மொரட்டுவ ரண்வெலி மாவத்தைக்கு அருகிலுள்ள பலகை வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய குடும்ப தலைவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாடகை வாகனம் செலுத்தும் சாரதியான குறித்த நபர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வௌியேறியுள்ளார்.
குறித்த தினத்திலிருந்து அவர் காணாமல் போயிருந்த நிலையில் காவல் துறையினர் இன்றைய தினம் சடலமாக மீட்டுள்ளனர். சடலம் மரண விசாரணைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கான வரவேற்பு நிகழ்வு இன்று (24.01) வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா, இலங்கை போக்குவரத்து சபையின் சாலையில் இருந்து கண்டி வீதி வழியாக பெருமளவிலான ஆதரவாளர்கள் மத்தியில் அமைச்சர் ஊர்வலமாக வாகனப் பவனியில் வவுனியா நகரசபை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் முத்து முஹம்மது தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
நகரசபையில் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றியதுடன், ஆதரவாளர்களால் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வெல்லவாய – ஆனபல்லம பகுதியில் கிராமம் ஒன்றினுள் புகுந்த காட்டு யானையை விரட்டுவதற்கான நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு வந்த காட்டு யானை காலை வரை அங்கு உலாவி கொண்டிருந்ததால் பிரதேவாசிகள் அச்சத்தில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அந்த யானை அப்பகுதியில் உள்ள பாடசாலை அருகிலும் சென்றுள்ளதால் மாணவர்கள் கடும் பீதியடைந்திருந்த நிலையில், பின்னர் வெல்லவாய வனவிலங்கு அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இணைந்து யானையை காட்டுக்கு விரட்டியுள்ளனர்.
இலங்கையில் சேனா என்ற படைப்புழுவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் இந்த புழு இனம் திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாவல் நிறத்தையுடைய இந்தப் புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை, நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உணவாக உட்கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேனா என்ற படைப்புழு சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சோள செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய வகை புழு நெற்கதிர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதால் இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பரந்தன்-முல்லைத்தீவு பிரதான வீதியின் விஸ்வமடு சந்திக்கு அருகாமையில் இன்று (24.01.2019) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருகையில்,
விஸ்வமடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் இரு இளைஞர்கள் மதுபானம் அருந்திய நிலையில் கதைத்துக் கொண்டிருந்தனர். இதன் இருவருக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த இளைஞர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு தீயூட்டியுள்ளார்.
சடுதியாக செயற்பட்ட மக்கள் மோட்டார் சைக்கிளில் பற்றியெரிந்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் குறித்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிலில் இருவரும் ஒன்றாக வருகை தந்துள்ளனர். அதன் பின்னர் விசுவடு பகுதியில் உள்ள மதகில் இருவரும் அமர்ந்திருந்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது இவர்களில் ஒருவர் வா போவம் என தெரிவித்த சமயத்தில் மற்றைய நபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே உனது மோட்டார் வண்டி தேவையில்லை என தெரிவித்து குறித்த நபர் மோட்டார் சைக்கிலினை எறித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிலாந்தின் Darlington நகரில் Kaylah Merritt என்ற ஒரு வயது குழந்தை Herpes(ஒரு வகை படர்தாமரை) பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவது குறித்து அக்குழந்தையின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
Brogan Thomas – Connor Merritt தம்பதியினரின் ஒரே மகள் Kaylah. ஒரு வயதான இக்குழந்தைக்கு அவரது உறவினர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ளார்.
முத்தம் கொடுத்த நபர் herpes பாதிக்கப்பட்டிருந்தார். herpes என்பது herpes simplex virus பாதிப்பால் ஏற்படும் ஒரு வகை படர்தாமரை ஆகும். , HSV-1, HSV-2 ஆகிய இருவரை வைரஸ்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, உதடு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் போன்று இருக்கும். இது மெதுமெதுவாக அப்படியே உடல் முழுவதும் பரவி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுகிறது.
தற்போது, ஒரே ஒரு முத்தத்தால் Kaylah யின் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு நோய் எதிர்பபு சக்தி குறைந்துவிட்டது என்றும் உயிருக்கு ஆபத்து எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாய் கூறியதாவது, ஒரே ஒரு முத்தத்தால் எங்களது குழந்தைக்கு இப்படியாகிவிட்டது, அவள் வேதனையால் துடிப்பதை எங்களால் பார்க்க இயலவில்லை, ஏனைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு யாரேனும் உதடுகளால் முத்தம் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விமான பயணத்தினிடையே மாயமான அர்ஜெண்டினா நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் கடைசி குறுந்தகவல் வெளியாகியுள்ளது. விமானம் மாயமாவதற்கு முன்னர் நான்றஸ் அணியின் சக வீரர்களுக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்பியதே அந்த தகவல்.
விமானத்தின் கட்டுப்பாடு இழந்துள்ளதாகவும், அது விபத்தில் சிக்க இருப்பதாகவும் சாலா தமது குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார். அர்ஜெண்டினாவின் முக்கிய நாளேடு ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், தாம் பயணப்படும் அந்த குட்டி விமானம் தொடர்பில் அவருக்கு ஏற்கெனவே சந்தேகம் இருந்தது எனவும் தெரியவந்துள்ளது.
சாலா அனுப்பிய 3 குறுந்தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் தகவலில், தாம் இறக்க இருப்பதாகவும், விமானம் கட்டுப்பாடு இழந்துள்ளது எனவும் சாலா குறிப்பிட்டுள்ளார். தற்போது தாம் கார்டிஃப் நோக்கி பயணமாவதாகவும், இந்த விமானம் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கலாம் என குறிப்பிட்ட சாலா,
நண்பர்களே நாளை பகல் தாம் புதிய அணியில் இணைந்து பயிற்சியை துவங்க இருப்பதாகவும் தமது இரண்டாவது குறுந்தகவலில் தெரிவித்துள்ளார். என்ன செய்வதன்றே தெரியவில்லை. இனிமேல் என்னைப் பற்றிய தகவல் ஏதும் வெளியாக வாய்ப்பில்லை. காப்பாற்ற எவரையேனும் அவர்கள் அனுப்புவார்களா எனவும் தெரியவில்லை.
இனிமேல் அனுப்பினாலும் அதனால் எந்த பயனும் இல்லை என்றே கருதுகிறேன் என தமது மூன்றாவது குறுந்தகவலில் தெரிவித்துள்ளார். நாண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான சாலா தமது புதிய அணியினருடன் இணைவதற்காக தமது சக வீரருடன் குட்டி விமானத்தில் பிரான்ஸில் இருந்து வேல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் சனல் தீவுகளுக்கு மேலே பறந்துகொண்டிருக்கும் போது விமானம் மாயமானதாக கூறப்படுகிறது.
காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என இப்படி யாரோ ஒருவரின் மீது நாம் கொண்டிருக்கும் காதல் தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது.
இப்படி தனது சுயநலமற்ற காதலால் தனது எதிர்கால இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார் வினு. 11 வருட ஆத்மார்த்தமான காதலில் காலனாய் வந்தது அந்த கோரவிபத்து. கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த வினுவுக்கு 25 வயது இருக்கையில், 16 வயதான லினிசாவின் மீது காதல் ஏற்பட்டது.
11 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்துவந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தததையடுத்து, லினிஷாவின் பெற்றோரிடம் பெண் கேட்டு சென்றுள்ளார் வினு. ஆனால், தங்களது மகள் செல்லமாக வளர்ந்தவள், அதுமட்டுமின்றி அன்றாடம் கூலி வேலைபார்க்கும் வினுவுக்கு திருமணம் செய்துவைக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் இவர்கள் இருவரும் காதலில் உறுதியாக இருந்தனர்.
பெற்றோர் எப்படியாவது சம்மதிக்க வேண்டும் என்பதற்காக, வினு மீண்டும் பெண் கேட்டு சென்றுள்ளார். இவர்களின் காதலின் ஆழத்தை அறிந்துகொண்ட பெற்றோர் திருணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2016 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்று ஆகஸ்ட் 28 ஆம் திகதி திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
ஆனால், துரதிஷ்டவசமாக மே 30 திகதி லினிசா மற்றும் அவரது குடும்பத்தினர் சாலை விபத்தில் சிக்கினர். இதில், லினிசாவின் பெற்றோர் படுத்த படுக்கையாகினர். லினிசா கோமா நிலைக்கு சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் லினிசாவிடம், தான எப்போதும் பேசுவது போல தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் வினு.
லினாவிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காது என தெரிந்தும், தனது காதலியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். காலை 7 மணிக்கு தனது காதலியை வந்துபார்த்துவிட்து மாலை 6.30 மணிக்கு மீண்டும் வருகிறார். மீதியுள்ள நேரத்தினை தனது காதலியுடன் செலவிடுகிறார். இவரது வருமானத்தின் மூலம் தான் லினிசா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிகிச்சைக்கான பணம் செலவழிக்கப்படுகிறது.
சிறிய வருமானத்தால் சிரமப்பட்ட இவருக்கு, நண்பர்கள் சேர்ந்து ரூ.1 லட்சம் நிதியுதவி பெற்றுக்கொடுத்துள்ளனர். லினிசா கோமாவில் இருப்பதால் வேறு ஒரு வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளுமாறு எனது நண்பர்கள் கூறினாலும், அவளது இடத்தில் வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்ககூட இயலவில்லை என கூறுகிறார் வினு.
திருப்பூர் மாவட்டத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்ட பிரபு கடந்த 12-ம் திகதி திரையரங்கு ஒன்றில் பேட்ட படம் பார்க்க சென்றுள்ளார்.
அவர் தலையில் காயத்துடன் வீட்டிற்கு திரும்பிய நிலையில் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திரையரங்கில் மணிகண்ட பிரபு அருகில் அமர்ந்திருந்த நபரை கண்டுபிடித்து பொலிசார் விசாரணை நடத்தினர். மணிகண்ட பிரபுவை, படம் பார்த்துக்கொண்டருந்தபோது மணிகண்ட பிரபு சிகரெட் பிடித்தாகவும், இதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவர் கட்டையால் அடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனால், வீடு திரும்பிய மணிகண்ட பிரபு உள்காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டு தம்பதியொன்று தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சொகுசு வீடு ஒன்றில் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம மேற்கொண்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய இந்த போதைப்பொருள் நடவடிக்கையினை முன்னெடுத்துச் சென்றவர்கள் துருக்கியை சேர்ந்த தம்பதியர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த வௌநாட்டு தம்பதி நீண்ட காலமாக இலங்கையில் தங்கயிருந்து பாரிய ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வித சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் இந்த வர்த்தகத்தை நடத்தி செல்வதற்காக துருக்கி நாட்டு தம்பதியினர் அமெரிக்கர்களை தொடர்புப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் களஞ்சிய அறையை நடத்தி செல்வதற்கு கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு வீட்டிற்கு மாத வாடகையாக இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்தி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களாக இந்த தம்பதி தற்பொது கொழும்பை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சூட்சுமமான முறையில் இலங்கையில் பதுங்கியிருந்து பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்
சென்னையில் சொத்துக்காக ஒரு குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (70). இவருடைய மனைவி கலா. இந்த தம்பதியினருக்கு ஜெனிபர் என்கிற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சொத்து விவகாரம் தொடர்பாக கலாவின் தம்பி கோபால், யேசுராஜனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். அதற்கு யேசுராஜன் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கோபால் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே யேசுராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்னர், கோபாலை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பமே சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கலா, அவருடைய தங்கை டெய்சி, ஏசுராஜனின் மகள் ஜெனிபர் அவரது கணவர் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரின் மகன் விசாகனுக்கும் அடுத்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. விசாகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள விசாகன், படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.
இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் எளிமையாக நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.
விசாகனும் விவாகரத்து பெற்றவர். கனிகா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனை கனிகா திருமணம் செய்து கொண்டார்.
நடிகை த்ரிஷா மணம்முடிக்க நிச்சயம் செய்யப்பட்டு இருந்தவர்தான் வருண் மணியன். அவர்களது திருமணம் நடைபெறவில்லை. இதையடுத்து கனிகாவை வருண் மணியன் திருமணம் செய்து கொண்டார்.
முல்லைத்தீவு – பாண்டியன்குளம் பகுதியில் கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு எரித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, பாண்டியன்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு பின்னால் தனது மோட்டார் சைக்கிள் ஒன்றை அதன் உரிமையாளர் நேற்றிரவு நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் குறித்த சைக்கிளை தீயிட்டுக் எரித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிவது தொடர்பில் அவதானித்த அதன் உரிமையாளர் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றபோது அந்த இடத்திலிருந்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். அதன் பின் குறித்த நபரை பின்தொடர்ந்து துரத்தி சென்ற போது அருகிலுள்ள வீட்டுடன் கூடிய மற்றுமொரு வர்த்தக நிலைய வளாகத்துக்குள் நுழைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மல்லாவி பொலிஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை சென்று தனது முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இன்று பிற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபரை நபரை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் செயற்கை மழைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரட்சி நிலை ஏற்படுகையில் நீர்மின்வலு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் செயற்கை மழைத் திட்டம் அமுலாகிறது. இதனை மின்வலு மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்துகிறது.
தாய்லாந்து அரசாங்கம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மழை பெய்யச் செய்யும் திட்டங்களை அமுலாக்குகிறது.
இந்த விடயத்தில் தாய்லாந்தின் தொழில்நுட்ப அறிவைப் பெறுவது புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும். இதில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
இலங்கை மின்சார சபையின் செயலாளர் கலாநிதி வி.என்.எஸ்.பட்டகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோர் கைச்சாத்திட்டார்கள். இதன் போது அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் உடனிருந்தார்கள்.
புத்த மத வரலாற்று சின்னங்களை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்து, அவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஏழு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரலாற்று தொன்மை மிக்க, அனுராதபுரத்தில் அமைந்துள்ள கிரலாகல தூபி மீது ஏறி நின்று இளைஞர்கள் சிலர் புகைப்படம் எடுத்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த சிலர் இந்த புகைப்படங்களில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர்களின் செயற்பாடு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த ஏழு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.