ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்தெடுத்த அவுஸ்திரேலிய மருத்துவர்கள்!!

பூட்டானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் அவர்கள் பூரண குணம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

15 மாதக் குழந்தைகளான Nima மற்றும் Dawa Pelden, மார்பிலிருந்து வயிறு வரை ஒட்டியே பிறந்ததோடு இருவருக்கும் சேர்த்து ஒரு கல்லீரல்தான் இருந்தது.

அவுஸ்திரேலிய மருத்துவர்கள் ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக Nimaவையும் Dawaவையும் பிரித்தெடுத்தனர்.

அறுவை சிகிச்சையை தலைமையேற்று நடத்திய Dr Joe Crameri கூறும்போது, எந்த ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பெற்றோரிடம் சென்று, உங்கள் குழந்தையை எங்களால் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடிந்தது என்று கூறுவதைவிட சிறந்த விடயம் எதுவும் இல்லை என்று கூறினார்.

அறுவை சிகிச்சைக்கு முன் Nimaவாலும் Dawaவாலும் ஒரே நேரத்தில் சேர்ந்து நிற்க முடியுமேயொழிய உட்கார முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

18 மருத்துவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் போலவே இதிலும் 24 முதல் 48 மணி நேரத்திற்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் நல்ல முடிவு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

மகளை கொலை செய்த குற்றவாளி : நீதிமன்றத்தில் ஆவேசமான தந்தை : கதறி அழுத மனைவி!!

அமெரிக்காவில் மகளை கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் புகுந்து தந்தை தாக்க முற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நடாஷா லூச்சவ் என்ற பெண் தன்னுடைய முதல் கணவர் பீட்டர் ஆண்டர்சனை பிரிந்து காதலன் ரியான் பர்ஜ், 37 உடன் கடந்த 3 மாத காலமாக வசித்து வந்தார். பீட்டர் மூலம் நடாஷாவிற்கு பிறந்த 5 வயதான ஹார்ட்லி என்ற குழந்தை, வெள்ளிக்கிழமையன்று சுயநினைவில்லாமல் வீட்டில் கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், என்னை நடந்தது என கேட்கும்பொழுது, கோபத்தில் குழந்தை தன்னைத்தானே தாக்கிக்கொண்டதாக பர்ஜ் கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. உடனே குற்றவாளி பர்ஜை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை பீட்டர், பாதுகாவலர்கள் அனைவரையும் மீறி, குற்றவாளியை தாக்க முயன்றார். உடனே அவரை தடுத்து நிறுத்திய போலிஸார் நீதிமன்ற வளாகத்திலிருந்து அவரை வெளியேற்றினர்.

இதற்கிடையில் என்ன செய்வதென தெரியாமல் சிறுமியின் தாய் நீதிமன்றத்திலே கதறி அழுதுகொண்டிருந்துள்ளார். இந்த சம்பத்தை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர், குற்றவாளியை சிறையில் வைத்தே எரித்துக்கொள்ளுமாறு ஆவேசத்துடன் சத்தமிட்டுள்ளார்.

குழந்தையின் கண்முன் தூக்கில் தொங்கிய தாய்.. ரயில்முன் பாய்ந்த தந்தை.. அடுத்தடுத்து நடந்த சோகம்!!

ஐதராபாத் மாநிலத்தில் அடுத்தடுத்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால், 3 வயது குழந்தை அனாதையாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலம் குகத்பள்ளி காலனி பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து வருபவர் பபையா சௌதிரி. பபையா மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீஷா கச்சிபவ்லி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.

பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்த நிலத்தை விற்குமாறு, பபையா தன்னுடைய மனைவியை வற்புறுத்தியுள்ளார். அந்த நிலம் தன்னுடைய “திருமணத்தின் போது தந்தை கொடுத்தார். அது இனிமேல் மகளுக்கு சொந்தம்” எனக்கூறி ஸ்ரீஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீஷா, கணவர் வெளியில் சென்ற நேரம் பார்த்து தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இதற்கிடையில் தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்திருந்த ஸ்ரீஷாவின் சகோதரன், வெளியில் நின்று போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் செல்போனை எடுக்காததால், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்ற போது, குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்துள்ளது. ஸ்ரீஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உறவினர்கள் மற்றும் பபையாவிற்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஸ்ரீஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மனைவி இறந்த தூக்கம் தாளாமல் கணவனும் அடுத்து சில மணி நேரங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 5ம் திகதி தேர்தல் : ஜனவரி 17ம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றது!!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் இன்றைய தினம் கலைக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மைத்திரியின் கையொப்பத்துடன் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேலும் நடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளதுடன், நாடாளுமன்றின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை நடத்த முடியாது? மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த மகிந்த தேசப்பிரிய!!

உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளாது பொது தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான அரச வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை ஜனவரி மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ளது.

எனினும், உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளாது பொது தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

ஓய்வுபெற்ற  ரங்கன ஹேரத் : தோளில் சுமந்து பிரியாவிடை கொடுத்த சகவீரர்கள்!!

இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் காலி மைதானத்தில் நடந்து வருகிறது.

கடைசி டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார்.

காலி நகரில் நடைபெற்றும் முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர், ஓய்வு பெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.
அதன்படி, நேற்று காலி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெற்றார் ரங்கனா ஹேரத்.

மைதானத்திற்கு, அவரது மனைவி மற்றம் பிள்ளைகளும் வந்திருந்தனர். ஹேரத்தை தங்களது தோளில் சுமந்து சென்று இலங்கை வீரர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

40 வயதான ஹேரத் 1999ம் ஆண்டு காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 430 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியில் முரளிதரனுக்கு (800 விக்கெட்கள்) பிறகு அதிக விக்கெட்கள் வேட்டையாடியவர்களில் ஹேரத் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை உறுதி செய்தார் மகிந்த!!

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பிபிசி சிங்கள சேவையிடம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சற்று முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது : அதிர்ச்சியில் வெளிநாடுகள்!!

நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது!!

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமாரக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

இதனால் கொழும்பு அரசியல் பெரும் குழப்பமடைந்தது. பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உரிமை கோரி வந்த நிலையில், நாடாளுமன்றமும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றை கூட்ட தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

மன்னார் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (09.11) மன்னார், மாந்தை மேற்கு பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட பரப்பு கடந்தான் காட்டுப் பகுதியில் ஆணெருவரின் சடலம் இருப்பதனை பொதுமகன் ஒருவர் அவதானித்துள்ளார். இதையடுத்து அடம்பன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற அடம்பன் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் உயிரிழந்த நபர் 35 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் உயிரிழந்தவர் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்தவரெனவும் மேலதிக தகவல்களை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

வவுனியாவில் மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (09.11) இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து செட்டிக்குளம் பெரியகட்டு ஊடாக மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர்களில் ஒன்று மாடு குறுக்காக பாய்ந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த மற்றைய டிப்பர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சாரதிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் இவ் விபத்துக் குறித்து செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதேச வாசிகள்
மன்னார் நானாட்டான் பகுதியிலிருந்து பெருமளவான மாடுகள் செட்டிக்குளம் பெரியகட்டு பகுதிக்கு ஓட்டிவரப்பட்டு மேய்ச்சலுக்கு விடப்படுவதால் இதன் காரணமாக பெருமளவிலான விபத்துக்கள் இப்பகுதியில் இடம்பெற்றுவருகிறது.

இன்று மட்டும் நான்கு விபத்துக்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. கால்நடைகளை கட்டுப்படுத்த செட்டிக்குளம் பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொண்டு மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் வன்முறை நடந்தால் எதிர்கொள்ள தயார் : ஐ.தே.க. சவால்!!

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வன்முறையான நிலைமை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ள அவர், வன்முறை அதிகாரத்தை எதிர்கொள்ள தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லை அபேகமவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்றத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டால், நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கொடூரமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கை அரசியலில் தலையிட வேண்டாம் : சீனாவிடம் கோரிக்கை!!

மாவோ சேதுங்கின் புகழ் மற்றும் சமவுடமையின் கௌரவத்தை அழிக்கும் வகையில் மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தி, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, இலங்கையில் உள்ள சீனத்தூதுவர் ஷியேங் லியேங்க்கிற்கு கடுமை விமர்சனங்களுடன் கூடிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனநாயகம் என்ற வார்த்தை சீனாவுக்கு நெருக்கமில்லாத போதிலும் சமவுடமை என்ற வார்த்தை சீனாவுக்கு நெருக்கமானதல்லவா என கேள்வி எழுப்பியுள்ள பேராசிரியர், ஜனநாயகம் தொடர்பில் நீண்ட வரலாறு இலங்கைக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அரசியல் பிரச்சினைகளை இலங்கை தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அரசியல் கொடுக்கல் வாங்கல்களுக்கு பணம் அவசியமில்லை எனவும் பேராசிரியர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டிக்கு சீனாவிடம் பெற்ற வட்டியை செலுத்த பங்களிப்பவன் என்ற வகையிலும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பவன் என்ற வகையிலும் இந்த விடயங்களையும் அறிவிப்பையும் செய்வதாக பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, சீனத் தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் போலி தொலைபேசி அழைப்பை நம்பி ஏமாந்த குடும்பஸ்தர்!!

யாழ். வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் தனக்கு வந்த பொய்யான தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை இழந்த நிலையில் யாழ். நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த வழக்கை துரிதமாக விசாரணை செய்து மோசடியின் பின்னணியில் இருப்போரை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு அவரது கைபேசியில் கடந்த மாதம் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

குறித்த அழைப்பில் உங்களுக்கு பெறுமதியான பரிசில் ஒன்று விழுந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நம்பிய அவர், பதில் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களுடைய பரிசிலை உரியவாறு சமர்ப்பிப்பதற்கு 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை தனியார் வங்கியில் வைப்புச் செய்யுமாறு கணக்கு இலக்கத்தை வழங்கியுள்ளார்.

அந்தக் கணக்குக்கு குடும்பத் தலைவர் உரிய தொகைப் பணத்தை வைப்புச் செய்துள்ளார். எனினும் பணம் வைப்பிலிட்டு ஒரு மாத காலமாகியும் அந்தப் பரிசில் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அதனால் குறித்த கணக்கு இலக்கத்தை வைத்து குடும்பத் தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த யாழ்.நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வங்கியின் கணக்கு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மோசடியின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ரணிலின் நேற்றைய அழைப்பிற்கு மைத்திரியின் பதில்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் தெரிவித்துள்ளார்.

எனினும் அவருடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் W.D.J.செனவிரத்ன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆயத்தம் என ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். எனினும் இணக்கம் இல்லை என தற்போது வரையிலும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் சந்தர்ப்பம் கிடைத்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகத்திடம் நேற்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது என பிரதேச நீர்ரபாசன பொறியியலாளர் ரி.சுகந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த ஐந்து நட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 15.6 அடியாக உயர்வடைந்துள்ளது. அத்துடன் ஈரப்பெரியகுளம் 14.11 அடியாகவும், இராசேந்திரங்குளம் 9.6 அடியகவும் உயர்வடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் சில நட்களில் இவை வான் பாயக்கூடிய நிலை உள்ளது.

மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு மருதமடு குளம் 11.2 அடியாகவும், செட்டிகுளம் முகத்தான்குளம் 11.2 அடியாகவும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அவை தற்போது வான் பாய்ந்து வருகின்றன.

கடந்த வரும் வறட்சி காரணமாக குளங்கள் நீர்மட்டம் குறைவாகவே காணப்பட்டன. ஆனால் தற்போது சில நாட்களாக பெய்த மழையினால் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இருப்பினும் மக்களுக்கோ, பயிர்ச்செய்கைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.