மன்னாரில் மர்மப் பொருட்கள் இருப்பதாக இரகசிய தகவல் : காட்டுப்பகுதியில் கிடைத்த கொள்கலன்!!

 

மன்னாரில் மர்மப் பொருட்கள்

மன்னார் – பேசாலை, நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிலிருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெடி பொருட்களை நேற்று மாலை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடுக்குடா கடற்கரையோரத்திலுள்ள காட்டுப்பகுதியில் கொள்கலன் ஒன்றில் மர்மப் பொருட்கள் இருப்பதாக நேற்று மதியம் பேசாலை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியில் கொள்கலன் ஒன்றிலிருந்து கிளைமோர் 1, ஜெரற்னைட் 4, துப்பாக்கி, துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விசித்திர காரில் பயணித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மஹிந்தவின் மகன்!!

 

மஹிந்தவின் மகன்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவின் திருமண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இரண்டு முறை நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்தவின் வீட்டுத் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இது ஒட்டுமொத்த இலங்கையர்களின் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செலவுகளை குறைத்து, உள்நாட்டு உற்பத்தி உணவுகள் மாத்திரம் பயன்படுத்தி இந்த திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண வைபவத்தின் பின்னர் புதுமணத் தம்பதியர் சென்ற வாகனம் பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கையின் மிகப் பழைமையான மோட்டார் வாகனம் ஒன்றில் அவர்கள் பயணித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பென்ஸ் கார், லெம்போகினி கார்களினால் சர்ச்சைகளில் சிக்கியிருந்த ராஜபக்ச குடும்பத்தினர் இந்த வகையான கார் ஒன்றை தெரிவு செய்திருப்பது அனைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், இயற்கையோடு ஒன்றியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

12 வருடங்களுக்கு பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!!

அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 12 வருடங்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அமைச்சர் கருத்து வெளியிட்டார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட பொழுதிலும், மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதே போல் பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் மார்ச் 5ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஒமந்தையில் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு : சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!!

 

முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு

வவுனியா ஒமந்தை மருதங்குளம் பகுதியில் நேற்று (24.01.2019) இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியினை ஒமந்தை பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் வழிமறித்து தகாத வார்த்தைப் பிரயோகங்களினால் பேசியதுடன் தாக்குதல் மேற்கொள்ளுவதற்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கரவண்டியினை அவ்விடத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் முச்சக்கரவண்டியினை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையில் அச்சமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியினை ஒமந்தை மருதங்குளத்தில் உள்ள அவரது அம்மம்மாவின் வீட்டிற்கு முன்பாக தரித்து நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

குறித்த நபரை பழிவாங்கும் எண்ணத்தில் மோட்டார் சைக்கிலில் வந்த இரு இளைஞர்களும் முச்சக்கரவண்டியினை தீ வைத்து எரித்து விட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். தீயில் எரிந்த முச்சக்கரவண்டியினை முச்சக்கரவண்டியின் உரிமையாளரும் அயலவர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக ஒமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியபோதிலும் சுமார் இரண்டு மணித்தியாலயத்தின் பின்னரே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் முச்சக்கரவண்டியினை தீயிட்டு கொழுத்தியவர்களை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் அடையாளம் காட்டியுள்ள போதிலும் இதுவரையில் எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் நிறைமாத கர்பிணிப் பெண்ணின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியால் தாக்கிய நபர்!!

 

கர்பிணிப் பெண்

யாழ்ப்பாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான காதலன் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். சாவகச்சேரி, கெற்போலி பகுதியில் நேற்று மாலை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் காணப்பட்ட காதல் உறவே இதற்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது , வீதியில் வழிமறித்த காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் குறித்த பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷடம் : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!

அரச ஊழியர்களுக்கு உரித்தான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டமை ஒரு அநீதியான செயல் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, உரிய நிவாரணத்தை மீளவும் பெற்றுக் கொடுக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும் வேளையிலேயே அமைச்சர் கிரியெல்ல இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது வந்தன. இந்நிலையில் அரச ஊழியர்களுக்கும் அந்த சலுகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் வரி எதுவும் இன்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் வாய்ப்பு அரசாங்க ஊழியர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : மன்னிப்பு கோரிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்!!

வேலை நிறுத்தப் போராட்டம்

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்களின் படங்களை பதாதைகளாக்கி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து நீண்டநாட்களாக வைக்கப்பட்டிருந்தது.

இப் பதாதைகள் நேற்று இரவு நகரசபை தொழிலாளர்களினால் அவர்களது வாகனங்களில் அகற்றும் பணிகள் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நகரசபை உறுப்பினர் அடங்கியவர்களினால் இப்பதாதைகளை அகற்றுவதற்கு ஊழியர்களிற்கு இடையூறு விளைவித்திருந்ததுடன் அநாகரியமான முறையிலும் நடாந்து கொண்டிருந்ததாக இவர்களின் இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா நகரசபை வாயிலிற்கு முன் இடம்பெற்ற இப்போராட்டத்தின் போது நகரசபை உத்தியோகத்தர்களினால் எங்கள் கடமைகளை சரியாக செய்ய அனுமதிக்கவும், நகரசபை தலைவரை அவமதிக்காதே, அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு அச்சுறுத்தாதீர்கள், நகரசபை உறுப்பினரே நகரசபை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன், நேற்று எனது உத்தரவிற்கு இணங்க வருமானப்பகுதி உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அனுமதியற்ற பதாதைகளை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபடும் போது கட்சி சார்ந்த சிலரினால் இச்செயற்பாட்டினை மேற்கொள்ளவதற்கு உத்தியோகத்தர்களிற்கு தடை செய்ததுடன், முரண்பாட்டிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நகரசபை ஊழியர்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முரண்பாட்டில் ஈடுபட்ட கட்சி சார்ந்த நபர்கள் 12 மணிக்குள் வந்து அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு அவர்களினால் மன்னிப்பு கோரப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதோடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்தார்.

இதேவேளை இன்று மதியம் 1 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாஸ மற்றும் நகரசபை உறுப்பினர் ஜானக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் நகரசபை தலைவர், செயலாளர் மற்றும் ஊழியர்களுடன் ஒர் சந்திப்பை மேற்கொண்டதுடன் இச்செயற்பாட்டிற்கு தமது மன்னிப்பினையும் கோரியிருந்தமையை அடுத்து வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இன்று மழைபெய்யும்!!

 

மழை

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது” மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் நபரொருவர் செய்த மோசமான செயல்!!

திருகோணமலை – மூதூர் பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு ஒரு மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைச்சேனை – மூதூர் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவருக்கே நேற்று இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஒன்றரை போத்தல் வடிசாராயத்தினை குடித்து விட்டு வீதியில் நின்று கொண்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு, வீதியால் சென்ற பொது மக்களையும் தூற்றியுள்ளதாக தெரிவித்து மூதூர் பொலிஸாருக்கு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு ஒன்று வந்துள்ளது.

முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி!!

கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கொழும்பில் 3 இலட்சம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதேப்போல் 50,000 குடிசை வீடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த சுவிஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற உல்லாச விடுதி ஊழியரை, வெள்ளவாய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண், தனது கணவனுடன் உல்லாச பிரயாணியாக இலங்கை வந்து, வெள்ளவாய பகுதிக்கு சென்று, அங்கு உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், விடுதியின் ஊழியர் குறித்த பெண்ணிடம் பாலியல் வல்லுறவினை மேற்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அப் பெண் இனங்காமையினால், விடுதி ஊழியரின் முயற்சி தோல்வியுற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் தனது கணவனிடம் விடயத்தைக் கூறி, வெள்ளவாய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து விடுதியின் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளளனர்.

யாழில் பிரதேச செயலாளரின் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்து!!

 

மின்கம்பத்துடன் மோதி விபத்து

காங்கேசன்துறை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக உள்ள மின்கம்பத்துடன் பிரதேச செயலாளரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

காரைநகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அண்மித்த பகுதிகளில் வாகனத்திற்கு முன்பாக நாய் ஓடியதால் சாரதி வாகனத்தை வீதிக்கு அடுத்த பக்கம் திருப்பியுள்ளார்.

இதன் போது எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக இருந்த மணல் சறுக்குண்டு வாகனம் மின்கம்பத்துடன் மோதியதில் வாகத்தின் முன்பக்கம் முற்றாக சேதமடைந்தது. இதில் வாகனத்தில் பயணித்த பிரதேச செயலாளர் மற்றும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016 – 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

 

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும், மூன்று வருட கால, சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, பாடநெறிக்கான விண்ணப்பங்கள் இன்று வெளியாகவுள்ளது. கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த வருடத்திற்காக 8,000க்கும் அதிகமானவர்ளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி பெப்ரவரி 15 ஆகும்.

விண்ணப்பதாரிகள் ஜனவரி முதலாம் திகதியன்று 25 வயதுக்கு மேற்படாதவர்களும் சமய பாடநெறிக்காக விண்ணப்பிக்கும் மதகுருமார்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள் 30 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருத்தல் வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 கிலோ வரை உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த அற்புத பானத்தை குடியுங்கள்!!

 

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இன்றும் பலர் அதற்காக எத்தனை வழிகளில் முயற்சி செய்து கொண்டு தான் வருகின்றனர். எவ்வளவோ டயட் மற்றும் நேரத்தை செலவழித்து கடின உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையினை குறைக்க கஷ்டப்படுவதுண்டு.

அதற்கு நேரம் செலவேயில்லாமல் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளமால் உடல் எடையினை இலகுவழியில் குறைக்க முடியும். அந்தவகையில் சமையலுக்கு பயன்படும் நீள கத்திரிக்காய் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை உடல் எடையை குறைக்க முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை : நீள ஊதா நிறக்கத்திரிக்காய் – 1,  எலுமிச்சை சாறு – 1,  நீர்- 4 கப். தயாரிக்கும் முறை :  முதலில் கத்திரிக்காயை வாங்கி சுத்தமாக கழுவ வேண்டும். சமையல் சோடா கலந்த நீரில் அலசினால் அதிலிருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள் அழித்துவிடும். அதன் பின் இந்த கத்திரிக்காயை சிறு சிறு சதுர சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் தோலை எடுக்காமல் வெட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் ஒரு ஜாரில் வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு அதில் இந்த கொதித்த நீரை உடனே ஊற்றி மூடி முழுவதும் ஆறும் வரை அப்படியே வைத்திருங்கள். பின்னர் ஆறியவுடன் அந்த நீரில் ஃப்ரெஷான எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சில்லென்று ஆனவுடன் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதனால் உடல் எடை குறைக்க விரும்புவர்கள் வாரம் 3 நாட்கள் விடாமல் குறைத்தால் அற்புத பலன்கள் கிடைக்கும்.

கத்திரிக்காய் அதிக சத்துக்களை கொண்டது. கொழுப்பை வேகமாக கரைத்திடக் கூடியது. தினமும் இந்த நீரை குடித்து வந்தால் அதிகபடியான கொழுப்பு கரைந்து உடல் இளைக்க ஆரம்பிக்கும். ஏனைய நன்மைகள் : இந்த நீரில் விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. செல் சிதைவை தடுக்கும். இதய நலனை பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டும். இது நீர்ப்புத்தன்மை மற்றும் யைடூரிடிக் பண்பு அதிகம் பெற்றது. திசுக்களில் தங்கியிருக்கும் நீரை வெளியேற்றி மூட்டு இணைப்புகளில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காக்கின்றது.

இந்த நீர் மினரல்களான பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்றவற்றை உடலுக்கு அளிக்கின்றது. இதனால் நரம்பு மண்டலம் பலம் பெறுகிறது. மூளைக்கும் அதிக ஆற்றலை வழங்குகிறது.

பித்த நீர் சுரப்பை இந்த கத்திரிக்காய் நீர் தூண்டுவதால், உணவுக் குடல் மற்றும் இரைப்பையில் உருவாகும் கொழுப்பு செல்களை உடைத்து முழுவதும் கிரகிக்க உதவுகிறது. கத்திரிக்காயில் மிக அதிக நார்ச்சத்து உள்ளிதால் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல்களில் உருவாகும் நல்ல பாக்டீரியக்கள் வளர்ச்சியை தூண்டுகிறது.

மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தும். ரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் இந்த கத்திரிக்காய் நீரை மருந்தாக சாப்பிடலாம். இது ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த நீரை எடுத்துக் கொண்டால் மனத் தளர்ச்சியை போக்கும். நரம்புகளை ஆசுவாசப்படுத்தி நன்மைகளை அளித்திடும்.

காதல் கொடுக்கும் தேவதை கதைகள் : திருமண நாளில் மனம் திறந்த நடிகை பாவனா!!

 

நடிகை பாவனா

நடிகை பாவனா நேற்று முன்தினம் தனது முதல் வருட திருமண நாளை கொண்டாடிய நிலையில், தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா. இவர் தனது முதல் கன்னட படத்தை தயாரித்த நவீன் என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, தற்போது 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார்.

இந்நிலையில், இன்று தனது முதல் வருட திருமண நாளை கொண்டாடும் பாவனா, திருமண புகைப்படத்துடன் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. மகிழ்ச்சியான திருமண நாள். எப்போதாவது ஒரு முறை, சாதாரண வாழ்க்கையின் நடுவே சுவாரஸ்யமான தேவதை கதையைக் காதல் எங்களுக்கு கொடுக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து!!

 

கோர விபத்து

புத்தள – கதிர்காமம் பிரதான வீதியின் கரவிலகொட்டுவ 19ஆம் கட்டை பகுதிக்கு அருகில் சிற்றூர்தி ஒன்று வீதியை விட்டு விலகிச் விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் பலியாகினர்.

அத்துடன், 4 பேர் காயமடைந்த நிலையில், மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 31 வயதுடைய உக்ரேன் பிரஜை ஒருவர் பலியானார். குறித்த உக்ரேன் நாட்டு பிரஜை பயணித்த உந்துருளி, பேருந்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.