கிழக்கு பல்கலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு – நாவற்குடா பகுதியல் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவி வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காச்சிவட்டை மண்டூர் பாடசாலை வீதியை சேர்ந்த 22 வயதுடைய சங்கரத்துரை பானுஜா எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வி பயின்று வருகின்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருவதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலா படத்தில் இலங்கை வேந்தன் : புதிய சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்!!

அண்மையில் வெளியாகிய நடிகர் ரஜினிகாந்த்தின் காலா திரைப்படம் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இன் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் காலா.

இந்த திரைப்படத்தில் இந்துக்களின் மரபினையும், கடவுளையும் தாழ்த்துவது போலவும் இழிவு படுத்துவது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பதாக அனைத்துத் தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மன்னனான இராவணனை உயர்த்திக்காட்டியுள்ளதோடு, இந்துக்களின் கடவுள் என, இராமபிரானை தாழ்த்துவதாகவும் அமையப்பெற்றுள்ளது.

இராமாயணத்தில் இராவண வதத்தினை விபரிக்கும் புராண சொற்பொழிவில் இராவணனின் மேன்மைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன் இதில் இராமனை சிறுமை செய்வதைத் தவிர வேறேதும் புதுமைகள் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதன் மூலம் ரஜினி உணர்வாலும், வர்ணத்தாலும் இராவண ஜாதி என்பதை எடுத்தியம்புகின்றார் இயக்குநர் ரஞ்சித்.

இந்நிலையில், ரஞ்சித் கேலி செய்யும் அதே இந்துமதத்தில், இரஞ்சித் போற்றும் இராவணனும் இந்துகடவுளாக மதிக்கப்படுகின்றார் என்பதை ரஞ்சித் அறியவில்லையா என பலரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.

மேலும், இராவணேஸ்வரன் என்று அழைக்கப்படுகின்ற இலங்கை வேந்தன் இராவணனுக்கு, நெல்லையப்பர் கோவிலில் தனி சந்நிதியே இருக்கின்றது என்பதை ரஞ்சித்திற்கு யாரும் கூறவில்லையா எனவும் கேள்விகள் எழுகின்றன.

இந்நிலையில், அவரது படத்தில் இலங்கை வேந்தனைப் பெருமைப்படுத்தும் ரஞ்சித் இந்து மதத்தை சிறுமைப்படுத்தியுள்ளமை அனைவரிடத்திலும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தின் ஊடாக வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைகளுடன் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் நிதி மோசடி தொடர்பில் பத்து முறைப்பாடுகள் இந்தண்டில் இதுவரையில் பதிவாகியுள்ளன.

மேலும், இணையம் மற்றும் முகநூல் பயன்பாடு குறித்த 1100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ரோசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பெண்கள் போராட்டம் : “வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வலுவிழந்து நிற்கின்றோம்”!!

நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசெளகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (14.06.2018) காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

கடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில் அடிக்காதே, பெண்களை சீரழிக்கும் நுண்கடன் நிறுவனங்களை இழுத்து மூடு, கடனில் பெண்களை இலக்கு வைக்காதே, உயிரைக் குடிக்கும் வார்த்தைகளை உமிழாதே உமிழாதே, இழப்பதற்கு இனி எம்மிடம் உயிர் மட்டுமே உள்ளது,

ஏழைகளின் உணர்வை புரிந்துகொள், வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வாழ்விழந்து நிற்கின்றோம், தற்கொலை அதிகரிப்பதற்கு கடனே நீயே காரணம், குடும்ப வன்முறைக்கும் கடன் நீயே காரணம், நுண் நிதி கடனே குடும்ப வன்முறைக்கு அத்திவாரம் இடாதே, கடனே இளம் சந்ததியை நரகத்தில் தள்ளாதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய போராட்டமானது பஜார் வீதி வழியாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.

10 நிமிடங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஞரினை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அகதி ஒருவர் வெளிநாட்டில் தீக்குளிக்க முயற்சி!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இலங்கை அகதி இன்று தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் விஜய் (எ) அஜய்குமார் (30). இவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதன்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த பொலிஸார், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். பின்னர், கேணிக்கரை பொலிஸ் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய விஜய், நான் 7 வயதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். அப்போது முதல் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகிறேன்.

எனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல விரும்புவதாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் என்னை அனுப்பிவைக்கவில்லை.

இதனால், கடந்த 2015 -இல் கள்ளப்படகில் இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு செல்ல முயன்றேன். அப்போது, கியூ பிரிவு பொலிஸார் என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

எனது வழக்கை விசாரித்த இராமேசுவரம் நீதிமன்றம், என்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை அதிகாரிகள் என்னை இலங்கைக்கு அனுப்பி வைக்கவில்லை.

மண்டபம் அகதிகள் முகாமிலும், மின்சாரம், குடிநீர் வசதி போதுமான அளவில் இல்லை. இதனாலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் என” குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50,000 நஸ்ட ஈடும், 3000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஜனவரி 25ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு இன்று திகதி குறிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இலங்கை தமிழ் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம்!!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், இதுவே அவரின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் UNHCRஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2000ம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு வந்து தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு அகதிகளாக உள்ளவர்கள் சொல்லொணாத் துன்பங்களையும் வேலையில்லா திண்டாட்டங்களையும் அனுபவித்து வரும் நிலையில் ஜூட் மயூரன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயது யுவதி மர்மமான முறையில் மரணம்!!

காலியல் மர்மமான முறையில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை பணி நிறைவடைந்து வீட்டிற்கு வராத யுவதியை, பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். எனினும் குறித்த யுவதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வேன் ஒன்றில் வந்த இளைஞனே இந்த யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளினால் வாகனத்தின் இலக்கம் பதிவு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

யுவதி உயிரிழந்தமை தெரியவந்ததுடன், குறித்த இளைஞர் வேனில் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் நீண்ட காலங்களாக காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் திருமணமானவர் என தெரிந்த பின்னர் பெண் காதல் தொடர்பை கைவிட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எப்படியிருப்பினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்காத நிலையில் பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் பேரூந்து சாரதி செய்த மோசமான செயல் : மடக்கிப்பிடித்த பொலிசார்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நேற்று (13.06.2018) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இ.போ.ச பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது 1 கிலோ750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு பையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் இ.போ.ச (வாழைச்சேனை) சாரதியினை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த பை தனது இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் குறித்த பையினுள் பென்ரைவ் (PENDRIVER) காணப்பட்டுள்ளது. அதனை கணணியில பரிசோதித்த சமயத்தில் குறித்த பென்ரைவ் (PENDRIVER) இல் அவரது குடும்பத்தினரின் புகைப்படம் காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய விஜயபாலன் என்பவரே தனது வீட்டு முற்றத்தில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரவு வீட்டில் குடும்பத்தார் இருக்கும் பொழுதே வீட்டைவிட்டு வெளியேறி ய நிலையில் இன்று காலை வீட்டுக்கு முன்புறமாக உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கில் தொங்கி சடலமாக மீட்கப்பட்ட நபர் இரு பெண் பிள்ளை, இரு ஆண் பிள்ளைகளின் தந்தையாவர்.

வவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு!!

வவுனியாவில் அறநெறி கொடி மாதமும் திருஞான சம்பந்தர் குருபூசை தினமும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

தேசிய இந்து அறிநெறி கொடி மாதமும் அறிநெறி விழிப்புணர்வும் இந்து கலாசார திணைக்களத்தால் நாடு முழுவதும் மே 30 தொடக்கம் யூன் 31 வரை அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இந்நிகழ்வு இன்று (13.06) இடம்பெற்றது.

இதன்போது திருஞானசம்மந்தரது திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து குருபூசை தினம் கொண்டாடப்பட்டதுடன், அறநெறி கொடி கல்வி தொடர்பில் பாவற்குளம் கணேஸ்வரா வித்தியால ஆசிரியர் சு.வரதராஜன் கருத்துரை வழங்கியிருந்தார்

கலந்து கொண்ட அனைவருக்கும் அறநெறி கொடிகள் அணிவிக்கப்பட்டதுடன் நிகழ்வு தொகுப்பினை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார் வழங்கியிருந்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பிரதான கணக்காளர் பாலகுமாரன், உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன், கலாசார உத்தியேதகத்தர் ஹேமமாலினி, மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி அறநெறி பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் அமைச்சரினால் திறந்து வைப்பு!!

 

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் நேற்று (12.06.2018) திறந்து வைத்திருந்தார்.

மாணவர் வள நிலையம் ஒரு கோடியே எழுபத்தியாரு லட்சம் செலவில் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இக் கட்டிட திறப்பு விழாவில் வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் இப்தார் நிகழ்வு!!

வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் நேற்று (12.06.2018) மாலை 6 மணியளவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் பணிப்பின் பேரில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோ
நோகராதலிங்கம் தலைமையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியாவில் தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையை நிலைநாட்டவும் சகோதரத்துவமாக இரண்டு சமூகத்தினரும் செயற்பட வேண்டும் என்ற நோக்குடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெளலவியின் ஆசீர்வாத உரையுடன் ஆரம்பித்து நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது

இந் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வடமாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் ராஜன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் புருஸ், வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரதீபன், வவுனியா இளைஞர் சம்மேளனத்தை சேர்ந்த அமுதராஜ் உட்பட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் ‘வன்னி முரசம்’ பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டது!!

‘வன்னி முரசம்’ பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு இன்று (13.06) வன்னி குறோஸ் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஆர்.ரூபன் தலைமையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

பத்திரிகையின் முதற் பிரதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வெளியிட்டுவைக்க வன்னி மகளிர் பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செல்வி எஸ்.அர்ச்சனா பெற்றுக்கொண்டார். கவிஞரும் எழுத்தாளருமான யோ.புரட்சி பத்திரிகையின் விமர்சன உரையை ஆற்றினார்.

நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்..

ஐநா சபையின் தீர்மானங்களுக்க அமைவாக சமூக சகவாழ்வு இலங்கையில் சம உரிமையுடன் சகல மக்களும் அனுபவிக்க கூடிய விதத்தில் ஒரு அரசியல் தீர்வை எட்டவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாக இலங்கை அரசை அனுசரித்து செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது என தெரிவித்தார்.

அந்த நிமிடங்களில் நடந்தது என்ன? உயிருக்கு போராடிய நடிகை வேதனை!!

 

கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருமணிநேரம் உயிருக்கு போராடிய நடிகை தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

மலையாள நடிகை மேகா மேத்யூ எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். கார் கவிழ்ந்த நிலையில், ஒரு மணிநேரமாக உயிருக்கு போராடியவரை போட்டோகிராபர் வந்து காப்பாற்றி கொச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

இதுகுறித்து கூறிய மேகா மேத்யூ, அண்ணனின் திருமண நிச்சயதார்த்ததிற்கு சென்ற போது தான் விபத்து நடந்தது. கார் கவிழ்ந்ததால் என்னால் வெளியே வரமுடியவில்லை, விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.

கால், கைகளில் ரத்தம் வடிந்தது, இறந்துவிடுவேன் என நினைத்தேன். சுற்றிலும் மக்கள் நின்று வேடிக்கை பார்த்தார்கள், போட்டிபோட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தார்கள்.

கடைசியில் ஒரு போட்டோகிராபர் வந்து என்னை காப்பாற்றினார், மக்களின் மனிதாபிமானத்தை செல்போன் மோகம் மறைத்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கால் ஏற்பட்ட விபரீதம் : ஒன்றாக தூக்கில் தொங்கிய கணவன், மனைவி!!

இந்தியாவில் மனைவி பேஸ்புக்குக்கு அடிமையானதால் ஏற்பட்ட சண்டையில் கணவனும், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் அனூப் (28). இவர் மனைவி சவுமியா (23). தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளமான பேஸ்புக்கில் எந்நேரமும் மூழ்கியிருப்பதை சவுமியா வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் இது தொடர்பாக கணவன் மனைவியிடயே தகராறு ஏற்பட்டது. அப்போது சவுமியாவின் சகோதரர் ரவிச்சந்திராவுக்கு போன் செய்த அனூப் நடந்த விடயங்களை கூறி சவுமியாவை அவர் வீட்டுக்கே அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து அனூப்பை சமாதானம் செய்த ரவிச்சந்திரன் காலையில் வந்து இது குறித்து நேரில் பேசுவதாக கூறினார்.

பின்னர் காலையில் அனூப் வீட்டுக்கு ரவிச்சந்திரன் வந்த போது உள்பக்கமாக பூட்டியிருந்தது. சந்தேகமடைந்த அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் வீட்டுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது உள்ளே அனூப்பும், சவுமியாவும் தனித்தனியறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். இருவரின் சடலத்தையும் கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.