15 வருடங்களாக மிகவும் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கைத் தம்பதியினர் : வசமாக சிக்கிய சம்பவம்!!

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைத் தம்பதியினரை இந்திய பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர்.

இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருவரம்பூர் – துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் வசிக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வரும் லங்கை அகதியான தேவகுமாரியிடம், 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றுள்ளனர்.

இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின் இவர்களின் நண்பனான நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்த ராஜா என்கிற “கெட்டியான் பாண்டி” அவனது மனைவியுடன் தலைமறைவாகி உள்ளார்.

இவர்கள் தலைமறைவாகி உள்ள விடயம் பொலிஸாருக்கு தெரியவந்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கடந்த 2 மாதங்களாக பூட்டிய வீடுகளில் நகைகளை திருடுவது அதிகரித்து வந்துள்ளது. இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடங்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது தெரியவந்தது.

அப்படி வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் தங்கள் கைவரிசைகளை காட்டியிருக்கிறார் என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில், இவர்கள் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை பொலிஸாரால் என்.ஐ.டி அருகே பிடிப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை அகதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான விடயங்கள் வெளிவந்துள்ளன.

“2004 முதல் சைக்கிள் மற்றும் பைக் திருட்டுவது பழக்கம். என்மீது நாமக்கல் பொலிஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்தனர். இதன் பிறகு 3 வருடம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனியாக இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தேன். இதன் பிறகு தான் திருச்சியை சேர்ந்த விக்னேஷ், சிவகுரு ஆகியோருடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடித்தேன்.

குறிப்பாக இதுவரைக்கும் 100 பவுனுக்கும் மேல் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் நாமக்கலில் உள்ள அடகு நகைகடைகளில் வைத்து பணம் பெற்று ஜாலியாக இருந்தோம். தற்போது இலங்கை செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்.

100 பவுன் நகைகளை நாமக்கல் நகை அடகுகடைகளில் அன்றைய நகை விலைக்கே பணம் கொடுப்பதால் அங்கே விற்றேன்” என்று குறித்த இலங்கை அகதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் கூறிய திருவரம்பூர் தனிப்படை பொலிஸார் திருட்டு நகைகளை வாங்கிய நாமக்கல் நகை அடகு கடைக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கைதான இலங்கை அகதி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல் கைதி : 13 வருடங்களின் பின் நடந்த மனதை நெகிழவைக்கும் காட்சி!!

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி இன்று தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொண்டார்.

கடந்த 18.07.2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒரு மணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

3 பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களாக சந்தேகநபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

2006ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 10ஆம் திகதி கொழும்பு கரந்தெனிய பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி சுமதி தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில் சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஒரு மணிநேர காலம் நிறைவடைந்ததும் அவரை சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்து சென்றபோது உறவினர்கள் அவரை தழுவினர்.

13 வருடங்களாக கணவன், தந்தையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனைவியும், பிள்ளைகளும் சிவகுமாரை தழுவி கண்ணீர் விட்டழும் காட்சிகள் கிளிநொச்சி மண்ணை மீண்டும் சோகத்தில் ஆழித்தியது.

சிவகுமதர் சிறைச்சாலை பேருந்தில் ஏறும் காட்சியை கண்ட பிள்ளைகள் கதறி அழுதனர்.

சிறைச்சாலை பேருந்தில் ஏறிய சிவகுமரின் கண்களிலிருந்து நீர் வழிய அவர் பேருந்திலிருந்து கையசைத்த போது அவரது பிள்ளைகளும், உறவினர்களும் வேதனையில் துடித்த காட்சிகள் துக்கத்தை அதிகரித்தது.

யாழ்ப்பாணத்தில் நடந்த பயங்கரம் : இரவில் மிரட்டும் பேய்கள் : விடியும் வரை தவித்த மக்கள்!!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், அச்சுவெலி பொலிஸ் அதிகாரிகளும் அந்த பகுதியிலுள்ள வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அச்சுவெலி பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்குள் இரவு 10.30 மணியளவில் நுழைந்த குழுவொன்றினால், அங்கிருந்த பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காலை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற வீட்டின் உரிமையாளர்கள், ஒரு சில அமானுஷ்ய சக்திகள் வீட்டிற்கு புகுந்து இவ்வாறான பாரிய சேதத்தை ஏற்படுத்தயுள்ளதாகவும், சாதாரண மனிதர்களினால் இவ்வாறான சேதத்தை ஏற்படுத்த முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னமும் அமானுஷ்ய சக்திகள் வீட்டில் உள்ளதாக நம்புவதாகவும், இதனால் வீட்டிற்கு செல்ல அச்சமாக உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவ்வாறான அமானுஷ்யங்கள் இல்லை என்பதனால் வீட்டிற்கு செல்லுமாறும், வீட்டில் சென்றால் தான் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கை செய்து விசாரணை மேற்கொள்ள முடியும் எனவும், பொலிஸார் குறிப்பிட்டு்ளனர்.

இரவு ஏற்பட்ட இந்த சம்பவத்தின் பின்னர் வீட்டில் சென்ற வீட்டு உரிமையாளர் விடியும் வரை வேறு வீடு ஒன்றிலேயே தங்கியிருந்துள்ளனர்.

கடன் தொல்லையால் இளம் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!!

சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி, பலவெளிக்கிராமத்தில் நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தலினால் இளம் பெண் ஒருவர் அலரி விதை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலவெளிக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நாகராசா – பிரசாந்தினி (வயது-24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மூன்றுக்கும் மேற்பட்ட நுண்கடனை எடுத்துள்ளார். நுண்கடனை மீள செலுத்த முடியாமலும், நுண்கடன் அறவீடு செய்பவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விரக்தியடைந்து, மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலே அலரிவிதைகளை உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அலரி விதையை உட்கொண்ட நிலையில்குறித்த பெண் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!!

மோட்டார்சைக்கிளில் வந்த குழுவொன்று யாழ். வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடி என்பவற்றை உடைத்து விட்டு பெற்றோல் குண்டை வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுமார் எட்டு பேரை கொண்ட கொண்ட குழுவொன்று ஆயுதங்களுடன் வண்ணார் பண்ணை, தாமரை வீதியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட வீட்டிற்குள் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் இன்றி எப்படி வாழ்வது? அவுஸ்திரேலியாவில் தவிக்கும் இலங்கை தமிழ் பெண்!!

கணவன் இன்றி எப்படி 11 மாதக் கைக்குழந்தையுடன் வாழ்க்கையை கொண்டு செல்வதென்பது தெரியாமல் தவிப்பதாக அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட திலீபனின் மனைவி கார்த்திகா தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 30 வயதான இலங்கை தமிழரான திலீபன் ஞானேஸ்வரன் நாடுகடத்தப்பட்டார்.

எனினும், அவரது மனைவி மற்றும் 11 மாத கைக்குழந்தை ஆகியோருக்கு தொடர்ந்தும் அங்கு வாழ்வதற்கு ஏதுவாக Safe Haven Enterprise விசா கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திலீபன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இந்நிலையில், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள திலீபனின் மனைவி கார்த்திகா,

“எனக்கும், குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பு தேவையாக இருக்கின்றது. அத்துடன், பிள்ளையின் எதிர்காலத்திற்கு அப்பா தேவை. என்னுடைய பிள்ளை ஏங்கித்தவித்துகொண்டிருக்கின்றாள்.

அப்பா இல்லாமல் பிள்ளை மிகவும் தவிக்கின்றாள். அவரை பிரிந்திருப்பது எனக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. நான் அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்துகொண்டேன்.

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் வரையில் அவரோடு பேசக்கிடைத்தது. எனினும், இலங்கைக்கு நாடு கடத்திய பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், தனது கணவனை தன்னோடு சேர்த்து வைக்குமாறு அவர் அனைத்து தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சகோதரியை கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு சகோதரன் தூக்கில் தொங்கி தற்கொலை!!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தமது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை கண்ணகி புரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன் என்பவரே நேற்று முன்தினம் மாலை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பேத்தாழையிலுள்ள தமது உடன் பிறவா சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையிலேயே அங்கிருந்த படுக்கை விரிப்பினால் களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, சகோதரியினை கத்தியினால் வெட்டி காயத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், தமது துவிச்சக்கர வண்டியினையும் கையில் வைத்திருந்த கத்தியினால் அடித்து சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரி வீட்டில் தமது உயர்கல்விக்கான பாடங்களை படித்துக்கொண்டிருந்த வேளை இறந்தவருக்கும் சகோதரிக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றின் காரணமாக இவர் சகோதரியினை தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் இது வரை காரணம் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயம்!!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் கரடி ஒன்றின் தக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதி இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், நேற்று பிற்பகல் அருகில் இருந்த காவலரணை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கரடி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இராணுவ வீரர் உடனடியாக முல்லைத்தீவு ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக பதவியா பிரதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியாவில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கிய இராணுவத்தினர்!!

வவுனியா அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தின் மாணவர்களின் குடி நீர் தேவைக்காக இராணுவத்தினரின் உதவியுடன் குடி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் பெற்றோரின் கோரிக்கைக்கு இணங்க பொலிசாரின் ஏற்பாட்டில் இராணுவத்தினர் 1500 லீற்றர் குடி தண்ணீரை நேற்று (19.07) வழங்கியுள்ளனர்.

பாடசாலை சமூகத்தின் கோரிக்கையை ஏற்று 12 ஆயிரம் லீற்றர் அடங்கிய ஒரு பவுசர் நீரை இராணுவத்தினர் எடுத்து வந்த போதிலும் 1500 லீற்றர் தண்ணீர் தாங்கியே பாடசாலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக மிகுதி நீரை மீண்டும் இராணுவத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் 12.07.2018 அன்று பாடசாலை அதிபரால் செட்டிக்குளம் பிரதேச சபைக்கு குடி நீர் வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கபட்ட போதும் பிரதேச சபையானது ஒரு பவுசர் குடி நீருக்கு 1500 ரூபா பணம் செலுத்துமாறு பாடசாலையை கோரியுள்ளது.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலகத்தின் செயலாளருக்கும் எழுத்து மூலம் கடிதம் வழங்கப்பட்ட போதும் குறித்த பாடசாலை மாணவர்களின் குடி நீர் தொடர்பாக மனிதாபிமான ரீதியில் கூட அக்கறை காட்டப்படவில்லை, என பொதுமக்கள் விசனம் வெளியிட்டனர்.

குறித்த கிராமமானது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களை கொண்ட கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டியிலும், ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடியவர் ஆகாஷ் சோபரா. 40 வயதாகும் ஆகாஷ் சோப்ரா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகின்றார்.

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற ஆகாஷ் சோப்ரா அங்குள்ள ஒரு இந்தியன் ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட சென்றார். அங்கு 6 உணவுகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கு இந்தோனேசியன் ரூபாயில் 606,000 பில் வந்தது. அதோடு வரி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 7 லட்சம் (இந்தோனேசியன் ரூபாய் 699,930) பில் செலுத்தினர்.

தான் மதிய உணவு சாப்பிட்டதற்கு 7 லட்சம் ரூபாய் செலவழித்ததாக தனது டுவிட்டரில் பதிவு செய்து அனைவரையும் கலாய்த்து ஏமாற்ற நினைத்துள்ளார்.

இந்தோனேசியன் ரூபாய் கணக்கின் படி, ஒரு இந்திய ரூபாய்க்கு – 210 இந்தோனேசியன் ரூபாய்க்கு சமமாம். இதனால் அவர் கட்டிய 7 லட்சம் ரூபாய் பில்லுக்கு வெறும் ரூ. 3,334 இந்திய ரூபாய் தான்.

வவுனியா நொச்­சி­மோட்டையை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தின் ஒருபகுதி உள்ளிறங்கியுள்ளமையால் அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பாலம் அடிக்கடி இவ்வாறு சேதமடைவதாகவும், பின்னர் தற்காலிகமாக அதிகாரிகளால் சேதமடைந்த பகுதி மட்டும் திருத்தப்படுவதாகவும், தவிர நிரந்தரமாக அப்பாலம் அமைப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசண்டயீனமாக உள்ளதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இப்பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதுடன் A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் பிரதான போக்குவரத்து மையமாக காணப்படுகின்றது.

இதனால் இப்பகுதிகளுக்கு இந்த பாலம் ஒன்றின் ஊடாகவே பயணத்தை மேற்கொள்ள முடியும். அத்துடன் ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலத்தை தமது போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்துகின்றமையால் அதன் முக்கியத்துவம் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பாலத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தாது விரைவாக புதிய பாலம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியை சேர்ந்த மக்களும் தொடர்ந்து இப்பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம்!!

விபுலாநந்தாக் கல்லூரியில் இன்று காலை சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவுகூறப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

இவ் நிகழ்வில் பிரதம விருத்தினராக வவுனியா தெற்கு வலயகல்வி உத்தியோகதரும், சிறப்பு விருந்தினராக பாடசாலை பெற்றோர் அபிவிருத்தி உறுப்பினர்கள், மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்!!

வவுனியா நகர்ப்பகுதியில் மாலைவேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மாலை வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும், கால்வாய்களுக்குள்ளும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் கோரியுள்ளனர்.

வவுனியாவில் தமிழ்மாமன்றத்தின் ஏற்பாட்டில் விபுலானந்தரின் 71 ஆவது நினைவு தினம்!!

வவுனியாவில் இன்று(19.07) காலை பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகேயுள்ள சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவுகூறப்பட்டது.

வவுனியா தமிழ்மாமன்றம் ஏற்பாடு செய்த நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் நிகழ்வினை ஏற்பாடுசெய்த தமிழ்மாமன்றத்தின் சார்பில் வைத்தியர் செ.மதுரகன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ்.சந்திரகுலங்கம், சு.காண்டீபன், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.முல்லைக்குமரன், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ்மாமன்ற உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா அரசாங்க அதிபர் பயணித்த வாகனம் விபத்து!!

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பயணித்த மாவட்ட செயலக வாகனம் நேற்று இரவு அனுராதபுரம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து கலந்துரையாடல் ஒன்றினை முடித்துக்கொண்டு வவுனியாவிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அனுராதபுரம் பகுதியில் நேற்று இரவு மாவட்ட செயலகத்தின் வாகனம் வீதியிலிருந்த மாட்டுன் மோதி விபத்துக்குள்ளாகியதில் வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது

எனினும் வவுனியா மாவட்ட அரசங்க அதிபருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக வேறு ஒரு வாகனத்தில் வவுனியாவை வந்தடைந்துள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல்வாதிகள், மக்களை திகைப்பில் ஆழ்த்திய பெண்!!

இலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று காலை அரிய காட்சி ஒன்றை காண முடிந்துள்ளது.

அங்கு பெண் ஒருவர் தனியாக வீதியை சுத்தப்படுத்தும் காட்சியே பலரும் கண்டுள்ளனர். அந்தப் பகுதியில் பணியாற்றும் பெண் ஊழியரே வீதியை சுத்தப்படுவதாக மக்கள் நினைத்துள்ளனர்.

இதன் பின்னர் ஆராய்ந்து பார்த்த போது அவர் ஹொரனை பிரதேச சபையின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

அவரிடம் சென்று பேசிய போது வித்தியாசமான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.

“பிரதேச சபை நியமிக்கப்பட்ட நாள் முதல் வீதியை சுத்தப்படுத்தி தறுமாறு நான் கேட்டு கொண்டேன். வீதியின் இரண்டு பக்கங்களும் காடுகள் போன்று காணப்படுகின்றன. அதனையும் சுத்தப்படுத்தி தரவில்லை. ஏன் கண்டுகொள்ளவில்லை என்று கேட்டால் சபையில் பணியாளர்கள் இல்லை என கூறுகின்றார்கள். தேடி பார்த்தால் தேவையான அளவு பணியாளர்கள் உள்ளனர்.

எனினும் அவர்கள் இந்த வேலைகளை செய்ய வருவதில்லை. அலுவலக வேலைகளை தான் செய்கின்றார்கள். வாக்களித்த மக்களின் முகத்தை எப்படி பார்ப்பது. அதனால் நானே அனைத்து வேலைகளையும் செய்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.