வவுனியா நகரில் கடந்த 2 வருடங்களில் 37 சட்டவிரோத கட்டடங்கள்!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களில் 37 சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பாக நகரசபையினருக்கு தகவல் அறியும் சட்டத்தினூடாக கோரப்பட்ட தகவல்களுக்கு நகரபையினர் இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களில் நகரப்பகுதிகளில் 37 சட்டவிரோத கட்டடிங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நகரசபையில், கடந்த 24.05.2018 அன்று நடைபெற்ற சபைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அனுமதியற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பு அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதற்குப்பின்பும் கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சபையில் தீர்மானிக்க்பபட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு 12 சட்டவிரோதக்கட்டிடங்களும் 2018ஆம் ஆண்டு தற்போது வரையில் 25 சட்டவிரோத கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் இவ்வருடமே மிகவும் அதிகரிக்கப்பட்ட 25 சட்டவிரோத கட்டிடங்கள் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியில் பதக்கம் வென்று சாதனை!!

அகில இலங்கை ரீதியில், கொழும்பு றோயல் கல்லூரியில் 01.07.2018 மற்றும் 02.07.2018 திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டு பதக்கங்களை வென்றுள்னர்.

அந்தவகையில் சண்முகநாதன் சஞ்சயன் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

அத்துடன் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற சான்றிதழையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

அதேபோல் விபுலானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா நாகராஜா தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவர்களின் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், தேசிய ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் இருவர் பதக்கங்களை வென்றுள்ளனர்.

அந்தவகையில் பாடசாலை மாணவர்கள் மேலும் சாதனை படைக்க முடியும் இருந்தபோதும் பயிற்சிக்கான உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் சிரமப்படுகிறார்கள், அவைகள் நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் பல சாதனைகளை நிலைநாட்ட முடியும் என தெரிவித்தார்.

வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு!!

வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் மொபிடெல் நிறுவனம் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் இணைந்து வவுனியா நகர்ப்பகுதியில் பேருந்து தரிப்பிட நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் இரண்டாம் கட்டம் நேற்று இரு பகுதிகளில் இடம்பெற்றது.

வவுனியா நகரை அழகுபடுத்தும் முதல் திட்டம் கடந்த மாதம் ஈரப்பெரியகுளம், கார்கில் பூட்சிட்டிக்கு முன்பாக என இரண்டு பகுதிகளில் பயணிகளின் நன்மை கருதி பேருந்து தரிப்பிட நிழற்குடை அமைக்கப்பட்டு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டம் நேற்று காலை வேப்பங்குளம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இரு பகுதிகளில் பேருந்து தரிப்பிட நிழற்கூடை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, நெளுக்குளம், ஓமந்தை, மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வவுனியா நகரசபைத்தவிசாளர், உப தவிசாளர், வர்த்தகர் சங்கத்தலைவர், செயலாளர், வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகளால் பேருந்து தரிப்பிட நிழற்கூடை பகுதியில் மரம்நாட்டி வைக்கப்பட்டது. பொலிஸ் கீதம் தமிழில் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பொலிசாரால் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைப்பு!!

வன்னி பிராந்திய பொலிஸ் அலுவலகத்தின் ஏற்பட்டில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் A9 வீதியில் நேற்று (13.07) மக்கள் பாவனைக்காக பேரூந்து தரிப்பிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு அதிதிகள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து பொலிஸ் கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியாவில் பொலிஸ் அலுவலகத்தின் அனுசரணையுடன் நான்கு பேரூந்து தரிப்பிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உப தவிசாளர் எஸ்.குமாரசாமி, நகரசபை உறுப்பினர் ஆர்.ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

 இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு  13.07.2018 வெள்ளிகிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .

மேற்படி மகோற்சவத்தில்
13.07.2018 வெள்ளிகிழமை  நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றமும்
25.07.2018 புதன்கிழமை  சப்பர திருவிழாவும்
26.07.2018 வியாழக்கிழமை  காலை இரதோற்சவமும்
27.07.2018 வெள்ளிகிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற உள்ளது .

வவுனியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியாவில் இன்று(13.07) பிற்பகல் வெளிக்குளம் பகுதியியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முதல் வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் உயரமான இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் எதிர்பாரமல் தவறி கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சக பணியாளர்கள் இவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த சிவா என்று அழைக்கப்படும் 30 வயதுடைய ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் தற்போது வசித்த வரும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சுயதொழில் கடன் திட்டம்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சியினை முடித்து வெளியேறிய மாணவர்கள், தாம் புதிதாக தொழில் ஒன்றினைத் தொடங்கவிருப்பின் அல்லது ஏற்கனவே தொழில் ஒன்றை ஆரம்பித்து நடாத்திச் செல்லும் மாணவர்கள் தமது தொழிலை விருத்தி செய்யவிருப்பின் இத்திட்டத்தின் கீழ் இணைந்து கொள்ளமுடியும்.

நிகழ்ச்சித்திட்டம் : சுயதொழில்முயற்சியாண்மைக் கடன் வழங்கும் திட்டம்(SEPI)
பயனாளிகள் : 40 வயதிற்குட்பட்ட முழுநேர மற்றும் பகுதிநேர மாணவர்கள்
காலம் : 16 – 28.09.2018 (12 நாட்கள்)
இடம் : யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பண்ணை, புளியங்குளம்.

இணையவிரும்பும் மாணவர்கள் தமது பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இல, தொலைபேசி இல மற்றும் செய்யவுள்ள அல்லது செய்கின்ற தொழில் போன்ற விபரங்களை 17.07.2018 ற்கு முன்பதாக tcvavuniyacgc@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்திலோ வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இத்திட்டமானது வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதனை கருத்தில் கொள்ளவும்.

மேலும் 12 நாட்பயிற்சி முடிவில் வியாபார முன்மொழிவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டு வங்கிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதன் பிற்பாடு பின் தொடர்நடவடிக்கைகள் வவுனியா மாவட்டச் செயலகத்தினால் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தை நாடவும்.

தொடர்புகட்கு:
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
நெளுக்குளம்,
வவுனியா
024 222 3664, 024 222 6720, 024 205017

வவுனியாவில் எல்லைபுற தமிழர் நிலத்தை பாதுகாக்க இடம்பெயர்ந்தவர் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற வேண்டும் : சத்தியலிங்கம்!!

வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் வவுனியா வடக்கில் பெரும்பான்மையின குடியேற்றங்களை செய்து தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைக்க முயல்கிறது.

இந்த நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை வடக்கு மாகாண சபையும், த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முயற்சி செய்துவருகின்றார்கள்.

அதேவேளை எல்லைக்கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக்கிராமங்களில் குடியேறவேண்டும். இதன்மூலமே எமது பாரம்பரிய நிலங்களை பாதுகாக்கமுடியும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு மருதோடை வட்டாரத்தின் வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவிலுள்ள காங்சூரமோட்டை கிராமத்தில் நடைபெற்ற வீட்டுத்திட்த்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று (11.07.2018) காஞ்சூரமோட்டை கிராமத்தில் 33 மீள்குடியேற்ற குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு மேலும் அவர் தெரிவித்தபோது, நாட்டில் ஏற்பட் அசாதாரண சூழ்நிலைகளினால் எமது மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியிருந்தனர். எனினும் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வசித்துவருகின்றனர்.

இதனால் எமது பாராம்பரிய கிராமங்கள் பல் மக்கள் இன்றி காடுகளாக காட்சி தருகின்றது. இதனை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயனபடுத்தி திட்டமிட்ட குடியேற்றங்களை நடாத்திவருகின்றது.

சிங்கள குடியேற்றங்களை தடுப்பது மட்டும் எமது நிலங்களை பாதுகாப்பதாக அமையாது. எமது பூர்வீக நிலங்களில் மக்கள் மீள்குடியேற முன்வரவேண்டும்.

வவுனியா வடக்கில் தமிழ் மக்கள் தொகை குறைவாக உள்ளமையை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பெறுபேறு நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே மக்கள் மீள்குடியேற முன்வரவேண்டும்.

நீங்கள் வரும்பட்சத்தில் உங்களுக்கான அடிப்டை வசதிகளை செய்து தர நாங்கள தயாரவுள்ளோம். மருதோடை வட்டாரத்தில் மீள்குடியேற விரும்புவர்களுக்கு வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் வழங்க தேசிய வீடமைப்பு அதிகார சபை தயாராகவுள்ளது.

அத்துடன் வாழ்வாதரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனமொன்று இந்தப்பகுதியில் விவசாயப்பண்ணை அமைக்க முன்வந்துள்ளது என்றார்.

வவுனியா செட்டிகுளத்தில் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் நேர்முகத்தேர்வு!!

செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 20 கிராமங்களிலுள்ள சமுர்தி பயனாளிகளின் குடும்பங்களிலுள்ள, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப்பொதுத்தராதர சாதாரணப்பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வுகள் இன்று செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உதவிப்பிரதேச செயலாளர் கே.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நேர்முகத்தேர்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த மாணவர்களுக்கு சாதாரணதரப்பரீட்சையில் பெற்ற சித்திகளின் அடிப்படையின் புள்ளிகள் வழங்கப்படுவதுடன் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மேலதிக புள்ளிகள் வழங்கப்பட்டுத் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதாந்தம் 1500 ரூபா பணம் வழங்கப்படவுள்ளது.

இந்த நேர்முகத்தேர்வில் மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக செட்டிகுளம் மஹாசங்க தலைமைபீட முகாமையாளர் என் சுசீந்திர ராஜா மற்றும் பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகானந்தன் உட்படச் சமுத்தி வங்கியின் முகாமையாளர்களான எஸ்.சிவகுமார், வடிவேல் ராஜகுகன் ஆகியோருடன் வெங்கலச்செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபர் உட்படப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல் : அமரர் ஜெயராசா சரோஜினிதேவி (சரோ)!!

பிறப்பு : 28.04.1957
இறப்பு : 11.07.2018

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் ஜெயராசா சரோஜினிதேவி (சரோ) அவர்கள் கடந்த 11.07.2018 புதன்கிழமை அன்று காலை அகால மரணமடைந்தார்.

அன்னார் அமரர் கிருஷ்ணபிள்ளை ஈஸ்வரி அவர்களின் அன்புப் புதல்வியாரும், கிங்சிலி அருளையா ஜெயராசா அவர்களின் பாசமிகு மனைவியாரும், ராஜமோகன்(நீர்கொழும்பு), ஜெயந்தினி(வவுனியா), ஜெயக்குமார் ( சன் டெக்ஸ்டைல், சேவியர்கடை சந்தி, கிளிநொச்சி), வசந்தினி (லண்டன்), சனோஜ்(வவுனியா) ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,

கலாமேரி, மயில்வாகனம், மஞ்சு, சற்குணம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தனுச சஞ்சீவன், டர்மிகா, ரம்ஷிகா, கர்ஷிகா, ரக்ஷா, யுக்ஷா, , டனிசா, தேஜஸ் ஆகியோரது பாசமிகு பாட்டியாரும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரியைகள் 13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று இல 161, அம்மன் வீதி, செல்வா நகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மதியம் 01 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆனந்த நகர் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளும்படி அறியத் தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சனோஜ் – 0768313027
ஜெயக்குமார் – 0777456605

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்ற தனது உயிரைவிட்ட அண்ணன் : அதிர்ச்சி சம்பவம்!!

அவுஸ்திரேலியாவில் தந்தையிடம் இருந்து தங்கையின் உயிரை காப்பாற்ற அண்ணன் முயன்ற நிலையில் இருவரும் தந்தையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னியை சேர்ந்த ஜான் எட்வேர்ட்ஸ் (68) என்ற நபர் தனது மனைவி ஒலகா மற்றும் இரு பிள்ளைகளான ஜாக் (15), ஜெனீபர் (13) ஆகிய இருவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஒலகா வீட்டுக்கு கைத்துப்பாக்கியுடன் ஜான் வந்தார். அங்கிருந்த ஜெனீபரை முதலில் அவர் சுட முயன்ற நிலையில் அதை தடுக்க முயன்ற ஜாக் தந்தையுடன் போராடியுள்ளான்.

ஆனாலும் ஜெனீபரை சுட்ட ஜான், பின்னர் ஜாக்கையும் சுட்டு கொன்றார்.

மனைவி மீது இருந்த கோபத்திலேயே இச்செயலை ஜான் செய்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இரு பிள்ளைகளை சுட்டுகொன்ற ஜானுக்கு அந்த கொலையை செய்வதற்கான துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஜோன் எட்வேர்ட்ஸ் இரண்டு துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததும் அதில் ஒன்றை கொலைக்கு பயன்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், ராணுவ வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஜானுக்கு எவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொழும்பில் காரில் இருந்த காதல் ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ்!!

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் காதல் ஜோடியிடம் தவறாக நடந்துகொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாக நாராஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றுக்குள் இருந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தமை மற்றும் காருக்குள் இருந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை சம்பந்தமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் பெண்ணை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற ஊழியர்கள்!!

மன்னார் – ஓலைக்கொடு பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற 34 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை பலவந்தமாக இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் ஊழியர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

ஓலைக்கொடு பகுதியில் வீதியில் இன்று காலை சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண்ணிடம் ஊழியர்கள் நிலுவைப்பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து வீதியில் வைத்து சைக்கிளை அபகரித்துச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணுடன் வீதியிலிருந்து தர்க்கத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டு தனது பாவனையிலிருந்த மோட்டார் சைக்கிளினை எடுத்துச் சென்றுவிட்டதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் குறித்து வவுனியாவிலுள்ள நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தினை தொடர்பு கொண்டு வினவியபோது,

கடந்த 4 மாதத்திற்கு மேலாக பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிளின் நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை.

குறித்த பெண் பாவிக்கும் மோட்டார் சைக்கிள் ஆண் ஒருவரின் பெயரில் உள்ளது. எமது நிறுவனத்திற்கு நிலுவைப்பணமாக 44,992 ரூபா செலுத்த வேண்டியுள்ளது.

மூன்று மாதகாலத்திற்குள் நிலுவைப்பணத்தினைச் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நான்கு மாத காலத்திற்கு மேலாகியும் கட்டுப்பணம் செலுத்தப்படவில்லை.

எனவே மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யும் முகவர்களிடம் குறித்த மோட்டார் சைக்கிளை கையகப்படுத்துமாறு எமது அலுவலகத்திலிருந்தும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டு கடிதத்துடனேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

என்னை கொன்றுவிட்டார்கள் : மனைவியிடம் ஆவியாக வந்து கூறிய கணவன்… திடுக்கிடும் சம்பவம்!!

இந்தியாவில் உயிரிழந்த கணவன் ஆவியாக வந்து மனைவியிடம் தன்னை கொன்றவர்கள் குறித்து கூறியதாக தெரியவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் படபலியா கிராமத்தை சேர்ந்த சுபோத் நாயக் என்பவர் கடந்த வாரம் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக முடிவெடுத்த குடும்பத்தார் நாயக்கின் இறுதி சடங்கை செய்தார்கள்.

இந்நிலையில் ஒருவாரம் கழித்து நாயக்கை அதே கிராமத்தை சேர்ந்த தபந்தாஸ் மற்றும் அவர் குடும்பத்தார் கொலை செய்துவிட்டதாக நாயக்கின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், நாயக்கின் மனைவியிடம் இறந்து போன அவர் கணவர் நாயக் ஆவியாக வந்து பேசி தான் கொல்லப்பட்ட விபரத்தை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசித்திர புகாரை கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த பொலிசார் அறிவியல் குழு உதவியுடன் தங்கள் விசாரணை தொடங்கியுள்ளனர்.

விசாரணைக்கு பின்னரே இது குறித்த உண்மை தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜோதிடம் பார்க்க வந்தவரின் மனைவியை காதல் வலையில் வீழ்த்திய ஜோதிடர் : நடந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தில் இளம் பெண்ணின் கணவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சிந்தாமணியூரை சேர்ந்தவர் சுந்தரம். பிரபல ஜோதிடரான இவரிடம், தன்னுடைய குடும்ப பிரச்சனையை தீர்ப்பதற்காக பண்ணபட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் மனைவி அலமேலுவுடன் சென்றுள்ளார்.

அப்போது ஜோதிடரான சுந்தரம், சுரேஷிடம் முதலில் பேச்சுக் கொடுத்து, அவர்களின் குடும்ப பிரச்சனைக்கு முதல் காரணமாக அவரின் குடி தான் என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து குடிபழக்கத்தை மறக்கடிக்க பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, அலமேலுவுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சுரேஷ் வீட்டில் இல்லாத போது அவரது மனைவி அலமேலுவை சந்திப்பதை வாடிக்கையாக்கி கொண்ட சுந்தரம், அதைவைத்து அலமேலுவை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இந்த விவகாரம் அலமேலுவின் கணவருக்கு தெரியவந்ததால், அவர் உடனடியாக அலமேலுவை அடித்து உடைத்ததுடன், ஜோதிடரை சந்திக்க போகக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அப்போது அலமேலும் தன்னுடை கணவரை தீர்த்து கட்டினால் தான் இதற்கு எல்லாம் முடிவு பிறக்கும் என்று ஜோதிடரிடம் கூற, உடனடியாக கடந்த 6-ஆம் மதுவாங்கி தருவதாக கூறி சுரேசை ஜோதிடர் அழைத்துச் சென்றுள்ளார்.

அளவுக்கு அதிகமாக சுரேஷ் மது அருந்தியதால், தனது கூட்டாளிகளை வைத்து அவரை கொலை செய்துள்ளார்.

அதன் பின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு ஜோதிடர் தலைமறைவாகியிருந்த நிலையில், இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரியவந்ததால், எங்கே நாம் சிக்கிவிடுவோமோ என்று எண்ணி ஜோதிடர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அறிந்த பொலிசார் ஜோதிடரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அலமேலு மற்றும் ஜோதிடரின் கூட்டாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

தற்போது ஜோதிடர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும், ஏற்கனவே அவர் சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதன் காரணமாக சிறை சென்றவர் எனவும் கூறப்படுகிறது.

காலா பட நடிகருக்கு கதை எழுதிய திரையுலக பிரபலம் தற்கொலை : திரையுலகினர் அதிர்ச்சி!!

பிரபல கதாசிரியர் ரவிசங்கர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நானா படேகரின் அக் தக் சப்பான் திரைப்படத்துக்கு கதை எழுதி பிரபலமானவர் ரவிசங்கர்.

இவர் நேற்று மதியம் அந்தேரியில் உள்ள தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் ரவிசங்கர் கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவிசங்கர் சில காலமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதற்கான சிகிச்சையை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.