மாத்தறையில் பதற்றம் : சரமாரி துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

 மாத்தறை நகர மத்தியில் அமைந்துள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் காயமடைந்த மூன்று பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் கொள்ளையிட 6 பேர் கொண்ட குழு வந்துள்ளது. இதில் இரண்டு பேர் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அருகில் மற்றுமொரு நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் கொள்ளையர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இரண்டு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்துள்ளது.

கொள்ளையில் ஈடுபட வந்த சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த மூன்று பொலிஸார் மற்றும் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கொள்ளையர்கள் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இயந்திர துப்பாக்கி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

செல்பி எடுத்த நான்கு இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை!!

திருகோணமலை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான வனப்பாதுகாப்பு பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்து “செல்பி” எடுத்த நான்கு பேரையும் ஒரு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான லைட் பார் என்ற இடத்திற்கு நான்கு பேர் சென்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் துறைமுக அதிகார சபை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளர்.

இதனையடுத்து நேற்று நான்கு பேரையும் திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில்ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவித்தவர்கள் சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 15,17,19 வயதுடையவர்கள் எனவும் துறைமுக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் ரீதியான பகிடிவதை!!

லபுதுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் விவசாய பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் புதிய மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பகிடிவதை கொடுத்ததாக கூறப்படும் 4 மாணவிகளையும் ஒரு மாணவரையும் கைதுசெய்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய மாணவிகளுக்கு பாலியல் ரீதியான பகிடிவதை கொடுக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த மாணவிகளே பாலியல் ரீதியான பகிடிவதை உள்ளாக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவிகளும், மாணவரும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

புகையிரத்தில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு!!

ரயிலில் யாசகத்தில் ஈடுபட்டு கொண்டே ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினர் இவரை கைது செய்துள்ளனர்.

தெமட்டகொடயிலிருந்து ரயிலில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கம்பஹா பொலிஸிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து 13 ஹெரோயின் பக்கட்களுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். இப்பக்கற்றுக்கள் ஒவ்வொன்றும் ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறித்த பெண் தனது ஆடையில் மறைத்து வைத்து இவற்றை விற்பனை செய்துள்ளார்.

இந்த ஹெரோயின் பக்கற்றுக்கள் கிராம பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்தது. 49 வயதான குறித்த பெண் வத்துரகட தெமட்டலந்த பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் குறித்து ஆனந்த சங்கரியிடம் எடுத்துரைப்பு!!

தமிழர் விடுதலைக் கூட்டணியால் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் இருப்பையும், இன ரீதியான நில விகிதாசார பரம்பலையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்புகள் அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியிடம் சுட்டிகாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரசபையில் தென்னிலங்கை கட்சிகளின் ஆதரவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது.

தற்போது நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் பின்புலத்தில் தென்னிலங்கை கட்சிகளின் நிகழ்ச்சி நிரலே உள்ளது.

தென்னிலங்கை கட்சிகளுக்கும், வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதர இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைக்க வேண்டிய கட்டாய நிலையில் வவுனியா நகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளது.

அவ்வாறு ஒத்துழைப்பதன் மூலமே அவர்களது ஆட்சியை தக்க வைக்க முடியும். இந்த நிலையில் வவுனியா நகரசபையின் உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக நகரசபைக் காணியில் எந்தவித அனுமதிகளும் பெறாது மூன்று மாடிகளைக் கொண்ட வர்த்தக நிலையம் ஒன்று கட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான விவாதம் வவுனியா நகரசபையில் நேற்று இடம்பெற்ற நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தை அடாத்தாக கட்டி நகரசபைக்கு எதிராக செயற்பட்டவருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்க தமிழர் விடுதலைக் கூட்டணி தென்னிலங்கை பிரதான கட்சிகளுடன் இணைந்து உடன்பட்டது.

நீண்டகால தூர நோக்கின் அடிப்படையில் இச் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன செயற்பட்டிருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன் குறித்த வியாபார நிலையம் சட்டவிரோதமாக செயற்பட்டவருக்கு வழங்கிய சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும்.

இது எதிர்காலத்தில் வவுனியா நகரில் நகரசபையின் காணிகளை கையகப்படுத்தி வர்த்தக நிலையங்களை அமைத்துள்ளவர்களுக்கு வாய்ப்பானதாகவும், மேலும் பல கடைகளையும் வேறு இனத்தவருக்கு வழங்க வேண்டிய சூழலையும், முன்மாதிரியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் வவுனியா நகரசபைக்கு நகரில் அவர்களது அலுவலகம் அமைந்துள்ள கட்டடத் தொகுதியை தவிர வேறு காணிகள் இல்லாத நிலையை உருவாக்கும் என்பதுடன் இன ரீதியான நிலப்பரம்பல் விகிதாசாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்து விடும்.

தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தென்னிலங்கை கட்சிகளின் இத்தகைய நிலைப்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் தாக்கள் கவனம் செலுத்தி தமிழினத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

வெள்ளவத்தையில் நடந்த கோர சம்பவம்!!

வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

பம்பலப்பிட்டி சென் பீற்றர் கல்லூரிக்கு அருகிலுள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு பயணித்த கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.

பாலத்துக்கு துணையாக அமைக்கப்பட்ட இரும்பு சட்டகத்தில் கார் பயணித்துள்ளதுடன், அருகிலிருந்த தூணில் மோதியுள்ளது.

இன்று அதிகாலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்தவர்கள் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளானவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். வீதிகளில் தென்படும் பேய், பூதம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

பேய், பூதம் தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என யாழ். ஊடகங்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இரவில் அமானுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அவை வீதிகளில் ஆங்காங்கே தென்படுவதாகவும் யாழ். ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு கையில் இரத்தம் வழியும் கறுப்பு சேவல் ஒன்றை தாங்கியவாறு வெள்ளை உடையணிந்த பெரிய உருவமொன்று உலவுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரண மனிதர்களை விடவும் இந்த பேய் உயரமானது எனவும், கடந்த காலங்களில் வீடுகளில் தென்பட்ட பூதம் தற்போது வீதிகளிலும் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமானுஸ்ய சக்தி தொடர்பில் செய்தி வெளியிட்ட யாழ்ப்பாண ஊடகங்களிடம் மாகாண சுகாதார அதிகாரிகள், இவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கோரியுள்ளனர்.

அத்துடன், பேய்கள் மற்றும் பூதங்கள் என்று எதுவும் கிடையாது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் யாழில் உலவி வரும் பேய் பூதம் தொடர்பிலான புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்த நிலையில் யாழ். ஊடகங்கள் மீது சுகாதார அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகிப்பதனை நிறுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா விக்ஸ்காட்டுப் பகுதியில் காணி தொடர்பில் குழப்பம்!!

வவுனியா இராசேந்திரன்குளம் விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று அரை ஏக்கர் அடிப்படையில் நாற்பத்தேழு காணித்துண்டுகள் பிரிக்கும் நடவடிக்கையினை கிராமசேவையாளர் மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது இவ் செயற்பாட்டினை செய்வதற்கு அப்பிரதேச வாழ் மக்களால் தடையேற்பட்டது. இவ்விடயம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா விக்ஸ் காட்டுப் பகுதியில் காடுகளை அழித்து பல குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் இப்பகுதி காட்டுப்பிரதேசம் என கோரி வனவள திணைக்களத்தினரால் இங்கு வாழ்ந்த மக்களை அகற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த நிலையில் இப்பகுதி வாழ் மக்களினால் மாவட்டச்செயலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்களிற்கிணங்க பிரதேச செயலாளரினால் இவர்களிற்கான காணியினை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் இப்போராட்டம் கைவிடப்பட்டிருந்து.

இந்நிலையில் இன்று வவுனியா பிரதேச செயலாளரினால் இவ் விக்ஸ் காட்டு கிராமத்தினை அரை ஏக்கர் வீதம் நாற்பத்தேழு துண்டுகளாக பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது இப்பிரதேச மக்களினால் இவ் விக்ஸ் காட்டு காணினை வேறு கிராம மக்களிற்கு வழங்குவதாக கூறி இப்பகுதியினை நில அளவை செய்வதற்கு தடையினை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் அதிகாரி மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர் ஆகியோர் அவ்விடம் சென்று இது தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் இப்பிரச்சனைக்கு தீர்வு கானணும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக கிராம சேவையாளரால் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேச செயலாளரினால் அரை ஏக்கர் வீதம் நாற்பத்தேழு காணித்துண்டுகளை மட்டும் நில அளவையினை செய்யப்படுமே தவிர இக்காணியினை யாருக்கு பிரித்து வழங்குவது என்பது தொடர்பில் தாம் தற்போது ஈடுபடவில்லை என கிராம சேவையாளரின் ஊடாக தெரிவித்ததனால் நில அளவை செய்யும் செயற்பாட்டிற்கு மக்கள் தடை ஏற்படுத்தாமல் கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விரட்டியடிக்கப்பட்ட பிரபல நடிகை!!

இலங்கையின் பிரபல நடிகையான உதாரி பெரேரா அழகு கலை நிலையத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாவலப்பிட்டியில் உள்ள அழகு கலை நிலையத்திற்கு இன்று காலை குறித்த நடிகை சென்றுள்ளார்.

அழகு கலை நிலையத்தில் இருந்த பெண்ணுக்கு, குறித்த நடிகையை நீண்ட காலம் தெரியும் என்பதனால், அவரது வேலைகளை வேகமாக செய்து கொடுத்துள்ளார்.

திடீரென அழகு கலை நிலையத்தில் இருந்த பெண்ணுக்கும் நடிகைக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலையத்தில் சேவை செய்யும் ஊழியர்கள் இந்த வாய்த்தகராறினை நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.

வாய்த்தகராறு நீடித்தமையினால் குறித்த நடிகையின் கழுத்தை பிடித்து வெளியே விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய புலி அடித்துக் கொலை!!

 

கிளிநொச்சி – அம்பாள்குளம் கிராமத்தில் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலியை பொது மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க சென்ற இருவரை முதலில் தாக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு புலியை பிடிப்பதற்கான ஆயத்தமின்றி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர். இதற்கு இடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியுள்ளது.

பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியுள்ளது.

இதன் பின்னர் கிராம பொது மக்கள் பொல்லுகளுடன், சென்று சுற்றி வளைத்து தேடிய போது பற்றைக்குள் இருந்து வெளியேறிய சிறுத்தை அங்கிருந்த ஒருவரை தாக்க முற்பட்டுள்ளது.

இதன்போது மக்கள் பொல்லுகளைக் கொண்டு தாக்கி சிறுத்தையை கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, தற்போது சிறுத்தை தாக்கிய அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார், கிராம அலுவலர் உட்பட பலர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

சர்வதேச யோகா தினம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மைதானத்தில் கல்லூரியின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் இன்று (21.06) நடைபெற்றது.

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தூதரகத்தின் அதிகாரி எஸ்.நிரஞ்சன் கலந்துகொண்டிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை போட்டு மேளதாளங்கள் முழங்க அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இந்திய துணைத்தூதரகத்தின் யோகா பயிற்றுவிப்பாளர்களான இ.தேவராஜா, செல்வி உ.கிந்துஜா, திருமதி எஸ்.அனுஸ்டா ஆகியோர் மாணவிகளுக்கு யோகா பயிற்சினை வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன், கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜா, உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபையில் சட்டவிரோத கடை விவகாரத்தில் கடும் விவாதம்!!

வவுனியா நகரசபையின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புதிய கடை ஒன்று தொடர்பில் ஏற்பட்ட விவாதம் கடும் தர்க்கங்களுடன் வாக்கெடுப்பு வரை சென்றது.

வவுனியா நகரசபையின் மூன்றாவது அமர்வு இன்று நகரசபை மண்டபத்தில் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த கடை நகரசபையின் காணியில் நகரசபையின் உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு, வவுனியா நகரசபை செயலாளரால் பூட்டப்பட்ட நிலையில் அக் கடை திறக்கப்பட்டமை பற்றி உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து குறித்த விவகாரம் சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதன்போது குறித்த கடை நகரசபையின் அனுமதியை மீறி நகரசபை செயலாளரால் அனுப்பப்பட்ட மற்றும் ஒட்டப்பட்ட கடிதங்களை அவமதித்து கட்டப்பட்ட நிலையில் தம்மால் கட்டட வேலைகள் தடை செய்யப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக நகரசபை செயலாளர் இ.தயாபரன் சபையில் தெரிவித்திருந்தார்.

இதன்போது நகரசபை உறுப்பினர் ரி. கே.இராஜலிங்கம் குறித்த கடை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பாக தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நகரசபை தலைவர் மற்றும் செயலாளரிடம் கேட்ட கேள்விகளை சபையில் வாசித்ததுடன் அதற்கான பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த விடயம் சபையில் கடும் விவாதத்தை உண்டு பண்ணியது.

நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி, லரீப், பாயிஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து குறித்த கடையினை வவுனியா நகரசபை குறித்த வியாபார நிலையத்தை நடத்தியவருக்கே நீண்டகால குத்தைகைக்கு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன், நகரசபை அக்கட்டிடத்தை கட்டும் போது என்ன செய்தது என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனை எதிர்த்த நகரசபை உறுப்பினர் சி.காண்டீபன் குறித்த கடை நகரசபைக்கு சவால் விடுக்கும் வகையில் சட்டவிரோதமாக மூன்று மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்க முடியாது. குறித்த கடை அமைந்துள்ள நிலம் நகரசபைக்கு சொந்தமானது. கட்டடம் கட்டும் போது நகரசபை செயலாளர் தடுத்த போதும் அதையும் மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது ஒரு தவறான முன்னூதாரணமாக அமையக் கூடாது.

தூய அபிவிருத்தியை நோக்கி நாம் செல்ல வேண்டுமானால் இந்த சபையின் காலத்தில் தவறு நடக்கக் கூடாது. இதனால் குறித்த கடையினை நகரசபை பொறுப்பெடுத்து பங்கிரங்க கேள்வி மனுக் கோரலில் விட வேண்டும் என கோரினார்.

அவ்வப்போது உறுப்பினர் காண்டீபனுக்கு ஆதரவாக உறுப்பினர்களான சேனாதிராஜா, பரதலிங்கம், இராஜலிங்கம், சந்திரகுலசிங்கம், சுமந்திரன் மற்றும் மதியழகன் ஆகியோர் கருத்து வெளியிட்டு இருந்தாலும் தனி ஒரு மனிதனாக சபையில் லரீப், அப்துல்பாரி மற்றும் பாயிஸ் ஆகிய உறுப்பினர்களுடன் உறுப்பினர் காண்டீபன் இது தொடர்பில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் போது குறித்த கடையை நகரசபை கையகப்படுத்தி பகிரங்க கேள்வி மனுவுக்கு விட வேண்டும் என நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் கடுமையாக குரல்கொடுத்ததுடன் தனி ஒருவர் நகரசபைக்கு சவால் விடுத்துள்ளார். அதற்கு நாம் இசைந்து கொடுக்க முடியாது.

மக்களுக்கு சேவை செய்யும் நாம் இவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுபவர்களுக்க ஆதரவாக கருணை காட்டிக் கொண்டிருக்க இது ஒன்றும் கருணை காட்டும் சபையல்ல என தெரிவித்தார்.

இதனை எதிர்த்த உறுப்பினர் பாயிஸ் வவுனியாவில் பல கடைகள் இவ்வாறு உள்ளதாகவும், ராணி மில் வரை உள்ள கடைகள் இவ்வாறு அமைக்கப்பட்டதாகவும் அவற்றினையும் பகிரங்க கேள்வி கோரலுக்கு விடுமாறு கோரினார்.

இதனையடுத்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இது தொடர்பில் கடும் தர்க்கம் ஏற்பட்டதுடன் இறுதியில் சபை 5 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு உறுப்பினர்களும் எதிர் எதிர் கட்சி உறுப்பினர்களுடன் காதிற்குள் சென்று மந்திர ஆலோசனை நடத்தினர். இறுதியில் குறித்த விவகாரம் பகிரங்க வாக்கெடுப்புக்கு வந்தது.

இதன்போது வவுனியா நகரசபையின் காணியில் நகரசபையின் கட்டளையை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடத்தை குறித்த நபருக்கே நீண்ட கால குத்தகைக்கு வழங்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக நகரசபை தலைவர் உட்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி (ஈபிஆர்எல்எப்), ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 12 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, குறித்த கடையினை நகரசபை பொறுப்பேற்று பகிரங்க கேள்வி கோரலுக்கு விட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர்கள் 9 பேர் வாக்களித்து இருந்தனர்.

இந் நிலையில் அதிக வாக்கினை பெற்றதன் அடிப்படையில் நகரசபை குறித்த கடையை கையகப்படுத்தி சட்டவிரோதமாக நகரசபையின் கடடளையையும் உதாசீனம் செய்து கட்டிடம் கட்டியவருக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்குவதற்கான தீர்மானமாக அதனை எடுத்து உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சருக்கு மேலதிக முடிவுக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

-தமிழ்வின்-

மன்னாரில் மீனவரின் வலைக்குள் சிக்கிய மர்மப் பொருள் : அதிர்ச்சியில் மீனவர்கள்!!

மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் மர்மப்பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது.

மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரையில் இன்று வியாழன் (21) காலை மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த வலையில் மர்ம பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் மர்மப்பொருளை மீட்டு கடற்கரைக்கு கொண்டு சென்றார்.

இதன் போது பலர் அதனை பார்க்க ஒன்று கூடியனர். இதன் போது அந்தப் பொருளில் உள்ள மண்ணை அகற்றிய நிலையில் குறித்த மர்மப்பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது.

இப்பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததா?அல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையா? என்பது தொடர்பில் மீனவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் ராக்கிங் கொடுமைக்கு பயந்து மொட்டையடித்துக்கொண்ட 25 பல்கலைக்கழக மாணவர்கள்!!

யாழ் பல்கலைக்கழக வளாக மாணவர்களுக்கு வவுனியாவில் மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (21.06) இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழ வவுனியா வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் ராக்கிங் கொடுமை நிமித்தமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.

வவுனியா குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள முடி திருத்தும் நிலையம் ஒன்றிலேயே குறிப்பிட்ட 25 மாணவர்களும் மொட்டையடிக்க சென்றுள்ளனர்.

முடி திருத்தும் நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் குறித்த மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் கனிஸ்ட மாணவிகளின் முன்னால் அரை நிர்வாணமாக நிறுத்தி சிரேஸ்ட மாணவர்கள் அடிப்பார்கள் என தெரிவித்த நிலையில் குறித்த முடிதிருத்தும் நிலையத்தின் உரிமையாளர் மனிதாபிமான அடிப்படையில் 50 ரூபாவிற்கு மொட்டையடித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வவுனியா வளாகத்தின் சிரேஸ்ட மாணவர்கள் ‘ராக்கிங்’ என்ற பெயரில் மனித உரிமை மீறல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகம் வரும் கனிஸ்ட மாணவர்களை ‘ராக்கிங்’ என்ற பெயரில் துன்புறுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது போன்ற நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் மீது வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

வவுனியாவில் இளைஞன் சடலமாக மீட்பு!!

வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியிலிருந்து இன்று மாலை இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவனியா கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த அன்ரன் உதயகுமார் அனோஜன் 22 வயதுடைய இளைஞன் காலையில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் இன்று பிற்பகல் குறித்த இளைஞனைக்காணவில்லை என்று தேடியபோது வீட்டிற்குப்பின்புறமாக தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இளைஞனின் சடலம் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். இதேவேளை வவுனியா வேப்பங்குளம் பகுதியிலிருந்து நேற்று இளைஞன் ஒருவருடைய சடலமும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தை உலுக்கும் பேய்!!

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டுமொருமுறை அமானுஷ்ய பயத்தில் உறைந்து போயுள்ளார்கள்.

அங்குள்ள சில பிரதேசங்களில் மக்கள் மத்தியில் பேய்கள் தொடர்பான பயம் தோன்றியுள்ளது.பேயைக் கண்டதாகவும், அப்பேய் ஒரு கையில் இரத்தம் வடியும் கோழியை ஏந்தியுள்ளதைப் பார்த்ததாகவும் சிலர் கூறுகின்றார்கள்.

மிகவும் உயரமான, முகம் தெளிவற்ற, வெள்ளை ஆடையைப் போர்த்தியபடி பேய் உலாவுவதாக அவர்கள் கூறுகின்றார்கள். பேய் வெளியே வருவது அதிகாலை ஒரு மணி அளவிலாகும் என்கிறார்கள் அவர்கள்.

ஆவிகளின் தொல்லை இருப்பதால் இரவில் யார் பேசினாலும் கதவைத் திறக்காத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அவர்கள் இரவில் செல்லும் பயணங்களையும் குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தனக்கு நாகம் ஒன்றின் உதவி உள்ளதாக யாழ்ப்பாணத்தில் கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தில் பங்குபற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனக்கும் நாகத்துக்கும் பல வருடங்காக தொடர்புள்ளதாகக் கூறியுள்ளார்.தனது வாழ்க்கையின் மிக முக்கிய சந்தர்ப்பங்களில் நாகம் உதவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர் சொல்லாமல் சொல்வதென்னவென்றால் வட மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும் போது அந்த நாகம் உதவி செய்துள்ளதாக குறிப்பிடுகின்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதியாகவிருந்து, பிரபுத்துவ அரசியலின் மூலம் அறிவு பெற்ற, ஆராயும் புத்தியுடைய அமைச்சர் விக்னேஸ்வரனே தனக்கு முன்னால் நாகம் தோன்றுவதாகக் கூறும் போது சாதாரண யாழ்ப்பாண மக்களுக்கு கண்முன்னால் பேய் தோன்றுவது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல.

யாழ்ப்பாணத்தில் ஓரிடத்தில் பேயிருப்பதாக முதன் முதலில் தகவலை யாழ்ப்பாண சந்தைக்கு அதிகாலையில் கொண்டு வந்தவர் மானிப்பாயைச் சேர்ந்த சின்னையா கிரிதரன் ஆவார்.

“நான் இரவு வீட்டுக்கு வரும் போது பாதையில் வெள்ளைத்துணி போர்த்திய ஒருவரைக் கண்டேன். கையில் கறுப்புநிற பொதியொன்று இருந்தது.’யார்’ என்று கேட்ட போது ஒரேயடியாக அவர் காணாமல் போய் விட்டார். அது நிச்சயம் பேய்தான்” எனக் கூறினார் அவர்.

கதையைக் கேட்ட சந்தையிலிருந்த நண்பர்கள் சின்னையாவை கேலி செய்ததோடு எச்சரிக்கையும் செய்தார்கள். இந்தக் கதை பரவினால் ஆவிகளுக்குப் பயந்து போய் இந்த சந்தையின் வியாபாரமும் குறைந்து விடும். வாழ்க்கையை நடத்துவதிலும் சிரமம் ஏற்படும் என அவர்கள் கூறினார்கள்.

ஆகவே சின்னையாவின் இந்தக் கதையை யாருக்கும் கூறுவதில்லையென முடிவு செய்தார்கள். ஆனால் நான்கு நாட்கள் கூடச் செல்லவில்லை.மரக்கறி வாங்க வந்த ஒருவர் வியாபாரிகளுக்கு புதிய செய்தியொன்றைக் கூறினார்.

“தெரியுமா செய்தி? யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கிராமத்துக்கு நேற்று இரவு பேயொன்று வந்ததாக ஆட்களெல்லாம் பயந்து போய் இருக்கிறார்கள். அந்தப் பேயின் ஒரு கையில் கறுப்பு நிறக் கோழியொன்று உண்டென்றும் அந்தக் கோழி இரத்தம் வடிந்தபடி இருப்பதாகவும், அதனை பேய் அணைத்தபடி சென்றதாகவும் கூறுகின்றார்கள். முழு உடம்பையும் வெள்ளை ஆடையால் போர்த்தியபடி இருந்ததாம் அந்த உருவம்” என்று கூறினார் அவர்.

வியாபாரிகள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மரக்கறி வாங்க வந்தவர் சைக்கிளில் ஏறி சென்றவுடன் மீண்டும் கலந்துரையாடத் தொடங்கினார்கள்.“அதுதான் நானும் கூறினேன். நான் கூறியதை நீங்கள் நம்பவில்லை. நானும் அதையே தான் கண்டேன். நான் கறுப்பு நிற பார்சல் என்று கூறினேன். ஆனால் அது கறுப்பு நிற கோழிதான்” என்று சின்னையா திரும்பவும் கூறத் தொடங்கினார்.

சிறிது நாட்களிலேயே யாழ்ப்பாணம் முழுவதும் பேய்க்கதை பரவி விட்டது. தமிழ் இணையத்தளங்கள் பலவற்றிலும் இச்செய்தி வெளியானது.

அதேவேளையில் சுகாதார அதிகாரிகள் இணையத் தள ஆசிரியர்களை எச்சரித்தார்கள்.”கடந்த முறையும் நீங்கள்தான் ஆவி இருப்பதாகக் கூறி முழு யாழ்ப்பாணத்தையும் பயமுறுத்தினீர்கள். யாழ்ப்பாண மக்கள் இன்புளுவன்சா காய்ச்சல் காரணமாகத்தான் இறந்தார்கள். தற்போது காலியிலும் அந்த நோய் காரணமாகத்தான் நோயாளிகள் இறக்கின்றார்கள். அதனால் தயவு செய்து இந்த வேலையை நிறுத்துங்கள்.

இனிமேல் யாழ்ப்பாணத்தில் பேய் உலாவுவதாக எழுத வேண்டாம்”.யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் இணையத் தள ஆசிரியர்களுக்கு விடுத்த வேண்டுகோள் சில இணையத் தளங்களில் வெளிவந்தாலும், “யாழ்ப்பாணத்தில் பேய்கள் இல்லை. அது பொய்” என எந்தவோரு இணையத்தளமும் பதிவிடவில்லை.

அடுத்த நாள் அவர்கள் பணிபுரிய வந்த போது சிலர் அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்கள் சும்மா வரவில்லை. பேயின் படங்கள் இரண்டையும் கொண்டு வந்திருந்தார்கள்.

“நேற்று கமெராவில் பேயின் படம் பிடிபட்டுள்ளது” என்று கூறியபடி கராஜ் உரிமையாளரொருவர் பேயின் புகைப்படத்தை முதன் முதலாக காட்டினார்.

“நேற்று அதிகாலை சில அமானுஷ்யமான சத்தங்கள் கராஜிலிருந்து கேட்டன. நாம் காலையில் அங்கு சென்று பார்த்த போது வித்தியாசமாகத் தெரிந்ததால் சீ.சீ.ரி.வி கமெராவை பரிசோதித்த போது மங்கலாக இப்படங்கள் தெரிந்தன” என்று அவர் கூறினார்.

பேயோ ஆவியோ புகைப்படங்களில் அகப்படாது என்பது பேய்களை நம்புவோரின் கருத்தாகும். ஆனால் யாழ்ப்பாணப் பேய் சீ.சீ.ரி. வி காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.

கராஜ் உரிமையாளருக்குக் கிடைத்த யாழ்ப்பாணப் பேயின் புகைப்படத்தை யாழ்ப்பாணத்திலுள்ள இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகைகள் முன்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தன.

அதேவேளை பேயை ஏற்கனவே பார்த்தவர்களும் “இந்தப் பேயைத்தான் நாங்களும் கண்டோம்” என உறுதி செய்தார்கள்.

தற்போது யாழ்ப்பாணத்தில் பேயைக் கண்டவர்கள் பேயைப் பற்றிக் கதைக்கிறார்கள். ஆனால் பேயைப் பற்றி எதுவித முறைப்பாடும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர்களும் அது பற்றி ஆராய முயற்சி செய்யவில்லை.

அதற்குக் காரணம் இந்தப் பேய் யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யவில்லை. வேண்டுமேன்றே யாரையும் பயமுறுத்தவும் இல்லை. அதைத் தவிர பேயை தேடுவதை விட யாழ்ப்பாணத்திலுள்ள ஆயுதங்களைப் பொலிஸார் தேட வேண்டியுள்ளது.

யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகளின் கருத்துப்படி உலகில் பேயென்று ஒன்றுமில்லை. இவ்வாறு நடிப்பது மாறு வேடமணிந்த மனிதன் என்றால் வெகுவிரைவில் யாழ்ப்பாண மக்களிடம் அகப்பட்டு, வயிறு புடைக்க சாப்பிட்டு ஏதோவொரு சந்தியில் கிடப்பதைக் காணலாம்.

இந்தப் பேய்க் கதையின் பின்னணியில் உள்ள நாடகம் என்னவென்று வெளிவரும் வரை மக்களின் பயம் போகாது.அவர்கள் வழமை போல் இரவில் பயணங்கள் செல்ல மாட்டார்கள். யாழ்ப்பாணப் பேயின் விபரங்கள் வெளிவரும் வரை பொறுமையுடன் காத்திருப்போம்.

-தமிழ்வின்-