இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்..
சீனா உட்பட பல நாடுகளில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேஸ்புக் பாவனை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. பெருந்தொகை இளைஞர்,யுவதிகள் பேஸ்புக் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய எடுக்கும் தீர்மானம் குறித்த பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பதுளையில் ஏற்பட்ட பாரிய விபத்தின் போது, அந்தப் பகுதி மக்களின் துரித நடவடிக்கை காரணமாக ஐந்து பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
பதுளை பண்டாரவளை வீதியின் தேமோதரை 10வது மைல்கல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். ஏரி ஒன்றுக்குள் மோட்டார் வாகனம் தடம் புரண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த பெண் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்கள் இணைந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி பதுளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொட்டும் மழையிலும் காயமடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய போராட்டத்தின் ஊடாக அங்கு மனிதாபிமானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐந்து பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
40 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்ட இளைஞன் ஒருவர் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வலது கை பந்துவீச்சாளரான அவர் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
சர்வதேச ஒரு நாள் அணியில் பதில் வீரராக இணைக்கப்பட்டுள்ள அவர் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை கிரிக்கெட் அணி குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து வெளியிட்ட விஜயகாந்த், 15 வயதுக்குட்பட்ட அணியில் இருந்து நான் பந்து வீசுகின்றேன். நல்ல பயிற்றுவிப்பாளர்கள் கிடைத்த பின்னர் நான் பாடசாலை அணியில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தினேன். அதன் பின்னர் 19 வயதுக்குட்பட்ட அணியில் மிகவும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தினேன்.
அந்த திறமையின் ஊடாக எனக்கு கொழும்பிற்கு வர சந்தர்ப்பம் கிடைத்தது. இங்குள்ள பயிற்றுவிப்பாளர்கள் நல்ல முறையில் பயிற்சி வழங்குகின்றனர். யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் வித்தியாசமாக உள்ளது.
தற்போது எனது திறமை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதென நினைக்கின்றேன். எனக்கு சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட பிடிக்கும். படிக்கச் செல்கின்றேன் என வீட்டில் கூறிவிட்டே கிரிக்கெட் விளையாட செல்வேன்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மேலும் பல வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும். கொழும்பு வந்தவுடன் மொழி பிரச்சினையில் சிக்கிக் கொண்டேன். எனினும் எனது சகோதரர்கள் சிங்களம் கற்பித்தார்கள். யாழில் இருந்து வந்த ஒரே வீரர் தான் என்பதனால் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். என்னிடம் தமிழ் கற்றுக் கொண்டார்கள்.
தமிழ், சிங்கள பேதமின்றி பழகுகின்றார்கள் என எனது யாழ்ப்பாண நண்பர்களிடம் நான் கூறிய பின்னர் அனைவரும் மகிழச்சியடைந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் AccuWeather அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த வார இறுதியில் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளாந்தம் பெய்து வரும் மழைவீழ்ச்சியில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் கேரள மாநிலத்தின் பல பகுதிகள்வெள்ளத்தில் மூழ்கியமையினால் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வாரங்களில் கடும் வறட்சியான காலநிலை காணப்பட்ட போதிலும், இந்த வாரம் அதிகமழை வீழ்ச்சி பதிவாகவுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கேரளா மற்றும் தமிழகத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 50 – 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் ஆபத்து கேரளா மற்றும் தமிழகத்திற்கு உள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது இலங்கையில் அதிகரித்துள்ள மழைவீழ்ச்சி, வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வெள்ள அபாயம் உள்ளது. நாட்டின் மேற்கு பகுதியான கொழும்பு, காலி மற்றும் நீர்கொழும்பு உட்பட பகுதிகளில் அதிகமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த பகுதிகளில் 100 – 200 மில்லிமீற்றர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும், இதனால் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக குறித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அன்றாட மழை வீழ்ச்சிகள் தென்னிந்தியாவையும், இலங்கையையும் பாதிக்கும்போது, கேரளாவின் அரேபிய கடலில் சூறாவளி தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் ஆரம்பத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் தென்மேற்கு பருவமழை இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் வடபகுதியில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – முழங்காவில் பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து இன்று மதியம் கேரதீவு – சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த வீதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது மாடு ஒன்று குறுக்கே சென்றதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலமாக யாழ்ப்பாணம் மற்றும் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து தடம் புரண்டு பாரிய விபத்து இடம்பெற்றிருந்த போதிலும் பேருந்தில் பயணித்தவர்கள் எவருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படாது தெய்வதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனமை தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் தனது காதலன் இறந்துபோகப்போகிறார் என்று தெரிந்தும் காதலி அவரை திருமணம் செய்துகொண்டதையடுத்து, சுமார் இரண்டு வாரங்கள் கழித்து காதலன் உயிரிழந்துள்ளார்.
Dudley யில் வசித்து வரும் Dan Thomas என்பவர் யூடியூப்பில் தகவல்கள் பரிமாறும் தொழிலை செய்து வந்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
32 வயதான இவர் பெக்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் இவருக்கு வயிற்று புற்றுநோய் இருப்பது கடந்த 2015 ஆம் ஆண்டு தெரியவந்தது.
சிகிச்சை பெற்று தனது காதலியுடன் இணைந்து வாழலாம் என்று கனவு கண்டிருந்தார். இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.
இருப்பினும், புற்றுநோயின் தாக்கம் அதிகமானது, இதனால் இவர் உயிர்வாழ்வது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தான் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை மற்றும் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என அவ்வப்போது யூடியூபில் கருத்துக்களை வெளியிடுவார்.
இந்நிலையில், தனது காதலன் இறக்கப்போகிறார் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தீர்மானமாக இருந்துள்ளார் பெக்கா. Dan Thomas இன் மனைவியாக கொஞ்சம் நாட்களாவது இந்த மண்ணில் வாழவேண்டும் என ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து சுமார் இரண்டு வாரங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். அதன்பின்னர், Dan Thomas தனது இறுதிமூச்சை நிறுத்திக்கொண்டார் என்ற தகவலை அவரது குடும்பத்தார் யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.
கானா நாட்டில் திருமணமான 24 மணி நேரத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திசு ககுரு என்ற இளைஞருக்கும், ஜானதில் என்ற பெண்ணுக்கும் கடந்த 30-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள ககுருவும், ஜானதிலும் காரில் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கார் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை ககுரு உயிரிழந்தார். இதையடுத்து படுகாயமடைந்த ஜானதி மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அருகில் வந்த காரை ககுரு முந்த நினைத்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துள்ளானது தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்க வேண்டிய இளம் தம்பதியின் இந்த பரிதாபமான நிலை அவர்களின் நண்பர்களையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உன் மகளை யாருக்கு பெற்றாய் என்று மனைவியைப் பற்றி அவதூறாக பேசியதால் திமுக பிரமுகரை வெட்டி கொலை செய்தேன் என்று கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்து உள்ள சிறுகளத்தூர் கலெட்டிப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் கிரிராஜன். திமுக பிரமுகரான இவர் நேற்று முன் தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கைதான பாபு அளித்த வாக்குமூலத்தில், நான், எனது மனைவி மற்றும் 4 மகள்களுடன் வசித்து வந்தேன். எனது உறவினரான கிரிராஜன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
முதலில் நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். அதன் பின் ஒன்றாகவே ரியல் எஸ்டேட் தொழில் செய்தோம். இதனால் நல்ல வருமானம் கிடைத்ததால், எங்கள் பகுதியில் உள்ள பிரபல ரவுடிகளுடன் நடப்பு ஏற்படுத்திக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபட்டு வந்தேன்.
ஆனால், கிரிராஜன் அரசியலில் ஆர்வம் கொண்டு, பொதுமக்களிடம் தனக்கு இருந்த நல்ல பெயரை பயன்படுத்திக் கொண்டு, திமுக சார்பில் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார்.
அதன் பின் அவர் தன்னிடம் பழகினால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று எண்ணிய அவர் எண்ணிடம் இருந்து விலகினார். அப்போதே அவர் மீது எனக்கு ஆத்திரம் இருந்தது.
இந்நிலையில் எனது மூத்த மகள் சவுபாக்கியவதி, கிரிராஜனின் மைத்துனர் மோகன் என்பவரை காதலித்து வருவது எனக்கு தெரிய வந்தது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஆனால், எனது மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலன் மோகனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிரிராஜன் தான் திருமணம் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது வீட்டிலேயே மணமக்களை தங்க வைத்திருந்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான நான், கிரிராஜனை பழிவாங்க திட்டமிட்டேன். இதனிடையே, என்னை போனில் தொடர்பு கொண்ட கிரிராஜன், உங்கள் மகளுக்கு செய்ய வேண்டிய நகை, சீர்வரிசையை முறையாக செய்யுங்கள் என கூறினார்.
நான், அவள் என் மகளே இல்லை என்றேன். அதற்கு கிரிராஜன், அவள் உனக்கு மகள் இல்லையென்றால், உனது மனைவி அவளை யாருக்கு பெற்றெடுத்தாள் என்று ஆபாசமாக பேசினார்.
இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நான், இதற்கு மேலும் விட்டு வைத்தால் ஆகாது என்று நண்பர்களுடன் திட்டம் தீட்டினேன். அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தேன். அதன்படி, நேற்று முன்தினம் கிரிராஜனை செல்போனில் தொடர்புகொண்டு, பேசி, மகளுக்கான நகை, பணத்தை தருவதாக கூறி அவரை நந்தம்பாக்கம் வரவழைத்து, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்றேன்.
அப்போது, இந்த வாய்தானே என் மனைவியை அசிங்கமாக பேசியது என்பதால் வாயிலேயே வெட்டினேன். ஆனாலும், ஆத்திரம் தீராததால், கிரிராஜனின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்து கொன்றேன் என கூறியுள்ளார்.
கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கிய பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலாபாஸ்கர் இன்று காலை உயிரிழந்தார். பாலபாஸ்கர் கடந்த மாதம் 25ம் தேதி திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுத்திரும்பும் போது பள்ளிபுரம் அருகே இவரது கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாலாபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலாபாஸ்கரின் குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் குணமடைந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலாபாஸ்கர் இன்று காலை சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீங்கள் மறைந்தாலும் உங்கள் இசை எப்போதும் எங்களை விட்டு மறையாது என்றும் வயலின் இல்லாமல் பாலாபாஸ்கர் இல்லை. உங்களை அதிகமாக மிஸ் செய்ய போகிறோம் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர் இசையமைத்த பாடல், வயலின் நிகழ்ச்சி வீடியோக்கள் ஆகியவைகளும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் இன்வெட்டரிலில் இயங்கிய ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் உயிரிழந்தனர்.
கோயம்பேடு மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னீர்குப்பத்தில் உள்ள டொமினோஸ் பிட்சா நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலையரசி வீட்டில் இருந்து வந்தார். இவர்களது 8 வயது மகன் கார்த்திகேயன் மேட்டுக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை இவர்கள் வீட்டுக் கதவு வெகுநேரம் திறக்கப்படாததையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவைத் உடைத்துப் பார்த்த போது மூவரும் படுக்கை அறையில் பேச்சு மூச்சின்றிக் கிடந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரவு உறங்கிக் கொண்டிருந்த போது ஏசியில் கேஸ்கசிவு ஏற்பட்டு மூச்சுத் திணறலால் மூவரும் உயிரிழந்திருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.
அந்தக் காற்றை சுவாசித்த மூன்று பேரும் தூக்கத்திலேயே இறந்திருக்கலாம் கூறியுள்ள பொலிசார், பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள Belgaum மாவட்டத்தில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களது மாமாவுக்கு தான் மணம் முடித்து வைக்கப்படுகிறார்கள். அப்படி திருமணம் செய்துகொள்ளும் மாமாவின் வயது வித்தியாசம் சிறுமியை விட அதிகம் இருந்தாலும் அதனை பெற்றோர் கண்டுகொள்வதில்லை,
அஞ்சனா என்ற பெண்ணின் வயது தற்போது 18. இவருக்கு 5 வயதிலேயே தனது மாமாவுடன் திருமணம் நடைபெற்றது. தனது வாழ்க்கையில் நடந்த துயரங்கள் குறித்து அஞ்சனா பகிர்ந்துகொண்டதாவது, அன்று நான் 5 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு 11 வயது இருக்கும். எனது அம்மா என்னிடம் வந்து ஆடைகளை கொடுத்து மாற்றிக்கொள் உனக்கு திருமணம் என்றார்.
எனக்கு அவர் சொல்வது புரியவில்லை. நானும் ஆடைகளை மாற்றினேன், வயதான எனது மாமாவுக்கு திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்கு பிறகு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று என்னை தடுத்துவிட்டனர்.
நான் பலமுறை போராடியும், என்னை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். ஆனால் எனது கணவர் என்மீது இரக்கப்பட்டு, பள்ளிக்கு செல்ல அனுமதித்தார். 6 மற்றும் 7 ஆம் வகுப்பினை படித்து முடித்தேன்.
அதன்பிறகு, இரண்டு ஆண்டில் எனக்கு 15 வயது இருக்கும்போது கர்ப்பமானேன், நான் கருவுற்றதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. எப்படி இருக்க வேண்டும் என்றுகூட தெரியவில்லை. கருவுற்ற இரண்டு மாதங்களில் எனக்கு ரத்தம் வெளியானது. கருக்கலைந்துவிட்டது என்பது எனக்கு தெரியாது.
எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது என்று நினைத்து கொண்டிருந்தேன். அடுத்த மாதம் தான் எனக்கு கருக்கலைந்த விடயம் எனது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுமார் 6 மாதங்கள் வீட்டில் இருந்தேன்.
பின்னரும் கர்ப்பமான எனக்கு மீண்டும் கருக்கலைந்தது. இதற்கிடையில், எனது பள்ளித்தோழிகளை இடையில் சந்தித்தேன். அவர்கள் எனக்கு நேர்ந்தவை குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த தகவலை அறிந்த ஆசிரியர்கள் எங்களது வீட்டிற்கு பொலிசாருடன் வந்து என்னை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், பள்ளிக்கு அனுப்பமாட்டோம், வேண்டுமென்றால் அவள் தொலைதூரக்கல்வி வழியாக படிக்க அனுமதிக்கிறோம் என பெற்றோர் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தொலைதூரக்கல்வி மூலம் பத்தாம் வகுப்பை வரை படித்துள்ளேன், எனது கணவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். தற்போது எனது அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.
இலங்கை – புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் அதே அகதிகள் முகாமில் வசித்து வந்த இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவர் இலங்கை சென்று விட்டதால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் புழல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 19 வயதுடைய துர்கா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். வீட்டில் அனைவரும் உறங்கச் சென்ற நிலையில் அதிகாலையில் குறித்த யுவதியை காணவில்லை என்று பெற்றோர் தேடியுள்ளனர்.
இதன்போது வீட்டில் உள்ள அறையில் சென்று பார்த்த போது, குறித்த யுவதி மின் விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து புழல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பாதாள உலக தலைவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த பெண் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏன் ரசிகா ரோயல் என்ற 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தினால் உயிரிழந்த பெண்ணினால் ஆரம்பிக்கப்படவிருந்த புதிய பாலர் பாடசாலைக்கு பெயர் பலகை கொண்டுசெல்வதற்காக தனது 9 வயதுடைய மகளை தனது மோட்டார் வாகனத்தில் ஜஎலயில் இருந்து நீர்கொழும்பு நோக்கி அழைத்து சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த ரசிகா பல காலங்களாக தனது கணவருடன் இத்தாலியில் தொழில் செய்து வந்துள்ளார். அவரது கணவர் இன்னமும் இத்தாலியில் தொழில் செய்வதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
மிகவும் அன்பான இந்த பெண்ணின் மூத்த மகனுக்கு 12 வயதாகின்ற நிலையில் மகளுக்கு 9 வயதாகின்றது. அவர் அயலவர்களின் மனதை வென்ற ஒரு பெண் எனவும், பிள்ளைகளுக்கு சிறந்த தாய் எனவும் கணவருக்கு அன்பான மனைவி எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது வாகனத்தில் அவரது 9 வயது மகள் இருந்ததாகவும், அவர் அந்த சம்பவத்தினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதிர்ச்சியில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். கடந்த 13ம் திகதி நாடு திரும்பி கோபாலகிருஷ்ணபிள்ளை நந்தினி என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கட்டாரில் மூன்றாண்டுகளாக பணி புரிந்த நிலையில் கடந்த 13ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
வாழைச்சேனை சேர்ந்த நந்தினி, இலங்கை வரும் தகவலை இரு தினங்களுக்கு முன்னர் கணவனுக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் கணவனும் ஆவலுடன், விமான நிலையத்திற்கு சென்று காத்து இருந்துள்ளார்.
விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்த போதும் மனைவி வரவில்லை. பின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பதில் வர கணவன் மனைவி வரவில்லை என்று எண்ணி வீடு திரும்பி உள்ளார்.
பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது தொடர்பு கொள்ள முடியாமையின் காரணத்தால் மனைவி பணி புரிந்த வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது அவர்கள் 13-09-2018 காலை 6.30க்கு விமான நிலையத்திற்கு அழைத்து சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்கள்..
இது குறித்து உடனடியாக கணவன் அருகில் உள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போது பொலிஸ் அதிகாரி கணவரை விமான நிலைய பொலிஸ் பிரிவுக்கு சென்று புகார் அளிக்குமாறு கூறினர்.
இதனையடுத்து கடந்த 15ம் திகதி விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமான நிலைய சிசிரிவி கமரா காணொளிகளை பொலிஸார் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.
இதன்போது தனது மனைவி 3 பைகளுடன் விமான நிலையத்தில் நின்றதும் சிறிது நேரத்தின் பின் ஒரு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட விடயம் தெரிய வந்தது.
பின்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார் கணவர். இதனைத் தொடர்ந்து கணவன் கொழும்பு முழுவது சுற்றித்திரிந்து வீடு வந்து சேர்ந்தார்.
அதன் பின் மிகவும் மன வேதனையோடு கணவனும் இரண்டு பிள்ளைகளும் தன் மனைவியை தேடித் திரிந்தும் இதுவரை கண்டறிய முடியவில்லை.
குறித்த பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிந்தால் 0762940741 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.