இரவு நேரத்தில் பெண்கள் ஆடையில் அலைந்த இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

இளம்பெண்ணை போன்று உடையணிந்து முகமூடியுடன் மேல் மாடியில் ஏறிய இளைஞன் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். 24 வயதுடைய இளைஞனே நேற்றிரவு 11 மணியளவில் அடுக்குமாடி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞன் ரிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெறும் குறித்த இளைஞன் அணிந்திருந்த பெண்ணின் ஆடையை கழற்றிய பொலிஸார் சாரத்தினை அணிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஏ.பி டி எம் பி பண்டாரநாயக்க குறிப்பிடுகையில்,

குறித்த இளைஞன் கேப்பிட்டிகல பிரதேசத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு பெண்கள் அணியும் ஆடையை அணிந்துள்ளார்.

அதன்பின்னர் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வீடொன்றின் மேல் மாடிக்குள் நுழைந்துள்ளார்.

இளைஞன் வீட்டில் ஒரு அறையைப் எட்டிப் பார்க்கும்போது வீட்டிலுள்ளவர்களின் சத்தம் கேட்டதும் குழப்பமடைந்த இளைஞன் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

குறித்த இளைஞன் சீமெந்தினால் செய்யப்பட்ட பூச்சாடியின் மேலே விழுந்து படுகாயமடைந்துள்ளார் என பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

பெருநாள் விடுமுறைக்கு நுவரெலியா சென்று திரும்பிய குழுவினர் பயணித்த வான், பொலன்னறுவையின் மின்னேரியா பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த கதுறுவெல பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் ஏ.எம்இன்ஷாப் (வயது 28) மற்றும் இம்ஷித் (வயது 29) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை விபத்தில் காயமுற்ற ஐந்து இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

குருணாகலில் கணவனின் தாக்குதலில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

46 வயதான குறித்த தாதி குருணாகல் வைத்தியசாலையில் சேவை செய்து வருகின்றார். தாக்குதலை மேற்கொண்டவர் 29 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாதியின் இரண்டாவது கணவர் மேற்கொண்ட்ட தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 3 பிள்ளைகளின் தாய் எனவும், அவர் முதல் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு இளம் பெண்கள் : காரணம் என்ன?

வவுனியா சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை வீசமுற்பட்ட இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை ஐந்து மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தேக்கவத்தை மற்றும் சாம்பல் தோட்டம் பகுதிகதிளை சேர்ந்த 27, 28 வயதுகளையுடைய இரு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 12 கிராம் கஞ்சாவும், 140 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பெண்களை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!!

வவுனியாவில் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.குமாரசிங்க தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து நாலேமுக்கால் போத்தலுடன் சாராயமும், 48 பியர் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போயா தினமான நேற்று சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தொடர்பாக புலனாய்வுப்பரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது வவுனியா மகாறம்பைகுளம் ஸ்ரீராமபுரம் பகுதியிலுள்ள கடை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அக்கடையில் மறைத்து வைத்து வியாபாரம் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 43 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட மதுபானப்போத்தல்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையின்போது பொலிஸ் சார்ஜன் பாலித்த (64358), பொலிஸ் கொஸ்தாபிள்களான ராஜபக்ச (45720), விக்ரமசூர்ய(36099), ஏக்கநாயக்க (85257) ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

A9 வீதி மாங்குளத்தில் விபத்து!!

A9 வீதி மாங்குளத்தில் இன்று (25.08.2018) அதிகாலை பாரவூர்தி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொருட்களுடன் அதிவேகமாக பயணித்த பாரவூதி கட்டுப்பாட்டை இழந்து சிறிய பாலம் ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி தூக்க கலக்கத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வவுனியா உக்குளாங்குளத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞன் : நடந்தது என்ன?

வவுனியா உக்குளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (24.08.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது

வவுனியா உக்குளாங்குளம் முதலாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கிணற்றை சுத்தப்படுத்தும் நோக்கில் 20 வயதுடைய இளைஞன் கிணற்றினுள் இறங்கி சுத்தம் செய்து விட்டு கிணற்றின் மேல் பகுதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் கை நழுவியதில் 30 அடி உயரமான கிணற்றின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்துள்ளார் .

விழுந்ததும் சுய நினைவை இழந்துள்ளார். எனினும் கிணற்றருகே நின்ற குடும்பத்தினர் கூச்சலிடவும் அயலவர்கள் விரைந்து இளைஞனை மீட்டு முதலுதவி வழங்கி இளைஞனை சுயநினைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இளைஞர்கள், அயலவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இளைஞனை மரநாற்காலி ஒன்றில் அமர்த்தி அதனை கயிறு மூலம் கட்டி தூக்கி மேற்பகுதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர அழைப்பு (1990) அம்புலன்ஸ் வண்டி மூலம் பாதிக்கப்பட்ட இளைஞனை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மேலதிக சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.

வவுனியாவில் பேரூந்து நடத்துடனர் மீது தாக்குதல் : தனியார் வங்கி உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (25.08.2018) அதிகாலை 3 மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கியில் உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நின்ற சமயத்தில் நடத்துனர் அதிகளவு கட்டணம் பெற்றுள்ளதாக தெரிவித்து நடத்துனர் மீது அப் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட தனியார் வங்கியின் உத்தியோகத்தர், அரச உத்தியோகத்தர் உட்பட மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் கைது செய்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வருகை : பாதுகாப்பு தீவிரம்!!

 

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டார வன்னியனின் 215வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வருகை தரவுள்ளார்.

இதன் காரணமாக நகரசபை மண்டபத்தில் மோப்ப நாய்களுடன் பொலிசாரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்பாடு நிகழ்விற்கு வருகை தந்துள்ள பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அரச கரும மொழிகள் அமைச்சர் வவுனியாவிற்கு வருவது புதியதல்ல. பல தடவைகள் வருகைதந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளதைக்காண முடிந்துள்ளது.

வவுனியா மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!

வவுனியா கோவில்புதுக்குளம் மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 08 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை மறுதினம் (26.08.2018) ஞாற்றுக்கிழமை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் கழகங்களை பதிந்து கொள்ளமுடியும்.

தொடர்புகளுக்கு
சுஜன் : 0773880906
மனோ : 0774131578

தலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையடிவட்டைச் சந்தியில் கார் ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் கம்பனி ஒன்றின் உத்தியோகஸ்தர்கள் சென்ற காரே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு!!

நுவரெலியா நகரில் அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

58 வயதுடைய ஜீ.சுனில்சாந்த என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
திருமணமாகாத இவர், குறித்த பத்திரிகை நிலையத்திலிலேயே தொடர்ந்து தங்கி வந்துள்ளார்

இந்தநிலையில் இன்று காலை குறித்த பத்திரிகையை நிலையம் திறக்காததை அடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் பூட்டிருந்த கடையை உடைத்து பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

79 வயதில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் முதியவர் : திகைப்பில் மாணவர்கள்!!

இலங்கையில் 79 வயதான முதியவர் ஒருவர் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும் கனவில் 79 வயதான டியுடர் முனசிங்க உயர்தர பரீட்சை எழுதி, மாணவர்களை மட்டுமன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு கல்வி மிகவும் முக்கிய விடயம் என டியுடர் முனசிங்க தெரிவித்துள்ளார்.

களனி, லுவிஸ் மாவத்தையை சேர்ந்தவரே சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கலை பிரிவில் உயர்தர பரீட்சை எழுதிய அவர் இரண்டு பாடங்களில் சித்தியடைந்தார். எனினும் அவரின் முயற்சியை கைவிடாமல் நன்கு கல்வி கற்று இம்முறையும் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

தனது வாழ்க்கை குறித்து கூறிய முனசிங்க, வெலிகன்ன கிராமத்தில் பிறந்தேன். அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் நான் ஆரம்ப கல்வியை கற்றேன். களுத்துறை, மத்துகம வீதி லேவன்துவ மகா வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதினேன். உயர்தர பரீட்சை எழுதுவது கனவாகவே இருந்தது. அதற்கு முயற்சிகளிலேயே இருந்தேன்.

இம்முறை நான்கு பாடங்களிலும் சித்தி பெறுவதற்காக கடினமாக கற்றேன். ஆங்கிலம் கட்டயாப்பாடமாகும். ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், அரசியல் அறிவியல் மற்றும் இந்திய வரலாறு ஆகிய 3 பாடங்களையும் தெரிவு செய்து இம்முறை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளேன். சட்டத்தரணியாகுவதே என மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வதற்கு நான் உயர்தரத்தில் சித்தியடைவது கட்டாயமாகும். இதனாலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

நான் 1939ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 6ஆம் திகதி பிறந்தேன். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். எனது மூத்த மகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக செயற்படுகின்றார். இரண்டாவது மகள் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் பணியாற்றுகின்றார். மூன்றாவது மகன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் முகாமையாளராக செயற்படுகின்றார். கடைசி மகன் வெளிநாட்டில் ஹொட்டல் துறையில் முக்கிய அதிகாரியாக செயற்படுகின்றார்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் எனது மனைவி உயிரிழந்தார். அதனாலேயே நான் கல்வி வெற்றி பெற முயற்சிக்கின்றேன்…” என முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்களை திறப்பது உரிமையாளர்களின் முடிவே : வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவிப்பு!!

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்கள் திறப்பது உரிமையாளர்களின் முடிவே என வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி ஊழியர்கள் தமது குடும்பத்தினருடன் இன்புற்றிருக்க வியாபார நிலைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர் சங்கத்தினால் வியாபார நிலையங்களுக்கு அண்மையில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தினால் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்படவேண்டும் என்று அரசாங்கத்தினாலோ தொழில் திணைக்களத்தினாலோ சட்டம் இல்லை எனவும், வியாபார நிலையங்களைத் திறப்பதும் பூட்டுவதும் வியாபார நிலைய உரிமையாளர்களின் உரிமை, அதில் எவ்வித தலையீடுகளும் செய்ய மாட்டோம் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளதாக துண்டுப்பிரசுரங்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடுவது தொடர்பாக தொழில் திணைக்கள ஆணையாளரை 13ம் திகதி சந்தித்து கலந்துரையடினோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கத்தினாலோ அல்லது தொழில் திணைக்களத்தினாலோ சட்டம் எதுவும் இல்லை. வியாபார நிலையங்களைத் திறப்பதும் மூடுவதும் வியாபார நிலைய உரிமையாளர்களின் உரிமை. அதில் எவ்வித தலையீடுகளையும் செய்யமாட்டோம் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தொழில் புரியும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளையும் விடுமுறைகளையும் தொழில் திணைக்கள சட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொழில் திணைக்களத்தின் ஆணையாளரின் வேண்டுகோள்.

ஆகையால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வசதிகளுக்கேற்பவும் ஊழியர்கள் பாதிக்கப்படாதவகையிலும் வாடிக்கையாளரின் தேவைகள் கருதியும் முடிவு எடுக்கலாம் என்று அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் அதிசய பசுக்கன்று : படையெடுக்கும் மக்கள்!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் பசு ஒன்று இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த சம்பவம் அப் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள பசுமாடு ஒன்றே இந்த அதிசய கன்றினை ஈன்றுள்ளது. மேலும், கன்றும் தாய்ப் பசுவும் நலமாக இருப்பதாக குறித்த மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் மூன்று மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியமையால் பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல சிசுவின் தாயார் குறித்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை தாயார் குழந்தையை எழுப்பிய போது குழந்தை எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் குறித்த குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.