வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை வழக்கிலிருந்து பிளொட் நெடுமாறன் விடுவிப்பு!!

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

வவுனியாவில்கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய பிளொட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.

குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல்
அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

வவுனியாவில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!!

வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வீராங்கனைகள் இளையோர் குத்துச் சண்டையில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை!!

ஆசிய இளையோர் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த கஜிந்தினி லிங்கநாதன், கீர்த்தனா உதயகுமார் ஆகிய வீராங்கனைகள் வெண்கலப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

22 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ள ஆசிய இளையோர் குத்துச்சண்டை போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.

இதற்காக நடத்தப்பட்ட பகிரங்க குலுக்கலில் வவுனியா வீராங்கனைகள் இருவர் உட்பட இலங்கை வீர, வீராங்கனைக் சிலர் நேரடியாக அரைஇறுதி மற்றும் இறுதிக் கோதாக்களுக்கு தகுதிபெற்றனர்.

மகளிர் பிரிவில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற 60 கிலோ கிராம் எடைக்குட்பட்ட அரை இறுதிப் போட்டியில் கீர்த்தனா உதயகுமார் வெண்கலப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 57 கி​லோ கிராம் எடைப் பிரிவு அரைஇறுதிப் போட்டியில் கஜிந்தினி லிங்கநாதனுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.

இந்த 2 வீராங்கனைகளுக்கும் முடியப்பு நிக்ஸன் ரூபராஜ் பயிற்றுநராக செயற்படுகிறார். ஆசிய இளையோர் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை மொத்தமாக 11 வெண்கலப்பதக்கங்களை அடைந்துள்ளது.

அரைஇறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மேலும் சில இலங்கை வீர, வீராங்கனைகள் தகுதிபெற்றுள்ளதால் வௌ்ளி, தங்கப்பதக்களை வெற்றிகொள்ளும் வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யானை மீது மோதியதில் ரயில் தடம் புரள்வு!!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த மீனகயா கடுகதி ரயில் காட்டுயானை மீது மோதி தடம் புரண்டுள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு ரயில் வீதியின் ஹபரணை ரயில் நிலையத்திற்கும் கல்லோயா ரயில் நிலையத்திற்கும் இடையே ஹபரணை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் 20 ஆம் திகதி இன்று

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஹபரனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் எட்டு வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள மின்னேரிய அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

காட்டு யானை ரயில் எஞ்சினின் கீழ் பகுதியில் சிக்குண்டதால் தண்டாவாளங்களுக்கு சேதம் ஏற்பட்டதால் எஞ்சின் தடம்புரண்டது.இதனால் கிழக்கு ரயில் வீதியின் மட்டக்களப்பு வரையான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

ரயில் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக வேண்டி ரயில்வே திணைக்கள ரயில் வீதி பராமரிப்பு பிரிவின் ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்ட உள்ளதாக கல்ஒயா ரயில் நிலைய உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், நீர்வேலியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஊரெழு கிழக்கு சுன்னாகத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞராவார்.

இந்த வியடம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 11 ஆம் திகதி மேற்படி இளைஞன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னிருக்கையில் அமர்ந்து பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சென்றுள்ளார்.

இதன்போது நீர்வேலிப் பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மேற்படி இளைஞன் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (19.05) உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை விசாரணை மேற்கொண்ட நிலையில், அறிக்கைகள் கோப்பாய் பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளன.

தங்க நகை வாங்க காத்திருக்கிறீர்களா : விலை குறித்து முக்கிய அறிவிப்பு!!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (20) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 964,260 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,020 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 272,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,190 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 249,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 29,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 238,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 260,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் வங்கிக் கணக்கு திறக்க கட்டாயமாகும் நடைமுறை!!

அனைத்து வகையான வங்கிக் கணக்குகளையும் திறக்கும்போது வரி அடையாள எண்ணை (TIN) வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில்,

2017ஆம் ஆண்டு 24ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025.04.01 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வரி வீதம் 5% தொடக்கம் 10% வரை அதிகரிப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் 2025ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க உண்ணட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரி அறவிடப்படுகின்ற வருடாந்த வருமான எல்லையான 1.8 மில்லியன் ரூபாவை விஞ்சாத வருமானத்தைக் கொண்ட நபர்களின் தக்க வைக்கப்பட்ட வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால்,

அவ்வாறான வைப்பாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைக்கான தீர்வாக வரி விடுப்பிற்கு குறைவான வருமானத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு சுயபிரகடனத்தைச் சமர்ப்பிக்கின்ற முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க வட்டி மீதான தக்க வைக்கப்பட்ட வரியை அறவிடுவதிலிருந்து விடுவிப்பதற்கு 1.8 மில்லியன் ரூபாவை விஞ்சாத மதிப்பீட்டு வருமானத்துடன் கூடிய அனைத்து நிலையான வைப்பாளர்களுக்கு சுயபிரகடனத்தை

அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் அனைத்து வகையான வங்கிக் கணக்குகளையும் திறப்பதற்காக வரி அறிமுக இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பதற்குக் கட்டாயமாக்கும் தகுந்த திருத்தத்தை உள்வாங்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க

உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 3 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மின்சார உபகரணங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குஷ் போதைப்பொருளுடன், 3 பெண்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் ​​வணிகர்களுக்கான சிவப்பு பாதை வழியாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த 46 வயது தாயும் அவரது 18 வயது மகளும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருட்கள் தாய்லாந்தில் பெற்று, மின்சார சமையல் சாதனங்களில் மறைத்து வைத்து, இந்தியாவின் சென்னைக்கு வந்து, பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மூன்று பெண்களும் இதற்கு முன்பு பல முறை இந்த முறையில் மின் சாதனங்களைக் கொண்டு வந்திருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த மூன்று பெண்களையும், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காதலியை கொன்றதாக நினைத்து காதலன் செய்த செயல்!!

குருநாகல் – முகுனுவட்டவன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு காதலர்களுக்கு ஏற்பட்ட தகராறு விபரீதமாக மாறியுள்ளது.

காதலி மீது கோபமடைந்த 30 வயது காதலன் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் பொலிஸார் மற்றும் அயலவர்கள் இணைந்து இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் மாத்தறை பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞன் ஒருவரும் 32 வயதுடைய பெண்ணும் காயமடைந்தனர்.

தனது தந்தையுடன் தனியாக வசிக்கும் இந்த இளைஞன், சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொள்ளவிருந்த காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில் காதலர்கள் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 16 ஆம் திகதி மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முகத்தில் சுடப்பட்ட பின்னர் வீட்டை விட்டு வெளியே ஓடிய இளம் பெண், பிரதான வீதியில் அருகே ஒரு கடைக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார். அந்த பகுதி மக்கள் அம்புலன்ஸில் சிலாபம் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர், அந்த இளைஞனை விசாரித்தபோது, ​​வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்ததுடன் அறையில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்த பகுதி மக்கள் கயிற்றை அறுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 30 வயதுடைய காதலன் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது குழந்தை!!

மட்டக்களப்பு கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்வு கடந்த சனிக்கிழமை (மே 17, 2025) மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசனின் அனுசரணையுடன், மட்டக்களப்பு கிறீன் காடின் ஹோட்டலில் நடைபெற்றது.

சோழன் உலக சாதனை புத்தகத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் ரி. இன்பராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டு மாநகரசபை ஆணையாளர் நா. தனஞ்சயன் கலந்துகொண்டார்.

மேலும், செங்கலடி மத்திய மகா வித்தியாலய அதிபர் க. சிவயேஸ்வரன், கல்குடா ஆசிரியர் ஆலோசகர் சுகந்தி நிறஞ்சன், மற்றும் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது, கிஷன்ராஜ் தன்யஸ்ரீ 195 நாடுகளின் தலைநகரப் பெயர்களை மிகக் குறைந்த நேரத்தில் துல்லியமாகக் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இந்தச் சாதனையைப் புரிந்த குழந்தைக்கு பதக்கங்கள், வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, அதிதிகள் கௌரவித்தனர்.

சகோதரர்களான சிறுவனும், சிறுமியும் துஷ்பிரயோகம் : இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!!

கொஸ்கொடை பொலிஸ் பிரிவில் பத்து வயது சகோதரனும் எட்டு வயது சகோதரியும் மூன்று ஆண்களால் கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலவங்கப்பட்டை உரிக்கும் தொழிலுக்கு தாய் வீட்டை விட்டு சென்றவுடன் மூன்று ஆண்கள் வீட்டில் தனியாக இருந்த சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பில் 22, 73 மற்றும் 63 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (19) கொஸ்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 22 வயதுடைய இளைஞன் பாதிகப்பட்ட சிறுவர்களின் நெருங்கிய உறவினர். மற்றைய இருவரும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இரண்டு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கொஸ்கொடை பொலிஸின் பிரதம பொலிஸ் பரிசோதகர் துனுவில பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு லட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேர். இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர்.

அதேவேளை குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டன. மேலும் இந்த ஆண்டு 340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதியில் பட்டதாரி மாணவரின் விபரீத முடிவால் சோகத்தில் கிராமம்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தை சேர்ந்த 29 வயதான இளைஞன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது வீட்டின் அறையில் இன்று அதிகாலை (20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவயதில் தாய் தந்தையரை இழந்து வாழ்ந்து வந்த பட்டதாரியான இளைஞனின் திடீர் மரணம் அம்பிளாந்துறை கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்திதுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த பின்னும் வாழும் இலங்கை தமிழ் பெண் : உறவினர்கள் நெகிழ்ச்சி!!

பதுளை வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த பெண்ணொருவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசறை ஹொப்டன் பகுதியை சேர்ந்த எஸ் ரமணி (வயது 48) என்பவரே இவ்வாறு மூளைச்சாவு அடைந்துள்ளார். 48வயதான பெண்ணொருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் அவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த பெண் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்து அதை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் அவரது உறவினர்களின் சம்மதத்துடன் அவரது சிறுநீரகம் வெற்றிகரமாக வேறொருவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய உடல் உறுப்புகளும் தேவையுடையவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு : கணவன் கைது!!

9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (17) இரவு தனது வீட்டில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.

தெனியாய, விஹாரஹேன, என்செல்வத்த, பகுதியை சேர்ந்த ராமசாமி இஷாந்தி என்ற 25 வயது கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பெண்ணின் கணவன்தான் கொன்றாரா?

மாத்தறை தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார்.

மனைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார்.

அதிச்சியடைந்த அயலவர்கள் சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 9 மாதங்கள் கர்பிணியாக இருந்துள்ளதோடு நேற்றியதினம் (18) அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டு இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பெண்ணின் கணவன்தான் கொன்று தூக்கில் மாட்டிவிட்டதாக அருகில் இருந்த 7 வயதுடைய மகன் மற்றும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவனான 27 வயதுடைய அமில்காந்த குமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தெனியாய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓமான் சென்ற மட்டக்களப்பு பெண் மாயம் : குடும்பத்தினர் கவலை!!

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இருந்து வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என பெண்ணின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தாயான ஹயாத்து முகம்மது ஐதுறூஸ் நௌபியா என்பவர் பணிப்பெண்னாக வெளிநாடு சென்றுள்ளார்.

குறித்த பெண் 15 வருடங்களுக்கு முன்னர் துபாய் நாட்டுக்குச் சென்றவர் அங்கிருந்து ஓமான் நாட்டிற்கு சென்று பணிப் பெண்னாக வேலை செய்து வந்த நிலையில் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பெண்ணை அனுப்பிய முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்றவைகளிலும் இவரை கண்டுகொள்ள பல முயற்சி செய்தும் இதுவரை எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓமானில் இருக்கும் நபர்கள், குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அவரது சகோதரர் சாஜஹான் என்பவரின் தொலைபேசி இலக்கத்துடன் 0096565850217 தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.