வவுனியாவில் CCTMS பாடசாலை பெற்றோர் கூட்டமும், நிர்வாக தெரிவும்!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் பெற்றோர் கூட்டமும், 2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இன்று (14.11) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் ஆரம்பமான பெற்றோர் கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் கூட்டத்தில் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய பாடசாலை அதிபர்
பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பெற்றோரின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்ததுடன் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் வேண்டத்தாகத பழக்க வழக்கங்கள் குறித்தும், அவைகளை கண்காணித்து மாணவர்களை நல்வழிப்படுத்துவது தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தார்.

அத்துடன் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் பாடசாலையில் உயர்தர கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்விருப்பதாக தெரிவித்தார்.

பெற்றோர் கூட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் நிகழ்வில் பெருமளவான பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

 

வவுனியா நகரசபை உறுப்பினர் காண்டீபன் ஒழுங்கமைப்பில் “எமது கிராமங்களை நாமே கட்டியெழுப்புவோம்”!!

வவுனியா நகர சபையின் முதலாம் வட்டார உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஒழுங்கமைப்பில் பத்தினியார் மகிழங்குள மயானத்தில் மழை காலங்களில் உடல்களை தகனம் செய்வதற்குரிய கட்டிட தொகுதி சமூக ஆர்வலர் திருமதி கனகையா இராசலட்சுமி பண உதவியுடன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் பத்தினியார் மகிழங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சோதிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், மரண உதவிச் சங்கத்தின் பொருளாளர் சுரேஷ்குமார், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர் புவி ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மயானத்தில் மழை காலங்களில் உடல்களை தகனம் செய்யும் கட்டிட தொகுதி அமைக்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் யுவதி ஒருவர் மீட்பு!!

முல்லைத்தீவு – பெருங்காட்டுப்பகுதியில், மயங்கிய நிலையில் இருந்த யுவதி ஒருவர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுசுட்டான் – வெள்ளிமலை ஏற்றக் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் கை வெட்டப்பட்டு மயங்கிய நிலையில் காணப்படுவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை மீட்டு முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் குறித்த யுவதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த 24 வயதுடை யுவதி ஒருவரே இவ்வாறு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பதற்றம்!!

நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் திரண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் மற்றும் பொதுஜன பெரமுண கட்சியினர் இடையில் இவ்வாறான அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கையொப்பமிட்டோர் விபரம் இதோ!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் 122 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு எதிராக ஜே.வி.பியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 102 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 122 பேரும் கையொப்பமிட்ட பிரேரணை தற்போது வெளியாகி உள்ளது.

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் : த.தே.கூட்டமைப்பில் கையொப்பமிட்டோர் விபரம்!!

மஹிந்தவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியையும் பதிவிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தில், ஜனாதிபதியால் 26ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல்கள், மற்றும் நியமனங்கள் சட்டத்திற்கு முரணானவை என்றும், 26ஆம் திகதிக்குப் பின்னர் மஹிந்தவை பிரதமராக நியமித்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில், 14 உறுப்பினர்கள் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளனர். இருவரது பெயர்கள் இதில் குறிப்பிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி நீக்கப்பட்டார் மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி விட்டோம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் மஹிந்த தோல்வியை அடைந்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கி விட்டோம் எனவும் இது அதிகாரபூர்வமானது எனவும் சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இளம் பெண்ணை எக்ஸ்ரே எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : என்ன இருந்தது தெரியுமா?

இந்தியாவில் இளம் பெண்ணின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது உள்ளே ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்க்கும் ஷெகர்கோட்டா பகுதியில் சங்கீதா என்ற இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றித்திரிந்துள்ளார். பல நாட்களாக அப்பகுதியிலே சுற்றித்திரிந்ததால், இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதிப்பதற்காக, ஸ்கேன் எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அவரின் வயிற்றில் ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்தது.

கொண்டை ஊசி, சேப்டி பின், கூரிய ஆணி என இரும்பால் ஆன சின்னச்சின்ன பொருள்கள் இருந்தன. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2 மணி நேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்கையில் சங்கீதாவின் வயிற்றிலிருந்த இரும்புப்பொருள்கள் அகற்றப்பட்டன.

சங்கீதாவுக்கு இரும்புப் பொருளை விழுங்கும் வினோத மனநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அவர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை : ஒத்திவைப்பின் தகவல்!!

நாங்கள் சிறுபான்மை அரசாங்கமாக செயல்படுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சற்று முன்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவருக்குமே பெரும்பான்மை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியிருந்தது.

எனினும் நாளை காலை பத்து மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு : சபாநாயகர் திடீர் அறிவிப்பு!!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று காலை கூடிய நாடாளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

சபை கூட்டப்படுவதற்கு முன் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை ஜே.வி.பி கொண்டு வந்திருந்தது.

இதையடுத்து இன்று நாடாளுமன்றில் என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருந்த நிலையில் நாடாளுமன்றம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் முற்பகல் 10.00 மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் மஹிந்தவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஜே.வி.பி எடுத்துள்ள முடிவு!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும். பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகியோர் தவிர்ந்த எந்த உறுப்பினரும் நாடாளுமன்ற அவையில் எந்த ஆசனத்திலும் அமரலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் தற்போது விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : வைரலாகும் புகைப்படங்கள்!!

நாடாளுமன்ற வளாகத்திற்கு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளதுடன், ஜனாதிபதி இதுவரை வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

வவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு!!

வவுனியாவில் 87 வழிப்பயண தனியார் பேரூந்துகள் இன்று (14.11.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சவும் தனியாரும் இணைந்த நேர அட்டவணையை நடைமுறைபடுத்தி தங்களது சேவைகளை மேற்கொள்ள வேண்டுமென கடந்த 02.11.2018ம் திகதி வவுனியா நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படடிருந்தது.

தீர்ப்பினையடுத்து கடந்த 6ம் திகதியிலிருந்து தனியார் மற்றும் இ.போ.ச பேரூந்துகள் இணைந்த நேர அட்டவணையின் பிரகாரமே சேவையில் ஈடுபட்டு வந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் 87 வழிப்பயண தனியார் பேரூந்துகள் தங்களுக்கு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதற்குறிய நேரம் போதாமையாக (20 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது) உள்ளதாக தெரிவித்து வவுனியாவிலிருந்து 87 வழிப்பயணப்பாதையினால் கொழும்பு நோக்கி பயணிக்கும் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் (87வழிப்பயணம்) சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் பிரதமர் பதவி தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் தற்சமயம் பெற்று வரும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது இந்தத் தகவலை வெளியிட்டார்.

இன்றைய தினம் மாத்திரம் பிரதமர் ஆசனத்தில் அமர மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வர்த்தகமானிக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக சபாநாயககர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய இன்றைய தினம் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சில சந்தர்ப்பங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதாக இந்த கூட்டத்தின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று  13-11-2018 (செவ்வாய்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.

வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும் இன்றைய தினம் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இன்று காலை முதல் முருகபெருமானுக்கு அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன இடம்பெற்று பிற்பகல் வேளையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் போர்க்கோலம் பூண்டு உள்வீதி வலம்வந்து மாலை 4.30 மணியளவில் போர்களத்துக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து யானை முகம்கொண்ட தாரகாசூரன் மற்றும் சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் ஆகிய சூரபத்மனது சகோதரர்களுடன் போர்புரிந்து அவர்களை சம்காரம் செய்து சூர பத்மனுடன் போரில் ஈடுபட்டு இறுதில் சூர சம்காரமும் இடம்பெற்றது .

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெறும் சூரன் போரில் பல்வேறு விதமான சிறப்புகள் காணப்படுவது வழமையானது.அதாவது மற்ற கோவில்களில் காணப்படும் சூரனில் தலையை மட்டுமே திருப்ப கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டிருப்பீர்கள் . ஆனால் இங்கே சூரனின் முழு உடலையும் திருப்பக்கூடிய வகையிலான சூரபத்மனது உருவம் காணப்படுவது சிறப்பாகும்.

அத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் சூரன் போரின் இறுதியில் முருகபெருமான் வேல் கொண்டு சூரனை வீழ்த்துகின்ற முறையும் அதன் பின் சூரன் சேவலாகவும் மயிலாகவும் மாறி முருகபெருமானிடம் சரணாகதி அடையும் நிகழ்வும் தத்துரூபமாக செய்து காட்டப்படுவதும் இங்குள்ள சிறப்பான நிகழ்வுகளாகும் ..

இன்றைய சூரன்போரில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மைத்திரியின் அவசர உத்தரவு : முப்படைகள் தயார் நிலையில்!!

நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்று இரவு ஜனாதிபதி மைத்திரி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இன்று இரவு நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் விசேட பாதுகாப்பு கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதன்போது, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.