காணாமல் போன மகனை தேடித் தேடி இறுதியில் உயிரை விட்ட தாய் : யாழில் நடந்த துயரம்!!

கடந்த 2007இல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் நேற்று காலமாகியுள்ளார்.

மகனிற்காக நீதி கோரி போராடியவாறே நேற்று காலமாகியுள்ளதாகவும், அவருக்கு யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தமது இறுதிக் காலங்களில், மரணம் சம்பவிக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான இராமச்சந்திரனை தேடிக்கண்டறிவதிலும் அவருக்கு நீதி பெற்றுக்கொள்வதிலும் தாயும் தந்தையும் சேர்ந்து விடாமுயற்சியுடன் பாடுபட்டு வந்தனர்.

இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் காலமாகி ஒரு மாதமே ஆன நிலையில் நேற்று தாயாரும் உயிரிழந்துள்ளார்.

வயோதிப வயதிலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்வதில் என்றுமே பின்னின்றதில்லை. தேடி வரும் ஊடக செயற்பாட்டளர்களுடன் மகனது விடுதலைக்காக நீண்ட பயணத்தை செய்துமிருக்கின்றார்கள்.

மகன் காணாமல் ஆக்கப்பட்ட நாளில் இருந்து அவரை கண்டறிய தேடி அலைந்து பதிலேதும் கிடைக்காமலேயே இவர்கள் இந்த மண்ணிலிருந்து பிரிந்துள்ளனர்.

தாங்கள் இறப்பதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட மகனைப் பார்க்க வேண்டும் என்றும் , தமது இறுதிக்கிரியைகளை தமது மகனான இராமச்சந்திரனே முன்னின்று நடத்தவேண்டுமெனவும் பல தடவை பேசியிருக்கின்றார்கள்.

மகனிற்கான சேமிப்பை தமது மரணத்தின் முன்னராக அவரிடம் கையளிக்கவேண்டுமென்ற அவர்களது கனவு கடைசிவரை மெய்க்காது போயேவிட்டது.

தமிழர் மக்களது துன்பியல் வாழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற போதே இந்த உலகை விட்டு பிரிந்துவிடுவது தொடர்கின்றது. அதனுள் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமசந்திரனின் தந்தை தாயினதும் மரணமும் அமைந்திருக்கின்றது.

2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி இலங்கை இராணுவ படைமுகாமில் வைத்து இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலில் ஒரிரு நாட்கள் அவர் தொலைபேசி செயற்பட்டுக் கொண்டிருந்தேயிருந்தது. விசாரணையொன்றிற்காக தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினை இருவரும் அப்போது பகிர்ந்துள்ளனர்.

யாழ்.தினக்குரல் ,வலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இன்று வரை தகவல்கள் கிடைக்காமல் போயுள்ளது.

பிறந்த நாளில் பதிவான துயரச் சம்பவம் : கேக் வாங்க சென்றவர் பரிதாபமாக பலி!!

பிறந்த நாளுக்கு கேக் வாங்கசென்றவர் விபத்தில் உயிரிழந்த துயிரச்சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வடிகான் ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றையவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் களுதாவளை வன்னியனார் வீதியை சேர்ந்த வேலுப்பிள்ளை தீசன்(38வயது) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், அதேவீதியை சேர்ந்த கு.ஜெகதீஸ்வரன்(35வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்த நாளான நேற்று தீசன் தனது பிறந்த நாளை கொண்டுடாடுவதற்காக கல்முனைக்கு கேக் வாக்குவதற்காக சென்று திரும்பிய நிலையிலேயே இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோடிகளில் பேரம் : உண்மையை உடைத்த மைத்திரி : சிக்கலில் மகிந்த?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல மில்லியன் ரூபாய்களுக்கு விலை பேசப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாத காரணத்தினால், மகிந்த ராஜபக்சவுக்கு 113 பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவும் கிடைத்திருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தப் பேச்சு கொழும்பு அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார். எனினும், பெரும்பான்மையில்லாத ஒருவர் பிரதமராக இருக்க முடியாது. எனவே மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அழுத்தங்கள் எழுந்தன.

இதற்கமைய, தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதுடன், கட்சித் தாவல்கள் இடம்பெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய கட்சி உறுப்பினர்களும் மகிந்த பக்கம் தாவினர். ரணில் கட்சியில் இருந்தும் மகிந்தவின் கட்சிக்குள் தாவியவர்கள் உண்டு. இந்நிலையில் மகிந்த ராஜபக்ச அதிகளவிலான பணத்தினை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார் என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

எனினும் இது தொடர்பில் அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதன் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவிற்கு மைத்திரிபால சிறிசேன வந்தார்.

நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு இரண்டு மாதங்களாகப்போகின்றன. ஆனால் ஏற்பட்ட குழப்பம் தீர்ந்து போகும் அளவிற்கு இல்லை. நாளுக்கு நாள் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பொது நிகழ்வு ஒன்றில் பேசிய ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகளில் பேரம் பேசப்பட்டதாகவும், அந்தப் பேரம் பேசுவது தோல்வியில் முடிந்தமையினாலும், மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதனாலும் தான் நாட்டில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்படக்காரணம் எனும் தொனியில் பேசியிருந்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல மில்லியன்களை எதிர்பார்த்தனர் என்றும், அதனை மகிந்த ராஜபக்சவினால் கொடுக்க முடியாமல் போனதுமே இந்த நிலைமைக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தப் பேச்சு தற்பொழுது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக இருந்து கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கும் நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக அவர்கள் தொடர்பாக இப்போது வரை மௌனமாக இருந்த ஜனாதிபதி இப்பொழுது தான் அது குறித்து வாய் திறந்திருக்கிறார். இலஞ்ச ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்குவந்த ஜனாதிபதி அதற்கு சார்பானவர்களை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். இது மிக மோசமான விளைவு. ஆக, ஜனாதிபதி தான் கூறிய இக்கருத்துக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் கேட்டதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

திருமண தம்பதியர் கொடுத்த இன்ப அதிர்ச்சி : வியந்து போன இலங்கையர்கள்!!

தென்னிலங்கையில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பலராலும் அதிக பாராட்டை பெற்றுள்ளது.

பிரதீப் என்ற இளைஞரும் அவரது மனைவியும் இணைந்து வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.

குறித்த இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

எனினும் திருமணத்தை மிகவும் எளிமையாக இருவரும் செய்துள்ளனர். திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த தம்பதியினர் கஞ்சத்தனமிக்கவர்கள் என கூறியுள்ளனர்.

எனினும் அவர்கள் திருமணத்திற்கான அனைத்து செலுவுகளையும் குறைந்த அந்த பணத்தில் இந்த வீட்டை நிர்மாணித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இன்றைய தினம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த மனிதாபிமானமிக்க செயற்பாடு பலரையும் வியப்படைய வைத்துள்ளதுடன், ஆடம்பரங்களை விரும்புவோருக்கு இதுவொரு சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

மரண அறிவித்தல் : தாமேதரம்பிள்ளை மகேஸ்வரன்!!

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் அரசமுறிப்பு ஒமந்தையை நிரந்தர வசிப்பிடமாகவும் திருநாவற்குளம் வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தாமேதரம்பிள்ளை மகேஸ்வரன் (மலேப்பாம்பு) இன்று (09.12.2018) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மாவின் அன்பு மகனும் பரிமளத்தின் அன்புக்கணவரும் மங்களேஸ்வரி (ஆசிரியை நொச்சிமோட்டை கனிஸ்ட வித்தியாலயம்) அன்புத் தந்தையும்,

செல்வராசாவின் (செல்வம் காட்வெயார்) அன்பு மாமனாரும் குலமணி (கனடா) , பத்மநாதன் (கனடா) , பாலேந்திரன் பாலாம்பிகை (டென்மார்க்) , சுகிர்தமலர் , விக்கினேஸ்வரி , காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் , ஞானமூர்த்தி ஆகியவர்களின் அன்புச் சகோதரனும்,

வேணுகோபால் (கனடா), கனகலட்சுமி (கனடா), மாணிக்கராசா, காலஞ்சென்ற சன்முகராசா, காலஞ்சென்ற பஞ்சலிங்கம், காலஞ்சென்ற குஞ்சிதபாதம், (கனடா), சந்திரவதனி, ஜெயகௌரி (ஆசிரியை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம்),

தேவராணி, ஜெகதாம்பிகை (ஆசிரியை மருதோடை அ.த.க பாடசாலை), கலைமதி (ஆசிரியை நொச்சிக்குளம் கனிஸ்ட வித்தியாலயம்), ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் கிதுர்ஸா (சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) அபிஷேக், நிலாசன் ( வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.12.2018 செவ்வாய்க்கிழமை 11மணியளவில் அன்னராது திருநாவற்குளம் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்.

பாலேந்திரன் : 0777567307

செல்வன் : 0776728220

இரண்டு வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்!!

நாரம்மல – அலுத்வேவ பிரதேசத்தில் இரண்டு வயதும் 10 மாதங்களுமான தனது மகளை கொடூரமாகத் தாக்கிய தாயொருவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு முற்றத்தில் நடப்பட்டிருந்த பூக்கன்றை உடைத்தெறிந்ததாக கூறி 26 வயதான குறித்த தாய் நேற்று தனது மகளைத் தாக்கியுள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர் தனது கைத்தொலைபேசியில் சம்பவத்தை பதிவு செய்த பிறகு, பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக குலியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி!!

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார். குறித்த சம்பவம் இன்று(09.12) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது.

இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஏராளமான பொது மக்கள் கூடியிருந்தனர். அவர்களுடன் சிறுவர்களும் வருகை தந்திருந்தனர்.

இதன் போது சிலர் தங்களது பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பரப்பாக இருந்த போது மறுபுறம் சிறுமி ஒருத்தி நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும்,

ஆபத்தான பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் குழந்தைகளுடன் செல்ல வேண்டாம் என்றும், அத்தோடு சிறுவர்களை தனியே இரணைமடுவுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளைஞனை பலியெடுத்த இரணைமடு குளம்!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார்.

இன்று மாலை 4.30 மணியளவில் இரணைமடு குளத்தின் வான் கதவு நான்கு திறக்கப்பட்டிருந்ன. இதில் இடது பக்கம் இரண்டு கதவுகளும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர்.

இதில் சில இளைஞர்கள் குறித்த பகுதியின் ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்துக்கொடிண்டிருந்தனர்.

இதன் போது யாழ். சாவக்கச்சேரி பகுதியிலிருந்து ஐந்து பேருடன் இரணைமடுவை பார்க்க வந்திருந்த இளைஞர் ஒருவர் குளிப்பதற்கு இறங்கிய போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர் உடனடியாக கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அறிவித்துள்ளார்.

எனினும், பொலிஸ் மற்றும் படையினர் 30 நிமிடங்களின் பின்னரே சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஒரு பகுதியில் திறக்கப்பட்டிருந்த வான்கதவுகள் மூடப்பட்டு சில இளைஞர்கள் நீரில் இறங்கி தேடுதலை மேற்கொண்டு ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் உடலை மீட்டனர்.

இதேவேளை, இரணைமடுகுளம் அபிவிருத்திக்கு பின் கடந்த வெள்ளிகிழமை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை வந்தடைந்த நாட்டின் சமாதானத்தினை வலியுறுத்திய சக்கர நாற்காலி பயணம்!!

நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் இரு கால்கள், வலது கை, இரு விரல்களையும் இழந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் நாட்டின் இன ஐக்கியத்தினை வலியுறுத்தி தேவேந்திர முனையிலிருந்து கடந்த 03ம் திகதி ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணமானது இன்று (09.12.2018) மாலை 3.30 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்தது.

தேவேந்திர முனையிலிருந்து கடந்த 03ம் திகதி ஆரம்பமாகிய சக்கர நாற்காலி பயணமானது சுமார் 580 கிலோமீட்டர் தூரம் கடந்து 11ம் திகதி பேதுரு முனையினை சென்றடையவுள்ளது.

வவுனியாவினை வந்தடைந்த இப் பயணத்தினை தாண்டிக்குளம் பகுதியில் வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் இணைந்து வரவேற்றனர்.

வவுனியாவில் எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் என்ற தொனிப்பொருளில் கருத்தமர்வு!!

எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான கருத்தமர்வு ஓன்று வவுனியாவில் இடம்பெற்றது.

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டின் ஓரு அங்கமாக இக் கருத்தமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(09.11) இடம்பெற்றது.

சமூக மட்டத்திலும் வேலைத்தளங்களிலும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பால்நிலை வன்முறைகளை தடுக்கும் வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதன்போது சட்டத்தரணி கம்ஷா மதுரகன் பால்நிலை வன்முறைக்கு எதிரான நகர்வுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் எஸ்.சுகிர்தராஜ், யுஎன்எச்சீஆர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் எஸ்.மாதவன், மற்றும் கிராமமட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர் பொலிசார், தாதியர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நெளுக்குளம் காளிகோவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பித்துவைப்பு!!

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் காளிகோவில் வீதி செப்பனிடும் பணிகள் இன்று (09.12.2018) காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலச்சந்திரன் சிந்துஜனின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா தெற்கு பிரதேச சபையின் நெளுக்குளம் வட்டார பிரதேசசபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன்(பாபு) சிபாரிசின் ஊடாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதனின் 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

550 மீற்றர் நீளமான , மிக மோசமான நிலையிலிருந்த நெளுக்குளம் காளி கோவில் வீதி செப்பனிடப்படும் பணியிணை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், பிரதேசசபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன்(பாபு), கிராம இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

வவுனியா செட்டிக்குளம் அடப்பன்குளத்தில் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் ஒளிவிழாவும்!!

செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அடப்பன்குளம் மற்றும் துட்டுவாகை கிராம முன்பள்ளி இணைந்து நடாத்திய தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் ஒளிவிழா நிகழ்வும் நேற்றையதினம் (08.12.2018) காலை 9 மணியளவில் அடப்பன்குளம் தென்னிந்திய திருச்சைபை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் இளம் சமூக சேவையாளன் சங்கரன் சசிகுமார், வவுனியா /முல்லைத்தீவு மாவட்ட தென்னிந்திய திருச்சபை பாதிரியார், அடப்பன்குளம் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விழாவிற்கான பரிசில் பொருட்களை ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா வழங்கினார்.

பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசுவை கிணற்றில் வீசிய பெற்றோர்!!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பூமரத்தடிச்சேனை பகுதியில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தையை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் தந்தையை நேற்று கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லடி பூமரத்தடிச்சேனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

அப் பெண்ணிண் கணவர் இதற்கு முன்னரும் பூமரத்தடிச்சேனை பகுதியில் இரண்டு திருமணம் முடித்து அவருக்கு பிள்ளைகள் இருந்த சம்பவம் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

தனது கணவர் இதற்கு முன்னர் திருமணம் முடித்து பிள்ளை இருக்கின்ற விடயத்தை தன்னிடம் கூறாமையினால் அப்பெண் மன உளைச்சல் அடைந்து கணவருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கும்புறும்பிட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கு 13 நாட்களான குழந்தையொன்று இருந்துள்ளதாகவும், அந்த குழந்தையை வீட்டில் உள்ள கிணற்றில் வீசப்பட்டு நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனை கணவர் செய்தாரா அல்லது மனைவி செய்தாரா என்பது விடயம் தொடர்பாக இன்னும் கண்டறியப்படாத நிலையில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், உயிரிழந்த குழந்தையின் தந்தையையும், தாயையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்ற கலைப்புக்கு சாதகமாக வந்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரை மஹிந்த பிரதமராக கொண்ட புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க மைத்திரி திட்டமிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வர்த்தகமானிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் பல்வேறு மட்டங்களிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும் மைத்திரி ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.

அதேவேளை மஹிந்த ராஜபக்சவும் கடந்த சில நாட்களாக, எதிர்த்தரப்பைச் சேர்ந்த பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ஏதாவது ஒரு அரசாங்கத்தை அமைத்து, தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்க்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை : வாக்களிக்காமல் நழுவிய இலங்கை!!

ஐக்கிய நாடுகள் பொது சபையில் பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இலங்கை நடுநிலைவகித்துள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் பொது சபையில் அமெரிக்கா கொண்டு வந்திருந்த நிலையில், அதற்கு போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 86 நாடுகளும், எதிராக 57 நாடுகளும் வாக்களித்தன. எனினும், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 33 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.

இதன் காரணமாக குறித்த பிரேரணைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாததால் தோல்வியடைந்தது.

பலஸ்தீனத்தை நட்பு நாடு என இலங்கை கொண்டாடும் நிலையில் குறித்த தீர்மானத்துக்கு எதிராக இலங்கை வாக்களிக்காமல் நடுநிலைவகித்துள்ளது.

வவுனியாவில் கற்குவாரியை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா கோமரசங்குளம் ஜேசுபுரம் கிராமத்தில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜேசுபுரம் கிராமத்தில் இயங்கி வருகின்ற கற்குவாரியினை நிறுத்தக்கோரியே அப்பிரதேச மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் கற்குவாரியினால் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்துள்ளனர்.
இக் கற்குவாரியில் வெடிபொருட்களை பயன்படுத்தி கற்களை உடைக்கும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் மேல் எழுந்து வரும் பாறைத்துண்டுகள் காரணமாக வீடுகள் சேதமாவதடன், கால்நடைகளிற்கு காயமேற்படுவதோடு இறக்கின்ற சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் கற்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிச்செல்லும் பாரவூர்திகளினால் இப்பிரதேச வீதிகள் சேதமாகியுள்ளதனால் இப்பாதையை பயன்படுத்துகின்ற மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக இப்பிரதேசத்தின் பிரதான நீர்ப்பாசன குளமான சின்னகோமரசங்குள கலிங்கும் இதன் தாக்கத்தினால் வெடிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்ற கற்குவாரியினை ஏற்கனவே நிறுத்தக்கோரி இம்மக்களினால் வேன்டுகோள் விடுக்கப்பட்டதற்கு இணங்க நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் இக்கற்குவாரியின் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

பிரதேசசபையினால் நிறுத்தக்கோரி உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இக்குவாரி இயங்கி வருவதனை உடனடியாக நிறுத்துமாறு இம்மக்கள் கோரிக்கையை முன்வைத்தே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.