பலரும் ஆவலாக காத்திருக்கும் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்ட தகவல்!!

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து இடைக்கால தடையை எதிர்வரும் 10ம் திகதி வரை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நேற்று மேலும் ஒரு நாளினால் தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் இரு தினங்கள் தடை உத்தரவை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் எனக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!!

 

கவனயீர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(07.12) இடம்பெற்றிருந்தது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் உள்ளடக்கிய சிவில் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மீண்டும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்காதே, கடந்த யுத்த வடுவே எம்மிடம் ஆறவில்லை, மீண்டும் யுத்தம் என்ற சொல் கூட எமது நாட்டிற்கு வேண்டாம், தேசிய நல்லிணக்கத்தினை காப்பாற்றுவோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, வவுனியா நகர பள்ளிவாசல் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையம் மீள்திறப்பு ஒருவருட முயற்சிக்கு கிடைத்த வெற்றி : வர்த்தகர் சங்கத்தலைவர் சுஜன்!!

 

வவுனியா பழைய பேருந்து நிலையம் இன்று கடந்த ஒரு வருடங்களின் பின்னர் மீளத்திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைவரின் முயற்சிகளினாலும் இந்தச் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. கடந்த ஒருவருடமாக எம்மால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிக்கு கிடைத்த வெற்றியையே இன்று நாம் அனுபவிக்கின்றோம்.

இவ்வாறு இன்று காலை பழைய பேருந்து நிலையம் மீள் திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் ச.சுஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது, இன்று எம்மத்தியிலுள்ள அனைவரின் கடும் முயற்சிகளால் பழைய பேருந்து நிலையம் மீளத்திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னின்று பணியாற்றிய அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த ஒருவருடமாக பேருந்து நிலைய மாற்றத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. இவ்வேளையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை நாம் நினைவுகூருவதுடன் தொடர்ந்தும் எமக்கு அனைவரினதும் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்று தெரிவித்தார்.

வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் பழைய பேருந்து நிலையம் வவுனியா நகர பிதா இ.கௌதமனால் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஜ.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் ரி. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.தென்னக்கோன்,

வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் திலீபன், நகரசபை உப நகர பிதா, நகரசபை செயலாளர், நகரசபை உறுப்பினர்கள், முச்சக்வரண்டி உரிமையாளர் சங்கத்தலைவர், வர்த்தக உறுப்பினர்கள், சங்கப்பிரமுகர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள்!!

 

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கும் சென்று பயணிகளை எற்றிச் செல்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று(07.12) காலை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் உள்ளூர் பேருந்து சேவைகளை பழைய பேருந்து நிலையம்வரை விஸ்தரிக்குமாறு வவுனியா வர்தகர்சங்கம், ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதற்கமைவாக இன்றிலிருந்து உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தரிப்பிடத்தில் சிலநிமிடங்கள் தரித்துநின்று சேவையில் ஈடுபடவுள்ளது.

அதன் ஆரம்பநிகழ்வு இன்று காலை நடைபெற்றது. விருந்தினர்கள் நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் பேருந்து சேவையையும் ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் நகரசபைத் தலைவர் இ.கௌதமன், மாவட்டச் செயலர் எம்.கனீபா, பிரதேச செயலர் கா.உதயராஜா, நகரசபை செயலாளர் இ.தயாபரன், உப நகரபிதா சு.குமாரசாமி, ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் வவுனியா அமைப்பாளர் கு.திலீபன், பொலிஸ் அத்தியட்சகர் எம்.தென்னகோன், வர்தகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டாக விஷப்பாம்பை கையில் பிடித்த நபர் சுருண்டு விழுந்த பரிதாபம்!!

விஷப்பாம்பை கையில் பிடித்த நபர்

சென்னை பூந்தமல்லியில் விளையாட்டாக விஷ பாம்பை பிடித்த நபர் திடீரென மயக்கமடைந்து தரையில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராமர் என்பவர் சுவற்றில் பெயின்டிங் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் சென்ற 8 அடி நீள விஷ பாம்பை பார்த்து பொதுமக்கள் அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடியுள்ளார். இதனை கண்ட ராமர், துணிச்சலுடன் சென்று பாம்பை கையில் பிடித்துள்ளார். அப்போது திடீரென அந்த விஷப்பாம்பு கையில் கடித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராமர், உடனே அந்த பாம்பை ஓங்கி சுவற்றில் அடித்தார். அடுத்த சில நிமிடங்களிலே அவரும் மயக்கமடைந்தவாறு தரையில் சுருண்டு விழுந்தார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

தூக்கில் தொங்கிய மாணவி : கை முழுவதும் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூலம்!!

தூக்கில் தொங்கிய மாணவி

டெல்லியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கை முழுவதும் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இந்தர்புரி பகுதியில் 7ம் வகுப்பு படிக்கும் டெசி என்ற மாணவி இன்று அதிகாலை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் டெசியின் உடலை கைப்பற்றியபோது, அவருடைய கை முழுவதும் மரண வாக்குமூலம் எழுதப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதில், கடந்த மூன்று மாதங்களாக உயிரியல் பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.மேலும், தான் இனிமேல் பள்ளி சொல்லப்போவதில்லை எனவும் அதில் எழுதியிருக்கிறார்.

பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார் மாணவி குறித்து மேற்கொண்ட விசாரணையில், நான் தீவிரமான ஒரு முடிவெடுத்துவிட்டேன் என தன்னுடைய பள்ளி தோழிகளிடம் ஏற்கனவே டெசி கூறியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெளிநாட்டில் தந்தை : இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்!!

பொத்துவில் பகுதியில் பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பொலிஸாரிடம் உணவு கோரியுள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்த போது அவர்களின் தந்தை வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், தாயார் கவனிக்காமல் கைவிட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

தனது தாய்க்கு வேறு நபர் உணவு வழங்குவதாகவும், தங்களுக்கு உணவை வழங்குவதில்லை என சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி இறுதியாக உணவு உட்கொண்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு வரும் வரை உணவு எதுவும் கிடைக்கவில்லை எனவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

14 மற்றும் 13 வயதுடைய ஆண் பிள்ளைகளும் 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் உணவு கோரியுள்ளனர்.

குழந்தைகளுக்கு உணவு வழங்காத தாயாரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றை சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படையினர்!!

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு, இன்றைய தினமும், விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே, நீதிமன்ற வளாகத்துக்கு, அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமும் அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலைக்கப்பட்டமைக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகள், நான்காவது நாளாக இன்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

வவுனியாவில் முன்னாள் போராளிகள் அச்ச நிலையில் : சி.சிவமோகன்!!

வவுனியாவில் முன்னாள் போராளிகள் அச்சத்துடனையே காணப்படுகின்றனர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்திலிருந்து எங்களது போராட்ட தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக சிலர் செயல்படுகிறார்களோ என்று என்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தேன்.

பலர் பணத்தை வெளியிலே இருந்து கொடுத்து அவரவர் இடத்தில் சில நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். இவை அனைத்தையும் அலசி ஆராயப்பட வேண்டியவை. தங்களிடையே ஒரு சுமூகமான நிலையில் வாழும் ஒரு போராளிகளை இன்று ஒரு அச்ச நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது வெளிப்படையான உண்மை.

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜேவிபியினருக்கு எப்படி ஒரு மன்னிப்பை கொடுத்தார்களோ, அதேபோன்று இந்த அரசியல் கைதிகளுக்கும் ஒரு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அதனை அரசியல் ரீதியில் தான் அணுக வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தீர்வை எட்ட முடியாத விடயம். காணி விடுப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரேரணைகள் பெருந்தொகையில் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான காணி சொந்தக்காரர்கள் ஒன்றாக்கப்பட்டு போராப்பட்டிருக்கிறது.

அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்தது. தமிழ், முஸ்லிம் மக்கள் கொடுத்த ஆதரவினால் தான் மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கிறார். அதனை நாம் அவருக்கு சுட்டி காட்டியுள்ளோம்.

அவர் எப்படி வந்தவர் என்பதை சுட்டி காட்டியுள்ளோம். எனவே ஜனாதிபதி இருக்கும் இந்த கால கட்டத்தில் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

அவருடைய இன்றைய செயற்பாடுகள் மீண்டும் ஓரு தடவை ஜனாதிபதியாக வருவதற்கான நகர்வாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக தான் இந்த அரசியல் நாடகங்கள் அரங்கேறியிருக்கின்றது.

ஆகவே அப்படி ஓரு எண்ணத்தில் இருப்பவர் அரசியல் கைதிகளை விடுப்பதால் தனது வாக்கு வங்கி கூடும் என சிந்தித்தால் அதனை செய்வார் எனக் கருதுகின்றேன். அத்துடன், 1948ஆம் ஆண்டின் இன் பின் ஒரு பிரிவு தமிழ் மக்களுக்கான தீர்வை கொண்டு வந்தால் இன்னொரு பிரிவு அதனை தட்டிவிட்டதாகத் தான் வரலாறுகள் சொல்லியிருக்கின்றது.

மாறி மாறி அது நடந்துள்ளன. பேரினவாத கட்சிகள் இரண்டு பிரிவினரே. அவர்கள் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களது தீர்வை ஏற்றுக் கொண்டதாகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி இரண்டும் ஒன்றும் தான்.

எமது போராட்டத்தில் சிலரை பிரித்தெடுத்து குழப்பி விட்டதாக சொல்கின்றோம். அது நாங்களே எங்களை குழப்பி நாங்களே பிரிந்து நின்று கொண்டு இன்னொரு கட்சி தான் பிரித்தார் என்று சொல்வதை விட அது நாங்கள் விட்டதாக தவறாகவே பார்க்க வேண்டும்.

இன்றும் அதேபோல் தமிழர்கள் ஒற்றுமையாக ஓரே கொள்கைகளுடன் நாங்கள் இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தமிழினம் இருக்கும் வரை அவர்களிடம் இருந்து அந்த போராட்ட குணம் இல்லாமல் போகப்போவதில்லை.

இன்று அவர்களிடம் இருந்து போராட்ட குணத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் வெளிநாடுகள், உள்நாடுகள், புலனாய்வாளர்கள், இராணுவம் என பல தரப்பாலும் முன்னெடுக்கப்படுகினது. மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ள புலனாய்வாளர்களிடம் இருந்து அவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களது செயற்பாடுகளை மக்கள் மூலம் இங்கு முன்னெடுக்கிறார்கள்.

தன்னிச்சையாக முன்னெடுக்கின்றார்கள். அரசியல்வாதிகள் வேண்டாம் என முன்னெடுக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உள்ளெடுக்க வேண்டாம் என்று சொல்லி முன்னெடுக்கிறார்கள்.

அவை ஆராயப்பட வேண்டும். தமிழ் மக்கள் மனதில் வைத்து அப்படியானவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். அவர்கள் உள்ளே இருக்கின்ற சுமுகமான நிலையைக் கூட உருக்குலைக்கின்றார்களோ என்று எண்ண தோன்றுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்ற ரணில் : பொது மேடையில் விளாசித்தள்ளிய அநுரகுமார எம்.பி!!

ரணில் விக்ரமசிங்க குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்று தற்போது செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாதவரால் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்

மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பாட்டில் கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டின் போலி காவல் தெய்வமாக மாற முயற்சி செய்கின்றார். ரணில் விக்ரமசிங்க எந்த ஜனநாயகத்தை பாதுகாத்தார்.

சிங்கப்பூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு அதை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டார். சீனர்களுடன் கைகோர்த்துக் கொண்டார்.

அன்று அவருக்கு ஜனநாயகம் தெரியவில்லை. அவர் ஜனநாயகத்திற்கு அமைய செயற்படவில்லை. நாடாளுமன்றிலும் ஜனநாயகத்திற்கு அமைய செயற்படவில்லை. நாடாளுமன்றை கேளிக்கையிடமாக பயன்படுத்தினார்.

எனினும், இன்று நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் கதைக்கின்றார். ரணில் பொறுப்புடன் செயற்படவில்லை. இன்று ஜனநாயகத்தின் போலி காவல் தெய்வமாக மாற முயற்சி செய்கின்றார்.

கட்சியின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாதவரால் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியுமா? குள்ள நரியின் பாத்திரத்தை ஏற்று தற்போது ரணில் செய்படுகின்றார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

என்னை ஓரம் கட்ட முயற்சிக்கின்றனர் : சந்திரிக்கா கவலை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், தன்னை கட்சியில் இருந்து ஓரம் கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஸ்மன் பியதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்கு, என்னையும், களனி அமைப்பாளர் திலக் வாரகொடவையும் தவிர, ஏனையவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

என்னையும் வேரகொடவையும் இந்த மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என்று அமைப்பாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன கேட்டுக் கொண்டதாக அறிகின்றேன்.

கடந்த 30ஆம் திகதியே அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு விட்ட போதும், இதுவரை எனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை.

கட்சியில் இருந்து என்னை ஓரம் கட்டுவதற்கான முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது” என சந்திரிகா கூறியுள்ளார்.

எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை : பொலிஸார் வெளியிட்ட காரணம்!!

2008 முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எட்டு பெண்கள் உள்ளிட்ட 96 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 34 பெண்கள் உள்ளிட்ட 275 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஹெரோயின், கொக்கையின், மார்பின் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள் வைத்திருந்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு 5,166 மில்லியன் ரூபா பெறுமதியான 430.5 கிலோ ஹொரேயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 37,304 பேர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு 231.5 கிலோ நிறையுடை இரண்டாவது பெரிய ஹெரோயின் போதைப்பொருளும், 103 கிலோ நிறையுடை ஐந்தாவது பெரிய ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

சீதனமாக வழங்கப்பட்ட 13 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள்!!

வெல்லவாய பிரதேசத்திலிருந்து கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணப்பெண் ஒருவருக்கு சீதனமாக 13 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் பஸ் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸார் அதனை கைப்பபற்றியுள்ளனர்.

உடுநுவர வெலம்பொட பொலிஸார் குறித்த கஞ்சா போதைப் பொருளையும், அதனை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

திருமண வீட்டுக்காக கொண்டு செல்லப்படும் சீதனப் பலகாரப் பெட்டிகள் என்ற போர்வையில் கார்ட்போர்ட் பெட்டிகளில் இந்தப் போதைப் பொருள் பொதியிடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கண்டியை மையமாகக் கொண்டு கம்பளை, பேரதனை, கெலிஓயா உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பல இடங்களுக்கு வெல்லவாய பிரதேசத்திலிருந்து கஞ்சா போதைப் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பஸ்ஸில் பயணம் செய்த குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணை செய்த போது மணப் பெண் ஒருவருக்கான சீதனப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை வெல்லவாயவிலிருந்து கண்டிக்கு எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா போதைப் பொருள் அடங்கிய பதின்மூன்று பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதன் சந்தைப் பெறுமதி 13 லட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மஹிந்த!!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவினை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை நியமித்தமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இடைக்கால உத்தரவு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்தமை தென்னிலங்கை அரசியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றில் ஒருபோதும் செய்யாத காரியத்தை இன்று நீதிமன்றம் செய்துள்ளதாக மஹிந்த விமர்சித்தார்.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தினால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதில்லை.

எனினும் ஜனாதிபதி மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளனர்.இதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வழமையை போன்று நடத்திச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹென்பிட்டிய அபயராமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் தீர்ப்புகளை எந்தவொரு நபரும் விமர்சிக்க முடியாது. எனினும் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காலை இழந்த பெண்!!

குறித்த சம்பவம் கடந்த 4 ம் திகதி மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிசென்ற டிப்பர் வாகனம் செட்டிகுளம் தபால் நிலையத்திற்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வீதி வழியே மாடுகளை மேய்த்துச் சென்ற வயோதிப் பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டுசெட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். காலில் பலத்தகாயம் ஏற்பட்டமையால் அவருடைய ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது.

டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிசாரால் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 461 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!!

 

வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி நிலை காரணமாக 21 ஆயிரத்து 461 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசஅதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் வறட்சி நிவாரணம் வழங்கும் செயற்பாடு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த காலத்தில் வவுனியாவும் பாதிப்படைந்தது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 2016 – 2017 பெரும் போகம், 2017 சிறுபோகம், 2017 – 2018 பெரும்போகம் ஆகிய மூன்று போக காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட மேட்டுநில பயிர்ச் செய்கையாளர்கள், விவசாய கூலிகள், நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் ஆகியோருக்கே இந் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இவர்களுக்குரிய நிவாரணத்தை மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்குகின்றது.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 10525 குடும்பங்களும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 2765 குடும்பங்களும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1810 குடும்பங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 6361 குடும்பங்களுக்கு ஆக 21ஆயிரத்து 461 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கே இந் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இவை தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணத்தை தொடர்ந்துபெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பயனாளிகள் மாத வருமானம் 20 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்டதாகவும், பயிர்செய்கை அழிவுக்கு காப்புறுதி பெறாதவர்களாகவும், வாகனம் மற்றும் கடை உள்ளவர்களாக இருக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.