யாழ். இளைஞர்களுக்கு கிடைத்த அதிஷ்டம் : இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ப்பு!!

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள்.

குறித்த இரண்டு வீரர்களும் வடமாகாண அணி சார்பில் பிரகாசித்த நிலையில், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணிக்கு தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த நபர்கள் அட்டகாசம்!!

யாழ். நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களுக்கு கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சில காலத்திற்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்பாக எமது மகன் கடையொன்றினை நடத்தி வந்தார். அக் கடை இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

அதனை அடுத்து எமது மகன் வெளிநாட்டில் சென்று தற்போது அங்கு வசித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பாக எமது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் எமது மகன் லோஜன் வெளிநாட்டால் வந்துவிட்டாரா ? எப்ப வருவார் ? என மிரட்டும் பாணியில் எம்மை விசாரித்து சென்று இருந்தனர்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு எமது வீட்டுக்குள் புகுந்த கும்பல் எமது வீட்டு யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அடித்து உடைத்து எம்மை அச்சுறுத்தி சென்றனர்.

அது தொடர்பில் நாம் பொலிஸ் அவரச சேவை பிரிவுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்திருந்தோம்.

இன்று காலை எமது வீட்டுக்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு எமது வாக்கு மூலங்களை பதிவு செய்து சென்றனர்“ என தெரிவித்தார்.

இரண்டு வயதான குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி!!

வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் மரதங்கடவல கிரிபாவ பகுதியில் இடம்பெற்றள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தை தனது தாயுடன் உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம், கிரிபாவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திருமணத்துக்கு வந்த 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை : சிசிடிவியில் பதிவான கலங்க வைக்கும் காட்சிகள்!!

 

இந்தியாவில் குவாலியர் எனும் இடத்தில திருமணத்திற்காக வந்த 6 வயது குழந்தையை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள ஒரு நபர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்ப்ரயோகம் செய்து கொன்ற சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

திருமண கொண்டாட்டங்களில் தனது மகளை காணவில்லை என்பதை தாமதமாக உணர்ந்த பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து சிசிடிவியை ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் காட்சிகள் வெளியாகியதால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்திருந்த சிறுமியை ஏதோ காரணம் சொல்லி வெளியே தனியே அழைத்து செல்லும் குற்றவாளி சம்பந்தமான வீடியோ பார்க்கும் அனைவரின் மனதையும் கதிகலங்க செய்கிறது.

அந்த சிசிடிவி காட்சிபடி திருமண கொண்டாட்டங்களுக்கு நடுவே இரவு 11.30 மணிக்கு சம்பந்தப்பட்ட குழந்தை ஒரு நபருடன் வெளியே வருகிறாள்.

யாரோ ஒரு நபருடன் வேகவேகமாக அந்த குழந்தை யாருமற்ற தெருவில் நடக்கிறது. குற்றவாளியும் உடன் நடந்து வருகிறான். சிறிது நேர நடைக்கு பிறகு திடீரென அந்த சிறுமி அவனிடம் இருந்து தப்பி திரும்பி வந்த வழியே ஓடி வருகிறாள்.

ஆனால் அவன் அந்த சிறுமியை அதன்பின் மீண்டும் அழைக்கிறான். எதனாலோ பயப்பட்ட 6 வயது சிறுமி அவன் பின்னாலேயே செல்கிறாள். அதோடு சிசிடிவி காட்சியில் இருள் கவிகிறது. பார்ப்பவர் மனதிலும்.

பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் குற்றவாளி மட்டும் தனியே திரும்பி வருவதான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.

அதன் பின்னர் அந்த சிறுமி அடுத்த நாள் காலை பொலிஸாரின் தேடுதலுக்கு பிறகு திருமணம் நடந்த இடத்திலிருந்து 500மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்க படுகிறாள். சடலமாக.

சம்பவ இடத்தில் சிறுமியின் சடலத்தை பார்த்த உடனேயே இது கொடூரமான முறையில் நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் என தெரிந்ததாக இந்த விசாரணையை மேற்கொண்ட தர்மராஜ் மீனா எனும் மூத்த காவல் துறை அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த குற்றத்தில் திருமண நிகழ்வில் சமைக்க வந்திருந்தவர்களில் ஒருவனை கைது செய்துள்ளது. மேலும் அவனிடம் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்த குற்றத்தை அவன் செய்யும்போது அவனிடம் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக காணப்படுவதால் இதில் மேலும் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் வெளியான மழலை மாறாத அந்த சிறுமியின் காட்சிகள் பல நாட்களுக்கு நம் நெஞ்சிலிருந்து மாறாது.

யாரோ சிலரின் சில நிமிட வக்கிரங்களுக்காக இளம் பிஞ்சுகள் சிதைக்கப்படும் கொடூரம் என்றைக்கு மாறும் என தெரியாமல் மனம் கனக்கிறது.

இலங்கையில் ஏற்பட போகும் மாற்றம் : ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது குறித்து ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போது, குறித்த நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் மைக்கல் மெக்டொனால்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ஆசிய பசுபிக் நாடுகளில் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது பற்றி ஹூவாவே டெக்னோலஜி நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது.

இவற்றில் இலங்கையும் அடங்கும். ஸ்மார்ட் சிற்றி என்பது நகர நிர்வாகத்தின் செயற்றினை மேம்படுத்துவதற்காக தகவல், தொடர்பாடல், தரவுத் தொழில்நுட்பம் போன்றவற்றை ஒன்றிணைக்கும் பொறிமுறை உள்ள நகரமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அனுபவித்த நரக வேதனைகள் : 38 வயது கணவரிடம் விவாகரத்து கோரிய 11 வயது சிறுமி!!

சூடான் நாட்டில் 11 வயது சிறுமி தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நரக வேதனை காரணமாக தனது 38 வயது கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

சூடான் நாட்டில் பெண்கள் 18 வயதை பூர்த்திசெய்வதற்கு முன்னரே திருமணம் செய்வது வைப்பது பின்பற்றப்பட்டு வருகிறது.

சிலர் வறுமையின் காரணமாக தங்களது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியாத காரணத்தால் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். அமல் என்ற 11 வயது சிறுமியை அவரது தந்தை 38 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

அமல் வீட்டில் 6 பெண் பிள்ளைகள். இதனால் வறுமையின் பிடியில் சிக்கிய இவர்களது குடும்பம் சாப்பிடுவதற்கே சிரமப்பட்டது. இந்த நேரத்தில் தான் சிறிது வசதியான 38 வயது நபருக்கு தனது 11 வயது மகளை திருமணம் செய்துவைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் அமலை அந்நபர் அடித்து கொடுமைபடுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமி அமல் கூறியதாவது, எனது கணவர் என்னை தினம் தினம் சித்திரவதை செய்வார்.இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டேன்.

ஆனால், எனது தந்தை மீண்டும் என்னை எனது கணவரிடமே அனுப்பிவிட்டார். இரவில் நான் அனுபவித்த வேதனைகள் அதிகம். உடல் ரீதியாவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தால் அவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கல்லடி பகுதியில் உள்ள வாவியில் மிதந்த சடலம்!!

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் உள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 30 வயதுடைய நபர் எனவும், கறுப்பு மற்றும் நீல நிற ஆடை அணிந்திருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வாவிப்பகுதியில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டது.

குறித்த சடலம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரபலமாகும் ஆசையில் ஈழத்தமிழர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் வீடியோவை வெளியிட்டேன் : நடிகை வாக்குமூலம்!!

தொலைக்காட்சி நடிகை நிலானி, பொலிஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வடபழனி பொலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நிலானியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னூரில் இருந்த நிலானியை கைது செய்தனர்.

குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை நேற்று சென்னை வடபழனி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் நிலானியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நிலானியை ஜூலை மாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தஞ்சாவூரை சேர்ந்த நான் சிறுவயதிலேயே நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஆனால், சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. இதனை வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம் , ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் மற்றும் சில தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து போராடினேன். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் நான் அதிகம் பேசப்படவில்லை.

இந்நிலையில் தான், தொலைக்காட்சி தொடரில் நடித்துக்கொண்டிருந்தபோது தூத்துக்குடி போராட்டம் குறித்து பொலிஸ் சீருடையில் பேசி வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டேன்.

படவாய்ப்புக்கான விளம்பரமாக இது அமையும் என்று நினைத்தேன். காவல்துறையை பற்றி தவறாக பேசும் எண்ணம் எனக்கு இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரித்தானியாவில் கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொல்லப்பட்ட 4 பிள்ளைகளின் தந்தை!!

பிரித்தானியாவில் களவு போன தனது பிள்ளைகளின் மிதிவண்டியை தேடிச் சென்ற தந்தை ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் டெல்ஃபோர்ட் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் 42 வயதான Derek Whyteside.

கடந்த திங்களன்று மாலை சுமார் 4.30 மணியளவில் தமது பிள்ளைகளின் களவு போன மிதிவண்டி தொடர்பில் விசாரிக்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் இளைஞர் கூட்டம் ஒன்று இவரை கிரிக்கெட் மட்டையால கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் அவரை அங்கிருந்த மீட்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கிரிக்கெட் மட்டையால் கண்மூடித்தனமாக அவரது தலையில் தாக்கியதால் தான் அவர் இறந்துள்ளதாக அவரது மனைவி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் முதற் கட்டமாக 6 பேரை கைது செய்துள்ளனர் பின்னர் ஒரு இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை பிணையில் விடுவித்துள்ளனர்.

இதில் 16 வயது இளைஞர் ஒருவரை கொலை குற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பேயோட்டுவதாக கூறி பழுக்க காய்ச்சிய இரும்பால் உடலெங்கும் சூடு போட்ட மருத்துவர்!!

ராஜஸ்தானில் பேயோட்டுவதாக கூறி ஒரு பெண்ணின் உடலில் பல இடங்களில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு போட்டுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் பாலி பகுதியை சேர்ந்தவர் ஜதா தேவி (25) சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார்.

கூலி தொழிலாளியான அவரது கணவன் ஜெய்ராம் பட் அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்க உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஆகவே உறவினர்கள் ஒன்று கூடி ஜதா தேவிக்கு தீய சக்திகள் தொந்தரவு இருப்பதாக கூறி அவரை மந்திரவாதி மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்றனர்.

அந்த மருத்துவர் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இரும்பால் சூடு போடுவதுதான் மருத்துவம் என்று கூறி ஈவிரக்கம் இல்லாமல் ஜதா தேவியின் உடலெங்கும் நாக்கு உள்பட பல இடங்களில் பழுக்க காய்ச்சிய இரும்பால் இரண்டு நாட்களாக சூடு போட்டிருக்கிறார்.

அதுவரை பேசிக்கொண்டிருந்த ஜதா தேவி இந்த சிகிச்சைக்கு பின் பேச்சையும் இழந்திருக்கிறார். மேலும் உடல் நிலை மோசமாகவே ஜோத்புரில் உள்ள பாங்கார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு இவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் acute psychosis எனும் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர்.

அதன்பின் ஜதா தேவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். தீ காயங்கள் ஆறி வருகிறது. இவரது மன நோயும் 6 மாதங்களில் சரியாகி விடும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த விடயத்தில் இவரது கணவரை கைது செய்த போலீசார் அவர் சொன்ன தகவலின் பேரில் அந்த மந்திரவாதி மருத்துவரையும் கைது செய்துள்ளனர்.

இன்றைய நவீன யுகத்திலும் ராஜஸ்தானில் சில பகுதிகளில் இது போன்ற பழைய நம்பிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன. சட்டவிரோதமான முறையில் இந்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட மனிதாபிமானம் இல்லாத மருத்துவ முறைகளை கையாண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் டெங்கு நுளம்பின் பெருக்கம் தீவிரம்!!

வவுனியாவில் கடந்த இரண்டு வாரமாக நகரை அண்மித்த பகுதியான கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்ட வீதி போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் அப்பகுதிகளில் டெங்கு நுளம்பு பரிசோதனைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

இன்று அப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் பகுதிகளில் பரிசோதனைகளை அதிகாரிகள் நேரில் சென்று மேற்கொண்டு வருகின்றார்கள்.

அப்பகுதி மக்கள் போதியளவில் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து சுகாதாரப்பரிசோதகர்களும் தனியாக பரிசோதனைகளை மேற்கொண்டு நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கடந்த இரு வாரங்களில் குறித்த பகுதிகளில் 10ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் தொற்றுக்குட்பட்டுள்ளமை பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தபால் திணைக்கள ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்!!

 

வவுனியாவில் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை முன்வைத்து இன்று (22.06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட அஞ்சல் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் பங்குகொண்டிருந்தனர்.

பன்னிரெண்டு வருடங்களாக அஞ்சல் ஊழியர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

வவுனியா பிரதான தபால் நிலையத்தின் முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணியானது மணிக்கூட்டு கோபுரத்தின் வழியாக பழைய பேரூந்து நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் கண்டிவீதி வழியாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களால் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. தபால் திணைக்களத்தின் ஊழியர்களால் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

வவுனியாவில் மொட்டையடித்த விவகாரம் : சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழையத் தடை!!

வவுனியாவில் பல்கலைக்கழக கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வாங்க இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் வவுனியா வளாகத்திற்குள் நுழைய இன்று (22.06) தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கனிஸ்ட மாணவர்கள் 25 பேர் ‘பகிடி வதை’ காரணமாக சிரேஸ்ட மாணவர்களின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைதினம் (21.06) மொட்டையடித்துக் கொண்ட விவகாரத்தின் எதிரொலியாகவே பல்கலைக்கழத்தின் வளாகத்திற்குள் நுழைய சிரேஸ்ட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும்வரை இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பல்கலைக்கழகத்தின் தலைமையால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

க்ரில் சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள் : உங்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!

ஹோட்டல்களில் சமைக்கப்படும் க்ரில் சிக்கன் எனும் மாமிச உணவை உண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு என்ற நிலையில், அதனை சமைக்கும் போது வெளியாகும் புகையை நுகர்ந்தாலே புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

க்ரில் சிக்கன் என்பது கோழி இறைச்சியை கம்பிகளில் வைத்து தீயினால் வாட்டி சமைக்கப்படும் ஒரு உணவாகும். இதனை சமைக்கும்போது பாலிசைக்கிளக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் எனும் வாயு வெளியாகும்.

இந்த வாயுவானது நமது சருமத்தில் ஊடுருவும் தன்மை கொண்டது. இது நமது உடலில் நுழைந்தா புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தும். க்ரில் உணவை சமைக்கும் போது அதன் அருகில் நின்றாலே இந்த வாயு நம் உடலில் உட்புகும்.

இறைச்சியை க்ரில்லில் வைத்து சூடுபடுத்தும் போது, அதிலுள்ள கொழுப்புகள் மற்றும் சாறு எரிந்து பாலிசைக்கிளக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பனை(PAH) உண்டாக்கும்.

இந்த நச்சுப்புகையானது, நாம் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அந்த உணவில் எளிதில் கலந்துவிடும். இந்த புகை பொதுவாக மரக்கட்டை, கரி, புகையிலை, எண்ணெய் போன்றவற்றை எரிக்கும் பொது வெளிவரும்.

இதனை சுவாசிப்பது புகையிலையை உபயோகிப்பதற்கு சமம். இந்த PAH வாயு, நேரடியாக சுவாசிக்கும் போது உட்புகுவதை விட, சருமத்தின் வழியாகவே விரைவாக ஊடுருவும் தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் சில வகை ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தான் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீர்வு

க்ரில் சிக்கன் சாப்பிட நினைப்பவர்கள், தங்களை முழுவதுமாக மூடி மறைக்கும் படியான உடையை அணிந்து கொண்டு க்ரில் சிக்கனை சமைக்க வேண்டும்.

சமைத்த பின்னர், அந்த உடையை நன்றாக துவைத்த பிறகே மறுமுறை பயன்படுத்த வேண்டும்.
அதிகப்படியான புகை வெளியேறுவதை சமைக்கும் போது தடுக்க வேண்டும்.

க்ரில்லில் இறைச்சியை சமைக்கும் போது மெல்லிய சாஸை ஊற்றி சமைத்தால், அதிகப்படியான PAH வெளியேறாது.

க்ரில்லில் சமைப்பதற்கு முன்பு மைக்ரோவேவ் ஓவனில் வைத்து லேசாக சமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், இறைச்சியில் உள்ள சாறு எரிந்து நச்சுப் புகை வெளியேறாமல் இருக்கும்.

போட்டோவிற்கு நின்று போஸ் கொடுத்த weasels ஜோடி : வைரலாகும் புகைப்படம்!!

பிரித்தானியாவில் குட்டி weasels ஜோடிகள் ஒன்று சாலையை கடக்கும்பொழுது, மெதுவாக நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த Carrie Urquhart(19), Brian Denoon (52) என்ற இருவரும் Lochbroom Woodfuels Ltd என்ற நிறுவனத்திலிருந்து வீடுகளுக்கு விறகுகளை வழங்கும் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல இருவரும் பணிக்கு செல்லும்பொழுது Achiltibuie என்னும் கிராமத்தின் அருகே, அதிகாலை நேரத்தில் எலிகளை தின்று வாழும் மரநாய் வகையை சேர்ந்த 2 குட்டி weasels ஜோடிகள் சாலையை கடக்க முயன்றுள்ளன.

இதனை பார்த்த Brian உடனடியாக காரை நிறுத்த, பயந்துபோன 1 weasels ஜோடி சத்தமிட்டுக்கொண்டே அருகாமையில் இருந்து பேருந்து ஓரத்தில் ஒதுங்கின.

அதேசமயம் மற்ற ஒரு weasels ஜோடி Carrie கையில் காமிராவுடன் வருவதை பார்த்துவிட்டு நின்று மெதுவாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளன.

இந்த புகைப்படத்தினை Carrie தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதிலிருந்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பின்னர் இதுகுறித்து Carrie கூறுகையில், “எனக்கு உயிரினங்கள் என்றால் பிடிக்கும். அதிலும் அவற்றிற்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். நான் புகைப்படம் எடுத்த பின்னர் காணாமல் போன ஒரு ஜோடியை தேடி மற்ற ஜோடி சத்தமிட ஆரம்பித்தது. உடனே அவற்றை என்னுடைய கைகளில் எடுத்து அந்த ஜோடியோடு சேர்த்து பத்திரமாக அனுப்பி வைத்தேன் என தெரிவித்தார். மேலும், அவற்றை நான் எனது கையில் வைத்திருக்கும்பொழுது அவை ஒரு நீளமான பேனாவை போல மிகவும் அழகாக இருந்தது ”எனவும் வர்ணித்து கூறியுள்ளார்.

உலகிலேயே திருட்டு நடக்காத அதிசய கிராமம்!!

ருமேனியா நாட்டில் உள்ள ‘எபின்தல்’ எனும் கிராமம், உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக திகழ்கிறது.

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ‘எபின்தல்’ எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300 பேர் வசிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு என காவல் நிலையம் இங்கு கிடையாது.

ஏனெனில், இங்கு குற்றங்களே பெரும்பாலும் நடைபெறுவதில்லை என்றும், திருட்டு என்றால் இங்குள்ளவர்களுக்கு என்னவென்றே தெரியாது என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த கிராமம், உலகிலேயே திருட்டு நடைபெறாத கிராமமாக திகழ்வதாக தெரிய வந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும், பணமும் வைக்கப்படுகின்றன.

இந்த கிராமத்திற்கு ரொட்டி கொண்டு வருபவர், பையில் உள்ள குறிப்பைப் படித்து விட்டு, தேவையான ரொட்டிகளை வைத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொள்கிறார். மீதி பணத்தை அந்த பையிலேயே போட்டுவிடுகிறார்.

வீட்டின் உரிமையாளர் வீடு திரும்பும்போது ரொட்டிகளை எடுத்துக் கொள்வார். இது வழக்கமாக இந்த கிராமத்தில் நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, 75 வயது கிராமவாசி ஒருவர் கூறுகையில்,

‘1989ஆம் ஆண்டு எங்கள் கிராமத்தில் இருந்த ரொட்டிக்கடை மூடப்பட்டது. அதனால் நாங்கள் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் நகரத்துக்குச் சென்றுதான் ரொட்டி வாங்கிக் கொண்டிருந்தோம். 1996ஆம் ஆண்டு நகரிலிருந்து ரொட்டிகளை வரவழைக்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

அன்று முதல் பையில் பணத்தையும், குறிப்பையும் போட்டு வாசலில் வைத்துவிடுவோம். ரொட்டிக் கடைக்காரர் தேவையான ரொட்டிகளை வைத்துவிடுவார். கடந்த 22 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருக்கிறது. இதுவரை ரொட்டியோ, பணமோ திருடு போனதே இல்லை.

இங்கு வசிக்கும் மக்களிடத்தில் பொருளாதாரத்தில் வேறுபாடு இருந்தாலும், நற்பண்புகளில் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். எல்லோரும் உழைக்கிறோம். அவரவர் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைப் பெறுகிறோம். நிம்மதியாக வாழ்கிறோம்.

அனுமதியின்றி இன்னொருவரது வீட்டிற்கோ, விளைநிலத்திற்கோ யாரும் செல்ல மாட்டார்கள். சொந்தம் இல்லாத ஒரு பொருள் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், அதனை யாரும் எடுக்க மாட்டார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உயர்ந்த கலாச்சாரம் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இங்குள்ள வாக்லாவ் மாசெக் எனும் பாதிரியார் கூறுகையில், ‘நான் இந்த கிராமத்துக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. கார் நிறுத்தும் இடத்தில் ஏராளமான பொருட்களை போட்டு வைத்திருக்கிறேன். கதவு இல்லை என்றாலும், இதுவரை எதுவும் திருடு போனதில்லை.

யாருக்காவது உதவி தேவைப்பட்டால் தாமாக முன் வந்து உதவும் மிக நாகரிகமான மக்கள் இங்கே இருக்கிறார்கள். இவர்களுடன் வசிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கிராமம் குறித்து ஊடகங்கள் அதிசயமாக செய்தி வெளியிடுவது குறித்து எந்த பெருமையும் இல்லை என்றும், பண்புடனும், பாதுகாப்புடனும் தாங்கள் வாழ்வதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.