ஏழு பேராக வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர் : கண்கலங்கவைக்கும் சம்பவம்!!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகரில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருபவர் 24 வயதான மணிகண்டன்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து தந்து அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் காப்பாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி காலை செங்குத்தான மலைப்பகுதிகளில் ஒன்றான ‛டால்பின் நோஸ்’ பகுதியில் சில சுற்றுலாப்பயணிகளை நிற்கவைத்து படம் எடுத்துக் கொண்டு இருந்தார்.

சுற்றுலாப்பயணிகளை உற்சாகமூட்டி பல கோணங்களில் நகர்ந்து நகர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தவர், கால் திடீரென இடறியதில் கண நேரத்தில் சரசரவென சறுக்கிக்கொண்டே போய் மலைப்பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.

அந்த இடத்தின் பயங்கரத்தை, பாதாளத்தை நன்கு அறிந்த மணிகண்டன் பயணிகளை எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருப்பாராம்.

மணிகண்டன் பள்ளத்தில் இடறி விழுந்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் அலறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மிகவும் சிரமப்பட்டு பள்ளத்தாக்கில் இறங்கி உயிருக்கு துடித்துக் கொண்டு இருந்த மணிகண்டனை உடனடியாக டோலிகட்டி மேலே துாக்கிவந்தனர்.

சின்னதாய் காயங்கள் இருந்தனவே தவிர உடலில் பெரிதாக எதுவும் அடிபடவில்லை ஆனால் மயக்க நிலையில்தான் மணிகண்டன் இருந்தார்,

உடனடியாக அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சைக்கு பின்னரும் மணிகண்டனுக்கு உயிர் இருந்ததே தவிர உணர்வு திரும்பவில்லை.

இந்த நிலையில் மருத்துவர்களின் கடும் போராட்டம் பலனளிக்கவில்லை, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள.

இதனிடையே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது மட்டுமே முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்லிவிட கதறி அழுத உறவினர்கள், மற்றவர்கள் உருவிலாவது மணிகண்டன் வாழட்டும் என்று முடிவு எடுத்து உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, இருதயமும் நுரையீரலும் சென்னை மலர் மருத்துவமனையில் உள்ள இருவருக்கும், ஒரு சீறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஒருவருக்கும்,

ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனையி்ல் இருந்த இருவருக்கும், இரண்டு கண்களும் மதுரை அரவிந்த் மருத்துவமனையில் இருந்த இருவருக்கும் என ஏழு பேருக்கு மணிகண்டனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

தற்போது மணிகண்டன் ஏழு பேராக வாழ்ந்து கொண்டிருப்பதாக அவரது உறவினர்கள் கண்கலங்கியுள்ளனர்.

பேரனின் மரணசெய்தி கேட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பாட்டி!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரன் இறந்து வேதனையை தாங்கிகொள்ள முடியாத பாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்களான கிருபாகரன், செல்வகுமார், விவேக் மூன்று பேரும் நேற்று மதியம் இப்பகுதியில் உள்ள நெய்குன்னம் வெண்ணாற்றில் குளித்திருக்கிறார்கள்.

அப்பொழுது தண்ணீரின் வேகம் திடீரென அதிகரித்ததால் மூன்று பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

உடனடியாக அம்மாபேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடி கிருபாகரன், விவேக் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு செல்வகுமாரின் உடலும் மீட்கப்பட்டது.

உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிருபாகரனின் பாட்டி, தனது பேரனை இழந்த அதிர்ச்சியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல நடிகர் திடீர் மரணம் : உயிர் பிரிந்த நிமிடத்தை கண்ணீருடன் விளக்கிய குடும்பத்தினர்!!

பிரபல நடிகர் குணா மகந்தா இதய நோய் காரணமாக தனது 70-வது வயதில் காலமானார். அசாம் மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து மக்களிடையே புகழ் பெற்ற குணா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதய நோய் மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த குணா அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று குணாவின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. இத்தகவலை அவர் குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர்.

குணாவின் மரணத்துக்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

46 வயதான காதலியை அடித்துக் கொலை செய்த 29 வயதான காதலன்!!

குருணாகல் – வாரியபொல பகுதியில் 29 வயதான நபர் ஒருவர் 46 வயதான ஏற்கனவே திருமணமான பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளார்.

குறித்த இளைஞன் இரும்புக் கம்பியொன்றினால் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளார். பீ.எச். சியாமலி பதிராஜ் என்ற 46 வயதான தாதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த தாதி குருணாகல் போதான வைத்தியசாலையில் பணியாற்றி வந்துள்ளார். கணவரை பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்து வாழ்ந்து வந்த பெண் 29 வயதான இளைஞருடன் வாரியபொல பிரதேசத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த இளைஞர் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்போது சட்டபூர்வமான கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவில் புதிய முயற்சியில் ஈடுபட்ட இலங்கையருக்கு கிடைத்த பாரிய வெற்றி!!

ஐரோப்பிய மண்ணில் இலங்கை நெல் வகை ஒன்றை பயிரிட்டு வெற்றியடைந்த நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

25 வருடங்களுக்கு அதிகமான காலம் இத்தாலி வெரொனா நகரில் வாழும் இலங்கையர் ஒருவர், நெல் வகை ஒன்றை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளார்.

மாரவில பிரதேசத்தை சேர்ந்த வியாநந்த தம்பகே , இத்தாலியிலுள்ள தனது வீட்டிற்கு அருகில் இருந்த காணியில் உள்ளூர் நெல் வகையை வெற்றிகரமாக பயிரிட்டுள்ளார்.

விடுமுறைக்கு இலங்கைக்கு வந்த போது, தனது உறவினர் வழங்கிய உள்ளூர் நெல்லை அவர் இத்தாலிக்கு கொண்டு சென்று வெற்றிகரமாக பயிரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில், இந்த உள்ளூர் நெற்கதிர்கள் 6 அடி அளவு வளர்ந்துள்ளது. ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் குளிர்காலத்திற்கு முன்னர் அறுவடை செய்வதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்.

கடந்த வருடத்திலும் இவ்வாறு பயிரிட்டப்பட்ட போதிலும், குளிர் காலத்தில் அழிவடைந்துள்ளதாகவும், சூடான காநிலையில் நெற் செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி நாட்டு விவசாயிகளுக்கு இதனை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில், பெற்றோரைத் தேடி நாய் உருவில் வந்த உயிரிழந்த குழந்தை : மனதை நெகிழ வைக்கும் சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் இறந்து போன குழந்தை ஒன்று மீண்டும் தனது பெற்றோரைத் தேடி நாய் உருவில் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த டிவேனிகா சுதர்சன் என்ற இரண்டரை வயது சிறுமியின் மர்ம மரணம் அங்குள்ள மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்த நிலையில், பெற்றோர் சிறுமிக்கு இறுதி கிரியை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

எனினும் இறுதி நிமிடத்தில் சிறுமியிடம் ஏற்பட்ட அசைவுகள் காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என அறிந்த பெற்றோர் மீண்டும் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அது பயனளிக்காமல் சிறுமி உயிரிழந்திருந்தார்.

பெற்றோரின் மகிழ்ச்சி திருப்பிக்கொடுக்கப்பட்டு மீண்டும் அந்த தருணத்தில் பறிக்கப்பட்ட ஒரு கொடூர சம்பவம் அங்கே அரங்கேறியது.

இந்நிலையில், குறித்த சிறுமியை அடக்கம் செய்த இடத்திற்கு 8ஆம் நாள் காரியங்கள் செய்வதற்காக சென்ற பெற்றோருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

சிறுமியின் கல்லறை அருகே இருந்த நாயொன்று சிறுமியின் பெற்றோரை ஆக்கிரமித்துக்கொண்டு, அவர்களையே சுற்றி சுற்றி வந்துள்ளது.

மேலும், சிறுமியின் பெற்றோருடன் அவர்களது வீட்டிற்கும் குறித்த நாய் வந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் கல்லறை அருகே இருந்த நாய் தமது மகள்போலவே அசைவுகளைக் காட்டுவதாகவும், தமது மகளைப் போலவே தம்மிடம் நெருங்குவதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், உயிரிழந்த தம்முடைய மகள்தான் நாய் உருவில் எங்களை தேடி வந்துள்ளார் என தெரிவிக்கும் குறித்த பெற்றோர் அந்த நாயை தம்முடனேயே வைத்து பராமரித்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் அங்குள்ள மக்களின் மனதை உருகச் செய்துள்ளதுடன், நெகிழ்ச்சியையும் கண்ணீரையும் ஒருசேரத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டதால் தற்கொலை!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான நல்லதம்பி வசந்தகுமார் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார். புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட வசந்தகுமார், நவுரு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர், பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக மூளைச்சாவடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

ஒரே குழிக்குள் புதைக்கப்பட்ட தாய்- மகளின் சடலம் : கிராமமே சோகத்தில்!!

குருநாகல் மாவட்டம் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில் மகளின் திடீர் மரணத்தைக் கேட்டு மாரடைப்பால் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய அனுஸா தமயந்தி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் 14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நீண்ட காலமாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் மகளின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மகளின் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் கடந்த 25ம் திகதி சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திடீரென மயக்கமுற்று விழுந்த குறித்த பெண்ணை மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாகவே அப்பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் எவ்வித நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் அவருக்கு மகளின் இறப்பு அதிர்ச்சியை அளித்துள்ளதால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தாய் மற்றும் மகளின் சடலம் நேற்று மெல்சிறிபுரயில் உள்ள பொது மயானத்தில் ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சீமெந்து தாங்கி வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி!!

திருகோணமலை தமிழ் வித்தியாலய வீதியில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றில் சீமெந்து தாங்கி உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. என்டன் ஸ்டீபன் என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தின்போது, உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் Mister Ocean ஆக தமிழ் இளைஞன் தெரிவு!!

Mister World க்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் Mister Ocean போட்டியில் ஜெரோஷன் ஸ்மித் என்ற தமிழ் இளைஞன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இப் பட்டத்தை பெரும் இலங்கையின் முதல் தமிழனாக தன்னை பதிவுசெய்ததுடன் மொடலிங் உலகில் தமிழர்களின் பெயரையும் நிலைநாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி உலக அளவில் நடைபெறவிருக்கும் போட்டியிலும் இலங்கை சார்பாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

அடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான Mister Ocean போட்டிக்கு இலங்கை சார்பாக கலந்துகொண்டு இப் பட்டத்தை வென்று உலக அளவில் தமிழனின் பெயரை பதிவு செய்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறவிருக்கும் இப் போட்டியில் கலந்துகொள்ள அதிகளவிலான செலவுகள் காணப்படுவதாகவும் அப் போட்டிக்கு தன்னை தயார் செய்வதற்கும் அதிகளவிலான செலவுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களையோ அல்லது தனி நபர்களையோ ( Sponsor ) எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு
ஜெரோஷன் ஸ்மித் ( Jeroshan Smith )
0750765110 / 0715294990

வவுனியாவில் நல் நிலைக்கான நடைபயணத்தின் நிறைவு!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் “நல் நிலைக்கான நடைபயணம்”எனும் தொனிப்பொருளில் உள ஆரோக்கியத்தை வலியுறுத்தி கடந்த 21ம் திகதி மன்னாரின் ஆரம்பித்த நடைபயணம் 25 ம் திகதி சனிக்கிழமை காலை குருக்கள்புதுக்குளத்தில் இருந்து பூவரசன்குளம் வரையும் மாலை பூவரசன்குளத்தில் இருந்து பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை வரையும் இடம்பெற்று முடிவடைந்தது.

இந்த நடைபயணத்தில் பாவற்குளம், தட்டான்குளம், சண்முகபுரம், கற்குளம், செக்கடிப்புலவு மற்றும் பம்பைமடுவை சேர்ந்த பல மக்கள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மறுநாள் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தொழிநுட்பக் கல்லூரியில் ஆரம்பித்த நடைபயணம் வவுனியா பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது நிறைவுநாள் நிகழ்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக வைத்திய அதிகாரி-உளநலம், வைத்திய கலாநிதி சுதாகரன் கலந்து சிறப்பித்ததோடு நல் நிலைக்கான நடைபயணத்தின் நோக்கம் தொடர்பான தனது கருத்துரைகளையும் வழங்கினார்.

அவர் தனது கருத்துரையில் உள நலத்தின் அவசியம் மற்றும் அதன் தேவைப்பாடு தொடர்பாகவும் விளக்கியிருந்தார்.

இறுதியாக இந்த ஆறு நாள் நடை பயணத்தில் உறுதுணையாக இருந்த சகலருக்குமான நன்றி தெரிவித்தலை குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் -வடக்கு, ச.எமிலியான்ஸ்பிள்ளை தனது நன்றியுரையினை வழங்கினார்.

இதில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் தலைமைக்காரியாலய உத்தியோகத்தர்கள், வட மாகாண அலுவலக உத்தியோகத்தர்கள் கிராம மட்ட குழுக்கள், மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிசார் மீட்டுள்ளனர்.

உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜ.எம். நபீம் தலைமையில் சென்றவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் 100 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கணவரை கொலை செய்த வழக்கு : இளம்பெண்ணுக்கு பெருகும் ஆதரவு!!

சூடான் நாட்டில் பலாத்காரத்திற்கு முயன்ற கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இளம் பெண்ணுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கணவரை கொலை செய்த குற்றத்திற்காக 19 வயதான Noura Hussein என்ற இளம் பெண்ணுக்கு கடந்த மே மாதம் மரண தண்டனை விதிக்கப்பது.

ஆனால் அதன் அடுத்த மாதம் குறித்த தண்டனையை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக 5 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் குறிப்பிட்ட தொகை அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் குறித்த இளம் பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்து அவரை மன்னித்து விடுவிக்குமாறு தற்போது மனித உரிமை ஆர்வலர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சூடான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், Hussein-கு ஆதரவாக அரசுக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

16 வயது இருக்கும்போது குடும்பத்தாரால் கட்டாயப்படுத்தி Hussein-கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாயமான Hussein, அவரது உறவினர் குடியிருப்பு ஒன்றில் 3 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குடும்பத்தாரின் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்டு Hussein சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

இதனிடையே குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் தம்மை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை Hussein கொலை செய்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட Hussein-கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சூடானில் எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழனின் திருமணம் எப்படி இருக்கும் : சமூகவலைத்தளங்களை அதிர வைத்த இளம் ஜோடியின் புகைப்படங்கள்!!

புதைந்து போன தமிழக மரபுப்படி திருமணம் செய்துகொண்டு மதுரை சேர்ந்த புதுமண தம்பதியினர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

நாகரீகம் ஒருபுறம் வளர்ச்சியடைந்தாலும் தமிழன் தன்னுடைய பண்டையகால நடைமுறை பழக்கவழக்கங்கள் பலவற்றையும் மறந்து வருகிறான். அதில் ஒன்று தான் தமிழனின் திருமண முறை.

புதைந்து போன அந்த பழைய முறையினை, மீண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக மதுரையில் ஒரு பொறியியல் பட்டதாரி தன்னுடைய திருமணத்தை நடத்தியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடந்துள்ளது.

அன்றைய தினம் திருமணத்திற்கு செல்வதற்கு முன்பு, பண்டைய கால முறைப்படி தாரை, தாப்பட்டம் என முழங்க, மறுபுறம் சலங்கை கட்டிக்கொண்டு பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவை நடைபெற்றன.

திருமணத்தில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர். மதுரையையே திரும்பி பார்க்க வைத்த இந்த திருமண நிகழ்வு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பாக நடந்து முடிந்தது.

அதனை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக, மாட்டு வண்டியில் மணமகளை அமர வைத்து, மணமகன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். பின்னர் திருமண மண்டபத்தில், பெண்களின் குலவை சத்தத்துடன் அங்கு போடப்பட்டிருந்த குடிசையில் இருவரும் அமர்ந்தனர்.

இதனையடுத்து மாப்பிள்ளைக்கு மணமகள் சார்பில் அம்மிக்கல், ஆட்டு உரல், உலக்கை, சட்டி பானைகள் போன்ற சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. மதுரையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வானது தற்போது உள்ள தலைமுறை இளைஞர்கள் பலரிடமும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இவர்களின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் பெண்ணின் திருமண வாழ்க்கையை கேள்வி குறியாக்கிய கேரள வெள்ளம் : அதன் பின் நடந்த நெகிழ வைக்கும் நிகழ்வு!!

வெள்ளத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நகை, பணம் போன்றவைகள் எல்லாம் அடித்து செல்லப்பட்டதால், பெரும் துயரில் இருந்த அந்த பெண்ணிற்கு டீ விற்பனையாளர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கேரளாவின் மூணாறு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு அருகே விஜயன்-முனியம்மா தம்பதி வசிக்கின்றனர். இவர்களது மூத்தமகளான சரண்யாவிற்கு வரும் செப்டம்பர் மாதம் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக பெற்றோர் இரவு, பகலாக உழைத்து சிறுக, சிறுக நகைகளை சேர்த்தனர். திருமண திகதியும் குறிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி கேரளாவில் பெய்த கனமழையால் மூணாறு பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதில் விஜயனின் வீடு மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் பறி போனது.

குறிப்பாக திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த நகைகள், பணம் முழுவதும் வெள்ளத்தால் பறிபோனது. அனைத்தையும் இழந்த விஜயனின் குடும்பத்தார், அங்கிருக்கும் முகாமில் நிர்கதியாக நின்றனர்.

பணம், நகைகள் பறிபோனதால் சரண்யாவின் திருமணம் கேள்விக்குறியானதால், குடும்பமே கடும் மன உளைச்சலில் தவித்தது.

இதை அறிந்த மூணாறில் டீ கடை நடத்தும் மரியான் என்பவர் தான் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயன் குடும்பத்தாரிடம் நேற்று கொடுத்துள்ளார்.

இது குறித்து மரியான் கூறுகையில், சரண்யாவின் திருமணத்திற்கு என்னாலான உதவியை செய்துள்ளேன். குறிப்பிட்ட திகதியில் அவருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால், அந்த குடும்பத்திற்கு கேரள, தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும். அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார்.

34 வருடங்களின் பின் மீண்டும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க படையெடுக்கும் பக்தர்கள்!!

பொத்துவில் பகுதியில் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க பெருந்திரளான பக்தர்கள் வருகைதருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு 60ஆம் கட்டை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அங்கிருந்த பிள்ளையார் சிலையொன்றும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது பூர்வீக நிலங்களில் குடியமர்வதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொத்துவில் தமிழ் இளைஞர்களும், கனகர் கிராம மக்களும் இணைந்து, எடுக்கப்பட்ட பிள்ளையார் சிலையை நேற்று மாலை மீண்டும் குறித்த பகுதியிலேயே வைத்துள்ளனர்.

இதன்போது பிள்ளையார் சிலை, முன்பு வைக்கப்பட்டிருந்த அதே இலுப்பை மரத்தடியில் வைக்கப்பட்டு பொங்கல் படைத்து வழிபடப்பட்டுள்ளது.

மேலும் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரை காண பெருந்திரளான பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.