திருகோணமலை சேருவில பிரதேசத்தில் இரண்டு பசு மாடுகளை திருடிய இருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைத்தண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.
ஈச்சிலம்பற்று, கருக்காமுனை பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 42 வயதுடைய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சேருவில பிரதேசத்தில் இரண்டு பசு மாடுகளைத் திருடி விற்பனை செய்த வழக்கு மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலே இருவரையும் குற்றவாளிகளாக இணங்கண்டு மூன்று மாதம் கட்டாய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
வவுனியாவில் புதிதாக கடமையேற்று கடமையாற்றி வரும் அரசாங்க அதிபர் சோமரத்னவிதான பத்திரனவுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ள நிலையில் புதிய அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு , கிழக்கின் சில மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்களாக தொடர்ந்தும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் பல தரப்பினராலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா அரசாங்க அதிபராக சோமரத்ன விதான பத்திரன நியமிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்திற்குள் மீண்டும் புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது வவுனியாவின் அரசாங்க அதிபர் ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டியமை தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களா என மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ளவர்களை மோசடியான முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சீட்டிழுப்பு ஒன்றில் பெருந்தொகை பணப் பரிசு வென்றுள்ளதாக கூறி நபர் ஒருவரிடம் 96000 ரூபாய் பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெனராகலை மெதகம பிரதேசத்தில் பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பில் கிடைத்த பரிசை துறைமுகத்தில் விடுவித்து கொள்வதற்கு பணம் அவசியம் என கூறி சந்தேக நபர் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்னஞ்சல் ஊடாக பணப் பரிசு தொடர்பில் பாதிக்கப்பட்ட நபருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, பேஸ்புக் ஊடாகவும் அறிமுகமாகும் நபர்கள் இலங்கையிலுள்ள பல பெண்களை ஏமாற்றி பெருந்தொகை பணம் பறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் அறிவிப்பாளர் நிகழ்வில் வவுனியா இளைஞன் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஜெகநாதன் சோபிதன் மாகாண மட்டத்தில் அறிவிப்பாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் நடாத்திய வருடாந்த தேசிய விருது வழங்கும் போட்டி கடந்த புதன்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் திறமை வாய்ந்த இளைஞர், யுவதிகளை இனங்கண்டுகொள்ளும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில் அறிவிப்பாளர் போட்டியில் போட்டியிட்ட ஜெகநாதன் சோபிதன் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்று மாகாண போட்டிக்கு தகுதி பெற்றார்.
மாகாண மட்ட போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் நேர்த்தியான செய்திவாசிப்பு, மொழி உச்சரிப்பு, குரல் வளம் என்பன மிகவும் அவதானம் செலுத்தப்பட்டது. மாகாண மட்டத்திலும் ஜெகநாதன் சோபிதன் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
மேலும் அவர் கொழும்பு மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் பங்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21.06.2018 அன்று கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வவுனியா யாழ் வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று (03.07) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..
இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான விசாரணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளோம். பகிடி வதை குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் பல்கலைக்கழகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்..
பகிடி வதைகுறித்து வளாகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடுகள் எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
பகிடிவதை குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படும்போது மாணவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை. அதன் காரணமாக பகிடிவதை சட்டங்கள் இருந்தும் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது என குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் பிரயோக விஞ்ஞான பீட அவையின் தீர்மானத்தின் பிரகாரம் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இன்று(03.07) அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், தனது பிரிவில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளார்.
இதன்போது குறித்த பிரதேச செயலக பிரிவிலுள்ள அனைத்து கிராம அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள், முச்சக்கரவண்டி சங்கங்களின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள், சிகையலங்கார சங்கங்களின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், நாம் அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இணைந்து செயல்படுகின்ற போதே குற்றச்செயல்களை குறைத்துக்கொள்ள முடியும்.
இதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதையற்ற இனிய வாழ்வு திட்டத்தை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வலுவாக அமுல்படுத்தி போதையற்ற வாழ்வு வாழ்வதற்கு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிராம அலுவலர்கள் அனைவரும் பிரிவிலுள்ள அனைத்து சட்டரீதியற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தங்களுக்கு வழங்கப்பட்ட சமாதான நீதிவான் என்ற பதவியின் பிரகாரம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, கிராம அலுவலர்களினால் குற்றவாளிகள் தொடர்பான வரிசை அறிக்கையினை கிரமமாக பேணுவதுடன், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கும், தனக்கும் அறிக்கையிடுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் பரந்தன் பகுதியில் கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று காலை 7மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியான குடும்பஸ்தர் நித்திரை மயக்கத்தின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
விபத்தில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆசீர்வாதம்(கிச்சா) என்பவரே கழுத்தில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் எதுவிதமான காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்தியாவில் தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க, தனது உடல் எடையை 8 கிலோ வரை குறைத்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் உப்பாலையா(40). சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் 2 கால்களும் ஊனமுற்ற இவர், தற்போது தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு சசிகிரண்(15) என்ற மகன் உள்ளார். இவர் ’crypto genius sirkus’ எனும் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரது கல்லீரல் செயல்படவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் சசிகிரணை பரிசோதித்த மருத்துவர்கள், மாற்று சிறுநீரகத்தை தானமாக பெற்று பொருத்தினால் தான் உயிர் பிழைப்பார் என தெரிவித்துவிட்டனர்.
ஆனால், தானம் பெறுவோரின் பட்டியலில் சசிகிரண் 12வது இடத்தில் இருந்ததால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது மகனுக்காக கல்லீரல் வழங்க உப்பாலையா முன் வந்தார். ஆனால், அவரது கல்லீரலில் 5 சதவிதத்துக்கும் அதிகமான அளவில் கொழுப்பு இருந்தது.
இதனால் அவர் 4 கிலோ எடையையாவது குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின் உப்பாலையா 4 கிலோ எடையை குறைத்தார். எனினும், மேலும் 4 கிலோ எடையை அவர் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.
அதன் பின்னர் தனது உடலை வருத்தி, 45 நாட்களில் 8 கிலோ வரை உப்பாலையா தனது உடல் எடையை குறைத்தார். அதனைத் தொடர்ந்து, உப்பாலையாவின் உடலில் 330 கிராம் எடை கல்லீரல் எடுக்கப்பட்டு, சசிகிரணுக்கு பொருத்தப்பட்டது.
உயிருடன் இருப்பவரிடமிருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு, மற்றொருவருக்கு பொறுத்தப்படுவது மருத்துவ உலகில் இதுதான் முதல் முறையாகும்.
இதுதொடர்பாக உப்பாலையா கூறுகையில் ‘தினமும் 2 கிலோ மீற்றர் தூரம் நடந்தேன். அரிசி சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்தேன். ஜூஸ் வகைகளை நிறைய குடித்தேன்.
முதலில் 4 கிலோ குறைத்தேன். மேலும், உடல் எடையை குறைக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மீண்டும் 4 கிலோ என 8 கிலோ வரை எடையை குறைத்தேன்’ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனாவில் எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஒரு நாய் ஒரே நாளில் ஹீரோவாகியிருக்கிறது.
அரிசோனாவைச் சேர்ந்த Paula Godwin தனது நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது காலருகே ஒரு பாம்பு கிடப்பதைக் கண்டார். அது rattlesnake எனப்படும் ஒரு வகை பாம்பு.
பொதுவாக இவ்வகைப் பாம்புகள் தங்கள் வாலிலுள்ள கிலுகிலுப்பை போன்ற அமைப்பு மூலம் ஒலி எழுப்பி எதிரிகளை எச்சரிக்கும்.
ஆனால் சம்பவம் நடந்த அன்று அந்த பாம்பு ஒலி எதுவும் எழுப்பாததோடு சாலையின் நிறத்திலேயே இருந்ததால் அது படுத்துக் கிடந்ததையே Paula Godwin கவனிக்கவில்லை.
திடீரென எழுந்த அந்த பாம்பு Paula Godwinயைக் கொத்தும்போது அவரது காலை ஒட்டி நின்ற அவரது நாய்களில் ஒன்றான Todd மீது கடிபட்டது. அது இல்லை என்றால் Paula Godwin மீது கடிபட்டிருக்கும்.
Todd குறுக்கே வந்ததால் அதன் மீது பாம்பு கொத்த Paula உயிர் தப்பினார். உடனடியாக Paula தனது நாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அதற்கு பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டது. என்றாலும் அதன் முகம் வீங்கிவிட்டது.
முகம் வீங்கிய Toddஇன் படத்தை Paula பேஸ்புக்கில் பதிவிட ஒரே நாளில் அது ஹீரோவாகிவிட்டது. Todd ஒரு சாதாரண நாய் போல் நடந்து கொள்கிறது, ஆனால் அதுதான் என் ஹீரோ என்கிறார் Paula.
இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் மட்டும் கழுத்து நெரிக்கப்பட்டு தரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
11 பேரின் சடலங்களை கைப்பற்றிய டெல்லி பொலிசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அந்த வீட்டின் பூஜை அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், எந்த நாளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட குறிப்புகள் எழுதியிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்களையும், வாயையும் கட்டிக் கொண்டால் தூக்கிலிட்டுக் கொள்ளும் போது வலி தெரியாது என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
மட்டுமின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அனைவரும் பாத பூஜை செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
அதாவது ஆலமர விழுதுகள் போல் தொங்க வேண்டும் என்பதுதான் அந்த பூஜையின் விதி என கூறப்படுகிறது.
இந்த அமானுஷ்ய கடிதம் சிக்கியதால் விசாரணை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
இதை மாந்த்ரீகர்கள் யாரேனும் சொல்லி இவர்கள் செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கையில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி உயிரிழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த டைரியில் இறைவனை பார்க்க போவதற்கு முன்பு யாரும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருந்ததால் 6 செல்போன்கள் சைலன்ட் மோடில் வைத்து ஒரு கவரில் சுற்றப்பட்டு அலமாரியில் இருந்தன.
சிசிடிவி கமெரா காட்சிகளை ஆராய்ந்தபோது குடும்பத்தினர் அனைவரும் 10.40 மணிக்கு உணவருந்தியுள்ளதும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
சீனாவில் மலைப்பிரதேச சாலை ஒன்றில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தனது உயிரைக் கொடுத்து 37 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள Xichang-ல் இருந்து Ya’an பகுதிக்கு 37 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
மலைப்பாதை என்பதால் அனுபவம் மிக்க ஓட்டுனர்களே பெரும்பாலும் அந்த சாலை வழியாக பேருந்துகளை இயக்கி வந்துள்ளனர். மட்டுமின்றி மலைப்பாதையின் ஒருபக்கம் பள்ளம் என்பதாலும் மிக கவனமாகவே வாகனங்கள் செலுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் ஓட்டுனர் Zhao மற்றும் அவரது துணை ஓட்டுனர் Chen Yong ஆகிய இருவரும் 35 பயணிகளுடன் அந்த மலைப்பாதை வழியாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென்று மிகப்பெரிய பாறை ஒன்று பெயர்ந்து விழுவதை ஓட்டுனர் Zhao கண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பேருந்தை நிறுத்திய அவர் மீது அந்த பாறை விழுந்து மோதியுள்ளது.இதில் சம்பவயிடத்திலேயே ஓட்டுனர் Zhao கொல்லப்பட்டார். ஆனால் எஞ்சிய 37 பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.
அதில் 6 பேருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர் Zhao மட்டும் இல்லை என்றால் பேருந்து பாறையில் சிக்கியிருக்கும் அல்லது பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும் என அதிர்ச்சியில் இருந்து மீளாத பயணிகள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் பயணிகளை மீட்டுள்ளதுடன் கொல்லப்பட்ட ஓட்டுனரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
காணமல் போனதாக கருதப்பட்ட சிறுமி மூன்று மணி நேரத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் Rothesay மாகாணத்தைச் சேர்ந்த Alesha MacPhail என்ற 6 வயது சிறுமி உள்ளூர் நேரப்படி காலை 06. 30 மணிக்கு காணமல் போயுள்ளார்.
எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் பொலிசாரிடம் புகார் அளித்த பின் அந்த சிறுமியின் மூதாட்டி Angela King(46) என் பேத்தியை காணவில்லை, யாரேனும் எங்கு கண்டிருந்தால் எனக்கு உடனடியாக தெரிவியுங்கள் என்று சிறுமியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அப்பகுதி மக்கள் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது சரியாக காலை 9 மணியாளவில் Ardberg சாலையில் அமைந்திருக்கும் வெகுநாட்களாக பயன்படுத்தப்படாத ஹோட்டலான Cames Hydro ஹோட்டலுக்கு வெளியில் சிறுமியின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, சிறுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். காணமல் போன மூன்று மணி நேரத்திற்குள்ளே சிறுமியின் மரண செய்தி அவரின் பாட்டிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதன் பின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சிறுமி மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சிறுமியின் மரணம் மர்மமாக உள்ளது. விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தை எட்டியுள்ளதால் இது குறித்த முழு விசாரணைக்கு பின்னரே உரிய தகவல் தெரிய வரும்.
மேலும் 06.30 மணிக்கு மேல் இந்த சிறுமியை யாரேனும் எங்காவது பார்த்திருந்தால் அதைப் பற்றி தகவல் கொடுக்கவும், ஏனெனில் அங்கு இருக்கும் சிசிடிவி கமெராக்களை வைத்து சில விடயங்களை கண்டுபிடிக்க முடியும், இதை வைத்து பொலிசார் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
இது மிகவும் அரிதான சம்பவம், இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும், ஆதால் பொதுமக்கள் இதைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கணவனின் மர்ம உறுப்பை மனைவி வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் Si Racha மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி Siripan(40)-Karuna Sanusan(24). இவர்கள் இருவரும் அங்கிருக்கு காய்கறிகடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் Karuna Sanusan-வுக்கு தன் கணவன் மீது சமீபகாலமாக சந்தேகம் எழுந்துள்ளது. அவர் பல பெண்களுடன் பழகி வருவதும் தெரியவந்துள்ளது.
இதனால் அவர் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 06.20 மணியளவில் கணவனுடன் பெட்டில் நெருக்கமாக இருக்கும் போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த 12-அடி நீளம் கொண்ட கத்தியால் அவரது மர்ம உறுப்பை வெட்டி, பெட் ரூமின் ஜன்னலுக்கு வெளியில் வீசியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் துடி துடிப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மனைவியை கைது செய்துள்ளனர்.
மருத்துவனையில் அவரது உறுப்பை சேர்த்து வைக்க மருத்துவர்கள் முயற்சி செய்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கைது செய்த அவர் மனைவியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நாங்கள் இருவரும் காய்கறி கடையில் வேலை பார்க்கிறோம்.
இந்நிலையில் என் கணவனின் நடவடிக்கைகள் சமீகாலமாக சரியில்லாத காரணத்தினால் அவரை பின் தொடர்ந்தேன், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து தொடர்ந்து அவரை அவருக்கே தெரியாமல் பின் தொடர்ந்த போது, அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் காரணமாகவே காலை நேரத்தில் இது போன்ற செயலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். இவ்வாறான நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்கள், யுவதிகள் அதிகளவில் தற்கொலை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் கொல்லப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஷன் ரெஜினா, திட்டமிடப்பட்டு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட சிறுமியின் சித்தப்பா உறவு முறையிலான 22 வயதுடைய பிரதான சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனையடுத்தே கொல்லப்பட்ட சிறுமியின் மாமா உறவு முறையிலான 17, 18 வயதுகளை உடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
பின்னர் கைது செய்யப்பட்ட இந்த மாமா உறவு முறையினைக்கொண்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரே சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளமையும், மற்றைய நபர் பிரதான சந்தேக நபரின் நடவடிக்கைகளுக்கு உடன் இருந்து ஒத்தாசை புரிந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதனையடுத்தே அவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் குறித்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கொலை செய்யப்படும்போது சிறுமி ரெஜினா அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் உடையின் பாகங்கள் பல பிரதேசத்தின் காட்டுப் பகுதிக்குள் இருந்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 500 மீற்றர்வரையிலான தூரத்திலுள்ள காட்டுப் பகுதியில் பாயொன்றுக்கு அருகே வைத்து இவை மீட்கப்பட்டதாகவும் அவை சிறுமி கொலை செய்யப்படும்போது அணிந்திருந்த உள் ஆடைகளின் பகுதிகளாக இருக்க வேண்டும் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுவிஸ்லாந்தின் ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில், முதல் முதலாக இலங்கைத் தமிழர் ஒருவர் சோசலிச ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
15 வயதில் சுவிஸ்லாந்தில் தஞ்சமடைந்த ரூபன் சிவகணேசன் என்ற தமிழரே மாநகர சபை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது தெரிவு ZUG நகரத்திற்கான ஓர் பல்லின மக்களின் பிரதிநிதத்துவத்தினை உறுதி செய்கின்றது.
இலங்கையில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு சுவிஸ்லாந்தில் தஞ்சம் அடைந்து 36 வருடங்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிற்கு கிடைத்த ஓர் மாபெரும் அங்கீகாரமாகும்.
ரூபன் சிவகணேசன் 2006ஆம் ஆண்டு கன்ரோன் ZUG இற்கான மாநில அரச உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டாவர்.
வலதுசாரிகளை பெரும்பாண்மையாக கொண்ட ஓர் மாநிலத்தில் முதலாம் தலைமுறையினரை சார்ந்த ஓர் இளைஞன் முதல் முறையாக 2006இல் மாநில உறுப்பினர்களிற்கான தேர்தலில் வெற்றி பெற்றது ஓர் பெரிய சாதனை ஆகும்.
ZUG மாநகர சபையில் அண்ணளவாக 30,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 120க்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழும் ஓர் நகரம். இந் நகரம் சுவிஸ்லாந்தின் மத்தியில் அமைந்துள்ளது.
அது மட்டுமல்லாது ZUG நகரத்தில் வாழும் 40 விகிதமான மக்கள் வெளிநாட்டவர்கள். ஒவ்வொரு 3ஆவது நபர்களின் அடிப்படை பிறப்பிடம் வெளிநாடுகளாகவே இருக்கின்றது.
இம்மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஓர் பொருத்தமான வேட்பாளர் இந்நகரத்திற்கு முன் தேவையாக உள்ளது. ரூபன் சிவகணேசன் அவர்களின் தெரிவானது இத் தேவையை நிவர்த்தி செய்யும் என்பது யதார்த்தமானது.
ரூபன் சிவகணேசன, வெளிநாட்டவர்களின் அரசியல் உரிமைகள், இளைஞர்களின் அரசியல், சூழல் பாதுகாப்பு, தொழிலாளர்களின் உரிமை, போன்ற போராட்டங்களிலும் அனைத்து முன்னெடுப்புகளிலும் தன்னை எப்பொழுதும் முன் நிறுத்தி வந்துள்ளார்.
அது மட்டுமல்லாது சுவிஸ்லாந்தில் அவ்வப் பொழுது மேலெழும் இனவாதத்திற்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி தனது எதிர்பினையும் கண்டணங்களையும் Swissblacks என்ற அமைப்பின் மூலம் பதிவு செய்து வந்துள்ளார்.
பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த அனைத்து இனத்தவர்களிற்கும் பாரபட்சமின்றி தனது சமூக சேவையை 2005இல் இருந்து Asylbrücke என்ற அமைப்பின் ஊடாக வழங்கி வந்துள்ளார்.
15 வயதில் சுவிஸ்லாந்தில் தஞ்சமடைந்த இந்த இளைஞனின் அரசியல் வாழ்வு இன்று இன்னுமொரு படி முன்னேறி மாநகர சபையின் உறுப்பினர் தேர்விற்கு இட்டுச்சென்றுள்ளது. இந்த தேர்வானது இவரது அரசியல் செயற்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கமுடிகின்றது.
சுவிஸ்லாந்தின் தேசிய பாராளுமன்றத்தில் 7 அமைச்சர்கள் உள்ளனர். அதே வகைப்பட்டு மாநிலங்களிலும் மாநகரங்களிலும் 7 அல்லது 5 அமைச்சர்கள் உள்ளனர்.
ZUG மாநகர சபையில் இந்த 5 உறுப்பினர்களிற்கான தேர்தலிலேயே ரூபன் சிவகணேசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.