வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் விபத்தில் படுகாயம்!!

வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் பரந்தன் பகுதியில் கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று காலை 7மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியான குடும்பஸ்தர் நித்திரை மயக்கத்தின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

விபத்தில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆசீர்வாதம்(கிச்சா) என்பவரே கழுத்தில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் எதுவிதமான காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மகனுக்கு கல்லீரல் தானம் அளிக்க தந்தை செய்த செயல் : நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் தனது மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க, தனது உடல் எடையை 8 கிலோ வரை குறைத்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் உப்பாலையா(40). சிறு வயதில் போலியோ நோய் தாக்கியதால் 2 கால்களும் ஊனமுற்ற இவர், தற்போது தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சசிகிரண்(15) என்ற மகன் உள்ளார். இவர் ’crypto genius sirkus’ எனும் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரது கல்லீரல் செயல்படவில்லை.

இந்நிலையில், மருத்துவமனையில் சசிகிரணை பரிசோதித்த மருத்துவர்கள், மாற்று சிறுநீரகத்தை தானமாக பெற்று பொருத்தினால் தான் உயிர் பிழைப்பார் என தெரிவித்துவிட்டனர்.

ஆனால், தானம் பெறுவோரின் பட்டியலில் சசிகிரண் 12வது இடத்தில் இருந்ததால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது மகனுக்காக கல்லீரல் வழங்க உப்பாலையா முன் வந்தார். ஆனால், அவரது கல்லீரலில் 5 சதவிதத்துக்கும் அதிகமான அளவில் கொழுப்பு இருந்தது.

இதனால் அவர் 4 கிலோ எடையையாவது குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின் உப்பாலையா 4 கிலோ எடையை குறைத்தார். எனினும், மேலும் 4 கிலோ எடையை அவர் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

அதன் பின்னர் தனது உடலை வருத்தி, 45 நாட்களில் 8 கிலோ வரை உப்பாலையா தனது உடல் எடையை குறைத்தார். அதனைத் தொடர்ந்து, உப்பாலையாவின் உடலில் 330 கிராம் எடை கல்லீரல் எடுக்கப்பட்டு, சசிகிரணுக்கு பொருத்தப்பட்டது.

உயிருடன் இருப்பவரிடமிருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு, மற்றொருவருக்கு பொறுத்தப்படுவது மருத்துவ உலகில் இதுதான் முதல் முறையாகும்.

இதுதொடர்பாக உப்பாலையா கூறுகையில் ‘தினமும் 2 கிலோ மீற்றர் தூரம் நடந்தேன். அரிசி சாதம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்தேன். ஜூஸ் வகைகளை நிறைய குடித்தேன்.

முதலில் 4 கிலோ குறைத்தேன். மேலும், உடல் எடையை குறைக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மீண்டும் 4 கிலோ என 8 கிலோ வரை எடையை குறைத்தேன்’ என தெரிவித்துள்ளார்.

எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஹீரோ நாய்!!

அமெரிக்காவின் அரிசோனாவில் எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஒரு நாய் ஒரே நாளில் ஹீரோவாகியிருக்கிறது.

அரிசோனாவைச் சேர்ந்த Paula Godwin தனது நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது காலருகே ஒரு பாம்பு கிடப்பதைக் கண்டார். அது rattlesnake எனப்படும் ஒரு வகை பாம்பு.

பொதுவாக இவ்வகைப் பாம்புகள் தங்கள் வாலிலுள்ள கிலுகிலுப்பை போன்ற அமைப்பு மூலம் ஒலி எழுப்பி எதிரிகளை எச்சரிக்கும்.

ஆனால் சம்பவம் நடந்த அன்று அந்த பாம்பு ஒலி எதுவும் எழுப்பாததோடு சாலையின் நிறத்திலேயே இருந்ததால் அது படுத்துக் கிடந்ததையே Paula Godwin கவனிக்கவில்லை.

திடீரென எழுந்த அந்த பாம்பு Paula Godwinயைக் கொத்தும்போது அவரது காலை ஒட்டி நின்ற அவரது நாய்களில் ஒன்றான Todd மீது கடிபட்டது. அது இல்லை என்றால் Paula Godwin மீது கடிபட்டிருக்கும்.

Todd குறுக்கே வந்ததால் அதன் மீது பாம்பு கொத்த Paula உயிர் தப்பினார். உடனடியாக Paula தனது நாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அதற்கு பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டது. என்றாலும் அதன் முகம் வீங்கிவிட்டது.

முகம் வீங்கிய Toddஇன் படத்தை Paula பேஸ்புக்கில் பதிவிட ஒரே நாளில் அது ஹீரோவாகிவிட்டது. Todd ஒரு சாதாரண நாய் போல் நடந்து கொள்கிறது, ஆனால் அதுதான் என் ஹீரோ என்கிறார் Paula.

ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் : டெல்லியை உலுக்கிய 11 பேர் மரணத்தில் அவிழாத முடிச்சு!!

இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் மட்டும் கழுத்து நெரிக்கப்பட்டு தரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

11 பேரின் சடலங்களை கைப்பற்றிய டெல்லி பொலிசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அந்த வீட்டின் பூஜை அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், எந்த நாளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட குறிப்புகள் எழுதியிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கண்களையும், வாயையும் கட்டிக் கொண்டால் தூக்கிலிட்டுக் கொள்ளும் போது வலி தெரியாது என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அனைவரும் பாத பூஜை செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

அதாவது ஆலமர விழுதுகள் போல் தொங்க வேண்டும் என்பதுதான் அந்த பூஜையின் விதி என கூறப்படுகிறது.

இந்த அமானுஷ்ய கடிதம் சிக்கியதால் விசாரணை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

இதை மாந்த்ரீகர்கள் யாரேனும் சொல்லி இவர்கள் செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கையில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி உயிரிழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த டைரியில் இறைவனை பார்க்க போவதற்கு முன்பு யாரும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருந்ததால் 6 செல்போன்கள் சைலன்ட் மோடில் வைத்து ஒரு கவரில் சுற்றப்பட்டு அலமாரியில் இருந்தன.

சிசிடிவி கமெரா காட்சிகளை ஆராய்ந்தபோது குடும்பத்தினர் அனைவரும் 10.40 மணிக்கு உணவருந்தியுள்ளதும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தன்னுயிரைக் கொடுத்து 37 பேரின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர்!!

 

சீனாவில் மலைப்பிரதேச சாலை ஒன்றில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தனது உயிரைக் கொடுத்து 37 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள Xichang-ல் இருந்து Ya’an பகுதிக்கு 37 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

மலைப்பாதை என்பதால் அனுபவம் மிக்க ஓட்டுனர்களே பெரும்பாலும் அந்த சாலை வழியாக பேருந்துகளை இயக்கி வந்துள்ளனர். மட்டுமின்றி மலைப்பாதையின் ஒருபக்கம் பள்ளம் என்பதாலும் மிக கவனமாகவே வாகனங்கள் செலுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஓட்டுனர் Zhao மற்றும் அவரது துணை ஓட்டுனர் Chen Yong ஆகிய இருவரும் 35 பயணிகளுடன் அந்த மலைப்பாதை வழியாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென்று மிகப்பெரிய பாறை ஒன்று பெயர்ந்து விழுவதை ஓட்டுனர் Zhao கண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பேருந்தை நிறுத்திய அவர் மீது அந்த பாறை விழுந்து மோதியுள்ளது.இதில் சம்பவயிடத்திலேயே ஓட்டுனர் Zhao கொல்லப்பட்டார். ஆனால் எஞ்சிய 37 பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.

அதில் 6 பேருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர் Zhao மட்டும் இல்லை என்றால் பேருந்து பாறையில் சிக்கியிருக்கும் அல்லது பள்ளத்தில் கவிழ்ந்திருக்கும் என அதிர்ச்சியில் இருந்து மீளாத பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் பயணிகளை மீட்டுள்ளதுடன் கொல்லப்பட்ட ஓட்டுனரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

காணாமல் போன 3 மணி நேரத்தில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் : அதிர்ச்சி சம்பவம்!!

காணமல் போனதாக கருதப்பட்ட சிறுமி மூன்று மணி நேரத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Rothesay மாகாணத்தைச் சேர்ந்த Alesha MacPhail என்ற 6 வயது சிறுமி உள்ளூர் நேரப்படி காலை 06. 30 மணிக்கு காணமல் போயுள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் பொலிசாரிடம் புகார் அளித்த பின் அந்த சிறுமியின் மூதாட்டி Angela King(46) என் பேத்தியை காணவில்லை, யாரேனும் எங்கு கண்டிருந்தால் எனக்கு உடனடியாக தெரிவியுங்கள் என்று சிறுமியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அப்பகுதி மக்கள் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது சரியாக காலை 9 மணியாளவில் Ardberg சாலையில் அமைந்திருக்கும் வெகுநாட்களாக பயன்படுத்தப்படாத ஹோட்டலான Cames Hydro ஹோட்டலுக்கு வெளியில் சிறுமியின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, சிறுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். காணமல் போன மூன்று மணி நேரத்திற்குள்ளே சிறுமியின் மரண செய்தி அவரின் பாட்டிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதன் பின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சிறுமி மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சிறுமியின் மரணம் மர்மமாக உள்ளது. விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தை எட்டியுள்ளதால் இது குறித்த முழு விசாரணைக்கு பின்னரே உரிய தகவல் தெரிய வரும்.

மேலும் 06.30 மணிக்கு மேல் இந்த சிறுமியை யாரேனும் எங்காவது பார்த்திருந்தால் அதைப் பற்றி தகவல் கொடுக்கவும், ஏனெனில் அங்கு இருக்கும் சிசிடிவி கமெராக்களை வைத்து சில விடயங்களை கண்டுபிடிக்க முடியும், இதை வைத்து பொலிசார் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.

இது மிகவும் அரிதான சம்பவம், இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும், ஆதால் பொதுமக்கள் இதைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.

கணவனுக்கு மனைவி கொடுத்த நினைத்து பார்க்க முடியாத தண்டனை : பொலிசாரிடம் சொன்ன காரணம்!!

தாய்லாந்து நாட்டில் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கணவனின் மர்ம உறுப்பை மனைவி வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் Si Racha மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி Siripan(40)-Karuna Sanusan(24). இவர்கள் இருவரும் அங்கிருக்கு காய்கறிகடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் Karuna Sanusan-வுக்கு தன் கணவன் மீது சமீபகாலமாக சந்தேகம் எழுந்துள்ளது. அவர் பல பெண்களுடன் பழகி வருவதும் தெரியவந்துள்ளது.

இதனால் அவர் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 06.20 மணியளவில் கணவனுடன் பெட்டில் நெருக்கமாக இருக்கும் போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த 12-அடி நீளம் கொண்ட கத்தியால் அவரது மர்ம உறுப்பை வெட்டி, பெட் ரூமின் ஜன்னலுக்கு வெளியில் வீசியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடி துடிப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மனைவியை கைது செய்துள்ளனர்.

மருத்துவனையில் அவரது உறுப்பை சேர்த்து வைக்க மருத்துவர்கள் முயற்சி செய்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கைது செய்த அவர் மனைவியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நாங்கள் இருவரும் காய்கறி கடையில் வேலை பார்க்கிறோம்.

இந்நிலையில் என் கணவனின் நடவடிக்கைகள் சமீகாலமாக சரியில்லாத காரணத்தினால் அவரை பின் தொடர்ந்தேன், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து தொடர்ந்து அவரை அவருக்கே தெரியாமல் பின் தொடர்ந்த போது, அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் காரணமாகவே காலை நேரத்தில் இது போன்ற செயலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

யாழில் தொடரும் அவலம் : மற்றுமொரு இளைஞன் தற்கொலை!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். இவ்வாறான நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்கள், யுவதிகள் அதிகளவில் தற்கொலை செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிறுமி ரெஜினாவை காட்­டுக்கு அழைத்து சென்ற முக்கிய காரணம் மற்றும் தடயங்கள் சிக்கின!!

யாழ். வட்­டுக்­கோட்டை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சுழி­புரம் பகு­தியில் கொல்­லப்­பட்ட 6 வயது சிறுமி சிவ­னேஷன் ரெஜினா, திட்­ட­மி­டப்­பட்டு காட்டுப் பகு­திக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கொல்­லப்­பட்ட சிறு­மியின் சித்­தப்பா உறவு முறை­யி­லான 22 வயது­டைய பிர­தான சந்­தேக நப­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து இவை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அத­னை­ய­டுத்தே கொல்­லப்­பட்ட சிறு­மியின் மாமா உறவு முறை­யி­லான 17, 18 வய­து­களை உடைய இரு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக அந்த அதி­காரி மேலும் கூறினார்.

பின்னர் கைது செய்­யப்­பட்ட இந்த மாமா உறவு முறை­யினைக்கொண்ட இரு சந்­தேக நபர்­களில் ஒரு­வரே சிறு­மிக்கு பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி காட்டுப் பகு­திக்கு அழைத்துச் சென்­றுள்­ள­மையும், மற்­றைய நபர் பிர­தான சந்­தேக நபரின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உடன் இருந்து ஒத்­தாசை புரிந்­துள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அத­னை­ய­டுத்தே அவர்­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் குறித்த உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

இத­னி­டையே கொலை செய்­யப்­படும்போது சிறுமி ரெஜினா அணிந்­தி­ருந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் உடையின் பாகங்கள் பல பிர­தே­சத்தின் காட்டுப் பகு­திக்குள் இருந்து வட்­டுக்­கோட்டை பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

சிறுமி கொலை செய்­யப்பட்ட இடத்­தி­லி­ருந்து 500 மீற்­றர்­வ­ரை­யி­லான தூரத்திலுள்ள காட்டுப் பகு­தியில் பாயொன்­றுக்கு அருகே வைத்து இவை மீட்கப்பட்டதாகவும் அவை சிறுமி கொலை செய்யப்படும்போது அணிந்திருந்த உள் ஆடைகளின் பகுதிகளாக இருக்க வேண்டும் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிஸ்லாந்தில் முதல் முதலாக ஈழத்தமிழருக்கு கிடைத்த அங்கீகாரம்!!

சுவிஸ்லாந்தின் ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில், முதல் முதலாக இலங்கைத் தமிழர் ஒருவர் சோசலிச ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

15 வயதில் சுவிஸ்லாந்தில் தஞ்சமடைந்த ரூபன் சிவகணேசன் என்ற தமிழரே மாநகர சபை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவரது தெரிவு ZUG நகரத்திற்கான ஓர் பல்லின மக்களின் பிரதிநிதத்துவத்தினை உறுதி செய்கின்றது.

இலங்கையில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு சுவிஸ்லாந்தில் தஞ்சம் அடைந்து 36 வருடங்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிற்கு கிடைத்த ஓர் மாபெரும் அங்கீகாரமாகும்.

ரூபன் சிவகணேசன் 2006ஆம் ஆண்டு கன்ரோன் ZUG இற்கான மாநில அரச உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டாவர்.

வலதுசாரிகளை பெரும்பாண்மையாக கொண்ட ஓர் மாநிலத்தில் முதலாம் தலைமுறையினரை சார்ந்த ஓர் இளைஞன் முதல் முறையாக 2006இல் மாநில உறுப்பினர்களிற்கான தேர்தலில் வெற்றி பெற்றது ஓர் பெரிய சாதனை ஆகும்.

ZUG மாநகர சபையில் அண்ணளவாக 30,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 120க்கு மேற்பட்ட தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழும் ஓர் நகரம். இந் நகரம் சுவிஸ்லாந்தின் மத்தியில் அமைந்துள்ளது.

அது மட்டுமல்லாது ZUG நகரத்தில் வாழும் 40 விகிதமான மக்கள் வெளிநாட்டவர்கள். ஒவ்வொரு 3ஆவது நபர்களின் அடிப்படை பிறப்பிடம் வெளிநாடுகளாகவே இருக்கின்றது.

இம்மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான ஓர் பொருத்தமான வேட்பாளர் இந்நகரத்திற்கு முன் தேவையாக உள்ளது. ரூபன் சிவகணேசன் அவர்களின் தெரிவானது இத் தேவையை நிவர்த்தி செய்யும் என்பது யதார்த்தமானது.

ரூபன் சிவகணேசன, வெளிநாட்டவர்களின் அரசியல் உரிமைகள், இளைஞர்களின் அரசியல், சூழல் பாதுகாப்பு, தொழிலாளர்களின் உரிமை, போன்ற போராட்டங்களிலும் அனைத்து முன்னெடுப்புகளிலும் தன்னை எப்பொழுதும் முன் நிறுத்தி வந்துள்ளார்.

அது மட்டுமல்லாது சுவிஸ்லாந்தில் அவ்வப் பொழுது மேலெழும் இனவாதத்திற்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி தனது எதிர்பினையும் கண்டணங்களையும் Swissblacks என்ற அமைப்பின் மூலம் பதிவு செய்து வந்துள்ளார்.

பல அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த அனைத்து இனத்தவர்களிற்கும் பாரபட்சமின்றி தனது சமூக சேவையை 2005இல் இருந்து Asylbrücke என்ற அமைப்பின் ஊடாக வழங்கி வந்துள்ளார்.

15 வயதில் சுவிஸ்லாந்தில் தஞ்சமடைந்த இந்த இளைஞனின் அரசியல் வாழ்வு இன்று இன்னுமொரு படி முன்னேறி மாநகர சபையின் உறுப்பினர் தேர்விற்கு இட்டுச்சென்றுள்ளது. இந்த தேர்வானது இவரது அரசியல் செயற்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கமுடிகின்றது.

சுவிஸ்லாந்தின் தேசிய பாராளுமன்றத்தில் 7 அமைச்சர்கள் உள்ளனர். அதே வகைப்பட்டு மாநிலங்களிலும் மாநகரங்களிலும் 7 அல்லது 5 அமைச்சர்கள் உள்ளனர்.

ZUG மாநகர சபையில் இந்த 5 உறுப்பினர்களிற்கான தேர்தலிலேயே ரூபன் சிவகணேசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் இளம் யுவதி தற்கொலை!!

தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய பெண்ணொருவரே வீட்டு முற்றத்தில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அப் பெண் குறித்த மேலதிக விபரங்கள், ஏன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் , இல்லையேல் கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டாரா என்பன தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுவனின் உயிரை பறித்த றம்புட்டான் : அவதானம்!!

சிலாபம் – கற்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 6 வயதாகிய முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்துள்ளார்.

வீட்டில் சடலமாக கிடந்த 11 பேரும் தற்கொலை செய்யவில்லை : இது கொலை : உறவினர் அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை எனவும், அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

டெல்லியின் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் நேற்று வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதில் 8 பேரின் உடற் கூறு ஆய்வு முடிந்துள்ளது.

அதில் யாரும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று பொலிசார் தரப்பில் கூறப்படும் நிலையில், இறந்த நாராயண் தேவியின் மகள் சுஜாதா நாக்பால், என் தாய், சகோதரர்கள், சகோதரி, குழந்தைகள் இறந்ததை ஊடகங்கள் கொச்சைப்படுத்தி தற்கொலை என்று கூறுகிறார்கள்.

நான் என் தாயிடம் தினந்தோறும் போனில் பேசிக் கொண்டு தான் இருப்பேன். இறப்பதற்கு அன்று இரவு கூட போனில் பேசினேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.

எங்கள் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள், அவர்களுக்கு எந்த விதமான சாமியார்கள் மீது எந்த மூடநம்பிக்கை கிடையாது.

இது தற்கொலை அல்ல. ஊடகங்கள் தான் இதைத் தற்கொலை என கூறுகின்றனர். எங்கள் குடும்பத்தினர் யாரும் தற்கொலை செய்திருக்கமாட்டார்கள். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட வீட்டில் மூதாட்டி நாராயண் தேவி (77) தரையில் படுத்தவாறு இறந்துகிடந்தார் . மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தனர்.

இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா(57). மற்றொரு மகள் இங்கு இல்லை.

பவனேஷ் மனைவி சவிதா (48), சவிதாவின் மகள் மீனு (23), நிதி (25), துருவ் (15). லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33) ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சை எடுக்க வந்தவர்கள் அடித்துக் கொலை : கொடூர சம்பவம்!!

மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

பரத் போசேல், தாதாராவ், ராஜு, அகானு, பரத் மாவ்லே ஆகிய ஐந்து பேரும் துளே மாவட்டத்தின் ரயீன்பேடா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியின் படத்தின் கீழேதான் அடித்துக்கொல்லப்பட்டனர்.

நேற்று இந்த அலுவலகத்தின் அறை ரத்த சகதியாக இருந்தது. இன்று அறை சுத்தப்படுத்தப்பட்டிருந்தாலும், ரத்த கறை இன்னும் உள்ளது. ரயீன்பேடா கிராமம் தற்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கிறது. நேற்று ஐந்து அப்பாவிகளின் அலறலைக் கேட்ட இக்கிராமம், இன்று அமைதியாகக் காட்சியளிக்கிறது.

இறந்தவர்கள் ஐந்து பேரும் தெற்கு மகாராஷ்டிராவில் உள்ள சோலாபூரை சேர்ந்த நாடோடி சமூகத்தினர். பிச்சை எடுத்துப் பிழைப்பதற்காக தங்கள் குடும்பங்களுடன் வடக்கு மகாராஷ்டிராவிற்கு வந்துள்ளனர். துளே மாவட்டத்தின் வெளியே கூடாரம் அமைத்து இவர்கள் வாழ்ந்துவந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களிடம் பேசினோம்.

இறந்துபோன பாரத் போசேலின் மனைவி நர்மதா,” அன்று காலை 9 மணிக்கு எனது கணவரும், மற்ற நான்கு பேரும் பிச்சை எடுக்க சென்றனர். மதியம் அவரது போனுக்கு கால் செய்தபோது, ஸ்விட்ச் ஆப் என வந்தது. அவர்கள் அனைவரும் அடித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பற்றி மாலை 4 மணிக்கு எங்களுக்குத் தகவல் வந்தது” என்கிறார்.

”இது போன்ற சம்பவம் எங்களுக்கு நடந்தது இதுவே முதல் முறை. பிச்சை எடுக்க இங்கு வந்துள்ளோம். இதுவே எங்களது பாரம்பரிய தொழில்.” என்கிறார் இறந்தவரின் உறவினரான ஜகன்நாத்.

இந்த குடும்பங்கள் தற்போது கூடாரங்களை அகற்றிவிட்டு, சொந்த ஊருக்கே செல்ல உள்ளனர்.

இவர்கள் நாத் பந்தி தவாரி கோசவி எனும் நாடோடி பழங்குடியினர். இவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, பிழைப்புப்பாக பிச்சை எடுப்பார்கள்.

”இந்த சம்பவத்தில் 23 பேரை கைது செய்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஐந்து பேரும் கிராமத்திற்கு வந்துள்ளனர். சில கிராம மக்கள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு, கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் பதில் திருப்திகரமாக இல்லாததால், அவர்களை அறைக்கு அழைத்துச் சென்று கிராம மக்கள் அடித்துள்ளனர்” என துளே மாவட்ட எஸ்.பி ராம்குமார் கூறுகிறார்.

போலீஸாரின் நடவடிக்கையால் கிராமமே காலியாக உள்ளது. நம்மிடம் பேசுவதற்கு யாரும் இல்லை.

இந்தியாவின் மற்ற பகுதிகளை போலவே மகாராஷ்டிராவிலும் குழந்தை கடத்தல் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. மகாராஷ்டிராவின் நாசிக்கிலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுமியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

சென்னையில் சாலையில் நடந்து சென்ற போது மாடியிலிருந்து இளைஞர் விழுந்ததில் படுகாயமடைந்த தன்யஸ்ரீ தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மகள் தன்யஸ்ரீ(வயது 4). தனது தாத்தாவுடன் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சாலையில் சென்ற போதே இத்துயர சம்பவம் நடந்தது.

ஸ்ரீராமுலு என்ற தெருவில் நான்காவது மாடியிலிருந்து சிவா என்ற இளைஞர் சிறுமி மீது விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தன்யஸ்ரீ, உயிருக்கு போராடினார்.

உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பலரது பிரார்த்தனையினாலும், தீவிர சிகிச்சையாலும் உடல்நலம் தேறி வந்த தன்யஸ்ரீ தற்போது ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீதரின் நிலையை அறிந்த தமிழக அரசு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தன்யஸ்ரீவின் மருத்துவ செலவுகளை ஏற்றமை குறிப்பிடத்தக்கது

11 பேர் மர்ம மரணம் : கடைசி நேரத்தில் காப்பாற்றுகிறேன் என்று வாக்களித்த சாமியார் எங்கே?

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது, அந்த வீட்டில் பொலிஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியே துருத்தியபடி 11 குழாய்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் துணி துவைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலண்ட் மோடில் இருந்துள்ளது, அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்துள்ளனர்.

அதாவது, முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது, அதை பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது என சாமியார் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

மேலும் டைரி குறிப்பிலும், நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள், உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது, அப்படி சடங்கும் செய்யும் பட்சத்தில் தவறாக ஏதும் நடந்தால் கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என குறித்த சாமியார் கூறியதாகவும் எழுதப்பட்டுள்ளது.

எனவே சாமியாருடனான செல்போன் உரையாடல் தொடர்பான ரெக்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன, அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.