வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி : பலர் காயம்!!

 

திரையரங்கில் அடிதடி

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வசந்தி சினிமா திரையரங்கில் நேற்று (10.11) இரவு இடம்பெற்ற அடிதடியில் பலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தென்னிந்திய திரைப்படநடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள “விஸ்வாசம்” திரைப்படத்தை காண்பதற்காக நேற்று இரவு 9 மணியளவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

திரைப்படத்தை காண்பதற்கான நுளைவுச்சீட்டை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற இளைஞர்களிற்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது வாக்குவாதமாக உருவெடுத்து அடிதடியாக மாறியது.

குறித்த சம்பவத்தில் சினிமா பாணியில் மது போத்தல்கள், தலைக்கவசங்களால் குழுக்களாக பிரிந்து இளைஞர்கள் அடிதடியில் இறங்கினர். இதனால் கண்டி வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.

சம்பவத்தில் பலர் காயமடைந்தபோதும் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிசாருக்கு தெரியபடுத்தியபோதும் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் 30நிமிடங்களுக்கு பின்னரே பொலிசார் குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு!!

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு நேற்று கூடியது.

இந்த கூட்டத்தின் போது விலைசூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 101 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் 99 ரூபாவிற்கும், 121 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 118 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

96 வயதான தந்தையைக் கொலை செய்த மகன்!!

 

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் பீல்லேபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பக்கம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதான டி.ஜீ.கொரநேரீஸ் எனும் 5 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மகனே அவரைக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சந்தேக நபருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் குடித்துவிட்டு, அவரது மனைவியையும் குழந்தைகளையும் தாக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று தப்பியதாக பொலிஸாரிடம் சந்தேக நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகனான சந்தேக நபரை (48 வயது) சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மரண பரிசோதனை நடைபெற்றதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சியம்பலாந்துவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி!!

 

மாணவன் பலி

அநுராதபுரம் பலாகல- புதுகேஹீன்ன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் மீது கொங்கிரீட் தூண் விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த விளையாட்டு மண்டபத்தின் கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

 

செல்ஃபி

மாத்தறை கிரிந்த கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்.

மாத்தறை, முலட்டியான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனே இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

கதிர்காமம் யாத்திரை சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் கிரிந்த கடற்கரைக்கு சென்றிருந்தனர்.

அவர்களுடன் இருந்த இந்த இளைஞன் கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வந்த அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

கடற்படையின் சுழியோடிகள் அணி, காணாமல் போன இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!!

சமூக வலைத்தள ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பும் கணக்குகளை வைத்திருக்கும் நபர்களை கைது செய்ய தேவையான சட்டங்களை உருவாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நாடாளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளஙக்ளில் பொய்யான தகவல்களை பரப்புவது தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன் அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.

இவற்றுக்கு எதிராக சட்டத்தை இயற்றி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் அஜித் பீ. பெரேரா, இணையத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களை கைது செய்ய முடியும். அதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வவுனியா மதுபானசாலை விவகாரம் : பொது அமைப்புகள் அரச அதிபருடன் சந்திப்பு!!

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், மக்கள் குடிமனைக்கு முன்பாகவும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி பொது அமைப்பக்கள் நேற்று அரசாங்க அதிபரை சந்தித்திருந்தனர்.

மக்கள் குடியிருப்பு மற்றும் அரசின் கருத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக குறித்த மதுபானசாலை அமைந்துள்ளமை தொடர்பாகவும் அதனை அகற்றக்கோரி குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனருக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியாவில் நேற்று முன்தினம் ஒன்று கூடிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த மதுபானசாலையை அகற்றக்கோரி வெகுஜனப் போராட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

இந் நிலையில் நேற்று வவுனியா அரசாங்க அதிபரை சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி எழுத்து மூலமான கோரிக்கையை வழங்கியிருந்ததுடன் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஏதுவான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அரசாங்க அதிபர் ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதாக பொது அமைப்புக்களிடம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் வவுனியா நகரசபை தலைவரிடமும் இது தொடர்பாக முறையிடப்பட்ட போது சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முயற்சியை எடுப்பதாகவும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் நகரசபை தலைவர் தெரிவித்திருந்தார்.

படகு வழியாக வந்தால் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவீர்கள் : அவுஸ்திரேலியா எச்சரிக்கை!!

அவுஸ்திரேலியாவின் எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், படகு வழியாக வர முயிற்சிப்பவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில்,“படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்கும் ஒருவருக்கான ஒரு சாதாரண செய்தி ஒன்று என்னிடம் உண்டு.

எனது அதிகாரத்தின் கீழ், சட்டவிரோத புலம்பெயர்வுக்கு அவுஸ்திரேலியாவின் எல்லைகள் மூடியபடியே இருக்கும். அவுஸ்திரேலியாவுக்கு ஒரு சட்டவிரோத படகுப்பயணத்திற்கு நீங்கள் முயற்சித்தால், நீங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, நீங்கள் புறப்பட்டு வந்த நாட்டுக்கு அல்லது உங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவீர்கள்,” எனக் கூறியுள்ளார்.

கரையோரங்களைப் பாதுகாப்பது மற்றும் கடலில் இறப்புகளைத் தடுப்பது குறித்து அவுஸ்திரேலியா கடுமையாக இருப்பதாகவும் இக்கொள்கை மாற்றமடையாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்ஹி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்த பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது.

கடந்த காலங்களில், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியாவை அடையும் முயற்சிகளை ஈழத்தமிழ் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் மேற்கொண்டு இருக்கின்றனர்.

“வருடத்தின் ஒவ்வொரு நாடுகளும் அவுஸ்திரேலியாவின் கரையோரங்கள் கண்காணிக்கப்படுகிறது. ரோந்து செல்லப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது.

அத்துடன் எங்கள் கரையோரப் பாதுகாப்பு அரண்கள் முன்னரை விடவும் உறுதியாக இருக்கின்றன,” என தற்போதைய எச்சரிக்கையில் மேஜர் ஜெனரல் கிரெயிக் புரினி அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை உறுதிச் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2013 முதல் அவுஸ்திரேலியாவின் தலையீட்டின் மூலம் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 614 பேர் கைதாகியுள்ள்னர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் 8 கிலோ கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் மூன்று நபர்களை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 7 ம் திகதி காலை வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ்நிலைய போதை தடுப்புபிரிவினர் யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பை ஒன்றில் மறைத்து வைக்கபட்டிருந்த 4கிலோ கேரள கஞ்சாவினை கைப்பற்றியதுடன் அதனை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வாழைச்சேனை பகுதியை சேர்ந்த இருவரை கைதுசெய்தனர்.

அதேவேளை அன்றயதினம் இரவு யாழில் இருந்து தியத்தலாவை நோக்கிசென்ற பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்த பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது பை ஒன்றில் மறைத்துவைக்கபட்டிருந்த நிலையில் காணப்பட்ட 4 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.

கைதுசெய்யபட்டவர்கள் நீதிமன்றில் ஆயர்படுத்தபட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் ஒரு இலட்சம் ரூபாய் போலி நாணயத் தாள்கள் மீட்பு!!

 

போலி நாணயத் தாள்கள்

வவுனியா நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது,

நேற்று இரவு நெடுங்கேணி பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரினை சோதனை செய்துள்ளனர். இதன் போது குறித்த நபரிடம் இருந்து 5000 ரூபாய் தாள்கள் 18ம் 1000 ரூபாய் தாள்கள் 10 அடங்கலாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் குறித்த நபரினை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெடுங்கேணி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16 வயது மகளின் மார்பகத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை!!

 

கொடூர கொலை

பீகார் மாநிலத்தில் 16 வயது மகளை அவரது பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் ஆணவக்கொலை என்பது அதிகமாக நடந்து வருகிறது. 16 வயதான அஞ்சனா என்ற பெண்ணை கொலை செய்துள்ளது Gaya நகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 28 ஆம் திகதி காணாமல் போயுள்ளார் அஞ்சனா. ஆனால், அவரது தந்தை ஜனவரி 6 ஆம் திகதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அஞ்சனாவின் உடல் சிதைந்த நிலையில், அவரது வீட்டுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மார்பகம் அறுக்கப்பட்டும், ஆசிட் ஊற்றியும் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் அஞ்சனா. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இதற்கிடையில், 28 ஆம் திகதி தனது தந்தை மற்றும் அவரது உறவினருடன் அஞ்சனா கடைசியில் வெளியில் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

தனது மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்டதாக புகார் அளித்திருந்தாலும், இது ஆணவக்கொலை என தெரியவந்துள்ளதையடுத்து தந்தை மற்றும் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். வட இந்திய மாநிலங்களில் சாதி மீறிய காதல் திருமணங்களால் ஆணவக்கொலைகள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது.

மாணவிகள் மீது சேட்டை விட்ட இளைஞர்களை நையப்புடைத்த பொதுமக்கள்!!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் மாணவிகள் மீது மிக நிண்ட கும்பல் ஒன்று அநாகரிகமான முறையில் செயற்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாணவிகள் மீது அவதூறாக நடக்க முற்படுகையில் இன்று மாலை அக்கும்பலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

மாணவிகள் மீது அவதூறாக செயற்பட்ட 4 பேர் கொண்ட அக்கும்பலை அப்பகுதி பொதுமக்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிசார் 4 பேருக்கும் எச்சரிக்கை வழங்கிவிட்டு அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்கி, இளைஞர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி விட்டு கிராம சேவை உத்தியோகஸ்த்தர் அவர்களை பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளார்.

வவுனியாவில் மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம் : மக்கள் விசனம்!!

மக்கள் விசனம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இலங்கை தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கீழான வைத்திய நிறுவனத்திற்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்காக சுமார் பல மணி நேரமாக காக்க வைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் 8 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பிற்பகல் 2 மணி வரையில் காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரிடம் வினவிய போது, மருத்துவ சான்றிதழ் வழங்கும் வைத்தியர் காலை 10 மணிக்கு பின்னரே சமூகமளிப்பார் என தெரிவித்துள்ளார். இருப்பினும் வழமையாக 11 மணிக்கு பின்னரே வருகைதருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வந்திருந்த நபரொருவர் கருத்து தெரிவிக்கையில், மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பிற்பகல் வரை காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

குறித்த சான்றிதழுக்காக ஒரு நபரிடம் இருந்து ரூபா 800 கட்டணமாக அறவிடப்படுவதுடன் உரிய தொகையினை மாற்றி சரியாக கொண்டு வருமாறு திருப்பி அனுப்புவதாகவும் இவர்களின் அசமந்த போக்கினால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சேவையை பெற்றுக்கொள்ள வரும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள், பெண்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்தின் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்!!

 

தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்

இன்று நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தையை மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாண்டியன் என்பவரிடம் அவரது மகன் அஜித்குமார் விஸ்வாசம் படம் பார்க்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு தந்தை மறுத்துள்ளார், இதனால் கோபம் கொண்ட அஜித்குமார், தூங்கிக்கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்ததில் படுகாயம் அடைந்த பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் காட்டுப்பகுதிக்குள் பெருந்தொகை வெளிநாட்டவர்கள் செய்த வேலை!!

 

வெளிநாட்டவர்கள்

இலங்கையின் பிரபல சுற்றுலாத்தளம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பெருமளவு வெளிநாட்டவர்கள் ஒன்று கூடியுள்ளனர். சுற்றுலாத்தளமான உஸ்ஸன்கொடவில் 3000 வெளிநாட்டவர்களின் பங்கேற்புடன் சுற்றுலா முகாம் நேற்று மாலை ஆரம்பமாகியுள்ளது.

சுமார் 70 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த முகாம் இலங்கையில் நடைபெறும் 7வது சந்தர்ப்பம் இதுவாகும்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கண்கானிப்பின் கீழ் அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளின் ஆதரவுடன் சுற்றாடலுக்கு நெருக்கமான சுற்றுலா வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக பிரதேச மக்களுக்கு பாரிய பொருளாதார நன்மைகள் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உள்ளூர் நடனம், நாடகம், வெளிநாட்டு பொப் இசை குழுக்கள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை போக்குவரத்து துறையில் ஏற்படவுள்ள புரட்சி!!

இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாட்டுக்காக மேலும் 1000 பேருந்துகளை சேர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

காற்றுச்சீரமைத்தல் கொண்ட ஆயிரம் ஹைட்பிரிட் பேருந்துகளும் சாதாரண டீசல் பேருந்துகளும் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பகட்டமாக 500 பேருந்துகளை கொண்டு வருவதற்கு தற்போது விலை மனு கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய 54-56 ஆசங்கள் கொண்ட 400 பேருந்துகளும், 36 ஆசனங்கள் கொண்ட 100 பேருந்துகளும் கொண்டு வரப்படவுள்ளது.

பாணந்துறையில் இருந்து வெயங்கொடை வரை மின்சார ரயில் சேவை ஒன்று ஆரம்பிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடன் உதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது