தடுமாறும் இலங்கை அரசியல் : அதிரடி மாற்றத்திற்கு தயாரான ஜனாதிபதி மைத்திரி!!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் அரசியல் மோதல் நிலையில், அரசியலமைப்புக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா பிரேரணையில் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனிவே நாளை மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்த மாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்தார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நாளை அவர்கள் நேர்மையற்ற முறையில் செயற்படுவார்களானால் வாய் மூல வாக்கெடுப்பினை ஒத்துக்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்னர் வரை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையை அண்மிக்கும் அபாயரமான கஜா புயல் : வடக்கு மக்கள் அவதானம்!!

மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல் மேலும் வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

“இன்று மாலையிலிருந்து யாழ். குடாநாட்டில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு 11.30 மணியளவில் இலங்கைக்கு வட. கிழக்காக காங்கேசந்துறையிலிருந்து அண்ணளவாக 480 கி.மீ தூரத்தில் கஜா புயல் நிலைகொண்டது.

இது அடுத்த 6 மணித்தியாலங்களில் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்வதுடன் பலமான சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் காணப்பட்டது.

இந்நிலையில், குறித்த புயல் தென் தமிழ்நாடு கரையைக் கடப்பதுடன் இலங்கையின் வடக்கு கரைக்கு நெருக்கமாகவும் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் தாக்கம் காரணமாக மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்தின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உட்புகக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வட மாகாணத்தில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

யாழ். குடாநாட்டில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் அநுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதோடு மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர்? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

நாடாளுமன்றத்திற்குள் கத்தி கொண்டு சென்ற உறுப்பினர் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெரும கூடிய கத்தியுடன் தாக்க முயற்சி செய்துள்ளார்.
ஆக்கிரோஷமான முறையில் மஹிந்த தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ள பாலித்த பாய்ந்துள்ளார். எனினும் அங்கிருந்த சக உறுப்பினர்களை அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்ற கூடிய வேளையில் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சாபநாயகர் மீது தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியை சிலர் கத்தியுடன் நாடாளுமன்றத்திகுள் அட்டகாசம் செய்தனர்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதமர் யார் என்பது தொடர்பில் மஹிந்த – ரணில் தரப்பினருக்கு இடையில் பாரிய மோதல் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட சொன்ன கணவனின் காதலி : கொடூர கொலையின் பின்னணி!!

இந்திய தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து மனைவியை கொலை செய்த விவகாரத்தில் கணவனின் காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தீபிகாவின் கணவர் விக்ரம் சவுகானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 35 வயது ஷெஃபாலி பாசின் என்பவரையே பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இவர் 6 மாத கர்ப்பிணி என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபிகாவின் கொலை தொடர்பாக கணவர் விக்ரமுடன் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சம்பவத்தில் ஷெஃபாலியின் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது.

தீபிகாவை குடியிருப்பின் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய ஆலோசனை வழங்கியவரும் ஷெஃபாலி என தெரியவந்துள்ளது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் விக்ரம் மற்றும் ஷெஃபாலி ஆகிய இருவரும் தொலைபேசியில் உரையாடியதும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

ஷெஃபாலியுடன் விக்ரமிற்கு நெருங்கிய உறவு இருப்பதை தீபிகா அறிந்துகொண்ட பின்னர் இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 27 ஆம் திகதி தீபிகா கொல்லப்படுவதற்கு முன்னர் ஷெஃபாலியுடன் விக்ரம் கொலைக்கான திட்டம் வகுத்துள்ளது, அவர்களின் தொலைபேசி உரையாடலில் பதிவாகியுள்ளது.

பின்னர், 8-வது மாடியில் உள்ள தங்கள் குடியிருப்பின் பால்கணியில் தீபிகாவை இழுத்துச் சென்ற விக்ரம் அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் தமது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாருக்கும் உறவினர்களிடத்திலும் நாடகமாடியுள்ளார்.

ஆனால் அண்டை விட்டாரின் வாக்குமூலத்தில் இருந்து விக்ரம் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் விக்ரத்தின் கைகளில் காணப்பட்ட விரல் காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. தொடர்ந்து மனைவியை கொலை செய்தது தாம் என விக்ரம் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஓராண்டாக ஷெஃபாலியை விக்ரம் காதலித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரியாமல் இருவரும் ஒன்றாக 5 நாள் சுற்றுலாவுக்கும் சென்று வந்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!!

வவுனியா பட்டக்காடு குளத்திற்கு குளிப்பதற்கு இன்று(15.11) பிற்பகல் சிறுவர்களுடன் சென்ற திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று பிற்பகல் 4 மணியளவில் திருநாவற்குளம் பகுதியிலிருந்து அருகிலுள்ள பட்டக்காட்டு குளத்தில் குளிப்பதற்காக சிறுவர்களுடன் சென்று குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் தண்ணீரின் ஆழத்திற்குச் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஏனைய சிறுவர்கள் திருநாவற்குளம் பகுதியில் நின்ற இளைஞர்களுக்கு நடந்த விடயங்களை தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இளைஞர்கள் குளத்திற்குள் சென்று நீச்சல் அடித்து நீரின் அடிமட்டத்திலிருந்த குறித்த சுரேஸ்குமார் றொசான் என்ற 14 வயதுடைய சிறுவனை 15 நிமிட போராட்டத்தின் பின்னர் மீட்டு வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது எடுத்துவரும் வழியில் குறித்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல பேஷன் டிசைனர் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் பிரபல பேஷன் டிசைனர் மாலா லகானியும் அவரது உதவியாளரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடை தைத்துக் கொடுத்த பணத்தை மாலா கொடுக்காததால் அவரிடம் பணியாற்றிய தையல்காரர் இந்த கொலையை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் மாலா லகானி (53). பிரபல ஆடை வடிவமைப்பாளரான அவர், புதுமையான பல ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் ராகுல் என்பவர் தையல்காரராக பணியாற்றி வந்தார்.

அவர் கொடுக்கும் டிசைனுக்கு ஏற்ப ஆடைகளை தைத்துக் கொடுத்து வந்த ராகுலுக்கு உரிய கூலியை கொடுக்காமல் மாலா லகானி நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சரியாக பணியாற்றவில்லை என காரணம் கூறி பணத்தை தராமல் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் சம்பவத்தன்று தனது நண்பர்கள் ரஹ்மத் மற்றும் பஷிருடன் மாலா வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனக்கு தர வேண்டிய பணத்தை தருமாறு கூறி தகராறு செய்துள்ளார். அப்போது பேச்சவார்த்தை முற்றி ராகுலும் அவரது நண்பர்களும் சேர்ந்து மாலாவை தாக்க முயன்றனர். அப்போது மாலாவின் உதவியாளர் பகதூர் உள்ளே புகுந்து தடுத்துள்ளார். இதில் ராகுலும் அவரது நண்பர்களும், பகதூரை கத்தியால் குத்தியதுடன், மாலாவையும் தாக்கினர்.

கத்தி குத்தில் பலத்த காயமடைந்த மாலாவும், பகதூரும் உயிரிழந்தனர். இதையடுத்து ராகுல் அங்கிருந்து தப்பியுள்ளார். தகவல் அறிந்து வந்த பொலிசார் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல் மற்றும் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல்போன பாடசாலைச் சிறுமி கண்டுபிடிப்பு!!

பாடசாலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்டிருந்த சிறுமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர், மயிலம்பாவெளி சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி நேற்று பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்த நிலையில் பாடசாலைக்கும் செல்லாது வீட்டுக்கும் திரும்பாது காணாமல் போயிருந்தார் என்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மயிலம்பாவெளியிலுள்ள பாடசாலையொன்றில் 6ஆம் ஆண்டு கற்கும் இந்தச் சிறுமி நேற்று மாலை வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மட்டக்களப்பு நகரில் வைத்து உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வழமைபோன்று இந்தச் சிறுமி சவுக்கடியிலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளிலில் புறப்பட்டு மைலம்பாவெளியிலுள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்று அங்கு வைத்து சீருடைகளை மாற்றிக் கொண்டு பாடசாலை செல்வது வழக்கம்.

ஆயினும், நேற்று அவர் பாடசாலை சென்றிருக்கவில்லை என்று பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்தததையடுத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

தான் முன்னதாக தனது வீட்டிலிருந்து மயிலம்பாவெளிக்கும் பின்னர் அங்கிருந்து செங்கலடிக்கும் பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குச் சென்றதாக சிறுமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பில் ரணிலுக்காக சாரை சாரையாக படையெடுக்கும் பாரிய மக்கள் கூட்டம்!!

ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

வடகிழக்கை தனி நாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் : கொந்தளிக்கும் மனோ!!

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு வடகிழக்கு என்ற மாநிலம் உருவாகியிருந்தால் அதனை தனி நாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து இன்றைய அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை காட்டமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையிலுள்ள கட்சிகள் மத்தியில் நல்லிணக்கம் இல்லை. 1984ஆம் வருடத்தில் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு வடகிழக்கு என்ற தமிழ் மாநிலமொன்று உருவாவதற்கான சூழல் உருவாகிய போது அதனை விடுதலைப் புலிகள் தடுத்து விட்டார்கள்.

அவர்களின் கொள்கைகளின் அடிப்படையிலே இந்திய படைகளுடன் சண்டையிட்டு எல்லாவற்றையும் இல்லாமலாக்கிவிட்டார்கள். அப்படி இருந்திருந்தால் இன்று வடகிழக்கை தனி நாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்.

இவர்களுடன் சேரந்து வாழ முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். அந்தளவிற்கு மோசமான நிலை நிலவுகின்றது என கூறியுள்ளார்.

 

-தமிழ்வின்-

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 4 பேர் கைது!!

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 பேரை கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பயணிகளினால் உடமைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட 1 கிலோ 580 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடமிருந்து 1கிலோ 580 கிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாளை அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம் : சபாநாயகரின் திடீர் அறிவிப்பு!!

நாடாளுமன்றம் இன்று காலை கூடியிருந்த நிலையில் பிரதமரின் உரைக்கு பின்னர் அமளி துமளி ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாடாளுமன்றம் நாளையதினம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் நாளைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் கூடும் என குறித்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் கோர விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக பலி!!

அரியாலை – நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் காரொன்று மோதியதில் காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடனேயே குறித்த கார் மோதியுள்ளது. இதன்போது காரில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அரியாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சபையில் மஹிந்தவுடன் பேச வந்த முக்கியஸ்தருக்கு ஏற்பட்ட அவமானம் : வைரலாகும் புகைப்படம்!!

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தால் நாளை வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சில முக்கிய சம்பவங்கள் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக வெளிவருகின்றன.

முதலில் சபாநாயகர் ஆசனத்தை நோக்கி தண்ணீர், குப்பைகளை வீசிய காணொளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டு விழுந்த காட்சிகள் மற்றும் மஹிந்த – ரணில் போன்றோரின் செயற்பாடுகளை காணக்கூடியதாக இருந்தது.

அந்த வகையில் தற்போது மஹிந்தவிடம் உரையாடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரை தள்ளிவிட்ட காணொளி வெளியாகி உள்ளது.

இதில் மஹிந்தவைச் சுற்றி டக்ளஸ், பைசர் முஸ்தபா, நாமல் ராஜபக்ஸ, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட பல மஹிந்த அணி ஆதரவாளர்கள் இருந்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்கரணவக்க மஹிந்தவிடம் பேச முற்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் ரொஹான் ரத்வத்த அவரை தள்ளி விட்டுள்ளார்.

சம்பிக்கவை தள்ளி விட்டு ரொஹான் ரத்வத்த அவரை ஏசிய காணொளி வெளியாகி உள்ளது. இதனால் தடுமாற்றமடைந்த சம்பிக்கவை பின்னால் இருந்து நாமல் தாங்கிப்பிடித்தமையும் காணக்கூடியதாக உள்ளது.

நாடாளுமன்றம் 21ம் திகதிவரை ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட அசாதாரண நிலைக்குப் பின் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இடம்பெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிவிட்டு அமைதியாக சென்ற மஹிந்த, வேடிக்கை பார்த்த ரணில்!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என தெரிவித்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்ட மஹிந்த அணியினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகரின் ஆசனத்தை சுற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டதுடன், மஹிந்த அணியினரை நெருங்க விடாமல் பாதுகாத்தனர்.

இந்த நிலையில், சபாநாயகரின் மேசையில் இருந்த அனைத்து பொருட்களையும் மஹிந்த ஆதரவாளர்கள் தட்டிவிட்டதுடன், சண்டையிட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலை மோசமடைந்த நிலையில் சபாநாயகர் தமத ஆசனத்தை விட்டு எழுந்து சென்றிருந்தார்.

மேலும், மஹிந்தவும் தமது ஆசனத்தை விட்டு எழுந்து மெதுவாக வெளியேறினார். இத்தனை குழப்பங்களையும் ஒரு ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரணில் சற்று நேரம் அமர்ந்து இருந்து விட்டு அவரும் எழுந்து சென்றார்.

இந்த நிலையில் “தப்பி ஓடிவிட்டார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் கூச்சலிட்டு தற்போது நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடிதடி காரணமாக சில உறுப்பினர்களுக்கு காயம் : நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய சபாநாயகர்!!

நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற குழப்பநிலை மற்றும் அடிதடி காரணமாக சில உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய நிலையில் பிரதமர் தனது உரையை நிகழ்த்தினார். அந்த உரையை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன் கிரிஎல்ல தனது உரையை ஆரம்பித்த போது அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து குழப்பமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் மற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மோதல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், சாபநாயகர் , மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.