வவுனியாவில் மழை காரணமாக பாதிப்படைந்தோர் 132 குடும்பங்களாக அதிகரிப்பு : அரச அதிபர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் மழை காரணமாக வவுனியா வடக்கு பகுதியே பாதிப்படைந்துள்ளது. அதன்படி வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும், கனகராயன்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், நைனாமடு கிராம அலுவலர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரும்,

மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேரும், மாறாஇலுப்பை கிராம அலுவலர் பிரிவில் ஓரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும், கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரும்,

கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேருமாக 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன், மழை தொடரும் பட்சத்தில் பாதிப்புக்கள், விவசாய அழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வேறொரு நபருடன் திருமணம் : மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

 

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்

ஹரியானாவை சேர்ந்த நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை கொன்று விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் தர்மேந்திர பிரதாப், இவரது மனைவி ராக்கி ஸ்ரீவஸ்தவா, வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக 2ம் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழ ராக்கியை பிரிந்தார் தர்மேந்திர பிரதாப், தனியாக இருந்த ராக்கி மனிஷ் என்பவரை கரம்பிடித்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இருவரும் நேபாளம் சென்ற நிலையில், மனிஷ் மட்டும் நகரத்திற்கு திரும்ப ராக்கி அங்கேயே இருந்துள்ளார்.

வெகு நாட்கள் ஆகியும் ராக்கி திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர். மனிஷ் தான் குற்றவாளியாக இருக்கலாம் என பொலிசார் நினைத்த நிலையில், தர்மேந்திர பிரதாப்பை கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது ராக்கியின் செல்போனை ஆய்வு செய்ததில், அவரது எண்ணுக்கு தர்மேந்திர பிரதாப் தொடர்பு கொண்டது தெரியவந்தது. மேலும் இருநாட்கள் நேபாளத்தில் அவர் இருந்ததும் தெரியவந்ததால், அவரை கைது செய்து விசாரித்ததில் ஒப்புக்கொண்டார்.

அதாவது நண்பர்களுடன் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, குன்றில் இருந்து ராக்கியை தள்ளி கொலை செய்துள்ளார். மேலும் அவரது பேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தி யிருடன் இருப்பதாக நம்பவைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. சொத்து பிரச்சனை காரணமாகவே தர்மேந்திர பிரதாப் இச்செயலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாசா கலண்டரில் இடம்பிடித்த தமிழனின் ஓவியம்!!

 

தமிழனின் ஓவியம்

2019ம் ஆண்டுக்கான நாசா கலண்டரில் தமிழ்நாட்டை சேர்ந்த தேன்முகிலன் என்பவரது ஓவியம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் கலண்டரை வெளியிடுகிறது, இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பு கொடுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.

2019ம் ஆண்டுக்கான காலண்டருக்காக மொத்தம் 194 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக 12 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த தேன்முகிலன் என்பவரும் ஒருவர்.

திண்டுக்கலின் பழனியை சேர்ந்த முகிலன், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பில் இவரது ஓவியம் நவம்பர் மாத பக்கத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதி மாறி திருமணம் செய்த மகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெற்றோர்!!

 

மகளை எரித்துக் கொன்ற பெற்றோர்

தெலுங்கானா மாவட்டத்தில் மகள் சாதி மீறி திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால் அவளை உயிரோடு எரித்துக்கொலை செய்தேன் என தந்தை பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சக்தி அண்ணா என்பவரின் மகளான அனுராதா வேறு சாதி இளைஞரான லட்சுமி ராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தனது மகனை அவரது கணவரிடம் இருந்து பிரித்து அழைத்து வந்த சக்தி, வீட்டில் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்துள்ளார், இதற்கிடையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் அனுராதாவின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனுராதாவின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மகள் அனுராதா, வேறு சாதியைச் சேர்ந்த லட்சுமி ராஜனை காதலித்தது தனக்கு பிடிக்காததால் அவரை கண்டித்தேன்,

திருமணத்துக்கு பின் லட்சுமி ராஜன் வீட்டில் இருந்த அனுராதாவை, சமாதானப்படுத்தி தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். தங்கள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தது ஏன் எனக் கேட்டு மகன்களுடன் சேர்ந்து அனுராதாவை தாக்கியதாகவும், ஒரு கட்டத்தில் அடி, உதை தாங்க முடியாமல் அனுராதா சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதனையடுத்து அனுராதாவின் உடலை சாக்குப்பையில் மூட்டைகட்டி அருகிலுள்ள வயலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டதாக பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து, முதற்கட்டமாக அனுராதாவின் தந்தை மற்றும் சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, காதலை ஏற்க கட்டாயப்படுத்துவதாக, லட்சுமி ராஜன் மீது புகார் கொடுக்கும் படி, அனுராதாவை, அவரது பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது அனுராதாவிடம் விசாரணை நடத்திய பொலிசார், மகளை காதலனிடமிருந்து பிரிப்பதற்காக பெற்றோர் ஆடிய நாடகத்தை தெரிந்துகொண்டு, அனுராதாவின் பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தங்களுக்கு பெற்றோர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் தனது பெற்றோரே காரணம் என்று அனுராதா இறப்பதற்கு முன் வீடியோவும் வெளியிட்டுள்ளார். இந்த ஆதாரங்கள் அனுராதாவின் தந்தை சக்திக்கு எதிராக திரும்பியுள்ளன.

பெற்ற குழந்தையின் வாயில் அசிட் ஊற்றி கொன்ற கொடூர தாய் : அதிர வைக்கும் சம்பவம்!!

 

அதிர வைக்கும் சம்பவம்

சென்னையில் 3 வயது மகனுக்கு அசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரது மனைவி ரக்சிதா. தம்பதியின் 3 வயது மகன் ருத்ரா. இவர்கள், குடும்பத்துடன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தனர். சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் தினேஷ் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய தினேஷ், நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது, வீட்டின் படுக்கை அறையில் அவரது மனைவி ரக்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மகன் ருத்ரா முகம் வெந்த நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

முதற்கட்ட விசாரணையில், ரக்சிதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர்தான் குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட புதுமணப்பெண்!!

 

புதுமணப்பெண்

தெலுங்கானா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து, எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் காலமடகு கிராமத்தை சேர்ந்த பிண்டி அனுராதா என்கிற 22 வயது இளம்பெண் கடந்த சில வருடங்களாக, அதேகிராமத்தை சேர்ந்த லக்ஷ்மன் (26) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனுராதாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 3ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஐதராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டு அங்கேயே 3 வாரம் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய ஜோடி, தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த தகவலை அறிந்து கொண்ட அனுராதாவின் பெற்றோர் சத்னா மற்றும் லட்சுமி, தங்களுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு லக்ஷ்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டினுள் இருந்த அனுராதவை வெளியில் இழுத்து வந்து நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பின்னர் அவருடைய உடலை எடுத்துக்கொண்டு நிர்மல் மாவட்டத்தில் மல்லபூர் கிராமத்தில் நள்ளிரவில் எரித்து சாம்பலாக்கிவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் லக்ஷ்மன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து அனுராதாவின் பெற்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தமிழனின் சாதனையை பார்த்து வியந்த வெளிநாட்டவர்கள் : குவியும் பாராட்டுக்கள்!!

 

கே.சண்முகேஸ்வரன்

வியட்நாமில் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே.சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன்படி, இலங்கை சார்பாக தான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மெய்வல்லுனர் அரங்கில் மிகவும் குறுகிய காலத்தில் அதிசிறந்த பெறுபேறையும் சண்முகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

வியட்நாம் மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வியட்நாமின் ஹோச்சிமிங் நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக 4 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் போட்டிகளின் இரண்டாவது நாள் நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31 நிமிடங்களும் 01.25 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது இவ்வருடத்துக்கான அதிசிறந்த நேரப் பதிவாகும்.

ஹட்டன் – வெலி ஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய கே.சண்முகேஸ்வரன், கடந்த 3 வருடங்களாக அரை மரதன் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தார்.

அதிலும் குறிப்பாக, கடந்த 4 வருடங்களாக இலங்கை பிரபல மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சண்முகேஸ்வரன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் மற்றும் முப்படையினருக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில், ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் கடந்த மே மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 31 நிமிடங்களும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாரிய வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம்!!

 

வட மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெருந்தொகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது, பிறந்து சில நாட்களேயான குழந்தையும், தாயும் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் வயல் காவலுக்குச் சென்றவர்களும் உதவிப் பணிகளுக்குச் சென்றவர்களும் வீடுகளில் இருந்தவர்களும் சிக்கியிருந்தனர்.

வீடுகளுக்குள் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மரங்களில் ஏறித் தப்பியிருந்த பலரையும் கடற்படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.

கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து : ஒரு உயிர் பலி : பலர் படுகாயம்!!

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தொன்று நேற்று நள்ளிரவு புத்தளத்திற்கு அருகில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து நேற்று இரவு 11 மணியளவில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்போது வீதியில் நின்ற யானை ஒன்றுடன் அந்த அதிசொகுசு பேருந்து மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் யானை உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பேருந்தும் பெருமளவு சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தூய அரசியல் பயணத்தின் பெயர்ப்பலகை திறப்பு விழா!!

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் வட்டாரம் இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டு, மார்ச் 12 இயக்கத்தின் மூலம் தூய அரசியல் பயணத்தின் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதி கொண்டிருக்க வேண்டிய நற்குணாதிசியங்களை உள்ளடக்கிய பெயர்ப்பலகை வவுனியா திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நாட்டப்பட்டு நேற்று (23.12.2018) மதியம் 2மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ப்ரெல் அமைப்பின் பணிப்பாளர் ஹெட்டியாராச்சி தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பின் மஞ்சுள , நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி,

ஆற்றலரசி பனம்பொருள் உற்பத்தி நிலையத்தினர், அப்றியல் அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா, செயலாளர் கிரிதரன், பொருளாளர் விஜிதரன் ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் மற்றும் உறுப்பினர்கள் என இலங்கையின் பிற மாவட்ட இளைஞர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த நிலைமை!!

இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பதுளை எல்லே பிரதேசத்தில் இருந்து கொஸ்லந்த தியலும நீர் வீழ்ச்சியை பார்க்க சென்ற 29 வயதான இளைஞன் நீர்வீழ்ச்சிக்கு மேல் இருக்கும் ஏரியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 11.30 அளவில் நடந்ததாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்ஃபி படம் எடுக்க முயற்சித்த போது இளைஞன் தவறி விழுந்துள்ளார்.

பதுளை எல்லே பிரதேசத்தில் வசித்து வந்த வீரசிங்க என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது முச்சக்கர வண்டியில், இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் தனது உறவினருடன் கொஸ்லந்தைக்கு சென்றிருந்தார். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பிசாசுகளிடம் சிக்கியுள்ள கூட்டமைப்பு : வடமாகாண சபையில் ஆட்சியமைக்கும் சிங்கள கட்சிகள்?

சிங்கள கட்சிகள் வடமாகாணசபையில் ஆட்சி அமைக்க கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று மாலை வவுனியா பழைய கற்பகபுரத்தில் கிராம அபிவித்தி சங்க தலைவர் செல்வராஜா தலைமையில் கிராம அபிவிருத்தி சங்க கட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலங்களில் மட்டும் யாரும் உங்களுக்கு எதுவும் கொடுக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.

மகிந்தவை பிரதமராக்கி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறு என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மகிந்தவும் சரத்பொன்சேகாவும் ஒன்றுதான். ஆனால் சரத்பொன்சாவுக்கு வாக்களித்தோம். மகிந்த எமது இனத்தை அழித்த துரோகி, ஏன் என்றால் எமது கடைசி யுத்தத்தில் எமது மக்களை கொன்றழித்தவர்கள்.

ரணில் எல்லாம் தருவார் என நாம் வாக்களிக்கவில்லை. இரண்டு பிசாசில் ஒரு பிசாசை தேர்ந்தெடுத்தோம். எமக்கான அடிப்படை பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அதேபோல்

அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை முக்கியம். ஜனாதிபதியும் மகிந்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறினார்கள்.

நாங்கள் மாறி வாக்களித்தவுடன் தற்போது அரசியல் கைதியாக விடுதலை செய்வதாக இருந்தால் கைது செய்த இராணுவத்தினரை விடுவிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் கண் முன்னே சாட்சியத்தோடு ஒப்படைக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பதை, ஜனாதிபதி கூறவேண்டும். நாங்கள் இதற்கு அழுத்தம்

கொடுக்கின்றோமோ, ஐநா சபை நிச்சயமாக அழுத்தம் கொடுக்கும். நாங்கள் வெளியே நின்று ஆதரவு தெரிவித்தமையால், வெள்ளைவான் கடத்தல் இல்லை, மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கு ஏற்றக்கூடியவாறு உள்ளது. எமது உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய போராட்டங்களை முன்னெடுக்க கூடியதாக உள்ளது.

எமது வடமாகாணத்தில் பல்வேறு கட்சிகள் காணப்படுவதனால் எதிர் காலத்தில் சுதந்திரக்கட்சியோ வேறு சிங்கள கட்சியோ வடமாகாணசபையை ஆட்சி அமைக்க கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் வீரரின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு : குழப்பத்தில் தென்னிலங்கை!!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனஞ்சய டி சில்வாவின் தந்தை வசித்து வந்த ரத்மலனாயில் அமைந்துள்ள வீட்டுக்கு இவ்வாறு பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து பொலிஸ் மா அதிபரிடம், பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை கோரியுள்ளது.

மே மாதம் 25ம் திகதி முதல் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை கடந்த மே மாதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் உயிரிழந்திருந்தார்.

பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த மரணம் சம்பவத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வித அடிப்படையும் இன்றி ஏன் பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வவுனியாவில் போதநாயகிக்கு அஞ்சலி நிகழ்வு!!

வவுனியா கற்குளத்தை சேர்ந்த விரிவுரையாளர் போதநாயகி திருகோணமலை கடலில் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டு 90 வது நினைவு நாள் நிகழ்வு நேற்று (23.12) வவுனியா கற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண மகளிர் விவகார, சிறுவர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கற்குளம் கிராம மக்கள், ந.போதநாயகியின் உறவுகள் பொதுச் சுடரினை ஏற்றி மலர் தூவி போதநாயகியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வட மாகாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வட மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த இயற்கையின் சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என்று திணைக்களம் இன்று அதிகாலையில் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும் வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மழை பெய்ய கூடும். சில நேரங்களில் அந்த மழை 75 மில்லி மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக வெள்ளத்தின் மூழ்கிய பகுதிகளில், தற்போது வளம் வடிந்தோடுவதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதையடுத்து, வான் கதவுகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வடமாகாணத்தில் முழுமையாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டு திருமண விழா : விருது வென்ற புகைப்பட கலைஞர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!!

 

அம்பானி வீட்டு திருமண விழா

அம்பானி வீட்டு திருமண விழாவில் 12 லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகஎடுக்கப்பட்டதாகவும், அதை சேமிக்க 30 டிபி அதாவது 30 ஆயிரம் ஜிபி இடம் தேவைப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் சமீபத்தில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது.

அனைவரையும் வியந்து பார்க்க வைக்கும் அளவிற்கு நடந்த இத்திருமணம் உலகின் இரண்டாவது ஆடம்பர வீடான அம்பானியின் அன்டிலா வீட்டில் நடைபெற்றது. திருமணத்திற்கான பேச்சு ஆரம்பித்திலிருந்தே பல்வேறு செய்திகள் பரபரப்பாக வெளிவந்த வண்ணமே இருந்தன.

இத்தகைய திருமண விழாவில் விவேக் செய்க்காரா என்ற 47 வயதுடைய நபர் தான் புகைப்படம் எடுக்கும் வேலைகளை கவனித்துள்ளார். இவர் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் திருமண போட்டோகிராபராக இருந்து வருகிறார். 2010,2011,2012 மற்றம் 2014ம் ஆண்டுகளுக்கான சிறந்த திருமண புகைப்படகாரர் விருதையும் இவர் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசியுள்ள விவேக், கடந்த ஜூன் மாதம் இந்த நிகழ்விற்காக எனக்கு போன் செய்து, டிசம்பர் மாதம் 1-15ம் தேதி வரை வேறு யாருக்கும் எந்த வேலையையும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஒரு பெரிய வேலை காத்திருக்கிறது என கூறினார்கள்.

அதன்படி அக்டோபர் மாதம் போன் செய்து எனது ப்ரோபைல் மற்றும் சாம்பிள்களை கேட்டனர். அதன் பின்னர் தான் இந்த காண்ட்ராக்டர் கிடைத்தது என கூறியுள்ளார்.