிப்பணிப்பாளர் சுஜாத்தா குலத்துங்க, வவுனியா மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உளநல பாதுகாப்பு உத்தியோகத்தர் நந்தசீலன் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார், மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2019(படங்கள்)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பதினோராம்  ஆண்டு  மகோற்சவ பெருவிழா நேற்று10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில்கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது.

மேற்படி மகோற்சவத்தில்

17.02.2019  ஞாயிற்றுக்கிழமை  சப்பர திருவிழா

18.02.2019  திங்கட்கிழமை   தேர்த்திருவிழா

19.02.2019 செவ்வாய்கிழமை   தீர்த்த திருவிழா

20.02.2019  புதன்கிழமை  பூங்காவன திருவிழாவும்  இடம்பெறுகின்றது.