வவுனியாவில் பேரூந்து நடத்துடனர் மீது தாக்குதல் : தனியார் வங்கி உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (25.08.2018) அதிகாலை 3 மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கியில் உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நின்ற சமயத்தில் நடத்துனர் அதிகளவு கட்டணம் பெற்றுள்ளதாக தெரிவித்து நடத்துனர் மீது அப் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட தனியார் வங்கியின் உத்தியோகத்தர், அரச உத்தியோகத்தர் உட்பட மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் கைது செய்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வருகை : பாதுகாப்பு தீவிரம்!!

 

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டார வன்னியனின் 215வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வருகை தரவுள்ளார்.

இதன் காரணமாக நகரசபை மண்டபத்தில் மோப்ப நாய்களுடன் பொலிசாரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்பாடு நிகழ்விற்கு வருகை தந்துள்ள பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அரச கரும மொழிகள் அமைச்சர் வவுனியாவிற்கு வருவது புதியதல்ல. பல தடவைகள் வருகைதந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளதைக்காண முடிந்துள்ளது.

வவுனியா மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!

வவுனியா கோவில்புதுக்குளம் மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 08 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை மறுதினம் (26.08.2018) ஞாற்றுக்கிழமை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டுக் கழகங்கள் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் கழகங்களை பதிந்து கொள்ளமுடியும்.

தொடர்புகளுக்கு
சுஜன் : 0773880906
மனோ : 0774131578

தலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையடிவட்டைச் சந்தியில் கார் ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் கம்பனி ஒன்றின் உத்தியோகஸ்தர்கள் சென்ற காரே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு!!

நுவரெலியா நகரில் அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

58 வயதுடைய ஜீ.சுனில்சாந்த என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.
திருமணமாகாத இவர், குறித்த பத்திரிகை நிலையத்திலிலேயே தொடர்ந்து தங்கி வந்துள்ளார்

இந்தநிலையில் இன்று காலை குறித்த பத்திரிகையை நிலையம் திறக்காததை அடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் பூட்டிருந்த கடையை உடைத்து பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

79 வயதில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் முதியவர் : திகைப்பில் மாணவர்கள்!!

இலங்கையில் 79 வயதான முதியவர் ஒருவர் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதியுள்ளார். சட்டத்தரணியாகும் கனவில் 79 வயதான டியுடர் முனசிங்க உயர்தர பரீட்சை எழுதி, மாணவர்களை மட்டுமன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு கல்வி மிகவும் முக்கிய விடயம் என டியுடர் முனசிங்க தெரிவித்துள்ளார்.

களனி, லுவிஸ் மாவத்தையை சேர்ந்தவரே சட்டத்தரணியாகும் எதிர்பார்ப்பில் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கலை பிரிவில் உயர்தர பரீட்சை எழுதிய அவர் இரண்டு பாடங்களில் சித்தியடைந்தார். எனினும் அவரின் முயற்சியை கைவிடாமல் நன்கு கல்வி கற்று இம்முறையும் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

தனது வாழ்க்கை குறித்து கூறிய முனசிங்க, வெலிகன்ன கிராமத்தில் பிறந்தேன். அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் நான் ஆரம்ப கல்வியை கற்றேன். களுத்துறை, மத்துகம வீதி லேவன்துவ மகா வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதினேன். உயர்தர பரீட்சை எழுதுவது கனவாகவே இருந்தது. அதற்கு முயற்சிகளிலேயே இருந்தேன்.

இம்முறை நான்கு பாடங்களிலும் சித்தி பெறுவதற்காக கடினமாக கற்றேன். ஆங்கிலம் கட்டயாப்பாடமாகும். ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், அரசியல் அறிவியல் மற்றும் இந்திய வரலாறு ஆகிய 3 பாடங்களையும் தெரிவு செய்து இம்முறை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளேன். சட்டத்தரணியாகுவதே என மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றி கொள்வதற்கு நான் உயர்தரத்தில் சித்தியடைவது கட்டாயமாகும். இதனாலேயே இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.

நான் 1939ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 6ஆம் திகதி பிறந்தேன். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். எனது மூத்த மகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக செயற்படுகின்றார். இரண்டாவது மகள் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் பணியாற்றுகின்றார். மூன்றாவது மகன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் முகாமையாளராக செயற்படுகின்றார். கடைசி மகன் வெளிநாட்டில் ஹொட்டல் துறையில் முக்கிய அதிகாரியாக செயற்படுகின்றார்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் எனது மனைவி உயிரிழந்தார். அதனாலேயே நான் கல்வி வெற்றி பெற முயற்சிக்கின்றேன்…” என முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்களை திறப்பது உரிமையாளர்களின் முடிவே : வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவிப்பு!!

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்கள் திறப்பது உரிமையாளர்களின் முடிவே என வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி ஊழியர்கள் தமது குடும்பத்தினருடன் இன்புற்றிருக்க வியாபார நிலைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர் சங்கத்தினால் வியாபார நிலையங்களுக்கு அண்மையில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தினால் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்படவேண்டும் என்று அரசாங்கத்தினாலோ தொழில் திணைக்களத்தினாலோ சட்டம் இல்லை எனவும், வியாபார நிலையங்களைத் திறப்பதும் பூட்டுவதும் வியாபார நிலைய உரிமையாளர்களின் உரிமை, அதில் எவ்வித தலையீடுகளும் செய்ய மாட்டோம் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளதாக துண்டுப்பிரசுரங்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடுவது தொடர்பாக தொழில் திணைக்கள ஆணையாளரை 13ம் திகதி சந்தித்து கலந்துரையடினோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கத்தினாலோ அல்லது தொழில் திணைக்களத்தினாலோ சட்டம் எதுவும் இல்லை. வியாபார நிலையங்களைத் திறப்பதும் மூடுவதும் வியாபார நிலைய உரிமையாளர்களின் உரிமை. அதில் எவ்வித தலையீடுகளையும் செய்யமாட்டோம் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தொழில் புரியும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளையும் விடுமுறைகளையும் தொழில் திணைக்கள சட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொழில் திணைக்களத்தின் ஆணையாளரின் வேண்டுகோள்.

ஆகையால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வசதிகளுக்கேற்பவும் ஊழியர்கள் பாதிக்கப்படாதவகையிலும் வாடிக்கையாளரின் தேவைகள் கருதியும் முடிவு எடுக்கலாம் என்று அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் அதிசய பசுக்கன்று : படையெடுக்கும் மக்கள்!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் பசு ஒன்று இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த சம்பவம் அப் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள பசுமாடு ஒன்றே இந்த அதிசய கன்றினை ஈன்றுள்ளது. மேலும், கன்றும் தாய்ப் பசுவும் நலமாக இருப்பதாக குறித்த மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த அதிசய பசுக்கன்றை நூற்றுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் மூன்று மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியமையால் பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல சிசுவின் தாயார் குறித்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை தாயார் குழந்தையை எழுப்பிய போது குழந்தை எந்தவித அசைவுமின்றி இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் குறித்த குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

யாழில் பெண்களுக்கு சேட்டைவிட்ட இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை!!

யாழில் கொக்குவில் பகுதியில் பெண்களிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள் இருவர் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சிம் அட்டைகள் விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் இணைந்து குறித்த நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இரவு கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது.

“யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது.

கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்களால் வெட்டிவிட்டு, எமது மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்தது” என்று சிம் அட்டை விற்பனை செய்யும் இளைஞர்கள் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று முந்தினம் இரவு 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது எனவும், அவர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் இருவரும், இளம் பெண்களுக்கு விற்பனை செய்த சிம் அட்டைகளுக்கு அழைப்பு எடுத்து தொந்தரவு வழங்குபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

பெண் பிள்ளைகளுடன் சேட்டைவிட்ட காரணத்தால்தான், இளைஞர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கொக்குவில் கிழக்குப் பகுதிக்கு அழைத்து தாக்கியுள்ளனர்.

அவர்களுக்கு அழைப்பை எடுத்து பெண் குரலில் கதைத்துதான் கொக்குவில் கிழக்குக்கு அழைத்துள்ளனர். பின்னர் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

தம்மை வெட்டினார்கள் என்று இளைஞர்கள் இருவரும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள போதும், அவர்களுக்கு அடி காயங்களே உள்ளன. அத்துடன், கலட்டிச் சந்திப் பகுதியில் நேற்றுமுந்தினம் எவருமே சிம் அட்டை விற்பனை செய்யவில்லை எனவும் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் : இளைஞர்கள் குழு கைது!!

முல்லைத்தீவு – உடையார்கட்டில் பாடசாலை மாணவியை விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரையும், அதற்கு உதவிய நபர்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு – உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் 19 வயதான மாணவியை, பளையினை சேர்ந்த 22 வயது இளைஞன் தலைமையிலான குழு கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்த 20ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்தி சென்று பளைப் பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையினை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பளைப் பகுதிக்கு சென்று, சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 21ம் திகதி இரவு பளைப் பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த மாணவியை கடத்தி விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஸ்பிரயேகம் மேற்கொண்ட பளை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

சந்தேகநபர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் பதில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேகநபரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

வவுனியாவில் 3000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட ஆலயம்!!

ஆலயங்களை புனரமைக்கும் போது தொல்லியல் திணைக்களமும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது வன இலாகப் பிரிவினரும் தடைகள் விதிக்கின்றனர் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வெடுக்குநாறி மலைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அனந்தி சசிதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட தமிழர்களுடைய ஆலயமாக இந்த சிவன் ஆலயம் விளங்கிவருகிறது.

அந்நிய படையெடுப்புகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வழிபாடுகளுக்கு தடை ஏற்பட்டதன் பின்னர் தற்போது இராணுவ சூழல் மறைந்த நிலையில் தொல்லியல் திணைக்களம் தடைகளை விதிக்கின்றது.

ஆலயங்களை புனரமைக்கும் போது தொல்லியல் திணைக்களமும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது வன இலாகப் பிரிவினரும் தடைகள் விதிக்கின்றனர்.

அத்துடன், நெற்செய்கையின்போது மகாவலி அதிகார சபையினர் எமது நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

இதற்கு முடிவுகளை எட்ட முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். கடந்த காலங்களில் கதிர்காமம் தமிழர்களின் இடமாக இருந்து ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்தர்களின் இடமாக மாறியுள்ளது.

அதேபோல் வன்னியில் குருந்தூர்மலை, ஒதியமலை போன்ற பகுதிகள் இராணுவத்தினாலும், சிங்கள பௌத்தவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் வெடுக்குநாறி மலையையும் அபகரிக்கும் நோக்கில் பல வேலைதிட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கும் எமது மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதற்கும் அரசியல் பேதமற்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

குறித்த பிரச்சினை தொடர்பாக விரைவில் தீர்வு எட்டப்படுமா என்பது தொடர்பில் கூறமுடியாது. இருப்பினும் வடமாகாண சபையில் பிரேரணை கொண்டுவருவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

மாங்குளத்தில் வாகன விபத்து : இருவர் பரிதாபமாக பலி!!

முல்லைத்தீவு – மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கெப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்

முல்லைத்தீவு – மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் கல்விளானுக்கும், கனேசபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெள்ளாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிப்பயணித்த மோட்டார் சைக்கிளும், மல்லாவியிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

மாந்தைகிழக்கு விநாயக புரம் ஒட்டங்குளத்தைச் சேர்ந்த 28 வயதான அந்தோணி சுரேஸ் மற்றும் 25 வயதான எஸ்.புனிதகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை முழங்காவில் மற்றும் மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எங்களை கருணைக் கொலை செய்யுங்கள் : அதிர வைத்த அழகிய குடும்பம் : உருக வைக்கும் பின்னணி!!

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்தோடு வந்த கூலித் தொழிலாளி எங்களை கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள் என மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜேந்திரன் என்ற கூலி தொழிலாளிக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வசித்துவந்த வீடு பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததால், அதை இடித்துவிட்டு பிரதமரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி பெற்று வீடு கட்டி வருகிறார்கள்.

வீட்டின் மேல், மின்சாரக் கம்பிகள் செல்வதால் கட்டிடத்தை மேல் எழுப்ப முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து மின் வாரியத்தை அணுகிய ராஜேந்திரன் நிலைமையை விவரித்திருக்கிறார்.

ஆனால் கரண்ட் கம்பியை வேறு வழிக்கு திருப்பிவிட ரு. 1 லட்சத்து 20 ஆயிரத்தை அவர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால் அவரிடம் பணம் இல்லாத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்து ஓய்ந்து போன நிலையில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜேந்திரனின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்து பதில் கடிதம் வந்தும், அதை அதிகாரிகள் செய்யவில்லை.

இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேந்திரன் தயவுசெய்து எங்களை குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள அனுமதியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறுகையில், இது சம்பந்தமாக நான் கடந்த ஒன்றரை வருடங்களாக அலைந்தும், மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இருந்த பழைய வீட்டையும் இடித்துவிட்டு இன்றைக்கு மிகவும் சிரமத்தோடு குடும்பம் நடத்தி வருகிறேன். பாத்ரூம் வசதி இல்லாமல், என்னுடைய 2 பெண் பிள்ளைகளும் இரவு நேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் குறைந்த பின்னர் தான் குளிக்கிறார்கள்.

இனிமேலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையில்லை. எனவேதான் குடும்பத்தோடு கருணைக் கொலை செய்து விடுங்கள் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறேன் என கண்ணீரோடு கூறியுள்ளார்.

மனைவியை கொலை செய்து 3 மாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கணவனுக்கு கிடைத்த தண்டனை!!

சீனாவில் மனைவியை கொலை செய்துவிட்டு அவரை 3 மாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் Shanghai மாகாணத்தின் Hongkou மாவட்டத்தைச் சேர்ந்தவர் Zhu Xiaodong(31). இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய மனைவியான Yang Liping(30)-யுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொலை செய்துள்ளார்.

ஆனால் இந்த விடயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, அவரின் உடலை சுமார் மூன்று மாதங்கள் பிரிட்ஜில் ஒளித்து வைத்துள்ளார்.

இதையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி 1-ஆம் திகதி மனைவியின் அப்பா பிறந்தநாளிற்கு மனைவி இல்லாமல் இவர் மட்டும் சென்றுள்ளார். அப்போது இதற்கு மேல் மறைக்க முடியாது என்று கூறி, அன்றையே தினமே காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அப்போது அவர் மனைவி கொலை செய்த விவகாரம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, மனைவியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் WeChat போன்ற சமூகவலைத்தளைல் சேட்டிங்கிலே பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவருடைய பணத்தை எடுத்துக் கொண்டு வேறொரு பெண்ணுடனும் ஊர் சுற்றிதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து வழக்கு நடந்து வந்த வேளையில், தற்போது அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் Zhu Xiaodong-க்கு மரண தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், அதுமட்டுமின்றி அந்நாட்டு மக்களும் மரணதண்டனை கொடுக்க வேண்டும் இணையதளங்களில் கூறியதன் பயனாகவும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நிதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியவுடனே, அந்தநாட்டின் இணையதளங்களில், இது தான் டாப் டிரண்டில் இருந்துள்ளது.

தேனிலவு சென்ற இடத்தில் அதிர்ச்சியில் உறைந்த தம்பதி : கமெராவால் ஏற்பட்ட பிரச்சனை!!

தேனிலவுக்கு சென்ற இடத்தில் தங்களின் கமெராவை தொலைத்த தம்பதி அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.

டெரிக் என்ற இளைஞரும், பெர்ணாண்டா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் புதுமண தம்பதி தேனிலவுக்கு சென்றார்கள்.

திருமண நிகழ்வையும், தங்களின் குடும்பத்தினருடன் இருந்த மகிழ்ச்சியான தருணத்தையும் டெரிக்கும், பெர்ணாண்டாவும் புகைப்படங்கள் எடுத்திருந்த கமெராவையும் உடன் எடுத்து சென்றனர்.

இந்நிலையில் தேனிலவு சென்ற இடத்தில் கமெராவை இருவரும் தொலைத்துள்ளனர். இது குறித்து டெரிக் மற்றும் பெர்ணாண்டா கூறுகையில், எங்களின் திருமணம் அந்தளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவில்லை.

ஆனால் எங்கள் குடும்பத்தினருடன் ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தோம். இது போன்ற சிறந்த நினைவுகளை கொடுக்கும் புகைப்படங்கள் மீண்டும் கிடைக்காது.

அந்த புகைப்படங்கள் இருக்கும் கமெரா தொலைந்து போனது கவலையளிக்கிறது. கமெராவை கண்டுப்பிடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.