வவுனியாவில் மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த கணவன்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை வீட்டிற்கு வந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று கணவன் அச்சுறுத்தியுள்ளார்.

கணவனின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்வையிடுவதற்கு இன்று காலை சென்ற போதே கணவன் கத்தியைக்காட்டி மிரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வவுனியா சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் கணவன் மனைவிக்கிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் கணவன் மனைவி மீது தாக்கியதில் மூக்கில் காயம் ஏற்பட்டு மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மனைவியை பார்வையிடுவதற்கு வைத்தியசாலைக்குச் சென்ற கணவன் தனது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியைக்காட்டி வீட்டிற்கு வந்தால் கொன்றுவிடுவதாக பயமுறுத்தியுள்ளார்.

இதையடுத்து மனைவி அச்சம் காரணமாக இத்தகவலை வெளியில் எவரிடமும் தெரிவிக்கவில்லை எனினும் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் அவரைப்பார்வையிடச் சென்ற உறவினர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

உறவினர்களினால் இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை நடாத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை அச்சுறுத்திய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மதுபோதையில் குறித்த நபர் சிதம்பரபுரம் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு சிறைச்சாலைக்குச் சென்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07.2018) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், வவுனியா நகரசபை நகர வரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் சமூக சேவை அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழ்மணி அகளங்கள், தமிழருவி சிவகுமரன் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தக்கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப்பாடியதுடன் சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை பரிமாறப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் , பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தலைவர் ரவி, வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் விபுலானந்தாக்கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள் : அவசர கோரிக்கை!!

கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண் கடந்த 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25ஆம் திகதி கட்டார் நாட்டிற்கு தொழில் வாய்ப்பு பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் சென்ற நாள் முதல் இன்றுவரை எந்தவித தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை என அவரின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர் கட்டாருக்கு சென்று 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 0112 864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், குறித்த பெண் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் : பரிதவிக்கும் 10 மாதக் குழந்தை!!

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற திலீபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை திலீபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை நாடு கடத்தியுள்ளனர்.

திலீபன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ் என அழைக்கப்படும் விசாவை தாய்க்கும் குழந்தைக்கும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள போதிலும் இந்த விசா குடும்பங்கள் மீள்இணைவதற்கு அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீலிபனின் மனைவி தனது கணவரை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆதரவாளர்கள் திலீபனின் மனைவிக்கு உயிராபத்து உள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதால் அவர் இலங்கை திரும்பிசெல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி யுத்தத்தில் தீலிபனின் அவரது தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்ய்பபட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் திலீபன் தெரிவித்திருந்தார்.

அதிர்ஷ்டமாக கிடைத்த கோடிக்கணக்கான பணம் : நால்வருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

இலங்கையில் இருந்து பல கோடி அமெரிக்க டொலர் தொகை ஒன்றை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டரை கோடி 75 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனா மற்றும் நேபாளம் நாட்டவர்கள் நால்வர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் இருவரும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், நேபாளம் நாட்டவர்கள் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இந்தியாவின் முப்பாய் நோக்கி செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்களால் கொண்டு வரப்பட்ட பயணப்பை மற்றும் அணிந்து வந்த ஆடைகளில் 169,900 அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரும் இலங்கையில் கெசினோ விளையாட வந்தவர்கள் எனவும், அவர்கள் வெற்றி பெற்ற பெருந்தொகை பணத்தை இலங்கையில் இருந்து கொண்டு செல்லும் போது விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரு வயதான குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

தனது ஒரு வயதான சிறு குழந்தைக்கு பியர் கொடுத்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தை ஒன்றுக்கு மதுபானம் பருகக் கொடுக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

விசாரணைகளின் பின்னர் குறித்த சம்பவம், கணன்கமுவ, மீகாலேவ பகுதியில் இடம்பெற்றிருந்ததாகவும், இதனையடுத்து குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

40, 38, 50, 23 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டின் 22ம் இலக்க குற்றவியல் திருத்த சட்டத்தின் கீழ் சிறுவர் துஷ்பிரயோகம் (பிரிவு 308A) என்ற குற்றத்திற்காக குழந்தையின் தந்தை உட்பட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாளைய தினம் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் : இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

அதிக விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக 5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 55 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதுடன் குற்றமிழைத்தவர் என காணப்பட்டால் 5,000 – 10,000 வரையில் தண்டப்பணம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகிறதாக கூறப்படுகிறது.

ஏதாவது ஒரு நிறுவனம் தவறிழைக்குமாயின் பத்தாயிரம் ரூபாவிற்கும், ஒரு இலட்சம் ரூபாவிற்கும் இடையில் தண்டப் பணம் விதிக்கப்படுவதுடன் 2 வருடகால சிறைத்தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் விதிக்கப்படும்.

இதேவேளை கூடுதலான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலான தகவல்களை 1977, 0117 75 51 81 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பேஸ்புக், மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை!!

மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு கணினி அவசர சேவை சபை முக்கிய தகவல் ஒன்றை வழங்கியுள்ளது.

மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் கடவுச் சொற்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மின்னஞ்சல் மற்றும் பேஸ்புக் மூலம் வரும் செய்தியை திறப்பதன் மூலம் மீண்டும் கடவுச் சொற்களை பதிவிடுமாறு கேட்கப்படும்.

அவ்வாறு நாம் எமது கடவுச்சொற்களை பதிவிடும் போது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே முடிந்தளவிற்கு தேவையற்று வரும் அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறு கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.

காணாமல்போயுள்ள பல்கலைக்கழக மாணவன் : தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்!!

 

அரநாயக்க – அசுபினி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ள களனி பல்கலைக்கழக மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர் கடந்த 14ஆம் திகதி நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த பல்கலைக்கழக மாணவர், நீர்வீழ்ச்சியின் தாழ் நில பகுதியில் காணப்படுகின்ற கற்குகைக்குள் நீரினால் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கற்குகை பகுதிக்குள் சிக்குண்டவர்கள் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை என இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் அரநாயக்க தாழ்வான பிரதேசத்தில் வசிக்கும் தம்பிக்க சம்பத் குறுவிட்ட என்ற இளைஞரே காணாமல்போயுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்!!

வவுனியாவில் வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பௌத்த விகாரை போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா – தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 35 வயது குடும்பப் பெண்ணே வவுனியா வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நடைபாதை வியாபாரியின் பொருட்கள் திருட்டு!!

வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவரின் பொருட்கள் களஞ்சியசாலையிலிருந்து திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபாதை வியாபாரி ஒருவர் இலுப்பையடிப்பகுதியிலுள்ள வை.எம்.ஏ கட்டடப்பகுதியில் நீண்டகாலமாக பொருட்களை இரவு வேளையின்போது களஞ்சியப்படுத்தி வருவது வழமை. சம்பவ தினத்தன்று மாலை வேளையில் தனது வியாபார நடவடிக்கையினை முடித்துக்கொண்டு மூன்று உரைப்பைகளில் வியாபாரப் பொருட்களாக உடுபுடைவைகளையும் துணிவகைகளை களஞ்சியபடுத்திவிட்டு சென்றுள்ளார்.

மறுதினம் காலை குறித்த களஞ்சியசாலையினை திறப்பதற்குச் சென்றபோது நடைபாதை வியாபாரி களஞ்சியப்படுத்தி வைத்த மூன்று பொதிகளும் திருடப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்டட நிலையத்தினருக்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் தனது வியாபாரப் பொருட்கள் திருட்டு போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நடைபாதையில் காலை முதல் மாலை வரை சிறிய முதலீடுகளில் வியாபாரம் மேற்கொண்டு வரும் குறித்த வியாபாரியின் பொருட்கள் திருடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை : ஆரம்பமாகியது விசாரணைகள்!!

ஆண் குழந்தை ஒன்றுக்கு மதுபானம் பருக்கிய காணொளி காட்சிகள் வெளியான சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தந்தை ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு மதுபானத்தை பருக்குவதாக நம்பப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியை மூன்றாம் தரப்பு ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தது.

இதன் காரணமாக அந்த காணொளி பெருமளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததுடன், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரியவந்ததை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்!!

உலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலாக பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஷெங்கிரிலா ஹோட்டலில் இருந்து கால்பந்து போட்டியை பார்த்து ரசித்துள்ளார்.

இவேளை, முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தனது காதலி டட்டியானவுடன் ரஷ்யா, மொக்கோவில் Luzhniki மைதானத்தில் இருந்து இறுதி போட்டியை பார்த்துள்ளனர். அவர் இந்த புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ஆபத்தான பாம்புகளுடன் அட்டகாசம் செய்யும் இலங்கை யுவதி : வியப்பில் மக்கள்!!

இலங்கையில் விஷப் பாம்புகளுடன் இளம் யுவதி ஒருவர் செய்யும் செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

கம்பஹாவை சேர்ந்த பாக்யா மிஹிரனி, பல வகையான பாம்புகளுடன் நட்பாக பழகி வருகிறார். அவர் பாம்புகளுடன் செல்ல பிராணி போன்று விளையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான அனைத்து பாம்புகளையும் கையில் எடுத்து, உடம்பில் போட்டு இந்த விளையாடுவதற்கு அவர் பழக்கம் கொண்டுள்ளார்.

அவருக்கு பாம்புடன் பழக எந்த விதமான பயமும் இல்லை என குறிப்பிட்டுள்ளதுடன், அதனை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனினும் யுவதியின் துணிச்சலான செயற்பாடுகளை பார்த்த மக்கள் பெரும் வியப்பு அடைத்துள்ளனர். பாம்பு என்றால் பயப்படும் மக்களுக்கு மத்தியில் யுவதியின் துணிச்சலான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டியுள்ளனர்.

பிரான்ஸ் அணியின் வெற்றியை ஐஸ்வர்யா ராய் எப்படி கொண்டாடினார் தெரியுமா?

பாரீஸில் முகாமிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் கால்பந்து உலகக்கிண்ணத்தை பிரான்ஸ் வென்றதை கொண்டாடியுள்ளார்.

கால்பந்து உலகக்கிண்ண தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் – குரேஷியா அணிகள் மோதிய நிலையில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் பிரான்ஸின் வெற்றியை நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யாவுடன் கொண்டாடியுள்ளார்.

ஆடம்பர பொருள் ஒன்றின் விளம்பரத்தில் நடிப்பதற்காக தற்போது ஐஸ்வர்யா ராய் பாரீஸில் மகள் ஆராத்யாவுடன் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் வெற்றியை அந்நாட்டு மக்கள் சாலையில் ஒன்றாக கூடி உற்சாகமாக கொண்டாடினார்கள்.அந்த வெற்றியில் தானும் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

மைதானத்தில் விளையாடும் போது சுருண்டு விழுந்து இறந்த வீரர் : கதறித் துடித்த சக வீரர்கள்!!

பிரித்தானியாவை சேர்ந்த ரக்பி விளையாட்டு வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார்க்‌ஷயர் ஆண்கள் லீக் ரக்பி போட்டி Heworth-ல் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் Birkenshaw Bluedogs என்ற அணிக்காக மேக்ஸ் பிளாகிலி (32) விளையாடினார்.

மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த போது மேக்ஸுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கு வந்த மருத்துவர்கள் மேக்ஸுக்கு சிகிச்சையளிக்க முயன்ற நிலையில் அதற்கு முன்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்களும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

மேக்ஸின் நண்பர் லீ கூறுகையில், அவருக்கு பிடித்தததை தான் மேக்ஸ் எப்போதும் செய்வார். உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார். இதே போல பலரும் மேக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.