ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் உயரிய சாதனை!!

கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற யுவதி பெற்று சாதனைப்படைத்துள்ளார்.

தமிழ்ஈழ இனத்தில் உச்சமாக சாதிப்பவர்கள் சிலர். அதிலும் அதீத சமூக அக்கறை கொண்டு அதன் செயற்பாடுகளை தமது மூச்சாகக் கொண்டு அதேவேளை துறைசார்நது தமது கல்வியிலும் உச்சமாக சாதிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அச்சாதனையூடாகவும் தமது இனத்திற்கும் அதன் வாழ்விற்கும் வலுச்சேர்ப்பவர்கள் பெருமை சேர்ப்பவர்கள் அபூர்வமானவர்களே!

இவ்வாறான இளையவரே அபிசா யோகரத்தினம். தனது முதற்பட்டப்படிப்பில் முதன்மை தேர்ச்சி பெற்று அதனூடாக மருத்துவக்கல்விக்கான வாய்ப்பை ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் பெற்று அதன் முதல் ஆண்டிலேயே மீண்டும் முதன்மை நிலையை எய்தி அதியுயர் விருதைப் பெற்றுள்ளார்.

அது மட்டுமல்ல தனது ஆராச்சிகளினூடாக ரொரன்ரோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய யூனிவசிற்றி கெல்த் நெற்வேக் எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டைப் பெற்று அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் தனதாக்கியுள்ளார்.

சமூக நிகழ்வு எங்கென்றாலும் தனது பிரசன்னத்தை மட்டுமல்ல, அதன் பிரதான செயற்பாட்டாளராகவும் காணப்படும் அபிசா அடுத்த தலைமுறைக்கான சிறந்த முதன்மை வழிகாட்டி மட்டுமல்ல இனத்தின் ஒரு பெரும் நம்பிக்கை நட்சத்திரம். இளையவர்களின் இவ்வாறான வளர்ச்சியும், எழுச்சியும், சாதனைகளும் ஈழத் தமிழினத்திற்கான பெரும் ஊக்கமருந்து என குறிப்பிடப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய ஆடையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் சட்டத்தரணி!!

சர்ச்சைக்குரிய ஆடை அணிந்து வந்தமையினால் பெண் சட்டத்தரணியான சுகந்திகா பெர்ணான்டோவை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

மாரவில நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் பியாமா போன்ற ஆடை ஒன்றை அணிந்து வந்துள்ளார்.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கூறி மாரவில சட்டத்தரணிகள் சங்கம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தது.

சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்றத்திற்கு தகுதியற்ற ஆடை அணிந்து வந்துள்ள விடயம் அவதானிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கேமிந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்ற வழக்கில் கலந்து கொள்ளாமல் சுகந்திகா நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, தான் வேறு விதமான ஆடை அணிந்து வந்ததனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் பேஸ்புக் ஊடாக இலங்கை சட்டத்துறை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ வெளியிட்டிருந்தார்

இந்நிலையில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சுகந்திகா பெர்ணான்டோ அணிந்து வந்த ஆடை தொடர்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்!!

வெளிநாட்டில் உள்ள 800 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் வாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமைக்காக மாதாந்தம் 1000 விண்ணப்பங்கள் கிடைப்பதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரால் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். விசேட குழுவின் மூலம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பரிந்துரைக்கு அமைய 800 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக திரு. நிஹால் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரட்டை குடியுரிமையை பெற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : நாடு கடத்தப்படும் ஆபாயம்!!

பிரித்தானியாவில் இருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரான ஹேமகே பத்திரனகே என்பவரே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் Worcester பகுதியில் வசிக்கும் இலங்கை பயிற்சியாளரே இவ்வாறு நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கும் குறித்த இலங்கையர், போதுமான பணம் சம்பாதிக்காத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

Worcester பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான ஹேமகே பத்திரனகே விசா பெற தகுதி பெற்றுக் கொள்ள 30,000 யூரோ சம்பாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

27 வயதான அவர் மனித உரிமைகள் அடிப்படையில் தங்கியிருப்பதற்கு உள்துறை அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.

எனினும், அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு செல்ல 20 நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் பிரதி அமைச்சர் மஸ்தானுக்கு வரவேற்பு!!

வவுனியாவில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற கே.காதர் மஸ்தானுக்கு இன்று(23.06) வவுனியாவில் பொது அமைப்புக்கள் மாபெரும் வரவேற்பு நிகழ்வினை மேற்கொண்டனர்.

பிரதான கண்டி வீதிவழியாக வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து வாகனப் பேரணியாக அழைத்துச் செல்லப்பட்ட பிரதி அமைச்சர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு பள்ளிவாசல் சென்று தொழுகையின் பின்னர் மன்னார் வீதி வழியாக, வைரவர்கோவில் வீதிவழியாக குருமன்காடு சென்று அங்கிருந்து திரும்பவும் மன்னார் வீதிவழியாக கலைமகள் சனசமூக நிலையத்தில் விளையாட்டங்கிற்கு அழைத்து வரப்பட்ட பிரதி அமைச்சருக்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளின் பாண்ட் வாத்தியத்துடனும் பரக்கும்பா மகாவித்தியாலய மாணவர்களின் கண்டி நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு தமிழ்ப்பாரம்பரிய நட்டுவமேள தாளத்துடன் நிகழ்வு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

வர்த்தகர் சங்கம், முச்சக்கரவண்டிகள் உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சிகை அலங்கரிப்பு உரிமையாளர்கள் சங்கம், நகரவரியிறுப்பாளர்கள் சங்கம், என்பன ஒன்றினைந்து மேற்கொண்ட வரவேற்பு நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், சமயத் தலைவர்கள, வர்த்தகப்பிரமுகர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 28.06.2018 நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

நடைபெறவிருக்கும் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளதால் பழைய மாணாவர்களை தவறாது சமூகம் கொடுக்க வேண்டும் என பாடசாலையின் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு!!

வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்று (23.06) குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் இலவச கருத்தரங்கானது மக்கள் வங்கியின் வவுனியா கிளையின் முகாமையாளர் திருமதி எஸ்.பாலச்சந்திரனின் அனுசரணையுடன் நடைபெற்றது.

கருத்தரங்கின் வளவாளராக வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் அ.பாலசுந்தரம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

பூந்தோட்டம், பாரதிபுரம், வெளிக்குளம், அண்ணாநகர், கோவில்குளம், தாண்டிக்குளம், மகாறம்பைக்குளம் பிரதேச பாடசாலைகளை சேர்ந்த 250 மாணவர்கள் இவ் இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ந்தும் இலவசக்கருத்தரங்கு நடத்தப்படவுள்ளதால் புலைமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தவறாது சமூமளிக்கும்படி மக்கள் வங்கியின் வவுனியா கிளை முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

சைக்கிளில் சென்ற நடிகைக்கு நேர்ந்த கதி : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்!!

தமிழகத்தில் அதிகாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற நடிகை சஞ்சானாவிடம் விலையுயர்ந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோ, ரேணிகுண்டா, அஞ்சான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா சிங். இவர் சென்னை முகப்பேறு நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

தினமும் அந்த பகுதியில் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் சஞ்சனா இன்று கீழ்பாக்கத்தில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டிற்கு செல்வதற்காக செல்போனில் உள்ள மேப்பை பார்த்துக் கொண்டு சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது சிந்தாமணி சிக்னல் அருகே சஞ்சனாவின் கையில் இருந்த 80,000 மதிப்பிலான விலையுயர்ந்த செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றனர். ஹெல்மட் அணிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து சஞ்சனா கூறுகையில், செல்போனை பறித்துச் சென்றவர்களை பிடிக்கலாம் என்று சைக்கிளில் செல்வதற்குள் அந்த நபர்கள் பைக்கில் ஓடிவிட்டதாக கூறினார்.

மேலும் இது குறித்து நடிகை சஞ்சனா புகார் அளித்துள்ளதால், பொலிசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமராக்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த Dominic Peakeஇன் மகன் Princeton Peake (2) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானான்.

வீட்டிற்கு அருகில் மரங்களும் சதுப்பு நிலமும் நிறைந்த காடு. குழந்தையைக் காணவில்லை என்றதும் உயிர் துடிக்க ஓடிய Dominic Peakeகிற்கு குழந்தையின் தண்ணீர் குடிக்கும் கப் மட்டுமே கிடைக்க, துவண்டு போனார் அவர்.

தன் குழந்தை சதுப்பு நிலத்தில் எங்காவது முகங்குப்புற விழுந்து கிடப்பான் என்றும் இனி அவன் உயிருடன் கிடைக்கமாட்டான் என்றுமே தனக்கு தோன்றியதாக கூறுகிறார் Dominic Peake.

சற்று நேரத்தில் பொலிசார் வர, அவர்கள் கண்களில் Dominic Peakeஇன் நாயின் காலடித் தடங்கள் கண்ணில் பட, அதைப் பின்பற்றி சென்றனர்.

அரை மைல் தொலைவில் தனது குட்டி எஜமானுடன் அப்பொல்லோ என்று அழைக்கப்படும் அந்த நாய் இருப்பதைக் கண்டனர் பொலிசார்.

சமபவம் குறித்து ஷெரிஃப் Daniel Abbott கூறும்போது, அந்த நாயின் காலடித்தடங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அந்தக் காட்டில் குழந்தை போன பாதையை கண்டுபிடித்திருக்க முடியாது என்றும், அது மட்டுமின்றி அந்த நாயின் அருகாமைதான் குழந்தையின் உயிரைக் காத்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

குழந்தையின் உடலில் சிறு கீறல்களும், பூச்சிகள் கடித்ததால் சில தடிப்புகளுமே இருந்தன என்றும் மற்றபடி அவன் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவ உதவிக் குழுவினர் தெரிவித்தனர்.

காணாமல்போய் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குழந்தையைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக இருந்த அப்போல்லோவுக்கு பொலிசார் தங்கள் சார்பில் உணவை பரிசாக அளித்தனர்.

என் மகனின் உயிரைக் காத்ததற்காக அப்பொல்லோவுக்கு கடமைப் பட்டிருக்கிறேன் என்று கூறியதோடு என் மகன் தனியாக இருந்தால் அவனுக்கு என்ன நேரிட்டிருக்கும் என்றே எண்ணிப்பார்க்க முடியவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் Dominic Peake.

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து : வெளிநாட்டு தாய் மற்றும் மகள் பலி!!

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலியர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 2 அவுஸ்திரேலிய நாட்டவர்கள் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்தனர்.

Louise Collins என்ற பெண் மற்றும் அவரது மகளான 4 வயதுடைய Poppy என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவர் மற்றும் குடும்பத்தினர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர். கடந்த புதன்கிழமை நாகொட பிரதேசத்தில் இவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Louise என்பவரின் கணவர் Patrick மற்றும் அவர்களது மகன் Fred மற்றும் மகள் Poppy ஆகியோர் பயணித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Patrick மற்றும் மகன் Fred ஆகியோர் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் மகள் மற்றும் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மகன் Fredஇன் முகத்தில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தந்தை ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Patrick மத்திய கிழக்கு நாடுகளின் விமான சேவையான கட்டார் எயார்வேஸ் விமான சேவையில் பிரபல விமானியாக செயற்பட்டு வருகின்றார்.

மிகவும் அன்பான ஒரு குடும்பத்தை இழந்து விட்டோம் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாணவி தேசிய ரீதியில் மூன்று புதிய சாதனைகள்!!

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

மேலும் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

பொலன்னுறுவை விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டிகளின் ஆரம்ப தினமான நேற்றைய தினம் பெண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்னெச், க்ளீன் அண்ட் ஜேர்க் மற்றும் ஒட்டுமொத்த எடை ஆகியவற்றிலேயே ஆஷிகா புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டினார்.

ஸ்னெச் முறையில் 76 கிலோ கிராம் எடையையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 97 கிலோ கிராம் எடையையும் தூக்கிய ஆஷிகா, மொத்தமாக 173 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.

இதன் மூலம் கடந்த வருடம் (ஸ்னெச் 74 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 96 கி.கி. மொத்தம் 170 கி.கி.) நிலைநாட்டிய தனது சொந்த தேசிய சாதனையை ஆஷிகா புதுப்பித்தார்.

அத்துடன் இந்த மூன்று சாதனைகளும் கனிஷ்ட தேசிய மற்றும் இளையோர் தேசிய பிரிவுகளிலும் புதிய தேசிய சாதனைகளாகப் பதிவாகியுள்ளன.

பெண்களுக்கான 58 கிலோ கிராம் எடைப் பிரிவு பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் பிரதாபன் நிலோஜினி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இவர் (ஸ்னெச் 53 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 67 கி.கி.) மொத்தமாக 120 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.

90 கிலோ கிராம் மற்றம் அதற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் வட மாகாணத்தின் மேரி லக்ஷிகா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இவர் (ஸ்னெச் 44 கி.கி., க்ளீன் அண்ட் ஜேர்க் 56 கி.கி.) மொத்தமாக 100 கிலோ கிராம் எடையைத் தூக்கினார்.

வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

வாழைச்சேனை – நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

நாசிவந்தீவு கட்டுமுறிவு பாலத்தின் வாவிக்கரையில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வாவிக்கரை கண்ணா காட்டுப் பகுதியிலிருந்து துர்நாற்றாம் வீசுவதை அறிந்து குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது அந்த இடத்தில் சடலமொன்று கிடப்பதை பார்த்து இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்துடன் சடலத்திற்கு அருகிலிருந்து 2 கைத்தொலைபேசிகளும், பொதி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்!!

மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செயற்பட்ட 11 வகுப்பில் கல்வி கற்றும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி இரவு இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பி வந்த மாணவனை, வீதியில் நின்ற மாணவர்கள் குழுவொன்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலினால் படுகாயமடைந்த மாணவன் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு மாணவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஒரு மாணவன் மாத்திரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

பஸ்ஸில் சிக்குண்டு பெண்ணொருவர் பலி!!

ஹட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது, ஹட்டனிலிருந்து மஸ்கெலியாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் முன்சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்து இன்று 5 மணியளவில் சம்பவித்துள்ளதாகவும், பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவின் பாதுகாப்பு கருதி நகரசபையை பொறுப்பேற்குமாறு வேண்டுகோள்!!

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று முன்தினம் மாலை இளைஞர்கள் சிலர் மதுபோதையில் அங்கு சென்று பணியாற்றிய ஊழியருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதற்கு அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் நகரசபையின் கீழ் செயற்படும் சிறுவர் பூங்காக்களில் பாதுகாப்பு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறான ஒரு சூழ்நிலையினை ஏற்படுத்தவும் குறித்த சிறுவர் பூங்காவின் நிர்வாகத்தை நகரசபையின் கீழ் கொண்டு வந்து பாதுகாப்பான சூழ்நிலையில் சிறுவர்கள் விளையாட்டு, பொழுதுபோக்கைக்கழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, நேற்று முன்தினம் மாலைவேளையில் சிறுவர்களை பூங்காவிற்கு அழைத்துச் சென்றபோது இளைஞர்கள் சிலர் மதுபோதையில் அங்கு சென்று கடமையிலிருந்த ஊழியர் ஒருவரின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் குளப்பகரமான நிலையை ஏற்படுத்திய செயற்பாடுகளினால் சிறுவர்கள் சிலர் அச்ச நிலையில் உள்ளதாகவும்,

இவ்வாறு சிறுவர்கள் பூங்காவிற்குள் இளைஞர்களை மதுபோதையில் அனுமதிப்பதற்கு தடைவிதிப்பதுடன் நகரசபையின் கீழ் செயற்படும் சிறுவர் பூங்காவிற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு அவ்வாறனவர்கள் நியமிக்கப்படவில்லை எனவே சிறுவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் பொழுதுபோக்கினை மேற்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் அல்லது ஏனைய சிறுவர் பூங்காவினைப்போல நகரசபையினர் குறித்த பூங்காவினை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்பான சூழ்நிலையினை ஏற்படுத்தும் பட்சத்தில் சிறுவர்கைள பூங்காவிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குடியிருப்பு சிறுவர் பூங்காவானது குடியிருப்பு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது.

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு!!

வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் நேற்றைய தினம் (22.06) இரவுவேளை இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இன்று பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து விசாரணைகளை மேற்கொண்டதில் திருடப்பட்ட உண்டியல் பண்டாரிகுளம் குளத்தில் வீசப்பட்டு கிடப்பதை அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் உடைக்கப்பட்ட உண்டியலை மீட்டெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.