எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட தயார் : தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு!!

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு, கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் தற்போது வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார்.

நாடாளுமன்றில் 16 உறுப்பினர்களை கொண்ட மூன்றாவது பெரும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலையில் அரசியல் மட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழக்கக் கூடிய சூழ்நிலைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்குள் பதட்டம்!!

மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தினர் என்று கூறிய இரண்டு பேர் இன்று அலரி மாளிகைக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இருக்கின்ற சில உபகரணங்களை சோதனை செய்து அவற்றை அப்புறப்படுத்த முற்பட்ட போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து அலரி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இருவரினதும் அடையாம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது!!

வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை பொலிசார் இன்று (31.10) அதிகாலை 3 மணியளவில் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து பியத்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் 51 வயதுடைய கல்நாட்டினகுளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் வவுனியா நொச்சிமோட்டடைப் பாலத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது தனது உடமையில் 80 கிராம் கஞ்சாவினை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக போதை ஒழிப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஏற்கனவே குறித்த நபர் மீது போதை பொருட்களுடன் தொடர்புபட்ட 4 வழக்குகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் : அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் திருநங்கையை திருமணம் செய்ய நினைத்த இளைஞரின் திருமணத்தை கோவில் நிர்வாகம் செய்து வைக்க மறுத்ததால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். டிப்ளோமா படித்துள்ள இவர், பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கும் ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதற்காக கல்யாண பத்திரிக்கை எல்லாம் அடித்து, தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துள்ளார்..

இறுதியில் திருமணம் செய்யவிருந்த போது, ஸ்ரீஜா திருநங்கை என்பதை கோவில் நிர்வாகம் அறிந்ததால், இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளது.

திருமண ஆசையோடு வந்த இருவரையும் சேர்த்து வைக்காமல் கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் அதிர்ச்சியுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

வவுனியா வர்த்தகர்களுக்கு வழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

வவுனியா வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று (31.10.2018) காலை 9.30 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் வர்த்தகப்பிரமுகர்களின் நன்மை கருதி தமிழ் மொழியில் நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி வரி செலுத்துவது பொறுப்பல்ல அது ஒரு சமூகக்கடமை எனும் தொனிப்பொருளில் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்கத்தின் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழான கொள்கைகள் தொடர்பாகவும் வர்த்தகர்களின் கேள்விகள், சந்தேகங்கள் தொடர்பாகவும் இன்றைய கருத்தரங்கில் வளவாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுடன் இணைந்து நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் அனுராதபுரம் அலுவலகத்தின் ஆணையாளர் திரு. எம்.கே.சரத் அபேரத்தின, உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் கடமையாற்றும் எம். கணேசராசா, உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஏ.எம். நபீல், யாழ்ப்பாணம் இறைவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர், உத்தியோகத்த்ர்கள், வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன், மன்னார் வர்த்தகர்கள் சார்பாக கிறிஸ்தோப்பர், வவுனியா மாவட்ட செயலகத்தின் பிரதான கணக்காளர், வரி ஆலோசணைக்கணக்காளர்கள், வரி செலுத்துநர்கள் சார்பாக எஸ்.ஞானசம்பந்தர், எஸ்.ஆனந்தராசா ஆகியோர் கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வவுனியாவிலுள்ள வர்த்தகப்பிரமுகர்கள், கணக்காளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வரலாற்றில் முதல் முறையாக 176 ரூபாயை கடந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 176 ரூபாயை கடந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய டொலரின் விற்பனை விலை 176.2547 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 172.3605 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இந்தளவிற்கு விற்பனை மற்றும் கொள்வனவு விலை அதிகரித்த முதல் சந்தர்ப்பமாக இன்றைய தினம் கருதப்படுகின்றது.

முதலில் கருச்சிதைவு.. அடுத்து கணவரின் திடீர் மரணம் : இளம் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

இந்தியாவில் நக்சல் தீவிரவாதிகளால் தொலைக்காட்சி கமெராமேன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுதானந்த் என்பவர் தூர்தஷன் தொலைக்காட்சி நிறுவனத்தின் கமெராமேனாக பணிபுரிந்து வந்தனர். இவருக்கு ஹிமச்சாலி சஹு என்ற பெண்ணுடன் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சதிஸ்கர் மாநிலத்துக்கு அச்சுதானந்த் சென்றுள்ளார்.
அங்கு நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அச்சுதானந்த் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். கணவர் இறந்த விடயத்தை தொலைக்காட்சி செய்தியை பார்த்த போது அறிந்த ஹிமாச்சாலி துடித்து போனார்.

இது குறித்து தம்பதியின் உறவினர் ஒருவர் கூறுகையில், அச்சுதானந்தும், ஹிமாச்சாலியும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு ஆண்டுக்கு முன்னர் கர்ப்பமான ஹிமாச்சாலிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் அவர் மனமுடைந்தார்.

தற்போது கணவரையும் இழந்தது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அச்சுதானந்த் இறந்துபோனதை எங்களால் நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.

காதலனுக்காக அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறி திருமணம் செய்துகொண்ட காதலன்!!

மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நண்பர்கள் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காரணத்தால், அதில் ஒரு நபர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.

சக்னிக் சக்ரபோர்தி மற்றும் சவுத் தினஜ்பூர் ஆகிய இருவரும் முதல் முதலாக மொடலிங் போட்டியில் சந்தித்துக்கொண்டார்கள். அதிலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள், நாளடைவில் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

தங்களையே அறியாமல் அதிகளவு அன்பை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இருவரும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது உறவை யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, யாராவது ஒருவர் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, ஆணாக இருந்த அனிக் தத்தா, தனது பாலினத்தை அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன், அனிக் தத்தா, தன் காதலன் சக்னிக் சக்ரபோர்தியை திருமணமும் செய்து கொண்டார்.

கணவரை கொல்ல வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவி : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவியை அதே கும்பல் கொலை செய்ய திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி நகரில் கணவரை கொல்ல திட்டமிட்டு கொலையாளிகளுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்த காரணத்தாலையே அவர்கள் குறித்த பெண்மணியை கொல்ல திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.

கணவரை கொலை செய்த பின்னர் தனது பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தில் காதலருடன் வாழ குறித்த பெண்மணி திட்டமிட்டுள்ளார்.

கணவரை கொலை செய்ய வாடகை கொலையாளிகளுக்கு 4 லட்ச ரூபாய் தருவதாக காதலருடன் இணைந்து குறித்த பெண்மணி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கொலைத் திட்டத்தில் இருந்து படுகாயத்துடன் கணவர் உயிர் பிழைத்த நிலையில், தர வேண்டிய பணத்தை அவர் தர தாமதித்ததாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி பணம் தருவதாக ஒப்புக்கொண்ட குறித்த பெண்ணின் காதலரும் தலைமறைவாகியுள்ளார்.

பணம் தராமல் ஏமாற்றிய அந்த நபரை வாடகை கொலையாளிகள் கும்பல் தேடிச்சென்ற போது பொலிசில் சிக்கியுள்ளனர். கணவர் கொல்லப்பட்ட பின்னர் கொலைகாரர்களுக்கு பணம் தர தமது பேரில் உள்ள நிலத்தை விற்க அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கணவர் படுகாயத்துடன் உயிர் தப்பியதால் அந்த திட்டமும் நிறைவேறாமல் போனது. அதன் பின்னர் அந்த நிலத்தை அடமானம் வைத்து பணம் திரட்ட முடிவு செய்துள்ளார்.

பொலிசார் கைது செய்ததும், அந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பில் கைதான சுஜாதா மற்றும் காதலன் சுரேஷ் பாபு இருவரை ஜாமீனில் வெளிக்கொண்டுவர குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

சுஜாதாவின் மகன் தமது தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். சுரேஷ் பாபுவின் மனைவி விவாகரத்து கேட்டு முன்னரே மனு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

189 பேருடன் கடலில் விழுந்த விமானம் : விமானி குறித்து வெளியான உருக்கமான தகவல்கள் : அவரின் ஆசை இதுதான்!!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான விபத்தை ஓட்டிய இந்திய விமான குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, நேற்று முன்தினம் காலை 6.20 மணிக்கு பங்கல் பினாங் என்ற நகருக்குப் புறப்பட்ட லயன் ஏர் விமானம் மேற்கு ஜாவா தீவு கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உட்பட 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தை இந்தியாவை சேர்ந்த பைலட் பாவ்யே சுனேஜா என்பவரே இயக்கியுள்ளார்.

2011-ம் ஆண்டு முதல் `லயன் ஏர்’ விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுனேஜாவுக்கு 6000 மணி நேரங்கள் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு.

அந்தவகையில் மிகுந்த அனுபவமும், திறமையும் கொண்ட இவரை, இந்தியாவிலுள்ள பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் வேலைக்கு எடுக்க முடிவெடுத்திருந்தது.

தன் சொந்த ஊரான டெல்லியிலேயே பணியமர வேண்டும் என்பது சுனேஜாவின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் இறந்துபோயுள்ளார்.

சுனேஜாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது, சொந்த ஊருக்கு வந்து, குடும்பத்தினருடன்தான் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்.

அதேபோல், இந்த ஆண்டும், வரும் வாரம் தீபாவளியைக் கொண்டாட, குடும்பத்தினரைச் சந்திக்க ஊருக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், சுனேஜா பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதான் குடும்பத்தினர் தெரிந்துகொண்டு கண்ணீர் சிந்தியுள்ளனர்.

கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் மனைவியின் மோசமான பழக்கத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கோத்தகிரியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜேஷ்குமார்(வயது 32) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லோகேஸ்வரி(25). கணவர் வெளிநாட்டில் வசித்து வந்த காரணத்தால், லோகேஸ்வரி தனது 4 வயது மகன் கார்த்திகேயனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் லோகேஸ்வரியின் தாயார் வசந்தா, மகளின் வீட்டிற்கு வந்தார். அப்போது முன்பக்க கதவு பூட்டி இருந்தது. உடனே வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள கதவு உள்புறமாக பூட்டியிருந்தது.

இதை கண்டு சந்தேகம் அடைந்த வசந்தா கோத்தகிரி பொலிசிற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

மேலும் அவரது மகன் கார்த்திகேயனின் கழுத்தும் அறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தான். உடனே பொலிசார் அவனை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது..

இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.லோகேஸ்வரியை கொலை செய்த மர்ம ஆசாமிகளை பிடிக்க எனது தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பணம் மற்றும் நகைக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கவுரி சங்கர் என்பவர் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் தயாரிக்கப்படும், மூலிகை பொருட்களை லோகேஸ்வரி வாங்கி விற்பனை செய்துள்ளார்.

இதனால், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது, அவர் அடிக்கடி லோகேஸ்வரி வீட்டில் வந்து, தங்கி சென்றார். வேறு நபருடன் லோகேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கவுரிசங்கர், கத்திரிகோலால் லோகேஸ்வரியின் கழுத்தை அறுத்துள்ளார்.குழந்தை பக்கத்தில் இருந்த போது, அவன் கழுத்தையும் அறுத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.

அப்பகுதியில் உள்ள, சிசிடிவி கமெராவில் கவுரிசங்கர் வந்தது பதிவாகி உள்ளது. இதனையடுத்து சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கவுரிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தத்தெடுத்து வளர்த்த மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!

அனுராதபுரம் – ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவபொத்தான – வலிமபொத்தானை பகுதியை சேர்ந்த இராணுவ சிவில் ஊழியராக கடமையாற்றி வரும் எம்.ரத்னசிறி விக்கிரமநாயக்க (48 வயது) என்பவரே இன்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், சந்தேகநபர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் குறித்த சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தாம் கடைக்கு சென்ற வேளையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டவருடைய மனைவி சிறுவர் மற்றும் பெண்கள் அமைப்பிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவல்களுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை!!

இந்தியாவில் தனக்காக கடவுளிடம் வேண்டி விரதம் இருக்க மனைவி மறுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தீப் சந்த் (21) என்ற இளைஞருக்கும் இளம் பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

பொதுவாக வட இந்திய மாநிலங்களில் Karwa Chauth என்ற கடவுள் வழிபாடு கடைப்பிடிக்கப்படும். இந்த சமயத்தில் கணவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக மனைவி உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பார்.

இந்த பிரார்த்தனையை செய்யாத தீப் சந்தின் மனைவி கணவருக்காக விரதம் இருக்கவில்லை. இதையடுத்து தனது நலனுக்காக ஏன் விரதம் இருக்கவில்லை என மனைவியிடம் தீப் சந்த் கேட்டுள்ளார். இதற்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இருக்கவில்லை என மனைவி கூறினார்.

மனைவியின் செயலால் மனமுடைந்த தீப் சந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

189 பேரை பலி வாங்கிய விமான விபத்து : இந்தோனேசியா அரசு எடுத்த அதிரடி முடிவு!!

இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கடலுக்குள் விழுந்து 189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் தொடர்பில் அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

இதில், 178 பயணிகள் உட்பட அனைவரும் பலியானார்கள். மீட்புக் குழுவினர் விமான பாகங்கள், பயணிகளின் உடல்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. போயிங் நிறுவனமானது கடந்த ஆண்டில் மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானங்களை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. விபத்துக்குள்ளான விமானமானது சேவையில் இணைந்து சில மாதங்களே கடந்துள்ளது.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து லயன் ஏர் நிர்வாகம் புதனன்று போயிங் அதிகாரிகளுடன் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மேக்ஸ் 8 ரக விமானங்கள் தொடர்பில் தங்களிடம் பல கேள்விகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவை பொறுத்தமட்டில் அங்குள்ள பல விமான சேவைகளும் மிக மோசமான பாதுகாப்பு சாதனைகளை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய வான்வெளியில் லயன் ஏர் விமான சேவை மேற்கொள்ள 2016 ஆம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுல்ளது குறிப்பிடத்தக்கது.

189 பேருடன் கடலில் விழுந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை : வெளியான உண்மை!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது.

லயன் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், 178‌‌ பயணிகள்‌, ஒரு குழந்தை,‌ ‌2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 189 பேர் இருந்தனர்.

இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 20 பேரும் விமானத்தில் பயணித்தனர். டெல்லியைச் சேர்ந்த பவ்யே சுனேஜா விமானத்தின் தலைமை விமானி‌யாக செயல்பட்டுள்ளார்.

12ஆவது நிமிடத்தில் விமானத்தின் வே‌கம் திடீரென குறைந்ததாக கூ‌றப்படுகிறது.‌ இதையடுத்து விமானத்தை உடனே ஜகார்த்தாவுக்கு திருப்பும்படி வி‌மானிக்கு அறிவுறுத்‌தப்பட்டதாக‌வும் தெரிகிறது.

இந்த நிலையில், திடீரென 13ஆவது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானம் இழந்தது.

அந்த விமானம் சுமத்ரா பகுதியில், கடலில் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது. விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்‌பகுதிக்கு விரைந்தது.

ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகொப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன.

மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர். விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடைக்கக்கூடும் என‌கூறப்படுகிறது.‌ ராணுவ வீரர்கள், மீனவர்கள் என‌ 300க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில்‌ ஈடு‌ட்டுள்ளனர்.

3 சிறப்பு கப்பல்களும் தேடு‌‌தல் வேட்டையில் இ‌‌றங்கியுள்ளன. விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழ‌ந்‌திருக்கலாம் என மீட்புப்படையி‌னர் தெரிவித்துள்ள‌ர். கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த பிறகே விமான விபத்திற்கான முழு விவரங்கள் ‌தெரியவரும்‌ என்றும் அதிகாரி‌கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கைக்குழந்தை ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அந்தக் குழந்தை விமான விபத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

அதில், விமானம் கடலில் விழுவதற்கு அந்தக் குழந்தையின் அன்னை, குழந்தைக்கு உயிர்க்காக்கும் உடையை அணிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தண்ணீரில் மிதந்த குழந்தை, உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் அன்னை உயிரிழந்துவிட்டார் என்றும், அந்தக் குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தகவல் உண்மையல்ல. முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்தக் குழந்தை விமான விபத்தில் மீட்கப்பட்டதல்ல.

அது கடந்த யூலை மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட படகு விபத்தின் போது மீட்கப்பட்ட குழந்தை. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட அதிபர் கைது!!

வவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை நேற்று (30.10.2018) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வெங்கல செட்டிக்குளம் கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் நேற்று மாலை வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகே வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

அதிபரின் பாலியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகிய பாடசாலை மாணவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை அதிபர் ஏற்கனவே முன்பு கடமையாற்றிய பாடசாலையில் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் பெற்று இப் பாடசாலைக்கு நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.