தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப் பெண் குறித்த மேலதிக விபரங்கள், ஏன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் , இல்லையேல் கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டாரா என்பன தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சிலாபம் – கற்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 6 வயதாகிய முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை எனவும், அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
டெல்லியின் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதில் 8 பேரின் உடற் கூறு ஆய்வு முடிந்துள்ளது.
அதில் யாரும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று பொலிசார் தரப்பில் கூறப்படும் நிலையில், இறந்த நாராயண் தேவியின் மகள் சுஜாதா நாக்பால், என் தாய், சகோதரர்கள், சகோதரி, குழந்தைகள் இறந்ததை ஊடகங்கள் கொச்சைப்படுத்தி தற்கொலை என்று கூறுகிறார்கள்.
நான் என் தாயிடம் தினந்தோறும் போனில் பேசிக் கொண்டு தான் இருப்பேன். இறப்பதற்கு அன்று இரவு கூட போனில் பேசினேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.
எங்கள் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள், அவர்களுக்கு எந்த விதமான சாமியார்கள் மீது எந்த மூடநம்பிக்கை கிடையாது.
இது தற்கொலை அல்ல. ஊடகங்கள் தான் இதைத் தற்கொலை என கூறுகின்றனர். எங்கள் குடும்பத்தினர் யாரும் தற்கொலை செய்திருக்கமாட்டார்கள். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட வீட்டில் மூதாட்டி நாராயண் தேவி (77) தரையில் படுத்தவாறு இறந்துகிடந்தார் . மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தனர்.
இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(57). மற்றொரு மகள் இங்கு இல்லை.
பவனேஷ் மனைவி சவிதா (48), சவிதாவின் மகள் மீனு (23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33) ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
பரத் போசேல், தாதாராவ், ராஜு, அகானு, பரத் மாவ்லே ஆகிய ஐந்து பேரும் துளே மாவட்டத்தின் ரயீன்பேடா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியின் படத்தின் கீழேதான் அடித்துக்கொல்லப்பட்டனர்.
நேற்று இந்த அலுவலகத்தின் அறை ரத்த சகதியாக இருந்தது. இன்று அறை சுத்தப்படுத்தப்பட்டிருந்தாலும், ரத்த கறை இன்னும் உள்ளது. ரயீன்பேடா கிராமம் தற்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கிறது. நேற்று ஐந்து அப்பாவிகளின் அலறலைக் கேட்ட இக்கிராமம், இன்று அமைதியாகக் காட்சியளிக்கிறது.
இறந்தவர்கள் ஐந்து பேரும் தெற்கு மகாராஷ்டிராவில் உள்ள சோலாபூரை சேர்ந்த நாடோடி சமூகத்தினர். பிச்சை எடுத்துப் பிழைப்பதற்காக தங்கள் குடும்பங்களுடன் வடக்கு மகாராஷ்டிராவிற்கு வந்துள்ளனர். துளே மாவட்டத்தின் வெளியே கூடாரம் அமைத்து இவர்கள் வாழ்ந்துவந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களிடம் பேசினோம்.
இறந்துபோன பாரத் போசேலின் மனைவி நர்மதா,” அன்று காலை 9 மணிக்கு எனது கணவரும், மற்ற நான்கு பேரும் பிச்சை எடுக்க சென்றனர். மதியம் அவரது போனுக்கு கால் செய்தபோது, ஸ்விட்ச் ஆப் என வந்தது. அவர்கள் அனைவரும் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பற்றி மாலை 4 மணிக்கு எங்களுக்குத் தகவல் வந்தது” என்கிறார்.
”இது போன்ற சம்பவம் எங்களுக்கு நடந்தது இதுவே முதல் முறை. பிச்சை எடுக்க இங்கு வந்துள்ளோம். இதுவே எங்களது பாரம்பரிய தொழில்.” என்கிறார் இறந்தவரின் உறவினரான ஜகன்நாத்.
இந்த குடும்பங்கள் தற்போது கூடாரங்களை அகற்றிவிட்டு, சொந்த ஊருக்கே செல்ல உள்ளனர்.
இவர்கள் நாத் பந்தி தவாரி கோசவி எனும் நாடோடி பழங்குடியினர். இவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, பிழைப்புப்பாக பிச்சை எடுப்பார்கள்.
”இந்த சம்பவத்தில் 23 பேரை கைது செய்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஐந்து பேரும் கிராமத்திற்கு வந்துள்ளனர். சில கிராம மக்கள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு, கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் பதில் திருப்திகரமாக இல்லாததால், அவர்களை அறைக்கு அழைத்துச் சென்று கிராம மக்கள் அடித்துள்ளனர்” என துளே மாவட்ட எஸ்.பி ராம்குமார் கூறுகிறார்.
போலீஸாரின் நடவடிக்கையால் கிராமமே காலியாக உள்ளது. நம்மிடம் பேசுவதற்கு யாரும் இல்லை.
இந்தியாவின் மற்ற பகுதிகளை போலவே மகாராஷ்டிராவிலும் குழந்தை கடத்தல் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. மகாராஷ்டிராவின் நாசிக்கிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் சாலையில் நடந்து சென்ற போது மாடியிலிருந்து இளைஞர் விழுந்ததில் படுகாயமடைந்த தன்யஸ்ரீ தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மகள் தன்யஸ்ரீ(வயது 4). தனது தாத்தாவுடன் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சாலையில் சென்ற போதே இத்துயர சம்பவம் நடந்தது.
ஸ்ரீராமுலு என்ற தெருவில் நான்காவது மாடியிலிருந்து சிவா என்ற இளைஞர் சிறுமி மீது விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தன்யஸ்ரீ, உயிருக்கு போராடினார்.
உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பலரது பிரார்த்தனையினாலும், தீவிர சிகிச்சையாலும் உடல்நலம் தேறி வந்த தன்யஸ்ரீ தற்போது ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீதரின் நிலையை அறிந்த தமிழக அரசு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தன்யஸ்ரீவின் மருத்துவ செலவுகளை ஏற்றமை குறிப்பிடத்தக்கது
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது, அந்த வீட்டில் பொலிஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியே துருத்தியபடி 11 குழாய்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் துணி துவைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலண்ட் மோடில் இருந்துள்ளது, அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்துள்ளனர்.
அதாவது, முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது, அதை பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது என சாமியார் ஒருவர் சொல்லி இருக்கிறார்.
மேலும் டைரி குறிப்பிலும், நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள், உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது, அப்படி சடங்கும் செய்யும் பட்சத்தில் தவறாக ஏதும் நடந்தால் கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என குறித்த சாமியார் கூறியதாகவும் எழுதப்பட்டுள்ளது.
எனவே சாமியாருடனான செல்போன் உரையாடல் தொடர்பான ரெக்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன, அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் 2 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தின் கள்ளக்குறிச்சி அருகே 60 அடி ஆழமுள்ள தரை கிணறு உள்ளது, இங்கே நேற்று முன்தினம் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று சடலமாக மிதந்துள்ளது.
இதை பார்த்த ஊர்மக்கள் உடனடியாக கீழ்குப்பம் பொலிசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணை நடத்தியதில் அருள்மணி- அஞ்சலை தம்பதியின் குழந்தை என தெரியவந்தது.
அவர்களது வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டியிருந்ததுடன், அருள்மணி காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கூறியதாவது, எனக்கும் அஞ்சலைக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, 2 வயதில் அனுசியா என்ற குழந்தையும் உண்டு.
ஆனால் என் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.
எனவே கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தையுடன் அவளது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கே சென்று சண்டையிட்டேன், குழந்தையை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பிறந்ததாக இருக்காது என ஆத்திரம் வந்தது. இதனால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இதில் உமையாள்புரம் பாடசாலையில் தரம் – 03இல் கல்வி கற்று வரும் 8 வயதுடைய ராஜ்குமார் யதுர்சா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமி இன்று காலை வீட்டிலிருந்து முச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கி மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது முன்னால் வந்த ஹயஸ் வாகனம் சிறுமியை மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுமியை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை சம்பவத்தில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதில் ஒன்று அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியே துருத்தியபடி 11 குழாய்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அந்த குழாய்களில் எதுவும் தண்ணீர் செல்லும்படி இணைக்கப்படவில்லை. புராரி குடும்பம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதிய டைரி குறிப்புகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது 11 குழாய்களின் மர்மம் குறித்து விசாரணை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியை உலுக்கிய இந்த கூட்டு தற்கொலை சம்பவத்தில் 77 வயது நாராயன் தேவி என்பவர் மட்டுமே கழுத்து நெரிபட்டு இறந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
எஞ்சிய 10 பேரும் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட 57 வயது பிரதிபாவின் மகள் 33 வயதான பிரியங்காவுக்கு கடந்த மாதந்தான் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
விசாரணை அதிகாரிகளால் கைப்பற்ற டைரி குறிப்புகள் மற்றும் கடிதங்களில், அவர்கள் திட்டமிட்டு நாள் குறித்து தற்கொலை செய்து கொண்டது நிரூபணமாகியுள்ளது. ஆனால் மர்மமான அந்த குழாய்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் குழம்பிப்போயுள்ளனர்.
11 குழாய்களில் 4 நேராகவும், நான்கு வளைவாகவும், ஒரு குழாய் தனியாகவும் பொருத்தப்பட்டுள்ளது.
இது அவர்களின் ஆவி வெளியே செல்ல அமைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த கூட்டு தற்கொலை சம்பவத்தில் சிக்காத நாராயண் தேவியின் இன்னொரு மகனும் மகளும் குறித்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அந்த வகையில் புகையிரதத்தில் பயணம் செய்பவர்களில் புகையிரத சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புகையிரத சேவைக்காக பெருந்தொகை பணம் செலவிடப்படும் நிலையில் இது தொடர்பில் புகையிரத பயணிகளும் அக்கறை காட்ட வேண்டும்.
எனினும் சிலர் புகையிரத சொத்துக்களை சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு எதிராக பொது சொத்தினை சேதப்படுத்தியமை, தொடர்பிலான சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அத்துடன் இதனை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஸ்கொட்லாந்து பொலிஸாரை விட இலங்கை இளைஞர்கள் சிறப்பானவர்கள் என சுவிஸ் யுவதிகள் இருவர் கூறியுள்ளனர். ஜெனிபர் ஹெமில்டன் மற்றும் லின்ஸி ஹெமில்டன் என்ற இரண்டு யுவதிகளே இவ்வாறு கூறியுள்ளனர்.
குறித்த யுவதிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளனர். அவர்கள் எல்ல பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
சற்று தூரம் பயணித்து கொண்டிருக்கும் போது 5 இளைஞர்கள் இந்த யுவதிகளிடம் பேச முற்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது, அவர்களின் பையை கொள்ளையடித்து கொண்டு அந்த இளைஞர் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர்.
யுவதிகள் பொலிஸாரிடம் சம்பவத்தை கூற முயற்சித்துள்ளனர். எனினும் மொழி பிரச்சினை காரணமாக இதனை அவர்களால் கூற முடியவில்லை. பொலிஸாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
எனினும் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 12 இளைஞர்கள் அந்த பகுதியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளனர். அந்த இளைஞர்கள் ஒரளவிற்கு சம்பவத்தை புரிந்து கொண்டதுடன், யுவதிகளுக்கு உதவி இலங்கையின் பெயரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
பையை கொள்ளையடித்தவர்கள் தப்பி ஓடும் போதும் இந்த யுவதிகள் அவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கமைய உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் திருடர்களை தேட ஆரம்பித்தனர். அங்குள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் உதவியை பெற்று கொண்ட இளைஞர்கள் திருடர்கள் ஒடிய திசையில் கிடைத்த தடயப்பொருட்களை வைத்து ஒன்றரை மணித்தியாளத்திற்கு திருடனை பிடித்துள்ளனர்.
அதற்கமைய திருடர்களினால் திருடப்பட்ட பணப்பை மீளவும் வெளிநாட்டு யுவதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்னமும் நல்லவர்கள் இருக்கின்றார்கள் எனவும், ஸ்கொட்லாந்து பொலிஸாரை விட இலங்கை இளைஞர்கள் சிறப்பானவர்கள் எனவும் வெளிநாட்டு யுவதிகள் கூறியுள்ளனர். இந்த உதவியை ஒரு போதும் மறக்க மாட்டோம் என்று கூறி கண்ணீருடன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியாவில் சில பகுதிகளில் டெங்கு அதிகரித்துக்காணப்படுவதாகவும், நேற்று வரையில் 18 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கும்போது, கடந்த வாரத்தில் கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்டவீதி போன்ற பகுதிகளில் பெருமளவான டெங்கு நுளம்புகள் பெருக்கெடுப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து இதனைத்தடுத்து முறியடிக்கும் நடவடிக்கையில் சுகாதாரப் பரிசோதகர்கள் 8 பேரடங்கிய குழுவினர் பொது அமைப்புக்கள், கிராம மக்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அத்துடன் தற்போது குறித்த பகுதிகளிலிருந்து குட்செட் வீதிக்கு டெங்கு நுளம்புகள் பரவிவருவதாகவும் அப்பகுதியில் டெங்கு நுளம்பை அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பகுதிகளிலுள்ள மாடி வீடுகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கடும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இங்கிருந்து வெளிப்பகுதிகளுக்கு டெங்கு நுளம்பு பெருகும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது மாலை வேளைகளில் பெய்துவரும் மழையினால் மேலும் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாகவும்,
பொதுமக்கள் தமது இருப்பிடங்களில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்தும் சுகாதாரப்பரிசோதகர்ளின் நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த 15 வயதுடைய கோவிந்தராசா விஸ்ணு என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவனை நேற்று மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவர் யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்று வருகின்றார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 077-4985357, 077-3400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும் அமைதிப் பேரணி ஒன்று இடம் இடம்பெறவுள்ளது.
குறித்த பேரணி நாளை காலை 9 மணிக்கு முருங்கன் பேருந்து தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்ட ரீதியில் நாளை முழு கடையடைப்பை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் தினத்தோறும் நள்ளிரவில் நிர்வாணமாக நடமாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெர்ன் மாகாணத்தில் உள்ள Wynau நகராட்சியிலேயே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் தொப்பி ஒன்றை அணிந்து கழுத்தில் ஸ்கார்ஃபுடன் ஷூ மட்டுமே அணிந்து காணப்படுவதாக தொலைவில் இருந்து பார்த்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் ஓராண்டு காலமாக தினசரி இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதே பகுதியில் குடியிருக்கும் பெண்மணி ஒருவரும் குறித்த நிர்வாண மனிதரை நேரிடையாக கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பணி முடிந்து பெரும்பாலும் நள்ளிரவு தாண்டியே குடியிருப்புக்கு திரும்பும் அவர், அடிக்கடி நிர்வாண மனிதரை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுவதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், இரவில் ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் ரோந்தில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த நிர்வாண மனிதரை அடையாளம் காண முடியவில்லை என தகவல் அளித்துள்ளனர்.
இதனிடையே புகார் அளித்த பெண்மணியிடம் பொலிசார் வைத்த கோரிக்கையின்படி, அவர் ஒருமுறை அந்த நிர்வாண மனிதரை தொலைவில் இருந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்களால் அந்த நபர் குறித்த விசாரணையை இனியேனும் பொலிசார் துரிதப்படுத்துவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் அவர்கள் எழுதி வைத்த முழு டயரி குறிப்புகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டிலிருந்து பொலிசார் கைப்பற்றிய டயரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில், சொர்க்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்வது வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் செய்ய வேண்டும்.
தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை இருக்க வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது
தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.
இதுதவிர கடைசி நாளுக்கு முன்பு 7 நாட்கள் பூஜை செய்ய வேண்டும், சடங்குகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இதற்கு இடையில் ஆத்மா வெளியே வந்தால், உடனடியாக சாக வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் கடந்த மாதம் 26ம் திகதி எழுதப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 30ம் திகதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய்,கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும் எனவும் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள் எனவும் எழுதிவைக்கப்பட்டுள்ளது.