நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை உறுதி செய்தார் மகிந்த!!

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பிபிசி சிங்கள சேவையிடம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சற்று முன்னர் இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது : அதிர்ச்சியில் வெளிநாடுகள்!!

நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரச அச்சகம் விசேட அதிரடிப்படை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது!!

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமாரக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

இதனால் கொழும்பு அரசியல் பெரும் குழப்பமடைந்தது. பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உரிமை கோரி வந்த நிலையில், நாடாளுமன்றமும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றை கூட்ட தீர்மானிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

மன்னார் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (09.11) மன்னார், மாந்தை மேற்கு பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட பரப்பு கடந்தான் காட்டுப் பகுதியில் ஆணெருவரின் சடலம் இருப்பதனை பொதுமகன் ஒருவர் அவதானித்துள்ளார். இதையடுத்து அடம்பன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற அடம்பன் பொலிசார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் உயிரிழந்த நபர் 35 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் உயிரிழந்தவர் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்தவரெனவும் மேலதிக தகவல்களை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

வவுனியாவில் மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (09.11) இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து செட்டிக்குளம் பெரியகட்டு ஊடாக மணல் ஏற்றிவந்த இரண்டு டிப்பர்களில் ஒன்று மாடு குறுக்காக பாய்ந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த மற்றைய டிப்பர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சாரதிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் இவ் விபத்துக் குறித்து செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரதேச வாசிகள்
மன்னார் நானாட்டான் பகுதியிலிருந்து பெருமளவான மாடுகள் செட்டிக்குளம் பெரியகட்டு பகுதிக்கு ஓட்டிவரப்பட்டு மேய்ச்சலுக்கு விடப்படுவதால் இதன் காரணமாக பெருமளவிலான விபத்துக்கள் இப்பகுதியில் இடம்பெற்றுவருகிறது.

இன்று மட்டும் நான்கு விபத்துக்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. கால்நடைகளை கட்டுப்படுத்த செட்டிக்குளம் பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொண்டு மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் வன்முறை நடந்தால் எதிர்கொள்ள தயார் : ஐ.தே.க. சவால்!!

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வன்முறையான நிலைமை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ள அவர், வன்முறை அதிகாரத்தை எதிர்கொள்ள தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லை அபேகமவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்றத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டால், நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கொடூரமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கை அரசியலில் தலையிட வேண்டாம் : சீனாவிடம் கோரிக்கை!!

மாவோ சேதுங்கின் புகழ் மற்றும் சமவுடமையின் கௌரவத்தை அழிக்கும் வகையில் மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தி, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, இலங்கையில் உள்ள சீனத்தூதுவர் ஷியேங் லியேங்க்கிற்கு கடுமை விமர்சனங்களுடன் கூடிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனநாயகம் என்ற வார்த்தை சீனாவுக்கு நெருக்கமில்லாத போதிலும் சமவுடமை என்ற வார்த்தை சீனாவுக்கு நெருக்கமானதல்லவா என கேள்வி எழுப்பியுள்ள பேராசிரியர், ஜனநாயகம் தொடர்பில் நீண்ட வரலாறு இலங்கைக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அரசியல் பிரச்சினைகளை இலங்கை தீர்த்து கொள்ள இடமளிக்குமாறும் அரசியல் கொடுக்கல் வாங்கல்களுக்கு பணம் அவசியமில்லை எனவும் பேராசிரியர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிக வட்டிக்கு சீனாவிடம் பெற்ற வட்டியை செலுத்த பங்களிப்பவன் என்ற வகையிலும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பவன் என்ற வகையிலும் இந்த விடயங்களையும் அறிவிப்பையும் செய்வதாக பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, சீனத் தூதுவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் போலி தொலைபேசி அழைப்பை நம்பி ஏமாந்த குடும்பஸ்தர்!!

யாழ். வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் தனக்கு வந்த பொய்யான தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை இழந்த நிலையில் யாழ். நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த வழக்கை துரிதமாக விசாரணை செய்து மோசடியின் பின்னணியில் இருப்போரை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணையைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு அவரது கைபேசியில் கடந்த மாதம் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

குறித்த அழைப்பில் உங்களுக்கு பெறுமதியான பரிசில் ஒன்று விழுந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நம்பிய அவர், பதில் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து அவருக்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களுடைய பரிசிலை உரியவாறு சமர்ப்பிப்பதற்கு 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை தனியார் வங்கியில் வைப்புச் செய்யுமாறு கணக்கு இலக்கத்தை வழங்கியுள்ளார்.

அந்தக் கணக்குக்கு குடும்பத் தலைவர் உரிய தொகைப் பணத்தை வைப்புச் செய்துள்ளார். எனினும் பணம் வைப்பிலிட்டு ஒரு மாத காலமாகியும் அந்தப் பரிசில் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அதனால் குறித்த கணக்கு இலக்கத்தை வைத்து குடும்பத் தலைவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அந்த முறைப்பாடு தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த யாழ்.நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வங்கியின் கணக்கு அறிக்கையைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மோசடியின் பின்னணியில் உள்ளோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ரணிலின் நேற்றைய அழைப்பிற்கு மைத்திரியின் பதில்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் தெரிவித்துள்ளார்.

எனினும் அவருடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் W.D.J.செனவிரத்ன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆயத்தம் என ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். எனினும் இணக்கம் இல்லை என தற்போது வரையிலும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் சந்தர்ப்பம் கிடைத்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகத்திடம் நேற்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது என பிரதேச நீர்ரபாசன பொறியியலாளர் ரி.சுகந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த ஐந்து நட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 15.6 அடியாக உயர்வடைந்துள்ளது. அத்துடன் ஈரப்பெரியகுளம் 14.11 அடியாகவும், இராசேந்திரங்குளம் 9.6 அடியகவும் உயர்வடைந்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் சில நட்களில் இவை வான் பாயக்கூடிய நிலை உள்ளது.

மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு மருதமடு குளம் 11.2 அடியாகவும், செட்டிகுளம் முகத்தான்குளம் 11.2 அடியாகவும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அவை தற்போது வான் பாய்ந்து வருகின்றன.

கடந்த வரும் வறட்சி காரணமாக குளங்கள் நீர்மட்டம் குறைவாகவே காணப்பட்டன. ஆனால் தற்போது சில நாட்களாக பெய்த மழையினால் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இருப்பினும் மக்களுக்கோ, பயிர்ச்செய்கைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாணவியின் தற்கொலையில் அரசியலா? மீண்டும் சர்ச்சையில் முரளிதரன்!!

அண்மையில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவி தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிபிசி சிங்கள சேவையில் இடம்பெற்ற செவ்வியின் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசியல் தீர்வு குறித்து தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட முரளிதரன், அந்த சிறுமியை அடிப்படையாக வைத்து அவ்வாறான தீர்வு அவசியமா என முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இலங்கையில் 70 வீத மக்கள் மாதம் 20000 – 25000 ரூபாய் சம்பளம் பெறும் ஏழைகளாகும். அவர்களுக்கு மூன்று வேளை உணவு பெற்றுக் கொள்வதே சிரமமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 வயது மாணவி சீருடை பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 3 பிள்ளைகள் உள்ளனர். 12 , 9 மற்றும் 7 வயதுடையவர்களாகும். தந்தையின் நாளாந்தம் வேலை செய்து 200 ரூபாய் மாத்திரமே உழைக்கிறார்.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 3 வேளை உணவு உட்கொள்கின்றார்கள். 3 பேரும் பாடசாலை செல்கின்றார்கள். மாணவியின் சீரூடை மோசமாக உள்ளது. ஆசிரியர் புதிய ஆடை அணிந்து வருமாறு அறிவுறுத்துகிறார்.

அரசாங்கத்தினால் சீருடைக்கான வவுச்சர் ஒன்று வழங்கப்படுகின்றது. அதனை எடுத்து சென்று சீரூடை தைக்கும் போது 200 மற்றும் 250 ரூபாய் செலவாகின்றது.

ஆடையை தைப்பதற்கு பணம் இல்லாமையினால் குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கு யாருமில்லை என முரளிதனர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிங்களவர்களே ஆதிக்குடியினர் என்ற கருத்தினை வெளியிட்டு முரதரன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்போது பாடசாலை மாணவியின் தற்கொலையால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியமற்றது என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

பரபரப்பாகும் இலங்கை : இன்னும் பல அதிரடிகள் காத்திருப்பதாக மிரட்டும் மைத்திரி!!

எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

என்னால் கொண்டு வரப்பட்ட தீர்வு தீர்மானங்களை எந்தக் காரணத்திற்காகவும் இடையில் நிறுத்துவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஒரேயொரு துருப்புச் சீட்டு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னிடம் பல துருப்புச் சீட்டுக்கள் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆதரவு வழங்கவில்லை என்றால் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு இணங்க வைக்க கூடிய துருப்புச் சீட்டு தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் 36 மணிநேரமாக அனத்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு!!

முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த 6 பேரினை இராணுவத்துடன் இணைந்து விமானப்படையினரால் இன்று காலை 8.30 மணியளவில் அதீத பிரயத்தனத்தின் மத்தியில் மீட்டு கரை சேர்த்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

07.11. 2018 அதிகாலை 12.10 மணியளவில் குமுழமுனை நித்தகை குளம் உடைப்பெடுத்திருந்த பேரனர்த்தத்தின் போது அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகாக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர்.

அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியினை கிராமத்து இளைஞர்களுடன் ஊடகவியலாளர் பா.சதீஸ், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ.மயூரன் ஆகியோரின் அபார முயற்சியினால் முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிக்கியவர்களை மீட்க்குமாறு அனர்த்த முகாமைத்துவத்தினருக்கு கோரியும் அவர்கள் இரவு 7.30 மணி வரையும் ஸ்தலத்திற்கு வருகை தரவில்லை.

மீட்பு நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் உரிய அக்கறை காட்டாது தாமதித்த போதும் இராணுவம், கடற்படை எடுத்த முயற்சி 07.11.2018 அதிகாலை 2 மணிவரை வெற்றியளிக்காமையால் இதை அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராம மக்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி நிலவரத்தை அறிந்து தொலைத்தொடர்பு மூலம் இணைப்பு அழைப்பினை (Conference call) முப்படைகளுக்கும் , அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி இன்று அதிகாலை விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் மீட்பு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

இன்று காலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு அண்மையில் நகர்த்தப்பட்ட இராணுவத்தினரின் உதவியுடன் விமானப்படையின் MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகளையும் பத்திரமாக மீட்டெடுத்து குமுழமுனையில் தரையிறக்கினர்.

யாழில் 12 வயது சிறுமிக்கு 19 வயது இளைஞனால் நடந்த கொடூரம்!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாகவும், கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர்.

இந்த நிலையில் ஊரவர்கள் வழங்கிய சில தகவல்களின் அடிப்படையில், இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்று தேடியுள்ளனர்.

அப்போது அறை ஒன்றில் கையில் காயங்களுடன் தமது மகளை பெற்றோர் மீட்டு மந்திகை வைத்தியசாலையில் சேர்ந்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமி கடத்தி வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது “கடந்த 3 மாத காலமாக தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும், அதனாலேயே அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும்“ தெரிவித்துள்ளார்.

இதேவேளை மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை பெண் நோயியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் நேற்று 08.11.2018 வியாழக்கிழமை  ஆரம்பமானது .  காலைமுதல்  கிரியைகள இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  வீதி  வலம்  வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின் போது  பெருமளவிலான  கந்தசஷ்டி  விரதமிருக்கும் அடியார்கள்  கலந்து கொண்டனர் .

 

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி முதலாம் நாள்!(படங்கள்,வீடியோ)

கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள் 08.11. 2018 வியாழக்கிழமை   இடம்பெற்றது. காலை முதல் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று மாலையில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.