சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுத்திய ‘கால அதிர்வுகள்’ நூல் வெளியீடு!!

சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் வெளியீடு எதிர்வரும் 29.12.2018 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் கே.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் நூலை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.
நூலின் முதற் பிரதியை வவுனியா கவிதா ஸ்ரோர் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமாகிய அ.தணிகாசலம் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் மதிப்பீட்டுரை வழங்கவுள்ளார். தொடர்ந்து நூலாசிரியர் பொன்னையா மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றவுள்ளார்.

இந்தோனேஷியாவை புரட்டி போட்ட சுனாமி : பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு!!

 

சுனாமி

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளை தாக்கிய சுனாமி பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை, கடந்த 22ஆம் திகதி இரவு வெடித்து சிதறியது. இதனால் கரும்புகையும், நெருப்புக் குழம்பும் வெளியேறியதைத் தொடர்ந்து, சுந்தா ஜலசந்தி பகுதியில் சிறிது நேரத்தில் ராட்சத சுனாமி அலைகள் எழுந்தன.

இந்த சுனாமியினால் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகள் தாக்கப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் முதற்கட்டமாக 43 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணி தொடங்கியது.

அப்போது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், பலர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

இந்நிலையில் இந்த கோர தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 429 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 1500 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல்போனதாக கருதப்படும் 128 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 வயது தங்கையை திருமணம் செய்துகொண்ட 6 வயது அண்ணன் : எவ்வளவு பணம், நகை கொடுத்தார் தெரியுமா?

 

6 வயது தங்கையை திருமணம் செய்துகொண்ட 6 வயது அண்ணன்

தாய்லாந்து நாட்டில் இரட்டையர்களான அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவருக்கும் அவரது குடும்பத்தார் கோலாகலமாக திருமணம் செய்துவைத்துள்ளனர். தாய்லாந்தின் Amornsan Sunthorn Malirat மற்றும் Phacharaporn தம்பதியினருக்கு 2012 ஆம் ஆண்டு Guitar, Kiwi என்ற இரட்டை பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் ஆவார்.

புத்தமதத்தில், இவர்கள் கர்மா என அழைக்கப்படுகிறார்கள். அதாவது, ஆணும், பெண்ணும் ஒட்டிப்பிறந்தால் முந்தைய ஜென்மத்தில் இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். அந்த காரணத்தினாலேயே இவர்கள் இப்போது ஒன்றாக பிறந்துள்ளனர் என புத்த மதத்தினர் நம்புகின்றனர். இதனால், இவர்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.

இவ்வாறு, சிறு வயதில் திருமணம் செய்து வைத்தால், இவர்கள் எதிர்காலத்தில் நல்ல வளத்துடன் வாழ்வார்கள் என நம்புகின்றனர். இதனால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

Guitar தனது தங்கையை திருமணம் செய்துகொள்வதற்காக 200,000 baht தொகை மற்றும் £1,000 மதிப்பிலான தங்க நகைகளை வழங்கியுள்ளார்.

நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டிகள் : படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்!!

திருகோணமலையில் முச்சக்கர வண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை ,அபேயபுர பகுதியைச் சேர்ந்த தென்னக்கோன் வயது(53), அசித்த நாலக்க வயது(22),மற்றும் குகன் வயது(25), ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, அபேயபுர பகுதியிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற முச்சக்கர வண்டியும், திருகோணமலையிலிருந்து நிலாவெளிக்குச் சென்ற முச்சக்கர வண்டியுமே திருகோணமலை சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மது போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. இரு முச்சக்கர வண்டி சாரதிகளையும் தடுத்து வைத்துள்ளதோடு, விபத்து தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழப்போராட்டத்தால் நிர்க்கதிக்குள்ளாகி யாசகம் கேட்டு திரியும் கணவன்-மனைவி!!

 

யாசகம் கேட்டு திரியும் கணவன்-மனைவி

அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பாதின் ஒன்றாக கடந்து போகும் பல்வேறு கதாப் பாத்திரங்கள் உண்டு. அவர்கள் எல்லோருமே எமது வாழ்வில் தாக்கத்தை செலுத்துவதில்லை. எல்லாம் கடந்து போகும் என்பது போல் கடந்து போகின்றோம். அதில் எப்போதும் நாம் பாரமுகமாக கடந்து போகின்றவர்களில் வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களும் உண்டு.

வீதிகளில் யாசகம் கேட்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் என்று எண்ணாதீர்கள். அதில் சிலர் ஒரு காலத்தில் ஓகோ என வாழ்ந்தவர்கள். ஒரு சிலர் நமக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஒரு சிலர் தாம் பெற்ற பிள்ளைகளை ஈழப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள். மௌனிக்கப்பட்ட யுத்தம் அவர்களை நம்மிடம் கையேந்த வைத்து விட்டது. அவர்களில் சிலர் நாம் அருகில் சென்றதும் கை நீட்டி யாசகம் கேட்கின்றனர்.

நம்மில் எத்தனை பேர் அவர்களை திரும்பி பார்க்கின்றோம். உதவ நினைக்கின்றோம். ஒரு சில நபர்களே அவ்வாறு அதிகம். மக்கள் புளக்கம் உள்ள இடங்களில் அமர்ந்தால் ஒரு வேளை உணவுக்காவது உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெயில் என்றும் மழை என்றும் பாராது மன்னார் நகர மத்தியிலும் வீதி நடை பாதைகளிலும் வீதி சுற்று வட்டங்களிளும் காத்திருக்கும் ஏழைகளுக்கு எப்போதுமே ஏமாற்றமே மீதமாகின்றது.

அவசர உலகில் நிற்க கூட நேரம் இல்லாத மக்களை கை நீட்டுபவர்களை நிர்க்கதியாய் நிற்கவிட்டு நகர்கின்றோம். அதே போன்று கடந்து போகும் ஒரு நபருடைய கதை முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தில் நமக்காக ஒரு பிள்ளையையும் செல் குண்டுதாக்குதலில் ஒரு பிள்ளையையும் இழந்து பெற்ற மகளினால் கைவிடப்பட்டு அன்றாட உணவுக்காக கையேந்தி திரியும் நிர்க்கதி நிலையில் தன் மனைவியுடன் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிலைக்கும் ஏதோ ஒரு வகையில் நாமும் ஒரு காரணம். ஆனால் நாமோ கண்டு கொள்வதில்லை. தள்ளாத வயதிலும் தன் மனைவியை கூட தள்ளிவைக்காது தன்னுடனே சுமந்து செல்லும் இவ் பெரியவர் ஆயிரம் நோய்களை சுமந்து கொண்டாலும் மரணம் வரை கணவன் கையை கைவிடாத அந்த தாய்.

எப்போதும் இவர்களை இந் நிலைக்கு ஆழாக்கிய சாபம் பின் தொடரும். இவ்வாறானவர்களுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை. அவர்களை உதாசீனம் செய்யாதீர்கள். ஏளனமாக பார்க்கும் உங்கள் பார்வை எப்போதும் பசியைவிட கொடுமையானது என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

6 வருடத்தில் 1300 பேருக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

 

6 வருடத்தில் 1300 பேருக்கு திருமணம்

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மஹெஷ் சவானி 261 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். வைர வியாபாரியான மஹேஷ், சூரத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நேற்று திருமணம் செய்து வைத்துள்ளார். தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சீதனமாக வழங்கப்பட்டன.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 6 வருடங்களாகத் தந்தையில்லாமலிருக்கும் ஏழைப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மஹேஷ். சூரத்தில் நடந்த நேற்றைய திருமணத்தில் மஹேஷ் ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்து வைத்துள்ளார்.

2008-ம் ஆண்டு மஹேஷ்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்துக்கு முன்பே அவரின் தந்தை உயிரிழந்துள்ளார். தந்தையில்லாமல்தான் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர், தந்தையில்லாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, இதுவரை 1,300 தம்பதிகளுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார்.

சூரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தின்போது, பெண் ஒருவர் தன்னையறியாமல் கண்ணீர் சிந்தினார். இதைப் பார்த்த மஹேஷ் தந்தையாக இருந்து அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்தார். இந்தக் காட்சிகள் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளன.

ஒரு பவுண் நகைக்காக தூக்கில் தொங்க விடப்பட்ட கர்ப்பிணிப் பெண்!!

 

கர்ப்பிணிப் பெண்

தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்துக்காக புதுப்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 28), இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 21), இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருந்த புவனேஸ்வரி கடந்த 22ம் திகதி தூக்கில் தொங்கினார். கணவர்- மனைவி இடையேயான பிரச்சனையின் மன அழுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து புவனேஸ்வரியின், சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்தின் கீழ் பெற்ற ஒரு பவுன் தங்க காசை அவரது பெற்றோர் வீட்டுக்கு வழங்கியதே காரணம் என தெரியவந்தது.

இதுகுறித்து புவனேஸ்வரியிடம், அவரது கணவர், மாமனார், மாமியார் சண்டையிட்டதுடன் காசை வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். சம்பவ தினத்தன்று கோபத்தில் புவனேஸ்வரியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிவிட்டுள்ளனர்.

தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக தற்கொலை நாடகமும் ஆடியுள்ளனர், இதனையடுத்து மூவரையும் கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

பேஸ்புக் காதலுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்!!

 

பெற்ற தாயை கொன்ற மகள்

தமிழகத்தில் பேஸ்புக் காதலுக்காக தனது தாயை மகளே கூலிப்படை ஏவி கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் தேவிப்பிரியா என்ற கல்லூரி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலமாக கும்பகோணத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தேவிப்பிரியாவின் தாய் பானுமதி மகளை கண்டித்துள்ளார். அதன் பின்னர், தனது காதலுக்கு தடையாக இருப்பதாக நினைத்து, காதலன் விவேக்கின் நண்பர்கள் சதீஷ், விக்னேஷ் ஆகியோரின் மூலம் தேவிப்பிரியா தனது தாயை கொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் மூவரையும் பொலிசார் கைது செய்தனர். ஆனால், தேவிப்பிரியாவின் காதலன் விவேக் தலைமறைவானதால் பொலிசார் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் தடா அருகே தனிப்படை பொலிசார் விவேக்கை கைது செய்துள்ளனர்.

வவுனியாவிற்கான ஜனாதிபதியின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளது!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வுகாணும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்தது.

இந் நிலையில் அக் கலந்துரையாடல்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள நான்கு பிரதேச செயலகங்களிலிருந்த காணிப் பிணக்குகள் நீண்டகாலமாக சீர்செய்யப்படவில்லை.

அத்துடன் வன இலகா திணைக்களத்தின் காணிகளில் மக்கள் குடியேற்றியுள்ளதை மீட்பது தொடர்பாகவும் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலைமைகளை சீர்செய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செலயகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் ஒன்றின் அடிப்படையில் இக் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்களின் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிக்கு முன்னிலையில் நடந்த அடிதடி : காயங்கள் இன்றி தப்பிய உறுப்பினர்கள்!!

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் வரை சென்றுள்ளதுடன் தொகுதி அமைப்பாளர்கள் பியதாசவை தாக்க முயற்சித்துள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர், மோதலை சமரசப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் எருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்து விட்டதாக தொகுதி அமைப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதை முழு நாடும் பார்த்ததாகவும் அதனை மறைக்க முடியாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அதனை கௌரவமாக கூறிக்கொண்ட அவர்கள், அது பற்றி தற்போது ஊடகங்கள் கேட்கும் போது பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதுடன் பதிலளிக்க முடியாது தடுமாறுகின்றனர் எனவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் முடிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் என கூறுவது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பின்னர் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது துமிந்த திஸாநாயக்க ஊடகங்களை சந்திக்கவில்லை. அனுராதபுரத்தில் தனது வீட்டில் இருந்து வந்த அவர் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று ஊடகங்களை சந்தித்தார்.

எந்த சந்தர்ப்பத்திலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த பயங்கரம் : 4 பேர் கொடூரமாக சுட்டுக் கொலை!!

 

4 பேர் கொடூரமாக சுட்டுக் கொலை

தென்னிலங்கையின் தங்காலை குடாவெல்ல துறைமுகத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினைக்கமைய இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

முல்லைத்தீவில் பத்து வயதுச் சிறுமி பலியாகிய சோகம் : இறுதி நிகழ்வுச் செலவுக்காக தள்ளாடும் குடும்பம்!!

 

வடமாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் முல்லைதீவு முத்தையன் கட்டுக்குளம் அம்மன் கோவிலடி பகுதியில் கடந்த சனிக்கிழமை நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பத்து வயதுச் சிறுமி ஒருவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார்.

பிள்ளையின் இறுதி நிகழ்வுகளை மேற்கொள்வதற்குக் கூட சிரமத்தினை எதிர்கொள்ளும் ஒரு நிலை இக்குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள கூடிய வழிகள் இருப்பின் உதவி செய்யுமாறு பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இடம் : ஜீவநகர், அம்மன் கோவிலடி, முத்தையன்கட்டுக்குளம்.
உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக்கூடும்.

அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி : அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம்!!

தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றிய அருட்தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் பிரிவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாக மாறியுள்ளது.

இந்த நிலையில் அருட்தந்தையை ஒரு முறை மாத்திரமே சந்தித்த மௌலவி இல்யாஸின் செயல் இலங்கையிலுள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மௌலவி கடந்த 21ஆம் திகதி தன் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு புனித மரியாள் பேராலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அருட் தந்தையின் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படுவதை கண்டு அதில் தாமும் கலந்து கொண்டு பிரேத பெட்டியை சுமந்திருக்கிறார்.

இதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓஸானம் (விசேட தேவையுடைய குழந்தைகளை பராமரிக்கும் இடம்) நிலையத்திற்கு நேரடியாக மௌலவி ஏ.ஜே.எம்.இயாஸ் சென்று அருட் தந்தையின் பிரிவினால் வாடும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அத்துடன், அருட்தந்தையை பாம்பு தீண்டிய இடத்தினையும் பார்வையிட்டிருந்தார். (மின்சார கம்பத்திற்கு அருகில் அருட் தந்தை நின்று கொண்டிருந்த போது அந்த கம்பத்தில் இருந்த பாம்பொன்றே அருட் தந்தையை தீண்டியிருந்தது.)

இன, மத, மொழி பேதங்கள் கடந்து அருட் தந்தையின் இழப்பானது பலரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் அருட்தந்தை பாம்புக்கடிக்கு இலக்காகி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் பெரும் திரளான மக்களின் ஒன்று கூடலுடனும், ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீரோடும் அருட்தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை இந்த சம்பவமானது இன, மத, பேதங்களை கடந்த மனிதம் இந்த உலகில் காணப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயர்வு : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான பாவற்குளத்தின் நீர் கொள்ளளவு திறன் 19.4 அடியாகும். தற்போது பெய்து வரும் மழை காரணமாக 17.6 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

தொடர்ந்தும் மழை பெய்தால் அதன் வான் கதவுகள் திறக்கப்படும். 18 அடியை அண்மித்து வருவதால் பாவற்குளத்தின் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மெனிக்பாம், மீடியாபாம், பாவற்குளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு : கடந்தன 90 நாட்கள்!!

 

போதநாயகியின் 90ஆவது நினைவு நாள்

வவுனியா – கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் ந.போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. குறித்த நினைவு நாள் அனுஷ்டிப்பானது வவுனியா, கற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போதநாயகியின் உருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அத்துடன் கற்குளம் கிராம மக்கள், போதநாயகியின் உறவுகள் உள்ளிட்டோரும் இந்த நினைவு நாள் அனுஷ்டிப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் வசித்து வந்த விரிவுரையாளர் ந.போதநாயகி விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு முச்சக்கரவண்டியில் சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் இருந்து குறித்த பெண் விரிவுரையாளருடைய பை மற்றும் செருப்பு போன்ற பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இதன் பின்னர் குறித்த தினத்திலேயே சங்கமித்த கடற்கரையில் இருந்து மூன்று மாத கர்ப்பிணியான விரிவுரையாளர் ந.போதநாயகியின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றதுடன், போதநாயகி நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தெரிவித்திருந்தார்.

போதநாயகியின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா என்பது தொடர்பில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தனது மகளை, அவரது கணவரான செந்தூரன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தி வந்ததாக போதநாயகியின் தாயார் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் வவுனியாவில் போதநாயகியின் 90ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து சென்ற கார் விபத்து : மூவர் காயம்!!

 

வவுனியாவிலிருந்து, திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த காரொன்று இன்று காலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அருகில் வைத்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் காயமடைந்துள்ளனர்.

ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினால் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குளத்திற்கு இரு பக்கங்களிலும் போடப்பட்டுள்ள நான்கு தூண்களும் சேதமடைந்துள்ளன.