மார்பகத்தை அழகாக்க நினைத்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

 

இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மூக்கில் மூக்குத்தி போடும் பழக்கம்போய், தொப்புளில் வளையம் மாட்டும் பேஷனையும் தாண்டி, மார்பகத்தை அழகாக்குவதற்காக தங்க நகை பதித்த பெண்ணின் மார்பகத்திற்குள் அந்த நகை சென்று மறைந்ததால், இனி அவர் எந்த காலத்திலும் ஒரு குழந்தைக்கு பாலூட்டவே முடியாது என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள்.

பிரித்தானியாவின் Prestonஐச் சேர்ந்த Taila Millar (20) என்னும் அழகிய இளம்பெண், தன்னை இன்னும் அழகு படுத்துவதற்காக தனது கழுத்து, நெஞ்சு மற்றும் மார்பகங்களில் வைரக்கல் பதித்த நகைகளை பதித்துக் கொண்டார்.

நகைகள் பதித்த இடங்களிலிருந்து இரத்தம் வரவே, நகை பதிக்கும் நபர், Tailaவின் காயங்களில் பிளாஸ்டர் ஒட்டி அனுப்பி விட்டார். வீட்டுக்கு வந்தும் வலியும் உறுத்தலும் அதிகரிக்கவே, மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் Taila.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கழுத்திலும் ஒரு மார்பகத்திலும் பதிக்கப்பட்ட நகைகள், தோலுக்கடியில் சென்று மறைந்து விட்டதாகவும், அது பயங்கர இரத்த தொற்றை ஏற்படுத்தலாம் என்றும், அவரால் எப்போதும் இனி ஒரு குழந்தைக்கு பாலூட்டவே முடியாது என்று கூறிவிட்டனர்.

Taila வலியால் துடிக்கவே, அந்த நகைகளை அகற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், அவற்றை அகற்ற முடியவில்லை. பின்னர் பிளாஸ்டிக் சர்ஜனிடம் அனுப்பி வைக்கப்பட்ட Tailaவுக்கு, மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலுக்குள் சென்று மறைந்த நகைகள் அகற்றப்பட்டன.

இனி வாழ்வில் ஒருபோதும் இதுபோல் நகைகளை பதித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறும் Taila, பலர் இதுபோல் உடலின் பல பாகங்களில் நகைகளை மாட்டிக் கொள்கிறார்கள், ஆனால் அதில் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று யாருமே கூறுவதில்லை என்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள Taila, அதைப் பார்த்தாவது மற்றவர்கள் கண்ட இடத்தில் வளையம் மாட்டும் பழக்கத்திலுள்ள ஆபத்தை புரிந்து கொள்ளட்டும் என்கிறார்.

6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு : நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை கண்டறிவது எப்படி?

 

6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு

அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அச் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களே.

இவ்வாறே அண்மையில் பேஸ்புக் பயனர்கள் 6.8 மில்லியன் பேரின் புகைப்படங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

பேஸ்புக்கில் பயனர்கள் பயன்படுத்தும் அப்பிளிக்கேஷன்கள் ஊடாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் நலனைக்  கருத்தில்கொண்டு அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு பயனர்களும் தமது படங்கள் திருடப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதுடன் எந்த அப்பிளிக்கேஷன் ஊடாக படங்கள் திருடப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

இதனை அறிந்துகொள்ள https://www.facebook.com/help/200632800873098?ref=photonotice எனும் இணைப்பிற்கு செல்லவும்.

கோஹ்லியுடன் செல்பி : 16 வயதில் கோடீஸ்வரனான இளம் வீரர்!!

 

கோஹ்லியுடன் செல்பி

ஐபிஎல் தொடரில் 1.5 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், இந்திய அணியின் தலைவர் கோஹ்லியுடன் ஒன்றாக நின்று செல்பி எடுக்க வேண்டும் என்பது தான் எனது கனவு என்று கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான அடுத்தாண்டு ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க 14 நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் ஏலத்தில் கலந்துகொள்ள அதில் இருந்து 346 வீரர்களை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் தேர்வு செய்திருந்தது. அதுமட்டுமின்றி 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருந்ததால், ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஏலத்தின் முடிவில் மொத்தம் 60 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 40 இந்திய வீரர்களும் 20 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவார். மொத்தம் இதற்காக சுமார் 106 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மனை ரூ.1.5 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பர்மன், 2002-ஆம் ஆண்டு பிறந்தவர். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு வங்க அணியில் விளையாடி வரும் பர்மன், விஜய் ஹசாரே போட்டியில் விளையாடி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய பர்மன், அனைத்து இந்திய இளம் வீரர்களைப் போல கோஹ்லிதான் என்னுடைய ரோல் மாடல். எப்போதுமே அவருடன் ஒரு செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறேன். அதற்காக முயற்சித்தும் இருக்கிறேன். ஆனால் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போது ஐபிஎல் போட்டிகளின்போது ஓய்வறையை என்னுடைய ஹீரோவோடு பகிர்ந்துகொள்வேன் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை, அவருடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்பது எனது கனவு என்று கூறியுள்ளார்.

தனக்கு ஆபத்து வருவது தெரியாமல் மற்றவர்களுக்கு மந்திரம் செய்த சூனியக்காரி : சுவாரஸ்ய சம்பவம்!!

 

சுவாரஸ்ய சம்பவம்

கனடாவில் சூனியக்காரி ஒருவர், தனக்கே ஆபத்து வருவது தெரியாமல், ஒருவருக்கு வர இருக்கும் பெரிய ஆபத்திலிருந்து மந்திரம் செய்து அவரை காப்பாற்றுவதாகக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கனடாவில் சூனியம் வைப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் Tiffany Butch (33) என்னும் அந்த பெண், சூனிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுதான்.

Timmins என்னும் சிறிய நகரின் பொலிசார், அதே நகரத்தைச் சேர்ந்த Tiffany என்ற பெண், தான் ஆவிகளுடன் பேசுபவள் என்றும், அதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவள் என்றும் கூறி, அதே நகரத்தில் வாழும் ஒருவருடைய குடும்பத்திற்கு பெரிய ஆபத்து ஒன்று வர இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் அந்த பிரச்சினையிலிருந்து விடுபட உதவுவதாகவும் கூறி ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள Tiffany, ’வடக்கின் வெள்ளை சூனியக்காரி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். ஆனால் அந்த பெயர் கேட்பதற்கு நன்றாக இருப்பதால் அந்த பெயரை வைத்துக் கொண்டதாகவும், தான் ஒரு சூனியக்காரி அல்ல, தான் ஆவிகளுடன் பேசுவதன்மூலம் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர் என்றும் கூறியுள்ளார். Tiffany அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளார்.

ஆனால் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள Tiffany, மற்ற ஆவிகளுடன் பேசுபவர்கள் திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இரவுப் பயணங்களில் அச்சுறுத்தும் யானைகள்!!

 

அச்சுறுத்தும் யானைகள்

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் செல்லும் வீதிகளில் இரவு வேளைகளில் வீதிகளிலிருந்து யானை அச்சுறுத்துவதாக கிராமவாசிகளும் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் செல்லும் வீதியில் நடுவே நின்றிருந்த யானையால் வாகனத்தில் பயணித்த பயணிகள் பதற்ற நிலைக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு வாகனங்களில் இரவு வேளைகளில் செல்லும்போது யானையின் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

இரவுவேளைகளில் பிரதான வீதிகளில் யானைகளின் நடமாட்டத்தால் வாகனங்கள் பயணிப்பதில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதிகளில் அண்மைய காலங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுகின்றது.

வேறு பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கு யானைகளை எடுத்துவரப்பட்டு விட்டுள்ளதாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் நெடுங்கேணியில் இருந்து முல்லைத்தீவு , ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளினூடாக பயணங்களை மேற்கொள்ளும் போது இவ்வாறு யானைகளின் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

இதனைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வேண்டும் எனவும் வாகன சாரதிகள் கோரியுள்ளனர்.

வவுனியாவில் இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

 

இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

வவுனியா நகரசபை பூங்கா வீதியில் இன்று (20.12.2018) மாலை 4.30 மணியளவில் இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் விரட்டிப்பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வவுனியா நகரசபைக்கு அருகே வழமை போன்று போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது ஓர் முச்சக்கரவண்டி அதிவேகமாக சென்றது. இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் முச்சக்கரவண்டியினை மறித்தனர். எனினும் பொலிஸாரின் சைகையினை கருத்தில் கொள்ளாது முச்சக்கரவண்டி அதிவேகமாக சென்றது.

பின் தொடர்ந்த பொலிஸார் நகரசபை பூங்காவிற்கு அருகே முச்சக்கரவண்டியினை மடக்கிப் பிடித்தனர்.

பொலிஸாரின் சைகையினை கருத்தில் கொள்ளாது அதிவேகமாக சென்றமை , முச்சக்கரவண்டியின் பின்புறமாக இலங்கையின் தேசியக்கொடியினை அநாகரிகமான முறையில் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் பின்புறமாக நாகரிகமான முறையில் காணப்பட்ட இலங்கையின் தேசியக்கொடியினை சீரான முறையில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் தேசியக்கொடியினை சீரான முறையில் மாற்றினார்கள்.

விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள்… திருப்பி விடப்பட்ட விமானங்கள் : பிரித்தானியாவில் பரபரப்பு!!

 

திருப்பி விடப்பட்ட விமானங்கள்

பிரித்தானியாவின் Gatwick விமான ஓடுதளத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த இரண்டு ட்ரோன்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், வரவேண்டிய விமானங்கள் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் பிரித்தானியாவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி பயணப்பட்டுள்ள நிலையில், Gatwick விமான ஓடுதளத்திற்குள் ட்ரோன்கள் பறந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டதையடுத்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அந்த ட்ரோன்களை இயக்கும் பைலட்டைக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான பொலிசார், அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தலாமா என்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் ட்ரோன் ஒன்றை விமானம் ஒன்றில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்.

Gatwick விமான நிலையத்திற்கு வர திட்டமிட்டுள்ள பயணிகள், இன்னும் குறைந்தது 24 மணி நேரத்திற்காவது விமான போக்குவரத்துக்கு இடையூறு தொடரும் என்பதால், விசாரித்து விட்டு, பயணத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

நேற்று இரவு Gatwickஇலிருந்து பறக்கலாம் என்ற எண்ணத்தில் வந்த பல பயணிகள், விமான சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஹோட்டல்களும் நிரம்பி வழிந்ததால், விமான நிலையத்தின் தரையிலும், விமானங்களிலும் உறங்க வேண்டியதாயிற்று.

Gatwick விமான நிலையம் வந்திறங்க வேண்டிய பல பயணிகள், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், Bordeaux, Cardiff, லிவர்பூல், மான்செஸ்டர், Stansted, Luton மற்றும் பர்மிங்காம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு விமானங்களிலேயே தங்கள் இரவைக் கழித்தனர்.

விமான நிலைய எல்லையிலிருந்து 1 கிலோமீற்றர் தொலைவுக்குள்ளும், 400 அடி உயரத்திற்கு மேலேயும் பறக்கும் ட்ரோன்களின் உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுவார்கள்.

ட்ரோன்கள் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் மோதுவதாலோ அல்லது எஞ்சினுக்குள் உறிஞ்சப்பட்டோ மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார், விமான நிலையத்திலிருந்து ஐந்து மைல் தொலைவு வரை ட்ரோன்களை இயக்கும் நபரை கண்டுபிடிக்கும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

எதற்காக அந்த நபர் ட்ரோன்களை இயக்குகிறார், அவர் தீவிரவாத நோக்கம் கொண்டவரா அல்லது சுற்றுச்சூழல் அமைப்பு எதையாவது சேர்ந்தவர்கள் விமான போக்குவரத்துக்கு இடையூறு செய்வதற்காக இவ்வாறு செய்கிறார்களா என்றும் பொலிசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

பெற்றோரை வழியனுப்ப சென்ற மகன்… நொடியில் பறிபோன உயிர் : கதறும் குடும்பம்!!

 

நொடியில் பறிபோன உயிர்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்பொது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் விஜயன். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டுவரும் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பெற்றோர் சொந்த ஊரான பாலக்காட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்குமுன்னர் மகனைக் காண பெங்களூரு சென்றுள்ளனர். சில நாள்கள் மகனுடன் தங்கியிருந்த நிலையில், இருவரும் ஊருக்கு புறப்பட ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து பெற்றோரை வழியனுப்ப விக்ரம் விஜயனும் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மூவரும் ரயில் நிலையம் வந்துள்ளனர்.

விக்ரமும் பெற்றோருடன் ஏ.சி கோச்சில் ஏறி, அவர்களின் இருக்கையில் லக்கேஜ்களை வைத்துவிட்டு, திரும்பும்போது ரயில் புறப்பட்டிருந்தது. பெற்றோரைப் பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு ஓடும் ரயில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளார் விக்ரம்.

அவர் ரயில் செல்லும் திசையின் எதிர்த்திசையில் இறங்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்தவர் நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் சிக்கி பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனிடையே தனது மகன் கீழே விழுந்ததைப் பார்த்துப் பதறிய தந்தையும் ஓடும் ரயில் இருந்து குதித்தார். கீழே விழுந்த அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை ரயிலில் இருந்து பார்த்தவர்கள் உடனடியாக அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

விகரமின் தந்தை விஜயன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பெற்றோரின் கண்முன்னே நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தமிழர்களை புலிகளாக நோக்கினால்… அமைச்சரொருவரின் எச்சரிக்கை!!

நாட்டின் தமிழ்ப் பிரஜைகளை விடுதலைப் புலிகள் என்று நோக்கினால், இலங்கைக்கு எதிர்காலம் என்பது இல்லாமல் போய்விடும் என அமைச்சர் வஜிர அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

தெற்கில் 1971ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர் அப்படி நினைக்கவில்லை. 1988, 89,90ஆம் ஆண்டுகளில் தேசப்பற்றுள்ள அமைப்பினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அந்த காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் கொலை செய்யப்பட்டனர். அந்த பிரச்சினைகள் முடிந்த பின்னர், சம்பவங்களை எதிரான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.

தெற்கில் நடந்த இரண்டு கிளர்ச்சியின் போது ஏற்பட்ட சம்பவங்களை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் வடக்கில் நடந்த கிளர்ச்சியை பார்க்க வேண்டும்.

ஆனால் வடக்கில் நடைபெற்றதை நாம் அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. தெற்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

நாட்டின் அரசாங்கம், அந்த பெரும்பான்மைக்கு எதிராக ஆயுதங்களை கையில் எடுத்தால், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது உயிரிழப்புகள் ஏற்படும்.

அவர்கள் இறந்த பின்னர், பௌத்தர்கள் என்ற வகையில் அவர்களை நினவுகூர சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தோம்.

கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்கில் மக்கள் விடுதலை முன்னணியின் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க நாங்கள் சந்தர்ப்பம் வழங்கி வருகிறோம்.

அதேபோல் வடக்கிலும் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இதனால், வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமை என்பது சமமானது.

ஐக்கிய தேசிய முன்னணி அல்லது ஐக்கிய தேசியக் கட்சி தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சக்தியாக இருக்கின்றது.

ஐக்கிய தேசிய முன்னணி இலங்கையர்கள் என்ற வகையில் தீர்மானங்களை எடுக்கும் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!!

நித்யானந்தா தலைமறைவா?

நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின் அவருடைய சிஷ்யை ஒருவர் அவர் மீது பாலியல் புகார் அளித்தார். இதனால் இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நித்யானந்தா கடந்த சில மாதங்களாகவே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை .

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதியோடு நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆவதால், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை அவர் பாஸ்போர்ட்டை புதுபிக்க கூடாது என்று பொலிசார் அனுமதி மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நித்யானந்தா தலைமறைவாக இருந்தார். அவர் பாலியல் பலாத்கார வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக செய்தி வெளியானது.

நித்யானந்தா கடந்த 6 மாதங்களாக எங்கிருக்கிறார் என்ற தகவல் மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் அவர் பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நித்யானந்தா வட இந்தியாவில் இருந்து உத்தரபிரதேச அரசியல்வாதிகளின் உதவியுடன் சாலை மார்க்கமாக நேபாளத்துக்கு சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் பிரித்தானியா சென்றுவிட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகள் நான் தவமிருந்த பெற்ற மகள் நந்தனா : மகளை நினைத்து கண்ணீர் விடும் சித்ரா!!

 

பிரபல பாடகி சித்ரா

பிரபல பாடகியான சித்ரா தன் மகள் நினைவுகள் பற்றி மிகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி தன்னுடைய குரலால் பலரையும் ஈர்த்தவர் தான் பின்னணி பாடகி சித்ரா.  சித்ராவின் மகள் நந்தனா கடந்த 2011-ஆம் ஆண்டு துபாயில் நீச்சல் குளத்தில் விழுந்து பலியாகினார்.

திருமணம் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பின் சித்ராவிற்கு பிறந்த நந்தனா 8 வயதில் இறந்தார். நேற்று நந்தனாவின் பிறந்தநாள் என்பதால் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நீங்கள் எங்கள் வாழ்வில் பொக்கிஷம் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தன் மகள் குறித்து சித்ரா பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், நந்தனாவுக்கு என் குரல் மிகவும் பிடிக்கும்.

தாலாட்டு பாடி தான் அவளை தூங்க வைக்க வேண்டும். நான் பாடிய எந்து பரஞ்சாலும் என்ற மலையாளப் பாடல், அம்மா-மகள் உறவை அழகா வெளிப்படுத்தும். அவளுக்காகவே அந்தப் பாடலை உருவாக்கினதா நினைச்சு, அதை அடிக்கடி என்னை பாடச் சொல்லுவாள். என்னுடன் இசைநிகழ்ச்சிக்கு வரும் போது இரவு நேரத்திலும் முழித்துக் கொண்டிருப்பாள். மேடையில் நான் இந்த பாடலை பாடி முடித்த பின்பு தான் தூங்குவாள்.

15 ஆண்டுகள் நான் தவமிருந்து பெற்ற குழந்தை, என் உயிரே நந்தனா தான், அவளுடைய இழப்பால் உண்டான வலியும், சோகமும் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஆறாத வடு அது, அப்போ இனி வாழ்க்கையில் எல்லாமே முடிச்சிடுச்சு, இசைப்பயணத்தையே நிறுத்திடலாம் என்று முடிவெடுத்தேன்.

அந்த மிகப் பெரும் துயரத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை, ஆனால் என் குடும்பத்தினர், இசைத்துறையினர், நண்பர்கள் என பலரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள், அவர்கள் எல்லோருக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று உணர்ச்சிகரமாக கூறியுள்ளார்.

வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

வவுனியா விபுலாநந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 2019/2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவிற்கான பொதுக் கூட்டம் எதிர்வரும் 06.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் என சங்கத்தின் செயலாளர் சோ.சுரேந்தர் தெரிவித்தார்.

விபுலாநந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் தவறாது சமூகம்தந்து பாடசாலையின் அபிவிருத்தியில் கைகோர்க்குமாறும், உன்னதமான செயற்றிறன் மிக்க பழைய மாணவர் சங்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க அனைவரும் தவறாது சமூகம் தருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் விஷாலை அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

 

நடிகர் விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைக்க முயன்ற போது பொலிசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். தமிழ்த் திரைப்பட ‌தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும், அவரது எதிர் தரப்பினருக்கும் இடை‌‌யிலான மோதல் இருந்து வந்த நிலையில் அந்த மோதல் தற்போது முற்றியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனை தலைவர் விஷால் பாண்டிச்சேரியிலிருந்து சங்கத்துக்கு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் வைப்பு நிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்று அச்சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், T.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டனர். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் மாற்றும் அவரது ஆதரவாளர்கள் வருகை தந்தனர்.

அப்போது பொலிசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், விஷால் தரப்பினருக்கும், பொலிசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

இது குறித்து விஷால் கூறுகையில், இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிலம் ‌வழங்கப்படும் என்பதால், அதனைத் தடுக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். பூட்டப்பட்டிருக்கும் பூட்டை உடைத்தே தீருவேன் என்று தெரிவித்தார். அதற்கு பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது.

சட்டவிரோதமாக கூடியதாக கைது செய்ய நேரிடும் என்று பொலிசார் எச்சரித்தனர். இருப்பினும் விஷால் தொடர்ந்து பூட்டை உடைக்க முயன்றதால், அவர் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருமலை முருகன் ஆலய காணியை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்க முயற்சி!!

 

திருமலை முருகன் ஆலய காணி

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபடுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இப் பிரதேசத்தை ஆட்சிசெய்த தென்னன் என்ற அரசன் காலத்தில் கந்தசாமி மலை என இம் மலை அழைக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஆலயத்தை பௌத்த இடமாக்கும் முயற்சிகளை இலங்கை தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

1984 ஆம் ஆண்டில் இப் பகுதி மக்கள்மீது இன வன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் இப் பகுதி மக்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதன்போது குறித்த மலைப் பகுதியில் காணப்பட்ட ஆலயமும் அழிக்கப்பட்டது.

மீண்டும் தமது ஊரில் மீள்குடியேறிய போது குறித்த பகுதியில் முருகன் சிலை மற்றும் வேல் என்பவற்றை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர். அண்மையில் குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை நிறுவுவதற்காக பௌத்த துறவிகள் வருகைதந்தபோது கிராம மக்கள் இணைந்து அதனை எதிர்த்து தடுத்து நிறுத்தினர்.

தற்போது குறித்த மலையடிவாரத்தில் தொல்பொருள் திணைக்களம் தமது பெயர்ப்பலகையை நாட்டி கட்டடம் ஒன்றை அமைத்து வருகின்றது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆலய தலத்தை தொல்பொருள் திணைக்களம் அபகரித்து பௌத்த தலமாக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனை உரிய தரப்பினர் கருத்திற்கொண்டு தமது மலையையும் தமது முருகன் ஆலயத்தையும் மீட்டுத்தந்து ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வழியேற்படுத்தி தர வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க உபதலைவர் கந்தையா பரமநாதன் இது குறித்து கூறுகையில், 1952இல் குறித்த கிராமத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வந்த தாம் தமது கிராமத்தில் இதுவரையில் பௌத்த மத குரு ஒருவரோ, பௌத்த தலமோ இருக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

அத்துடன் குறித்த ஆலயத்தோடு இணைந்த தமது காணிகளுக்கு 1803 ஆம் ஆண்டு பிரித்தானியர் காலத்து அரசினால் உறுதி ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாகவும் 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற பின்னர் குறித்த பகுதி பெரும்பான்மை இனத்தவரால் சுவீகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது வயல் நிலங்கள் விவசாய நிலங்கள் பலவும் அபகரிக்கப்பட்டு இன்று போர் முடிந்து மீள்குடியேற்றம் வந்த நிலையிலும் நிலங்களை மீட்க முடியாது திண்டாடுவதாகவும் தென்னைமரவாடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமது இந்த வரலாற்றுத் தொன்மை மிக்க ஆலயத்தையும் அபகரிக்க இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாகவும் இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தென்னைமரவாடி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ் ஆலயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக நேற்றையதினம் (19.12.2018) ஈழ புரட்சி அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் , ஈழ புரட்சி அமைப்பின் பொருளாளரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பிருமான சசிதரன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் து.தமிழ்ச்செல்வன், ஈழ புரட்சி அமைப்பின் உறுப்பினர் ஹிரி நரோன் ஆகியோர் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியதுடன் ஆலயத்தின் சிதைவுகளையும் தொல்லியல் திணைக்களத்தினால் அவ்விடத்தில் கட்டப்படும் கட்டிடத்தினையும் பார்வையிட்டனர்.

அவ்விடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் கட்டப்படும் கட்டிடம் தொடர்பாக பொதுமக்கள் குச்சவெளி பிரதேச சபைக்கு தெரியப்படுத்தியதையடுத்து பிரதேசபையினால் அனுமதியற்ற இக் கட்டிட வேலைகளை உடனடியாக நிறுத்தி முறையான அனுமதி பெற்றதன் பின்னர் உரிய வேலைகளை ஆரம்பிக்குமாறு தவிசாளர் ஏ.முபாறக் உத்தரவினை பிறப்பித்து உரிய அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்ததுடன் கட்டடிம் அமைக்கப்படும் இடத்திலும் இக் கடிதம் ஒட்டப்பட்டிருந்தது.

அதனை கிழித்தெறிந்துவிட்டு அங்கு கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபர்!!

முல்லைத்தீவு – கரைதுரைபற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம் தலைமையகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த, 69 வயதான பெஞ்சமீன் சூசைப்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் நேற்று அவரது வீட்டிலிருந்து கரைதுரைபற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம் தலைமையகத்திற்கு காவல் கடமைக்காக சென்று இன்று காலை வரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வயோதிபர் உறங்கியவாறே உயிரிழந்துள்ளதாக அங்கு பணிபுரியும் அலுவலகர் ஒருவர் பொலிஸாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாரதிகளுக்கு இடையில் மோதல் : ஒருவர் அடித்துக் கொலை!!

தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் வெலிமட பொரலாந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நேர அட்டவணை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 49 வயதான தனியார் பேருந்தின் சாரதி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட நால்வரையும் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.