புதுக்குடியிருப்பு – கோம்பாவில் பகுதியில் பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் வீதியில் சென்ற தனியார் பேருந்து ஒன்றே நேற்று இரவு புதுக்குடியிருப்பு பகுதியில் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேருந்து உரிமையாளர் அவருடைய வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியோரத்தில் நேற்று இரவு பேருந்தை நிறுத்தி வைத்த பின்னர் எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனை முன்பாக இன்று (21.11.2018) காலை 10.30 மணியளவில் தந்தையை விடுவிக்க கோரி அவர்களின் பிள்ளைகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை, வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக கூறி, பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பாடசாலை மாணவனை தாக்கினார் என்ற குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி, கைக்குழந்தை மற்றும் அப்பாடசாலையில் கல்வி கற்கும் அவருடைய இரண்டு மகள்களும் இணைந்து இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் பொலிஸாரே எமது முறைப்பாட்டை ஏற்காதது ஏன், எங்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்திய முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு சட்ட நடவடிக்கை எடு, அதிபரின் பலவந்தமான ஆர்ப்பாட்டத்தில் இருந்து எங்களை மீட்க வந்த எங்கள் தந்தையை கைது செய்தது ஏன் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கறுப்பு பட்டியினை அணிந்தவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிள்ளைகள் தெரிவிக்கையில், எமது பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதன்போது எமது தந்தை எம்மை பாடசாலைக்கு உள்ளே செல்லுமாறு கூறுவதற்கு அவ்விடத்திற்கு வந்தார்.
அவ்வேளை அதிபரின் தம்பியும் அவரது நண்பர்களும் எமது தந்தையை தாக்குவதற்கு முயன்றனர். அப்போது அவ்விடத்தில் நின்ற போக்குவரத்து பொலிஸார் தந்தையை அதில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அப்பாடசாலையில் கல்வி கற்கும் அதிபரின் தங்கையின் மகனை வைத்தியசாலையில் அனுமதித்துடன் எங்களுடைய தந்தை, குறித்த மாணவனை தாக்கியதாக கூறி பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்தனர்.
அதனடிப்படையில் பொலிஸார், தற்போது எங்களது தந்தையை கைது செய்துள்ளனர். ஆகையால் அவரை விடுதலை செய்தால் தான் நாங்கள் சாப்பிடுவோம், பாடசாலைக்கு செல்வோம், பரீட்சை எழுதுவோம்” என அப்பிள்ளைகள் குறிப்பிட்டனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் தனது காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் இயக்குநர் தற்கொலை செய்துகொண்டார். 23 வயதான மணி என்பவர் பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களாக தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் தனது வீட்டில் மணி, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டிப்ளமோ படித்துள்ள மணி, சினிமாத்துறையில் சேர வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக ஏராளமான கதைகளை எழுதி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணி இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பது கிடைத்தது அதில் “நீ இல்லாத உலகில் என்னால் வாழ முடியவில்லை” என்று எழுதியிருந்தார்.
மணி அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அதில் இருந்து மணி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். எனவே காதலி இறந்த துக்கம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த நிலையில் அவரை கொல்லப்பட்டுள்ளார் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை காசிமேட்டை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (26). இவருக்கும் சரவணன் (35) என்பவருக்கும் 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது சரவணணுக்கு 7 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுக்கப்பட்ட நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு அவர் குடுமபத்தார் ஜெயஸ்ரீயை கொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.
இதனையடுத்து ஜெயஸ்ரீ மனஉளைச்சல் காரணமாக தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி அதே பகுதியில் தனிக்குடித்தனம் வைத்தனர். அப்போது பெற்றோர் வீட்டிற்கு வந்த ஜெயஸ்ரீ தன்னுடைய சாவுக்கு கணவர், மாமனார், மாமியார் தான் காரணம் என்று கடிதம் எழுதி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
இதற்கிடையே ஜெயஸ்ரீக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர், மாமனார், மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதாக நேற்று முன்தினம் தனது தந்தையிடம் கூறினார். அவர் மகள் வீட்டிற்கு சென்று தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதற்கு ஜெயஸ்ரீ சில பிரச்சினைகள் இருக்கிறது, அதனை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறி தந்தையை அனுப்பிவிட்டார்.
வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் ஜெயஸ்ரீயுடன் செல்போனில் பேச முயன்றார். அப்போது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சரவணனுடன் பேசியபோது, உங்கள் மகள் கதவை பூட்டிக்கொண்டு திறக்கமாட்டேன் என்கிறாள் என்று கூறினார். இதனால் பதறிப்போன ஜெகநாதன் மகள் வீட்டுக்கு விரைந்து சென்று கதவை திறந்து பார்த்தபோது மின் விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் ஜெயஸ்ரீ பிணமாக கிடந்தார். அருகில் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ஜெயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனது மகளின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடுகின்றனர். எனது மகள் உடலில் காயங்கள் உள்ளன. எனவே எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயஸ்ரீயின் தந்தை ஜெகநாதன் பொலிசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் ஜெயஸ்ரீயின் கணவர் சரவணன், மாமனார் பாலகிருஷ்ணன், மாமியார் பத்மினி ஆகியோரை பொலிசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் 15 வயது பேத்தியின் திருமணத்துக்கு தாத்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சொந்த மகனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இவரின் மகன் குமார். குமாருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் தனது மகளை சுப்ரமணி என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க குமார் முடிவு செய்தார். திருமணம் செலவுகள் அனைத்தையும் ஏற்று கொள்வதாக கூறிய சுப்ரமணி, வரதட்சணை எதுவும் வேண்டாம் எனவும் குமாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம் என சிறுமியின் தாத்தாவும், குமாரின் அப்பாவுமான ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் திருமண வேலைகளை குமார் செய்து வந்தார்.
இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக மர்ம நபர் ஒருவர் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து குமார் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர்.
இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இத்திருமணத்தை எதிர்த்த ஈஸ்வரப்பா தான் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் என நினைத்த ஈஸ்வரப்பாவும், சுப்ரமணியனும் அவருடன் சண்டை போட்டுள்ளனர்.
அப்போது பெற்ற தந்தையான ஈஸ்வரப்பா தலை மீது கல்லை போட்டு கொன்றார் குமார். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் குமாரை அவர்கள் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுப்ரமணியை தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் வங்கியில் பணிபுரியும் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிசங்கர் (32). மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வரும் இசக்கி, வழக்குபோல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக கிராமம் அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இசக்கியை கொலை செய்வதற்காக விரட்டியுள்ளனர். அதிலிருந்து தப்பிக்க முயற்சித்த இசக்கி ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் விரட்டி படுபயங்கரமாக தலை, கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்தது இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் இசக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இசக்கி தனது வீட்டின் அருகே உள்ள வேற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இது இருவரின் வீட்டிற்கு தெரியாமல் இருந்தாலும், கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக தனிமையில் இருவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தது பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் இருவீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் சண்டையில் புகுந்து சமாதானம் செய்து வைத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு பெண்ணின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இசக்கி பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது ஆணவக்கொலையாக இருக்குமா என பொலிஸார் சந்தேகித்து வருகின்றனர்.
வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று (21.11.2018) பூங்கா வீதியில் பரவலாக வீசப்பட்டு கிடைந்தன.
வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக (Whole Sale Market அருகாமையில்) அமைக்கப்பட்டுள்ள பாதணி விற்பனை நிலையம் திறப்பதற்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோத முறையில் அனுமதி பெற்று முன்புறமாக வேலை நடைபெற்று வருகின்றது.
இது முற்றிலும் அரசாங்கத்திற்கு எதிரான செயல். இதற்கு அனுமதி வழங்கியதும் ஒத்துளைப்பும் பங்களிப்பும் மறைமுகமாக நகரசபை அதிகாரிகளிடமிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இதனை நாங்கள் மிகவும் தாழ்மையான முறையில் உங்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றோம் .
நீங்கள் இதன் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நாங்கள் இதில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளினதும் முழு விபரங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் பகிரங்கமாக மக்களுக்கு கொண்டு சென்று அனைவரையும் பணிநீக்குவோம், மற்றும் இப்படியான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கு தகுந்த தண்டணை அளிக்கப்படும் என்பதனையும் தெரிவிக்கின்றோம் என்பதுடன் மேலும் பல விடயங்கள் துண்டுப்பிரசுரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. துண்டுப்பிரசுரத்தில் கீழ் பகுதியில் இவ்வண்ணம் பொது மக்கள் நலன் அமைப்பு உரிமை என கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 179 ரூபாயை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 175.11 ரூபாய் எனவும், விற்பனை விலை 179.04 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்கள் சம்பந்தமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இந்த நிலை நீடித்தால், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 190 ரூபாய் வரை உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் பொது தேர்தல் பாரிய பாதிப்பு ஏற்படும் என கட்சியின் முக்கியஸ்தர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்க மாட்டார் என்ற நிலைப்பாட்டுக்கு ஐக்கிய தேசிய கட்சி வந்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் உயர் தலைவர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக பொதுத் தேர்தல் தனியாக பிரதமர் வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதற்கு கட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்படியிருப்பினும் அந்த யோசனைக்கு ரணில் விக்ரமசிங்க இணக்கப்பாடுகளை வெளியிடாமையினால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கமைய தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் பலனில்லை என சிறுபான்மை கட்சியினர் பல முறை தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் வலைத்தளம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்த விதத்திலும் பேஸ்புக் தடை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மொழிபெயர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் ரஜிவ் யசிரு குருவிட்டகே மெத்திவ் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அறிக்கையில்,
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் நேற்றைய தினம் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இந்த முடக்கம் காரணமாக மில்லியன் கணக்கிலான சமூக வலைத்தள பயனாளர்கள் தங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் கணக்குகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் பேஸ்புக் பயனாளர்களே இந்த நிலைமைக்கு அதிகமாக முகம் கொடுத்துள்ளனர்.
சில மணி நேரங்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் ஆகிய வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பிய போதிலும், சில பயனாளர்களுக்கு குறைந்த வேகத்தில் இயங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு பேஸ்புக் செயலிழந்தமையினால், தங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களினால் பேஸ்புக் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என இலங்கை பயனாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் திட்டமிட்டு பேஸ்புக் முடக்கம் செய்யப்பட்டதாக போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை இலங்கையர்கள் எவரும் நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பேஸ்புக் வேகமாக இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகரசபை கலாச்சாரக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் கலாச்சார விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தற்போது அரசியல் கட்சியின் தலைவராகவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வதற்கு வந்தால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வவுனியா நகரசபையினால் நடாத்தப்படவுள்ள குறித்த விருதுவழங்கும் விழாவில் பல மூத்த கலைஞர்கள் படைப்பாளிகள், புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஒழுங்குபடுத்தியவர்களினால் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்நிகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்து பல தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த சில தரப்புக்கள் சில நகரசபை உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் திரைமறைவில் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.
சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக கடமையாற்றியபோது பழைய பேருந்து நிலையத்தின் செயற்பாடுகளை சரியான அணுகுமுறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் பல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பழைய பேருந்து நிலையத்திலிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் முதலமைச்சரின் நடவடிக்கையினால் மூடப்பட்டுள்ளதாக இத் தரப்புக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மதகுவைத்தகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் பலர் வேலையிழந்தும் தொழிலின்றியும் நிர்க்கதியான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதுடன் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20.11.2018) மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரன்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த அருணாசலம் தனுசன் (வயது 20), ராஜரட்ணம் (வயது 20) ஆகிய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 18,18, 24 வயதினை சேர்நத மூன்று இளைஞர்களை கைது செய்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் நாய் மற்றும் குரங்கு ஒன்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள தீவிர நட்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குருசேப்பன்குளம், கிராமத்தில் அபூர்வமான நட்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த நட்பு தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மக்கள் அதனை பார்வையிட கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் செல்லப்பிராணியாக போரா என்ற பெயரில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருகில் உள்ள காட்டில் வழி தெரியாமல் இருந்த குரங்குக்குட்டி ஒன்றை குறித்த உரிமையாளர் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக நாய் மற்றும் குரங்கள் எதிரிகள் என்பதனால் முதலில் குரங்கை கூடொன்றில் அடைப்பதற்கு வீட்டு உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் யாருக்கும் தெரியாமல் கூட்டில் இருந்து வெளியே வந்த குரங்கு நாயுடன் விளையாட ஆரம்பித்துள்ளது.
அன்று முதல் இந்த நாய் மற்றும் குரங்கிற்கு இடையில் நம்ப முடியாத நட்புறவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாய்க்கு போரா என்ற பெயர் வைக்கப்பபட்டமையினால் குரங்கிற்கு கண்ணன் என பெயரிடப்பட்டுள்ளது. போரா என அழைத்தால் இரண்டுமே ஒன்றாக தான் வரும். போராவின் மீது ஏறியே கண்ணன் வருவான். ஒன்றாக சாப்பிட்டு, இருவரும் ஒன்றாகவே உறங்குகின்றனர். இந்த உறவு அந்த பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
முல்லேரியா பொலிஸ் பிரிவில் களணிமுல்ல – கங்கபோட வெலே கோவிலில் உள்ள காளி அம்மன் சிலைக்கு முன்னால் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை போத்தலால் கொடுரமாக தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த நபரொருவர் கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டதாக மிரிஹான சிறப்பு குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவறான தொடர்பைப் பேணியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிந்திவெல, பாபிலிவெலா மற்றும் வேரஹரா பிரதேசத்தைச் சேர்ந்த தமாரா தில்ருக்சி சமராநாயக்க என்ற (42 வயது) பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண் சிவில் பாதுகாப்பு அதிகாரியை திருமணம் செய்து வாழ்ந்த நிலையில், கணவர் அவரை விட்டுப் பிரிந்து மற்றொரு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குறித்த பெண்ணுடன் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரின் சாரதி தொடர்பைப் பேணி வந்ததாக கூறப்படுகிறது.
குறித்த பெண்ணை ஹொட்டலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் சந்தேக நபர் கோவிலுக்கு அழைத்துச் சென்று இந்தகொலையைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தபெண்ணின் கைப்பை பியகம ஆற்றில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 34 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சர்வதேச போர்ப்ஸ் சஞ்சிகை மற்றும் BBCயினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய தெரிவான பெண்களில் இருவர் இலங்கையர்கள் ஆவார்.
2019ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் எதிர்காலத்தை மாற்றும் 30 வயதுக்கு குறைவான 30 பேர் தெரிவு செய்யும் பட்டியலை சர்வதேச போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டது.
அதற்கமைய அந்த பட்டியலில் ஸ்டென்பர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் 28 வயதாக இலங்கை இளம் பெண்ணான ஹசினி ஜயதிலக்க பெயரிடப்பட்டுள்ளார்.
மனிதனின் உடலில் புற்றுநோய் எவ்வாறு செயற்படுகிறது, அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் புதிய கண்டுபிடிப்பினை ஹிசினி ஜயதிலக்க மேற்கொண்டார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தப் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.
இதேவேளை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் 100 பெண்களின் பட்டியலை பிபிசி செய்தி சேவை, வருடாந்தம் வெளியிடுகிறது. இந்தப் பட்டியலில் இலங்கை பெண்ணான ஆஷா டி வோஸ் தெரிவாகியுள்ளார்.
ஆஷா 100 பெண்களில் 23 வது இடத்திற்கு தெரிவாகியுள்ளார். ஆஷா டி வோஸ் கடல் சார்ந்த ஆய்வாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் காரொன்ருடன் மோதியதில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று நண்பகல் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
கந்தர் மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த புகையிரதம் காரை மோதி கந்தர் மடம் அரசடி வீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கார் முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ். வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.