கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரான் என்பவரின் முதல் மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான், பாதாள தலைவர் மாகதுரே மதுஷ் என்பவருக்கு நெருக்கமானவர் எனவும், அவர் தற்போது டுபாயில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
6 மீற்றர் துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொலை செய்யப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறையினால் இந்த காலதாமதம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை ஆசிரியர் ஒன்றியம் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளது.
பொதுவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஓர் குழாமில் 14 பேர் அங்கம் வகிப்பார்கள் என்ற போதிலும் இம்முறை எட்டு ஆசிரியர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறைந்தளவான கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று முன்னாள் போராளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினையும் அமைச்சர் மனோ கணேசன் தமது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இந்த சேவையின் ஊடாகவே கடந்த 10 வருடங்களாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த புதுக்குடியிருப்பை சேர்ந்த குணசிங்கம் கஜேந்திரனுக்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த முன்னாள் போராளி 7 அடி 3 அங்குலம் உயரமுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா தோணிக்கல்லை பூர்வீகமாக கொண்டவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் கருணாநிதி பிரகாஸன் என்பவர் தனது திருமண நிகழ்வை முன்னிட்டு நேற்று (26.08.2018) 5 வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளையும், இருவருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த 20 000 ரூபா பணத்தையும் வழங்கி வைத்திருந்தார்.
அவர்களின் இவ் உதவிகளை தம்பதிகளுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், நகரசபை தலைவர் தேசபந்து இ.கெளதமன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், ஊடகவியலாளர் ப.கார்த்தீபன், தமிழ் விருட்சம் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
தமிழர்களின் பாரம்பரியத்தினையும் தமிழர் அடையாளங்களையும், தமிழர் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கி வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கில் காணி அபகரிப்பு, மற்றும் கடந்த கால செயற்பாடுகளை உற்று நோக்கையில் இத்திட்டத்தை வைத்து தமிழர் தாயக பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றங்களும் இடம்பெறுவதற்குறிய வாய்ப்புக்களும் அதிகம் உள்ளதால் இத்திட்டத்தினை எதிர்ப்பதுடன் நடைபெறவிருக்கும் வெகுசன போராட்டத்திற்க்கு ஆதரவழிப்பதாகவும் ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ஸ்ரீ ரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதை தடுக்கும் முகமாக பாரிய ஓர் ஆர்ப்பாட்டத்தை மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை என்ற அமைப்பினர் 28.08.2018 அன்று நடாத்த உள்ளதனையடுத்து ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே தாம் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் வடக்கில் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களை மரபுவழியாக தமிழர்கள் வாழும் பூர்வீக நிலங்களில் அமைக்கப்படும் என்பது எமது கடந்தகால அரசியல் வரலாறு எமக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
எனவே இதை கடுமையாக நாம் கண்டிக்கின்றோம் விசேடமாக மகாவலி ” L ” வலயம் என்ற திட்டமானது வடக்கில் 3 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட திட்டமாகும் 1984ல் தமிழர்கள் ஏதிலிகளாக உள்நாட்டிற்குள் சென்ற போது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமிப்புக்குள்ளாகியதுடன் அவற்றில் பலவற்றை மகாவலி திட்டம், வன திணைக்களத்திற்கு சொந்தமானது என பல்வேறு காரணங்களை காட்டி அரசு தன்வசப்படுத்தியுள்ளது எனவே எமது தாயக நிலங்களை மீட்டெடுப்பது நமது கடமை.
இதேவேளை இலங்கை திருநாட்டின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்? அப்படியென்றால் எதிர்கட்சி தலைவரின் சம்மதத்துடனா மகாவழி அபிவிருத்தி திட்டம் இடம்பெறுகிறது? என ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இனிமேலும் தாமதிக்காது நேரடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் என குறிப்பிட்டதுடன் தாம் உடனடியாக ஜனாதிபதியுடன் இது தொடர்பாக கலந்தாலோசித்து சிறந்த ஒரு தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உதயராசா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28.08.2018 அன்று இடம்பெறவுள்ள மகாவலி எதிர்ப்பு போராட்டத்திற்க்கு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு தமிழர்களின் ஒற்றுமையை நிலைநாட்டி இலங்கை அரசிற்கு அழுத்ததை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான (300 மீற்றர் உயரமுடையை) வெடுக்ககுநாரி மலை அமைந்துள்ளது
குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய இலிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன . கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேனி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினர் , கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையிலேயே நேற்று (26.08.2018) மாலை 4 மணியளவில் நெடுங்கேனி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிலைமைகளை தேசிய சக வாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் , பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதன் போது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா வடக்கு கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லினக்க மன்றத்தினரும் ஆலய நிர்வாக சபையினரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகனேசனிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும் நேற்று (26.08) காலை 11 மணியளவில் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வடக்கு மீள் குடியேற்றம் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
தலைவராக கே.காதர் மஸ்தான், உபதலைவர்களாக நியூட்டன் சில்வா, டி.யே.பெனடிக், வெள்ளைசாமி மகேந்திரன், கனகராஜ், எஸ்.ஏ.தாஜீன் செயலாளராக குமாரசாமி மற்றும் உப செயலாளர்களாக லோகேஸ்வரன், ராகினி, விமலசிறி, சரத் வீரவர்த்தன, நிஸார்தீன், சுரேஸ், பொருளாளராக குமாரி தர்மதாஸ ஆகியோர் வவுனியா தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிகழ்வில் நகரசபை உப தபிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு பிரதேச சபையின் உப தவிசாளர், கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அமெரிக்காவில் ‘Playboy’ இதழின் மொடல் அழகி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா கார்லின் கிராப்ட்(36). இவர் பிரபல ‘Playboy’ இதழின் முன்னாள் மொடலாக இருந்தவர்.
கிறிஸ்டினா தனது வீட்டில் கொள்ளை நடந்ததாக பொலிசில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொள்ளை போன நகை உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடித்த பொலிசார், அவற்றை கொடுக்க கிறிஸ்டினா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது கிறிஸ்டினா, வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்துள்ளதைப் பார்த்து பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அவரது உடலை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் கிறிஸ்டினா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிறிஸ்டினா தனது ஆண் நண்பர் ஒருவருடன், கடந்த 9 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த அன்று அவரது ஆண் நண்பரும் வீட்டில் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, அவர் கிறிஸ்டினாவை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
அமெரிக்காவில் தனது 1 வயது குழந்தையை கத்தியால் துடிதுடிக்க அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
டெக்ஸாஸ் மாநிலத்தில் Oak Forrest என்ற குடியிருப்பில் வசித்து வந்த தந்தை சுமார் 12.30 மணியளவில் கத்தியை எடுத்து தனது குழந்தையின், கழுத்தினை துடிதுடிக்க அறுத்துள்ளார்.
இவர் குழந்தையின் கழுத்தினை அறுக்கும்போது, இயேசு வருகிறார் என உரக்க கத்தியுள்ளார், இப்படி ஒரு சத்தத்தை கேட்டவுடன் அருகில் வசிப்பவர் துப்பாக்கியுடன் ஓடி வந்துள்ளார். அவர் வந்து பார்க்கையில், குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடக்க அந்நபர் விடாமல் குழந்தையை கத்தியால் அறுத்துக்கொண்டே இருந்துள்ளார்.
இதனால் பக்கத்து வீட்டு நபர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அந்நபரின் காலில் சுட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவம் இடத்திற்கு வந்த பொலிசார் அந்நபரை கைது செய்துள்ளனர்.
மேலும், அக்குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது. தனது வாழ்நாளில் இப்படி ஒரு மோசமான சம்பவத்தை நேரில் பார்த்ததில்லை என கைது செய்த பொலிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற இந்த விழாவில், பெண்கள் யாரை தங்கள் சகோதரர்களாக நினைக்கிறார்களோ அவர்கள் கையில் கயிறுகளை கட்டி மகிழ்வார்கள், சகோதரர்கள் பாசமிகு சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்குவார்கள்.
இந்நிலையில் சட்டீஸ்கரில் இறந்து போன தம்பியின் சிலைக்கு கயிறு கட்டி பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் அக்கா.
கடந்த 2014ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் தாக்குதலில் ராஜேந்திர குமார் என்பவர் இறந்து போனார், இவரது அக்கா சாந்தி.
தம்பி மீது அதிக பாசம் கொண்ட சாந்தி, தம்பியின் நினைவாக சிலை ஒன்றை வைத்துள்ளார்.
இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராக்கி கட்டி பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
திருச்சியில் இறந்த மாமியாரின் உடலை பார்த்து மருமகள், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் 90 வயதான ஜெயமேரி. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயமேரி நேற்று மாலை உயிரிழந்தார்.
அவரது உடலை பார்ப்பதற்காக பாலக்கரை பகுதியில் வசித்து வரும், அவருடைய மகன் ஆல்பர்ட் மற்றும் மருமகள் சுசிலா (58) நேற்று திருச்சிக்கு வருகை தந்திருந்தனர்.
ஜெயமேரியின் உடலை பார்த்து கலங்கியபடியே நின்று கொண்டிருந்த சுசிலா திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சுசிலா மாரடைப்பு காரணமாக ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகளும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இளைஞரை கொலை செய்து, கிணற்றில் சடலம் வீசப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் அளித்த பகீர் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் 32 வயதான மதுசூதனன். கட்டடத் தொழிலாளியான இவரை கடந்த 22ம் திகதி சிலர் கடத்திச்சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலில் கல்லைக் கட்டி, சடலத்தை குரங்குசாவடி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சூரமங்கலம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் மதுசூதனனின் உறவினர் வசந்த், அவருடைய நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் கடத்திச்சென்று கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களைக் கைது செய்த பொலிசார், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மதுசூதனனும் வசந்தும் இரவு நேரங்களில் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, அவர்களுடன் நண்பர்கள் சிலரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த மதுசூதனன், வசந்தை பார்த்து ‘போடா பொட்டையா…’ என்று திட்டியதோடு, திடீரென்று வசந்தின் கழுத்தை பிளேடால் அறுத்து விட்டார்.
உயிருக்குப் போராடிய வசந்த், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் பிழைத்தார். இந்த மோதலை அறிந்த உறவுக்காரர்கள் சிலர், அவர்களை சமாதானப்படுத்தினர்.
என்றாலும், தன்னை ‘பொட்டை’ என்றதோடு, கழுத்தறுத்த மதுசூததனை தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று மிரட்டி வந்துள்ளார் வசந்த்.
இந்நிலையில்தான் மதுசூதனன், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் மதுபோதையில் விழுந்து கிடந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட வசந்த், தன்னுடைய கூட்டாளிகள் தட்சிணாமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோரை அங்கு வரவழைத்துள்ளார்.
அவர்கள் மூவரும் சேர்ந்து மதுசூதனனை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து குரங்குசாவடி பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மதுசூதனன் பலியானார். தடயத்தை மறைப்பதற்காக சடலத்தின் உடல் மீது கல்லைக்கட்டி கிணற்றில் வீசிவிட்டனர்.
பின்னர் அன்று இரவோடு இரவாக மூவரும் கரூருக்கு கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனர். கரூரில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கேயே தங்கியிருந்தபடி கட்டட வேலைக்குச் சென்று வந்தனர்.
செல்போன் அழைப்புகள் மூலம் அவர்களை நெருங்கிய பொலிசார், கைது செய்து விசாரித்ததில் இந்த விவரங்கள் தெரிய வந்தன.
கொலை நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த மதுபாட்டில் துண்டுகள், சடலத்தை இழுத்துச் சென்றபோது முள்புதரில் சிக்கிக்கொண்ட வசந்தின் ஒற்றை செருப்பு ஆகியவற்றைக் கைப்பற்றிய பொலிசார், வசந்த்துதான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
பெண்களை மட்டுமே குறி வைத்து திருடும் பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
இது குறித்து பொலிசாருக்கு பல புகார்கள் வந்தன. இந்நிலையில் வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலையில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெயர் கெளதம் மற்றும் பிரபு என தெரியவந்ததோடு, தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்துத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பிரபு மற்றும் கெளதம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைப்போம். ஆள் இல்லாத சமயத்தில் தான் செயின், செல்போன்களை கத்தி முனையில் பறிப்போம்,
தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரிடம் கைவரிசைக் காட்டுவோம். அந்தப்பணத்தில் தினமும் ஜாலியாகவும் சொகுசாகவும் வாழ்வோம் என கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மகாவலி திட்டத்திற்கு எதிராக முல்லைத்தீவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,
1980களிலிருந்தே தமிழ் மக்களின் பூர்வீக தாயக பூமியான வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் வகையிலான திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள் நடைபெற்று வந்துள்ளன.
எனினும் தமிழ் மக்களின் ஆயுத பலம் ஓங்கியிருந்த நிலையில் இவை சிங்கள அரசுகளால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சிங்கள அரசு தனது வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
மகாவலி எல் வலய திட்டத்தினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டுமல்ல வடக்கின் வன்னி, யாழ். ஆகிய மாவட்டங்களை நில தொடர்பின்றி பிரிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய காலநிலை மாற்றத்தால் எமது விவசாயிகள் நீரின்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது கஷ்டப்படுகின்றனர்.
எனவே தெற்கிலுள்ள இயற்கையான ஆறுகளிலிருந்து கடலிற்கு வழிந்தோடும் மேலதிக நீரை வட மாகாணத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்காக கொண்டு வருவது வரவேற்ககூடியதொன்று.
எனினும் கடந்தகால கசப்பான அனுபவம் தண்ணீர் வருவதற்கு முன்னர் குடியேற்றங்கள் வந்துவிடுமென்பதே. அதனாலேயே இதனை நாங்கள் எதிர்கின்றோம். அத்துடன் மகாவலி அதிகாரசபை இலங்கையின் சாதாரண காணி சட்டங்களிற்கு அப்பாற்பட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது.
மாவட்ட, பிரதேச நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் அதிகார சபையாகும்.
எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உறுதிப்படுத்த வேண்டி அரசாங்கத்திற்கு நெருக்குதலை கொடுக்கும் முகமாக எதிர்வரும் 28ஆம் திகதி முல்லைத்தீவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வெகுசன போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான இளைஞனின் புகைப்படம் ஒன்று ஒட்டுமொத்த இலங்கையர்களின் கவனத்தை திருப்பியிருந்தது.
3D புகைப்படம் ஒன்றை வரைந்து பிரபலமான இளைஞன் மீண்டும் அவ்வாறான படம் ஒன்றை வரைந்துள்ளார். புகைப்பட கலைஞரான துஷார சம்பத் என்பவரின் இந்த திறமை பலரால் பாராட்டப்பட்டிருந்தது.
3D படங்களை வரைவதற்கான போதுமான வசதி இல்லாத போதும், கிடைத்தவற்றை கொண்டு வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் கட்டடம் ஒன்றை 3D முறையில் அவர் வரைந்துள்ளார். அதனை பார்ப்பதற்கு உண்மையான கட்டடம் போன்றே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.