அண்ணனை காப்பாற்ற சென்று தம்பியும் உயிரிழந்த பரிதாபம் : திருமணமான சில மாதங்களில் நடந்த துயரம்!!

 

உயிரிழந்த பரிதாபம்

தமிழகத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது, சகோதரர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் சிங்காநல்லூர் பகுதியை அடுத்து திருநகரில் இருக்கும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்காக, திருநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கோயமுத்தூர் உப்பிலிப்பாளையம் சி.எம்.சி காலனியிலிருந்து மூன்று நபர்களை வரவழைத்துள்ளனர்.

அவர்கள் கழுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்வதற்காக சாலையில் உள்ள சாக்கடையை திறந்துள்ளனர். அப்போது மூன்று பேரில் வந்த முருகன் என்பவர், சாக்கடைக்குள் இறங்கி, அடைப்பை சரி செய்ய முற்பட்டுள்ளார்.

ஆனால் சாக்கடையின் உள்ளிருந்து வெளியே வந்த விஷவாயு, அவரை தாக்கியதால், அவர் அந்த இடத்திலே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அவருடன் வந்த சித்தப்பா மகனும், அவருடன் வேலைக்கு வந்தவருமான பாண்டிதுரைவ் விஷவாயு வெளியில் வருவது தெரியாமல் தலையை விட்டு காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் விஷவாயு அவரையும் தாக்கியதால், இரண்டு பேரும் சாக்கடைக்குள் மயங்கிவிழுந்து, பரிதாபமாக அந்த இடத்திலே உயிரைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் விரைந்து வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த முருகன் மற்றும் பாண்டிதுரை உறவினர்கள் இருவருமே சகோதர்கள், இப்போது தான் பாண்டிதுரைக்கு திருமணமானது. அவள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்ன சொல்வது என்று கதறி அழுதுள்ளனர்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்!!

 

பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமைப் பெண்ணுக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுரேஷ் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி ஹேமாவுக்கு பேச்சுவரவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தார்.

மேலும் 2 ஆண்டுகளாக அவர் ஊமையாகவே இருந்துள்ளார். இந்நிலையில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஹேமாவுக்கு மீண்டும் பேச்சு வந்துள்ளது. பாம்பைபார்த்த அதிர்ச்சியில் அவருக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான சொகுசுப் படகு : வெளிவரும் புதிய தகவல்!!

 

சொகுசுப் படகு

பல ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான இரும்பினாலான படகு ஒன்று சேதமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலம் கேரளாவின் முனம்பம் பகுதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்திலேயே இந்த மினி கப்பல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கேரளாவின் முனம்பம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்காக கப்பல் தயாரிப்பதாக தமிழகத்தின் கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிட்டியுள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே குறித்த கப்பலானது முனம்பம் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் திருச்சியில் இருந்து கியூ பிரிவு பொலிசார் முனம்பம் பகுதிக்கு சென்று குறித்த கப்பலை மீட்ட நிலையிலேயே அந்த கப்பலானது விடுதலைப்புலிகளுக்காக தயாராவது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக முனம்பம் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டு துருப்பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி குறித்த கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பல முறை கியூ பிரிவு பொலிசாரை அணுகியும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் கேரள மீன்வளத்துறை அமைச்சகத்தை நாட அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முனம்பத்தில் இருந்து சமீபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட பலர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றதாக வெளியான தகவலை அடுத்தே விடுதலைப்புலிகளின் கப்பல் தொடர்பில் தகவல் வெளியானது.

குறித்த கப்பலானது 65 அடி உயரமும் 72 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. கப்பலை தயாரிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் முன்பணமாக தரப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அந்த கப்பலை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

மனைவி அழகாக இருந்ததால் கல்லைப்போட்டு கொலைசெய்த கணவன் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

 

அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காததால் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகரில் வசித்து வந்தவர் துக்காராம்(42). இவரது மனைவி தாராபாய்(33). இவர்களுக்கு சஞ்சய்ராம், அனுமந்ராம், ஸ்ரீராம் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

மனைவி அழகாக இருப்பது பிடிக்காத துக்காராம் அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை எழுந்த மகன் சஞ்சய்ராம் தனது தந்தை தூக்கில் தூங்கி இறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனை அம்மாவிடம் கூற சென்றபோது அவரும் தலை நசுங்கியபடி இறந்துகிடந்துள்ளார். இதனால் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தினர், கணவன்-மனைவி இருவரும் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் துக்காராம், தாராபாயின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தாராபாய் அழகாக இருப்பதால் அவர் மீது அடிக்கடி சந்தேகப்பட்டு துக்காராம் தகராறு செய்துள்ளார். நீண்ட காலமாகவே இந்த பிரச்சனை நீடித்துள்ளது.

இவ்வாறு சண்டையிடும்போது, என்றாவது ஒருநாள் உன்னை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று துக்காராம் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

அதன்படியே, நள்ளிரவில் கிரைண்டர் கல்லை எடுத்து தாராபாய் தலையில் போட்டு துக்காராம் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் அதிசயம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!!

தாமரைக் கோபுரத்தின் வணிகச் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரமான இந்த தாமரைக் கோபுரம், 350 மீற்றர் உயரத்தைக் கொண்டுள்ளதுடன், 30 ஆயிரத்து 600 சதுர மீற்றர் பரப்பளவையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையிலுள்ள மிக உயரமான கோபுரமாகும்.

இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதுடன், இதில் 80 வீதமான தொகையை சீன எக்சிம் வங்கி வழங்கியுள்ளது.

தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இந்த கோபுரத்தின் நிர்மாணம் முன்னெடுக்கப்படுவதுடன், தாமரைக் கோபுரத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உணவகம், தொலைத்தொடர்பாடல் காட்சியகம், சிற்றுண்டிச் சாலை, பல்பொருள் வர்த்தக தொகுதி, கருத்தரங்கு மண்டபம், கேட்போர் கூடம், அதிசொகுசு ஹோட்டல் அறைகள், விழா மண்டபம் மற்றும் கண்காணிப்பு கூடங்கள் என்பனவும் இந்த தாமரைக் கோபுரத்தில் அமையப் பெற்றுள்ளன.

தாமரைக் கோபுரத்திற்குள் பிரவேசிப்பதற்கான நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுள் முக்கிய பிரமுகர்கள் பிரவேசிப்பதற்காக இரண்டு நுரைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவியை ஆபாசமாக காணொளி எடுத்த நபரை மடக்கிப் பிடித்த மக்கள்!!

கம்பஹாவில் பாடசாலை மாணவியை தவறான முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பூகொட பகுதியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியையே இவ்வாறு வீடியோ எடுத்துள்ளார். எனினும் பேருந்தில் பயணித்த பயணிகளின் ஆதரவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி பாடசாலைக்கு செல்வதற்காக ஹங்வெல்லவில் இருந்து கிரிதிவெல வரை பயணித்த தனியார் பேருந்தில் சென்றுள்ளார். அந்த மாணவியுடன் அவரது தந்தையும் பயணித்துள்ளார். அந்த பேருந்து பாடசாலையை நெருங்கிய போது பின் கதவருகிற்கு மாணவி சென்றுள்ளார்

இந்த சந்தர்ப்பத்தில் கதவிற்கு அருகில் அமர்ந்திருந்த நபர் மாணவியின் ஆடைக்கு கீழ் கையடக்க தொலைபேசியை வைத்து காணொளி எடுத்துள்ளார். இதனை அவதானித்த நபர் ஒருவர் மாணவியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேருந்தில் பயணித்த அனைவரும் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர். அவரது கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது பேருந்தில் பயணித்த பலரை தவறாக எடுத்த காணொளிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் செய்பவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

முல்லைத்தீவில் நடந்த கோர சம்பவம் : இராணுவத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்த பின்னணி என்ன?

 

முல்லைத்தீவில் நடந்த கோரச் சம்பவம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு வழங்க சென்ற இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு கொமாண்டோக்கள் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு – புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில் நேற்று முன்தினம் இந்த கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக விசேட அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். பதுகாப்பு பிரிவினர் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீதியின் குறுக்காக மாடு ஒன்று ஓடியதாகவும், அதனை காப்பாற்ற முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் மரத்தின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் இராணுவத்தினரின் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், இராணுவத்தினர் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் பயணிகளை திணறடித்த அதிர்ச்சி சம்பவம்!!

 

அதிர்ச்சி சம்பவம்

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் 2 பெட்டிகள் திடீரென பிரிந்து சென்றுள்ளது. தலாவ மற்றும் ஷாவஸ்திபுர பகுதிக்கு இடையில் இந்த ரயில் பெட்டி பிரிந்துள்ளது.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் வவுனியாவில் பயணத்தை ஆரம்பித்த ரயில் ஒன்றே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ச்சியடைந்த போதும் காயம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இரண்டு பெட்டிகளை பொருத்திய பின்னர் கொழும்பு நோக்கி மீண்டும் ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

வவுனியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

 

ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டங்கள் இன்று (23.01.2019) மலையகம், வடக்கு, கிழக்கு என நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.30 மணியளவில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

பல ஆண்டுகளாக சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னனெடுத்திருந்தபோதும் அதில் சொற்ப உயர்வுதான் கிடைத்தது. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என தெரிவிக்கும் கம்பனி நிர்வாகம் நிர்வாகிகளிற்கு இலட்சகணக்கில் சம்பளங்களை வழங்குகின்றன.

நாளாந்தம் அதிகரித்துவரும் வாழ்கைசெலவு பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கருத்தில் கொள்ளும் போது தொழிலாளர்களிள் கோரிக்கை நியாயமானது . அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவே இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் வழங்கு , ஏமாற்றாதே ஏமாற்றாதே தொழிலாளர்களை ஏமாற்றாதே, தொழிலாளர்கள் கேட்பது ஆயிரம் ரூபாய் முதலாளிகள் முன்வைப்பது பிச்சைக்காசு, தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே என பல்வேறு கோசங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு!!

 

பௌத்த இளைஞர் சங்கம்

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்தரிகை விடுதி இன்று முதல் புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகைகள் விடுதி என்ற பெயரில் செயற்பட்டு வந்துள்ள குறித்த நிலையம் இன்று முதல் அவசர அவசரமாக புனரமைப்புச் செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வைத்தியசாலை சுற்றுவட்டம், இலுப்பையடி போன்ற பகுதிகளில் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலம்!!

 

கவனயீர்ப்பு ஊர்வலம்

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி இன்று(23.01) கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் அதிபர் ரம்சீன் தலைமையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளை தொடர்ந்து முஸ்லீம் மகாவித்தியாலய முன்றலில் இருந்து குருமன்காடு சந்திவரை சென்ற ஊர்வலம் மீண்டும் அங்கிருந்து பாடசாலையை வந்தடைந்தது.

இதன்போது போதை நாட்டுக்கு கேடு அதை ஒழிக்க ஒன்றிணைவோம், எதிர்கால சந்ததியை வளர்க்க போதையை தடை செய், போதை அது சாவின் பாதை போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியும் ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, எம்.லரீப், கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்!!

புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பம் கோரல்

உயர் கல்வி, நீர்வழங்கல், நகர திட்டமிடல் அமைச்சு இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கு மாணவர்களை அனுமதித்தல்- கல்வி ஆண்டு 2019. (விண்ணப்ப முடிவுத் திகதி : 2019.02.15)

2018 ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் க. பொ. த. (உ. த.) பரீட்சையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளோரிடமிருந்து இலங்கை தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தால் (SLIATE) நடாத்தப்படுகின்ற உயர் தேசிய டிப்ளோமாவிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை : மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு முறையாக ஆங்கிலத்தில் பூர்த்திசெய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள், கணக்கு இல. 025-2-001-1-3397613 மக்கள் வங்கி, ஹைட் பார்க் கிளை (கொழும்பு) அல்லது வேறேதேனும் மக்கள் வங்கிக் கிளையில் ரூபா 500 (ஐந்நூறு)ஐ பற்று வைத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பற்றுச்சீட்டுடன் பதிவுத்தபாலில்,

‘கல்வி இணைப்பாளர், உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம், A9 வீதி, வேப்பங்குளம், ஓமந்தை, வவுனியா’ எனும் முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படுதல் வேண்டும்.

‘விண்ணப்பிக்கும் பாடநெறியை கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் குறிப்பிடுதல் வேண்டும். ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவகங்களுக்கு அல்லது பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் ரூபா 500 பெறுமதியான தனித்தனி பற்றுச்சீட்டை இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட கணக்கு இலக்கத்தை தவிர்ந்த வேறு கணக்கு இலக்கங்களுக்கு பற்று வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.  விண்ணப்ப முடிவுத் திகதியான 2019.02.15 ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரிகள் கீழே குறிப்பிட்டுள்ள பாடநெறிப் பட்டியலிலிருந்து தமது தகைமைக்கேற்றவாறு பாடநெறிகளைத் தெரிவுசெய்தல் வேண்டும்.

விரிவுரைகளின் வகை : முழுநேர பாடநெறிகள் (Full Time) : வாரநாட்கள்
பகுதி நேர பாடநெறிகள் (Part Time) : வார இறுதி நாட்கள்
மொழிமூலம் : ஆங்கிலம்
உரிய துறைகளில் கடமையாற்றுவோருக்கே பகுதி நேர பாடநெறிகள்

பாடநெறிக் கட்டணங்கள் : முழு நேர பாடநெறிகளுக்கு எவ்வித பாடநெறிக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. பகுதிநேர பாடநெறிகளுக்கான தவணைக் கட்டணங்கள் (Semester) பின்வருமாறு :
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) ரூபா 5,000, ஆங்கிலம் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ரூபா 8,000.

விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்க

பாடநெறிகள் :
1. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா – ‘HNDA’ (முழுநேரம்) – 4 வருடங்கள்
2. கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா – ‘HNDA’ (பகுதிநேரம்) – 4 வருடங்கள்
3. தகவல் தொழில்நுட்பவியல் உயர் தேசிய டிப்ளோமா- ‘HNDIT’ (முழு நேரம்) 2½ வருடங்கள்
4. ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா ”HND ENGLISH’ (முழு நேரம்) – 2 1/2 வருடங்கள்
5. ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா ”HND ENGLISH” (பகுதி நேரம்) – 2 ½ வருடங்கள்

மேலதிக தகவல்களுக்கு :
தொலைபேசி இல : 024 – 2052733
இணையதளம் : vavuniyaati.com

முகவரி : கல்வி இணைப்பாளர்,
உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்,
A9 வீதி, வேப்பங்குளம்,
ஓமந்தை, வவுனியா

வவுனியா நெளுக்குளம் காத்தான் கோட்டம் அம்மன் ஆலயத்தில் ஊழல்? அரச அதிகாரிகள் அசமந்தம்!!

 

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான் கோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2012ம் ஆண்டு தொடக்கம் இதுவரை கணக்கறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடவில்லை இதன் பின்புலத்தில் எதேனும் ஊழல் இடம்பெற்றுள்ளதா? என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அசமந்தப்போக்காக செயற்படுவதாகவும் அக்கிராமத்தினை சேர்ந்த மக்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்.

காத்தான் கோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் 2012ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை செயற்பட்டு வருகின்றது. அன்று தொடக்கம் கணக்கறிக்கைகள் வெளிவராத நிலையில் தற்போது பதவியில் உள்ள கிராம சேவையாளருக்கும் இதற்கு முன்பு இக் கிராமத்தில் கடமையாற்றிய கிராம சேவையாளர்களுக்கும் கலாச்சார உத்தியோகத்தருக்கும் கணக்கறிக்கையினை வெளியிடுமாறு பொதுமக்கள் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் ஆலய நிர்வாகத்தினர் இதுவரை வெளியிடவில்லை.

பல தடவைகள் ஆலய பொதுக்குழுக் கூட்டம் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள் முன்னினையில் கூடிய போதிலும் காலஅவகாசம் தேவை என பல தடவைகள் கூறி ஆலய நிர்வாகசபையினர் பொதுமக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி வருவதாகவும் கிராம மக்களின் கையெழுத்துடன் அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அக்கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ் ஆலயத்தின் பொதுக்கூட்டம் இன்றையதினம் (22.01.2019) இடம்பெற்றது. இதன்போது இக் கூட்டத்தில் நெளுக்குளம் கிராம சேவையாளர், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நான்கு வருடங்களாக கணக்கறிக்கை வெளியிடவில்லை இன்றிலிருந்து பழைய கணக்கறிக்கையினை விடுத்து புதிதாக மேற்கொள்ளுமாறு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் தற்போது உள்ள நிர்வாகத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் கடந்த நான்கு வருடங்களாக கணக்கறிக்கையில் ஊழல் எதேனும் இடம்பெற்றுள்ளதா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் ஆலயத்தில் மின்இணைப்பு வேலைகளை செய்த நபரின் பெயரில் போலி கையெழுத்திட்டு செலவு செய்த உறுதிச்சீட்டில் மோசடி மேற்கொண்டுள்ளதாக ஆலயத்திற்கு மின் இணைப்பு மேற்கொண்ட நபரினால் எழுத்து மூலம் ஆலய நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பாக ஓய்வுபெற்ற கலாச்சார உத்தியோகத்தர் ஒருவரிடம் வினவிய போது, ஆலயத்தினை பதிவு செய்ததன் பின்னர் ஆலய கணக்கறிக்கை வருடா வருடம் வெளியிடப்பட வேண்டும். ஆலய கட்டிட வேலைகள் இடம்பெறும் பட்சத்தில் இரு வருடங்களுக்குள் சமர்ப்பிக்கலாம்.

பிரதேச கலாச்சார உத்தியோகத்தரினால் அரச கணக்காய்வுக்கு உட்படுத்த முடியும் அல்லது இவ்வாறு நான்கு வருடங்களாக கணக்கறிக்கை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளத்தில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா கோவில்குளத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 10 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (20.01) பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கோவில்குளம் கிராமத்தில் பாடசாலை உபகரணங்கள் இன்றி பாடசாலை செல்லாது இருந்த மாணவர்கள் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ‘அம்பாள் மோட்டர்ஸ் உரிமையாளரும்’ சமூக சேவகருமான எஸ்.சதீஸ் குறித்த பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

 

கிளிநொச்சியில் ஆசிரியைகளைக் கடத்த முற்பட்ட காடையர்கள் : மடக்கிப் பிடிப்பு!!

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் ஏ-32 வீதியால் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரைக் கடத்த முற்பட்ட காடையர்களை இராணுவமும் மக்களும் மடக்கிப் பிடித்துள்ளனர்.

நேற்று கிளிநொச்சியிலிருந்து ஜெயபுரம் பாடசாலைக்கு ஏ-32 வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரை பூநகரி ஜெயபுரம் மண்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து வழிமறித்த நால்வர் கொண்ட காடையர் குழுவினர் அவர்களை அச்சுறுத்தி காட்டுப் பகுதிக்குள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அவ்வேளை ஆசிரியைகள் இருவரும் அலறியுள்ளனர். அவர்கள் காட்டுப் பகுதியில் கத்தும் சத்தம் கேட்டகவே, வீதியால் சென்ற மக்களும் காட்டுப் பகுதிக்குள் முகாமமைத்திருந்த இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

அதனை அவதானித்த காடையர்கள் ஆசிரியைகளைக் கடத்தும் முயற்சியைக் கைவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓட முற்பட்ட வேளை இராணுவத்தினரும் மக்களும் இணைந்து காடையர்கள் இருவரைப் பிடித்து ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, கடத்தல்காரர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிடிபட்ட இருவரும் விசுவமடு மற்றும் முள்ளியவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் இருவர் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளை கடத்தப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பிடிபட்ட கடத்தல் காரக் காடையர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட்டு இனிமேல் காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாது இருக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வவுனியாவில் மலையக மக்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!!

தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கபடவேண்டும் என்ற நாடளாவிய போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு அப்போராட்டத்தில் அனைவரையும் பங்குகொண்டு போராட்டத்ததை வலுப்படுத்துமாறு கேட்டுகொள்கின்றோம் என சமூகநீதிக்கான வெகுஐன அமைப்பின் செயலர் சு.டொன்பொஸ்கோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

பல ஆண்டுகளாக சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தோட்டத் தொழிளாளர்கள் போராட்டங்களை முன்னனெடுத்திருந்தபோதும் அதில் சொற்ப உயர்வுதான் கிடைத்தது.

கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் கையாலாகாதனமும் தொழிற்சங்க பாராளுமன்ற அரசியல்வாதிகளின் சோரம்போகும் நிலையும் அவர்களின் சம்பள உயர்விற்கு குந்தகம் விளைவித்துள்ளன.

தொழிற்சங்க செயற்பாடுகளிற்கு அப்பால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து 1000 ரூபாய் சம்பள உயர்விற்காக பலவகையான போராட்டங்களையும் நடாத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக மலையகத்திலும், கொழும்பிலும் பல்வேறு பொதுஅமைப்புகளும் முற்போக்கு அரசியற்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எனினும் தோட்டக் கம்பனிகள் 650 ரூபாக்கு மேல் வழங்கமுடியாது என தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் நலனுக்காக குரல்கொடுக்கவேண்டிய பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர், கம்பனி முதலாளிகளின் சார்பாக நின்று முதலாளிகள் கூறும் சம்மபளம் நியாயமானது என தெரிவித்துள்ளார்.

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என தெரிவிக்கும் கம்பனி நிர்வாகம் நிர்வாகிகளிற்கு இலட்சகணக்கில் சம்பளங்களை வழங்குகின்றன.

நாளாந்தம் அதிகரித்துவரும் வாழ்கைசெலவு பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கருத்தில் கொள்ளும் போது தொழிலாளர்களிள் கோரிக்கை நியாயமானது.

இக்கோரிக்கைக்கு ஆதரவாக எமது அமைப்பு கைகோர்கிறது. எனவே நாளையதினம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெறும் ஆர்பாட்டத்திற்குஅனைவரும் ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.