66 வயது முதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்!!

பணத்தினை ஏமாற்றிய பெண்

இணையத்தளம் வாயிலாக இரு இதயங்கள் சந்தித்துக்கொள்வது தற்போது அதிகரித்துவிட்டது. தங்களுடைய வாழ்க்கை துணையை இணையதளம் வாயிலாக சந்தித்து திருமண பந்தத்தில் இணையும் இந்த காலத்தில், அப்படியொரு இணையதளமே சில சமயங்களில் பல ஏமாற்றங்களையும் அளித்துவிடுகிறது.

66 வயதான முதியவர் தனது பணி ஓய்வு பெற்றபின் கிடைத்த பணத்தில் சந்தோஷமாய் வாழ்வதை விட்டுவிட்டு காதல் என்று நம்பி தன்னிடம் உள்ள லட்சக்கணக்கான பணத்தினை இழந்துள்ளார். Roy Twiggs என்ற 66 வயது நபர் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், 22 வயது பெண்ணுடன் இணையதளம் வாயிலாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

ஒருவருக்கொருவர் சாட் செய்து கொண்டனர், நாளடைவில் இவர்கள் நெருக்கமானார்கள். அது காதலாக மாறியது. முதியவரும் அப்பெண் தன்னை காதலிக்கிறாள் என நம்பி, ஆசையாக இருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் அப்பெண், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எனக்கூறியுள்ளார். தனது காதலிதானே கேட்கிறாள் என கருதி, £100,000 பவுண்டினை ஒன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்துள்ளார். பணம் வாங்கிய ஆரம்பத்தில் நன்றாக பேசியபின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சுயரூபத்தை காட்டியுள்ளார்.

இவருடன் பேசுவதை குறைத்துக்கொண்ட அப்பெண், பின்னர் நாளடைவில் இவருடனான தொடர்பை முற்றிலும் குறைத்துக்கொண்டார். அப்போதுதான் அந்த முதியவருக்கு தெரியவந்துள்ளது, காதல் எனும் போர்வையில் தான் ஏமாற்றப்பட்டுள்ளது.

அவர்கள் நாசமாகப் போகட்டும் : தீயில் கருகிய மாணவியின் தந்தை உருக்கம்!!

மாணவியின் தந்தை உருக்கம்

2000ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திகதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி, கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது அப்போது இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டனர்.

அதில் உச்சகட்ட வன்முறையாக தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவம் நடந்தது. தருமபுரி, பாரதிபுரம் எனும் இடத்தில அதிமுகவினர், அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். அதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா எனும் மூன்று மாணவிகள் பேருந்தினுள்ளே தீயில் கருகி உயிரிழந்தனர்.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் மது என்கிற ரவீந்திரன் மூன்று பேரும் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல், எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளது.

இவர்களின் விடுதலை குறித்து மரணமடைந்த விருத்தாசலம் பூவனூரைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவியின் தந்தை கூறியதாவது, உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றினார்களோ அன்றே நீதி தேவதை தன் தலையைக் குனிந்து வேதனையுடன் கண்ணீர் வடித்தாள்.

இன்னமும் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறாள். இந்த நிகழ்வுக்கும் நீதி தேவதை கண்ணீர் வடிப்பாள். அவர்கள் நாசமாகப் போகட்டும் வேறு என்ன சொல்வது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

என்னை கொன்றுவிடாதீர்கள் என கெஞ்சிய கர்ப்பிணி மகளை கொடூரமாக கொலை செய்தது ஏன்? தந்தையின் வாக்குமூலம்!!

கொடூர கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில், சாதி மீறி திருமணம் செய்த நந்தீஸ் – சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வீசப்பட்டது. இந்த கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்தனர். நந்தீஸை 20க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளது.

அப்படியும் அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக இருவரின் முகங்களையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். சுவாதியின் தலை முடியை அரிவாளாலேயே மழித்துள்ளனர். மேலும், கருவைச் சிதைக்கும் நோக்கில் அவரின் அடிவயிற்றுப்பகுதியையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். அதன்பிறகே இருவரின் சடலங்களையும் காவிரி ஆற்றில் வீசிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். கைதான பெண்ணின் தந்தை சீனிவாசன் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது..

எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் நான் அவமானம் அடைந்தேன். இதனால் நான் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டேன். கடந்த 10-ந் தேதி ஓசூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் வருவதாக அறிந்தேன். அவரை பார்ப்பதற்காக எப்படியும் நந்தீஸ், சுவாதி வருவார்கள் என அறிந்து கொண்டேன். இதனால் அங்கு வந்த அவர்களை எனது உறவினர்கள் மூலமாக நைசாக பேசி அழைத்து சென்றேன். பின்னர் ஆத்திரத்தில் அவர்களை அடித்து கொலை செய்தோம் என கூறியுள்ளார்,

கொலையுண்ட நந்தீஸ் தான் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும், தன்னிடம் இருந்த செல்போன் மூலமாக ஓசூரில் உள்ள முக்கிய நபர் ஒருவருக்கு தகவல் அனுப்பி உள்ளார். அதில் கிட்நாப், நைஸ் ரோடு என்று குறிப்பிட்டுள்ளார். 11ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் இந்த தகவல் அந்த நபருக்கு சென்றுள்ளது. காலை 6 மணி அளவில் அந்த தகவலை பார்த்த அந்த நபர் நந்தீசின் உறவினர்களுக்கு தெரிவித்தார். இதன் பிறகே நந்தீஸ் – சுவாதி தம்பதியை தேடும் பணியை உறவினர்கள் தொடங்கினார்கள். தற்போது இந்த இரட்டை கொலையில் கர்நாடக பொலிசார் வழக்குப்பதிவு மட்டும் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்த மஹிந்த அணி? மைத்திரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது இடத்தை தக்கவைக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மகிந்த ராஜபக்ச தனக்கான அந்த இடத்தை பறிக்க மாட்டார் என்ற நிலையான முடிவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்திருக்கக் கூடும். இவர்களுக்கு இடையில் நடைபெற்றதாக கூறப்படும் பேச்சுவார்த்தையில் இந்த விடயமும் கட்டாயம் உள்ளடங்கி இருந்திருக்கும்.

எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டதுடன் நாமல் ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவில் இணைந்து விட்டனர்.

இதற்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் அவர்கள் ஒரு இணக்கத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் அவசியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என அந்த கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

நாட்டில் நிலவும் நிலைமைக்கு அமையவும் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையிலும் மைத்திரிபால சிறிசேன 25 சதவீத வாக்குகளை கூட பெற முடியாத சூழல் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவினர் கணக்கிட்டுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச அல்லது தனது நீண்டகால நண்பர் குமார வெல்கம ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குமார வெல்கம அரசியல் ரீதியாக நாகரீகமாக நடந்துக்கொள்வது அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் எதிர்ப்புகள் கிளம்பாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களை காட்டிக்கொடுத்துள்ளமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையால், மக்கள் மத்தியில் ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாடு உருவாகியுள்ளமை தொடர்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவனம் செலுத்தியுள்ளது.

இப்படியான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

-தமிழ்வின்-

ஹிருணிக்காவின் விலை இத்தனை கோடிகளா?

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர பெருந்தொகை பணத்திற்கு பேரம் பேசப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பு இன்னமும் உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தாவ வைப்பதற்காக தனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து தனது தாயிடம் பேரம் பேசப்பட்டுள்ளதாக ஹிருணிக்கா கூறியுள்ளார்.

அதற்கமைய கட்சி மாறுவதற்காக தனக்கு 65 கோடி ரூபாய் வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாக தாயாரிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்ற தொலைபேசி அழைப்பு ஒன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் அண்மையில் கிடைத்துள்ளதென ஹிருணிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று வழங்கிய விசேட உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியின் திடீர் மாற்றம்!!

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் சில பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் விசாரணைகளை நடத்தி வந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய பொலிஸ் ஆணைக்குழு இதனை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு இடமாற்றம் வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்றைய தினம் குறித்த இடமாற்றத்தை ஜனாதிபதி ரத்து செய்துள்ளார்.

நிஷாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஓடையில் தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக பலி!!

நிவித்திகல தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் மகேஸ்வரன் சுஜீவன் (வயது 11) நேற்று(19) தொலஸ்வல பிரதேசத்தில் கற்பாறை ஓடை ஒன்றைக் கடந்து செல்லும்போது அதில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

மேற்படி சம்பவம் குறித்துத் தெரியவருகையில், நேற்று பாடசாலை விட்டு தமது நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்ற போது தொலஸ்வல கற்பாறை ஓடை ஒன்றில் தவறி விழுந்து நீரில் அடித்துச் சென்றுள்ளார். இதைக் கண்டு அவருடன் சென்ற நண்பர்கள் அப்பிரதேச மக்களிடம் கூறியதையடுத்து பிரதேச மக்கள் மேற்படி குறித்த சிறுவனை உயிரிழந்த நிலையில் நீரிலிருந்து எடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவனின் சடலம் தற்போது இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வன்னியின் வாதச்சமர் இறுதிப்போட்டி – 2018!!

தமிழ் மாமன்றம் நடாத்தும் வன்னியின் வாதச்சமர் 2018 இறுதிப்போட்டிகள் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (20.11.2018) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தமிழ் மாமன்றத்தின் தலைவர் கு.அனுஜன் தலமையில் நடைபெற்று வருகின்றன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ரீதியில் போட்டிகள் இடம்பெற்று அவற்றிலிருந்து மாவட்ட ரீதியில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி , மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி ஆகியன இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.

மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக்களுக்கிடையே தற்போது இறுதிச்சுற்றுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இப் போட்டியின் நடுவர்களாக தாலிக்குளம் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் கா.பிரதீஸ், சட்டத்தரணி லோ.அருணியா, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் செ.மதுரகன், சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தெ.துர்க்காயினி , உள சமூக சேவையாளர் ஆ.ஜெசிதா, ஆசிரியர் ஜ.கதிர்காமசேகரன், மென்பொருட் பொறியியலாளர் ச.கஜன் ஆகியோர் அங்கத்துவம் வகித்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பினை தமிழ் மாமன்றத்தின் பொருளாளர் கு.சிரஞ்சீதன் வழங்கி வருவதுடன் பார்வையாளர்களாக பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு!!

திருட்டு

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் உடைத்து திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இன்று (20.11.2018) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தினை திறப்பதற்கான சென்றிருந்த சமயத்தில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதினை அறிந்த உரிமையாளர் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக நிலையத்திலிருந்து தொலைபேசி மீள்நிரப்பு அட்டை, சிகரட் என்பன களவாடப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னரே முழுமையான தகவல்களை வழங்க முடியுமென வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மாகாண சபைக்குள் ஆபாச படங்கள் பார்த்த உறுப்பிர்களால் பெரும் சர்ச்சை!!

மேல் மாகாணசபையில் அதன் உறுப்பினர்கள் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய ஆற்றிக் கொண்டிருந்தார்.

இதன்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வ கணினி உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கணினிகளிலேயே, வயதான மாகாணசபை உறுப்பினர்கள் கூட, ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மாகாண சபை உறுப்பினர்கள் மோசமான செயற்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரணில் தரப்பு வைத்துள்ள செக் : சிக்கலில் மகிந்த!!

பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்சவை பிதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ஆகியோர் உரிமை கோரி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமராக பதியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், பிரதமர் செயலகத்தை செயற்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது.

பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாடாளுமன்றக் குழு அறையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்துள்ளது.

இந்தப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, எதிர்வரும் 29ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அரச நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்றமே கட்டுப்படுத்துகின்றது.

அந்தவகையில் மகிந்த ராஜபக்சவின் செயலகம் மற்றும் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

ஐ.தே.கவின் இந்த நடவடிக்கை மஹிந்த அரசுக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருக்கு விடுத்துள்ள அவசர அறிக்கை!!

நாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகளோ அல்லது அரச அதிகாரிகளோ பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இன்று இதனை அறிவித்துள்ளார்.

ரணவீர பொலிஸ் அலுவலர் ஒருவரை தாக்குவதும், அவர்கள் மீது மிளகாய்த்தூளை வீசுவதுமான காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ளது.

இந்த நிலையில் தம்மைப்பொறுத்தவரை பொலிஸாரை போன்று வந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்கள் என்று எண்ணத்தோன்றியதாக ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

எனவே தாம் தாக்கியவர் உண்மையான பொலிஸ்காரராக இருந்தால் அதற்கு மன்னிப்புக்கோருவதாக பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பொலிஸார் மீது மீண்டும் மிளகாய் தூள் தாக்குதல்!!

தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனாமலுவ பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்றில் நடத்திச் செல்லப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்தை நேற்று சுற்றிவளைக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த நபர்கள் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் 5 அதிகாரிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது மோசமான ஆயுதங்களில் மிளகாய் தூளும் ஒன்றாக மாறிவிட்டது.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போதும், உறுப்பினர்களுக்கு இடையில் மிளகாய் தூள் தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், பாதுகாப்பிற்காக வந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தம்புள்ளையில் மீண்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குத் மேற்கொள்ளப்பட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடியால் நம்பிக்கை இழந்துள்ள கூட்டமைப்பு : எடுக்கப் போகும் அதிரடி முடிவு!!

சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து, இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த கூட்டமைப்பு தயாராகி வருகிறது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை பெறும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளன.

பொதுநலவாய நாடுகளின் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இராஜதந்திரகளையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நாட்டிள் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றை எதிர்பார்ப்பதில் பயனில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் நோக்கி செல்வதற்கு எந்த விதத்தில் வாய்ப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 பேரை திருமணம் செய்துகொண்டு சொகுசு வாழ்க்கை : விசாரணையில் அதிர்ந்து போன பொலிஸார்!!

அதிர்ந்து போன பொலிஸார்

ஆந்திர மாநிலத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்வதும், பின்னர் அவர்களை விவாகரத்து செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மதினிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் ரெட்டி என்பவரின் மகள் மோனிகா. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு, முன்பு ராமகிருஷ்ணா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். வரதட்சணை எதுவும் கொடுக்காத நிலையிலும், மோனிகா அழகாக இருந்ததால் ராமகிருஷ்ணா அவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 25ம் தேதி வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு, சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி மோனிகா கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் மனைவி வீடு திரும்பவில்லை. அவருடைய சொந்த ஊருக்கு சென்று பார்த்த போது அங்கும் அவர்கள் இல்லை. இதனால் சந்தேகமடைந்த ராமகிருஷ்ணா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் செல்போன் சிக்னலை வைத்து விஜயவாடாவில் மோனிகாவையும் அவருடன் ஒரு இளைஞர் இருப்பதையும் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோனிகா ஏற்கனவே 7 பணக்காரர்களை திருமணம் செய்துகொண்டு அவர்களை விவாகரத்து செய்திருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் வழுத்ததையடுத்து மோனிகாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், பணம் மற்றும் நகைக்காக அவர் இப்படி திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி வருவது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக அவருடைய தந்தை மற்றும் இளைஞர் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவர் இறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மனைவி : அனாதையான 2 குழந்தைகள் : சோக சம்பவம்!!

வேலூர் அருகே மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (35). நகைக்கடை நடத்தி வரும் ஹரி கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக குமாரி (27) என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மதியழகன் என்ற மகனும், 3 வயதில் சோபியா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகவே மர்ம காய்ச்சலால் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியினர், உடல்நிலையில் சரிவர முன்னேற்றம் ஏற்படாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

நேற்று மாலை திடீரென இருவருக்கும் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக இருவரையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக காய்ச்சல் முற்றி ஹரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவர் இறந்தது கூட தெரியாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குமாரியும் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கும் வேளையில், இரண்டு குழந்தைகளையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர்.