ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 3 லொறிகள் : மூன்று பேர் பலியான கோர சம்பவம்!!

தமிழகத்தில் ஒரே இடத்தில் மூன்று லொறிகள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தருமபுரியில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லொறி ஒன்று, கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரைக்குடியில் இருந்து அரிசி ஏற்றிக் கொண்டு வந்த லொறி ஒன்றுடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

அதே நேரத்தில், அரிசி லொறியின் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு லொறியும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் சாதிக், கலையரசன் மற்றும் கிளீனர் என மூன்று பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஜே.சி.பி இயந்திரத்திரன் உதவியுடன் லொறிகள் உடைக்கப்பட்டு 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

பின்னர், பிரேத பரிசோதனைகாக அவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த கோர விபத்தினால் அரிசி மூட்டைகளும், செங்கற்களும் சாலையில் சிதறிக் கிடந்தன. இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூக்கொடியில் காய்த்த மாங்காய் : இலங்கையில் ஓர் அதிசயம்!!

தவுலகல – ஹியாராபிட்டிய ஹங்தேஸ்ஸ இடத்தில் வசித்து வரும் முன்னாள் கல்விப் பணிப்பாளரான அனில் எதிரிசிங்க தமது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பறித்த போது, அருகில் இருந்த பூக்கொடியில் மாங்காய் காய்த்துள்ளதை கண்டுள்ளார்.

மா மரத்திற்கு அருகில் இந்த பூங்கொடி வளர்ந்து வருகிறது. பூக்கொடியின் கொடி ஒன்றில் இந்த மாங்காய் காய்த்துள்ளது.

பூக்கொடியில் காய்திருக்கும் இந்த மாங்காயை காண பலர் வந்து செல்வதாகவும், மா மரத்தின் கிளை ஒன்றை பூச் செடியுடன் இணைக்க உள்ளதாகவும், காய்த்துள்ள காயை பறிக்க விரும்பவில்லை எனவும் அனில் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமல்போன இரு மீனவர்கள் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்பு!!

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் இன்று மதியம் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை தலைமன்னார் மேற்கு கிராமத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இருவரும் கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

ஆனால் கடலுக்குச் சென்ற குறித்த இரு மீனவர்களும் குறித்த நேரத்திற்கு கரை திரும்பாத காரணத்தினால் தலைமன்னார் மேற்கு மீனவ சமூகம் கடலில் தேடுதலை மேற்கொண்டனர்.

ஆனாலும் குறித்த மீனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சகோதரர்களான குறித்த இரு மீனவர்களும் 5 நாட்களின் பின் இன்று மதியம் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

67 வருடங்களாக அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு : இலங்கையில் நடந்த கொடுமை!!

கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.

ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார்.

மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த வயோதிப பெண்ணை மீட்க பொலிஸார் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடைக்கப்பட்ட பெண் திருமணமாகாத 75 வயதான முத்துமெனிக்கே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெற்றோரிடம் இருந்து பிரித்து 7 வயதில் மாவனெல்ல பிரதேத்திற்கு அழைத்து வந்த போதிலும் அவருக்கு கல்வி கற்க அனுமதிக்காமல் வீட்டு வேலை செய்ய விடப்பட்டுள்ளார். திருமணமும் செய்து வைக்காமல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு வசதியும் அவருக்கு வழங்கப்படவில்லை.

அறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த போதிலும், அவரால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய தயாராகும் அரசாங்கம்!!

அரசாங்கம் சமூக வலைத்தள ஊடகங்களை தடை செய்ய சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான ஊடகங்களுக்கு இருக்கும் வரையறை காரணமாக வெளியிட முடியாத தற்போதைய அரசாங்கத்தின் பலவீனங்கள் சமூக வலைத்தள ஊடகங்களில் வெளியாகி வருவதால், சமூக வலைத்தள ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பிரச்சினையாக மாறியுள்ளன.

இதன் காரணமாக எதிர்காலத்தில் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு வரையறை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது சம்பந்தமாக அரசாங்கம் சட்ட நிலைமை ஆராய்ந்து வருவதாகவும் டளஸ் அழகபெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்

வறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி : கண்ணீருடன் தந்தை!!

நாம் பணிபுரியும் இடம்மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் தன்னிடம் கூறியதாக, அவருடன் பணிபுரிந்த சத்தியரூபன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷன் கடந்த எட்டாம் திகதி உயிரிழந்தார்.

தாமரை கோபுரத்தின் மின்தூக்கியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனது மகனின் இழப்பு தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறுகையில்,

எனக்கு நான்கு பிள்கைள் உள்ளனர். நாம் வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் மூத்தவரான உயிரிழந்த மகன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார்.

அவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார். இந்த நிலையில் பாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து வேலை செய்திருக்கிறார்.

கடந்த ஏழாம் திகதி தான் அவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார்.

நான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வருமாறு கூறினேன். அவரும் வெள்ளிக்கிழமை வருவதாக கூறினாரென கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிடுகையில், எனது நண்பனான கோணேஸ்வரன் நிதர்ஷன் உட்பட ஐவர் தொழிலுக்காக கொழும்பிற்கு வந்தோம்.

இதன்போது நாம் பணிபுரியும் இடம் மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கடந்த எட்டாம் திகதி நாம் கடமைக்கு சென்றோம்.

நாம் தனித்தனி இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டோம். அவர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை.

வேலை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு குறுஞ் செய்தியொன்று வந்தது. அதில் கோணேஸ்வரன் நிதர்ஷன் விழுந்து விட்டதாக இன்னுமொரு நண்பர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கோணேஸ்வரன் நிதர்ஷனின் தொலைபேசிக்கு நான் அழைப்பினை ஏற்படுத்திய போதும் அது செயலிழந்திருந்தது.

அவர் விழுந்திருந்த இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர் : வரலாற்றில் இடம்பிடித்த இளைஞன்!!

இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார். அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள பிரதீப் என்ற இளைஞன், பாடசாலைக்கான மைதான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.

திருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர்.

அஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதற்கமைய இருவரும் இணைந்து திருமண தினத்தன்று இந்த அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.

திருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் இலங்கையராக அவர் வரலாற்றில் இடம்பிடி்த்துள்ளார்.

தற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஒரு முன்னூதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஏற்பட்ட நிலை!!

இலங்கைக்கு வந்த போது தனக்கு நேர்ந்த அவமானம் தொடர்பில் தற்பொழுது நடிகர் அரவிந்த் சாமி மனம் திறந்துள்ளார்.

தான் கொழும்பிற்கு குடும்பத்துடன் சுற்றலா வந்த போது, ரசிகர் ஒருவர் தனது எடையை பார்த்து கிண்டலாகப் பேசியதால் குடும்பத்தின் முன் தான் அவமானப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமி சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்ததில் உடல் எடை கூடியதுடன், தொப்பையும் அவருக்கு போட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் அவர் தனது குடும்பத்துடன் கொழும்புக்குச் சுற்றுலா வந்திருந்த போது உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது, அரவிந்த்சாமி மகளிடம் நபரொருவர் “உங்கள் அப்பாவை கொஞ்சமாகச் சாப்பிட சொல்லு” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவத்தால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லாத போதும் என்னுடைய மகள் சிறியவள். அவள் என்ன நினைத்திருப்பாள் என்பதே எனக்கு வருத்தத்தையளித்தது.

அந்த சம்பவத்தை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை என்று வருத்ததுடன் கூறியுள்ளார் அரவிந்த்சாமி.

யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு!!

யாழ் குடாநாட்டில் இருவேறு பகுதிகளில் இரு சடங்கள் மீட்கப்பட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும், அவை உருங்குலைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் இதுவரை அடையாளங்காணபடவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா அந்தோனியார் ஆலய திருவிழாவில் ஐந்து பேரின் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பு!!

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் ஐந்து பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை திருடிய பெண் ஒருவர் ஆலயத்திலிருந்தவர்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (13.06) இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்கு திருவிழாவிற்கு வந்திருந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை நூதன முறையில் திருடிய பெண் ஒருவரை கையுமெய்யுமாக பிடித்த பக்தர்கள் குறித்த பெண்ணை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவிழாவில் தங்கச்சங்கிலிகளை பறிகொடுத்த ஐந்து பெண்கள் பொலிஸ்நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன், ஆலயத்தின் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவை பொலிசார் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தங்கச்சங்கிலிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிசார் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் தனியாக அல்லாமல் கும்பலாகவே திருடர்கள் செயற்படுவார்கள், திருடிய பொருட்களை உடனடியாகவே இடமாற்றி விடுவார்கள். அந்தவகையில் விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.

வவுனியாவில் படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்து!!

வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்திக்கு அருகே இன்று (13.06.2018) மதியம் 2.15 மணியளவில் முச்சக்கரவண்டியின் மீது படையினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா நகரிலிருந்து வந்த முச்சக்கரவண்டி மணிக்கூட்டு கோபுரம் ஊடாக குடியிருப்பு பூங்கா வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் வவுனியா வைத்தியசாலை வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த படையினரின் வாகனம் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

     

செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா : வடமாகாண சபையில் கேள்வி!!

முல்லைத்தீவு எல்லை கிராமங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டு சிங்கள குடியேற்றங்களை பார்வையிட்ட மாகாணசபை ஒரு சிங்கள குடியேற்றத்தையாவது நிறுத்தியுள்ளதா?

கரைவலை இழுக்கும் சிங்கள மீனவர்களுடன் செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா? என வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடமாகாண சபையின் 124வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத் தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஆபத்துக்கள் குறித்து கடந்த 4 வருடங்களாக இந்த சபையில் பேசி வருகின்றார்.

இதனால் வடமாகாணசபை 3 தடவைகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டிருக்கின்றது. மேலும் வடக்கில் உள்ள மற்றைய மாவட்டங்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தையும் கொடுத்திருக்கின்றது.

ஆனாலும் நடவடிக்கை எதனையுமே எடுக்கவில்லை. அண்மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவின் எல்லை கிராமங்களுக்கு சூறாவளி பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

இதன் பின்னர் ஒரு சிங்கள குடியேற்றத்தையாவது நிறுத்தினார்களா? தமிழ் மக்களுடைய நிலத்தில் இருந்து கொண்டு சட்டத்திற்கு மாறாக உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுத்துக் கொண்டிருக்கும் சிங்கள மீனவர்களுடன் செல்பி எடுத்தக் கொண்டதுடன் எல்லாமே முடிந்து விட்டதா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும், வள சுரண்டல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வு ஒன்றினை இன்றே எடுங்கள்” எனவும் கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

“முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாகாணசபை உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து சில தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்.

அதில் வடமாகாணத்தில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துமாறு கேட்டுள்ளதுடன், அதற்காக நியமிக்கப்பட்ட குழு விரைவில் ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தையும் கேட்டுள்ளோம்.

ஆகவே வடமாகாணசபை தொடர் நடவடிக்கைகளை எடுத்தே வருகின்றது” என்றா

பல சோதனைகளை தாண்டி அமெரிக்காவில் சாதித்த இலங்கைப் பெண்!!

இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் சாதனை படைத்து விருது வென்றுள்ளார். சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற்ற வர்த்தகரான அனோமா கருணாசேன அமெரிக்காவில் விருது வென்றுள்ளார்.

2000ஆம் ஆண்டு அனோமா கருணாசேன அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க வைத்தியரான வயிலன் ஆய்வுக்காக இலங்கை வந்த சந்தர்ப்பத்தில் அனோமாவை சந்தித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பின் பின்னர் ஒன்றரை வருடங்களின் பின்னர் இருவரும் திருமணம் செய்து அமெரிக்காவின் பொஸ்டன் நகரத்திற்கு சென்றுள்ளனர்.

அவர் அமெரிக்கா நோக்கி செல்லும் போது அங்கு பனி மழை பெய்துள்ளது. இதனால் அவரால் இந்த காலநிலையை எதிர்கொள்ள சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு பிடித்த உணவான சோறு மற்றும் தேங்காய் சம்பல் கிடைக்கவில்லை.

அனோமாவின் கணவர் பல உணவகங்களுக்கு சென்ற போதும் அவரால் இலங்கை உணவுகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனையடுத்து இலங்கை உணவுகளை கொண்ட உணவகம் ஒன்றை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதற்கமைய கணவரின் ஆசிர்வாதத்துடன் 2008ஆம் ஆண்டு கலிபோர்னியாவின், பிரதேசமொன்றில் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு “இலங்கை இந்திய பெருங்கடலின் முத்து” (pearl of the ocean) என அவர் பெயரிட்டுள்ளார்.

அதன் பின்னர் தனது உணவகத்தில் விஷமற்ற சுத்தமான இலங்கை உணவுகளை வழங்க ஆரம்பித்தார். வெளிநாடு ஒன்றில் இலங்கை உணவை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்லது. எனினும் அனைத்து சவால்களையும் வென்று அவர் இந்த உணவுகளை வெற்றிகரமாக வழங்கி வைத்தார்.

அதற்கமைய போராடி பிரபல்யமடைந்த அனோமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சிறந்த உணவகத்திற்கான விருது கிடைத்துள்ளது.

ஒரு வருடம் என்ற சிறிய காலப்பகுதிக்குள் அவர் இலங்கைக்கு கௌரவத்தை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சமையல் கலைஞராக அவர் தெரிவாகினார்.

பாரிய வளர்ச்சியடைந்த அனோமா இன்னமும் இலங்கையின் பெயருடன் அந்த உணவகத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்!!

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன், நான் அவன் இல்லை 2, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஸ்வேதா மேனன், படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் உள்ளார். இவரது செல்போனுக்கு நேற்று சிலர் பேசியுள்ளர். தெரியாத நம்பரில் இருந்து வந்த அந்த அழைப்பில் பேசியவர்கள், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாழ்த்துக்கள் கூறினர்.

தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் செல்போன் அழைப்புகள் வந்தன. நம்பரும் பெயரும் இல்லாமல் வந்த அந்த அழைப்பை எடுத்து பேசிய ஸ்வேதா மேனனை, எதிர்முனையில் இருந்தவர்கள் ஆபாசமாக திட்டினர். அதோடு அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா மேனன், போலீசில் புகார் செய்தார்.

மலையாள நடிகர் (அம்மா) சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஸ்வேதா மேனன் கூறும்போது, நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதற்கு முன்பும் பல நடிகைகள் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கீது மோகன்தாஸ், காவ்யா மாதவன், ரம்யா உட்பட பலர் இருந்துள்ளனர். இதையடுத்து நானும் போட்டியிடுகிறேன். மிரட்டல் குறித்து கவலையில்லை என்று கூறினார்.

அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா!!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

கிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன´´ என டிரம்ப் கூறினார்.

மேலும், “கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்”, “தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்,” என கிம் நினைவு கூரப்படுவார் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

´´வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் இராணுவ திறன்களை குறைக்கப் போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்´´ என்று அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,” என்றும் “அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.

´´அணு ஆயுத பயன்பாடு முடியும் போது தான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்´´ என்று குறிப்பிட்டார்.

´´அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்´´ எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

´´வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன் கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,´´ எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரியாவை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்ற வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சேகரித்த பணப்பொதியை சி.தவராசாவின் வீட்டுக் கதவில் கட்டிய மாணவர்கள்!!

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவிற்கு மீள செலுத்துவதற்காக சேகரிக்கப்பட்ட சில்லறைக் காசுகள் அடங்கிய ”பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்ட பொதி நேற்று அவரின் வீட்டுக்கதவில் கட்டப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று வட மாகாண சபை கட்டடத் தொகுதிக்கு சென்றிருந்தனர். வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவிற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை ஒப்படைப்பதற்காகவே மாணவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

முழுவதும் சில்லறைக் காசுகளைக் கொண்ட அந்த பணப்பொதியில், ”பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்டிருந்தது.

மாகாண சபையின் நேற்றைய அமர்விற்கு எதிர்க்கட்சித் தலைவர் சமூகமளிக்காத நிலையில், மாணவர்கள் முதலமைச்சரை சந்தித்தனர்.

மக்களிடம் தலா 1 ரூபா வீதம் சேகரிக்கப்பட்ட 7000 ரூபா பணத்தை அவர்கள் சி.தவராசாவிடம் கையளிக்க முடியாத நிலையில், முதலமைச்சரும் இந்த விடயத்தை அவருடன் நேரடியாகப் பேசி நடவடிக்கை எடுக்குமாறு கூறிவிட்டார்.

இதனால் மாணவர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் கொக்குவில் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்றனர்.
சி.தவராசாவை அங்கும் சந்திக்க முடியாமையால், அவருக்காக சேகரிக்கப்பட்ட பணம் அடங்கிய பொதியை, அவரின் வீட்டு வாசற்கதவில் கட்டிவிட்டுச் சென்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக தம்மிடம் பெறப்பட்ட ஏழாயிரம் ரூபாவை மீள வழங்குமாறு வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அவையில் கோரியிருந்தார்.

இதனையடுத்து, வட மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் 7000 ரூபாவை, மீள வழங்குவதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்தனர்.

ஒருவரிடமிருந்து ஒரு ரூபா வீதமாக பொதுமக்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் பணம் சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தை வட மாகாண எதிர்க்கட்சித் தலைவரிடம் ஒப்படைப்பதற்கு உதவுமாறு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.