வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறந்து வைப்பு!!

நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று(10.06) ஆலய தலைவர் இ.பூலோகசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வல்லிபுரம் அன்னபூரனத்தின் நினைவாக ஏ9 வீதி புதூர் சந்தியில் அமைக்கப்பட்டு ஆலய அமைவிடத்தையும், அதற்கான வழியையும் காட்டி நின்று வருவோரை வரவேற்கும் அலங்கார நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நுழைவாயில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியா சதுரங்க சம்மேளனத்தின் பரிசளிப்பு விழா!!

வவுனியா சதுரங்க சம்மேளனத்தினால் கடந்த மாதம் நடாத்தப்பட்ட திறந்த சதுரங்க சுற்று போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று நெல்லி ஸ்டார் ஹொட்டலில் வவுனியா சதுரங்க சம்மேளனத்தின் செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார், வவுனியா IDM கணனி கல்வி நிலையத்தின் நிர்வாகி ச.தனுஷ்காந்த், ஜீவிதா புகைபடக் கலையகத்தின் இயக்குனர் ப.பிரதாப், உமா பல்பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஆ.அம்பிகைபாகன், டைடன் விளையாட்டு உபகரண நிறுவன உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.

யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு : ஊரே சோகத்தில்!!

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை நீங்கள் அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் நான்கு நாட்களின் பின்னர் நேற்று முன்தினம்(09.06) பிற்பகல் குழந்தை உயிரிழந்துள்ளதாகக் குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று (10.06) காலை முதல் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோயிலடியில் உயிரிழந்த குழந்தையின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை 09.30 மணியளவில் பெற்றோர்,உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் கதறி அழ உயிரிழந்த குழந்தையின் சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சுமார் இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மானிப்பாய் கட்டுடை பிப்பிலி மயானத்தை முற்பகல் 10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்ததைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் குழந்தையின் தாய், தந்தை உட்படப் பெருமளவான ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் பெண்கள் கலந்து கொள்ளாத நிலையில் குழந்தையின் உறவினர்கள் மற்றும் அயலவர்களான பெண்கள் சிலரும் குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாக நோக்கப்படுகின்றது. மேற்படி குழந்தையின் மீது அவர்கள் வைத்திருந்த அளவுகடந்த பாசமே இதற்குக் காரணமாகும்.

உயிரிழந்த குழந்தையின் உடலம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட வேளையில் அங்கு கூடியிருந்த பெற்றோர்கள், உறவினர்கள் மாத்திரமன்றி ஊர் இளைஞர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதமை பலரதும் மனதை உருக்குவதாக அமைந்திருந்தது.

கடந்த நான்கு நாட்களாக குறித்த குழந்தை உயிருடன் இருக்கிறது என உறவினர்கள், ஊரவர்கள் பலரும் நம்பியிருந்த நிலையில் குழந்தை மரணமடைந்து விட்டதைப் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை.

குழந்தை உயிரிழந்தாலும் குறித்த குழந்தையைப் பலரும் அதிசயக் குழந்தையாகவே நோக்குகிறார்கள். இதனை இன்றைய இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களால் அவதானிக்க முடிந்தது.

சுட்டிப் பெண்ணாகத் துள்ளித் திரிந்து அனைவரையும் எளிதில் கவர்ந்திழுத்ததுடன் ‘அம்மு’ என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட நிசாந்தன் டிவேனிதாவின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புபட்ட செய்தி : யாழில் பெரும் பரபரப்பு : இறுதிக் கிரிகையின் போது இரண்டாவது முறையாகவும் உயிர்பிழைத்த சிறுமி!!

 

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு : 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது!!

இலங்கையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு முன்தினம் இரவு 10 மணியில் இருந்து நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 11 மணித்தியாலங்களிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கைது நடவடிக்கையில் 17687 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் வாகனம் செலுத்தியமை, பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலும் அவசியமாக இருந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சொதப்பிய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் : அபார வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவு அணி!!

 

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவு சென்றுள்ள இலங்கை அணி, அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்ப்யினில் நடைபெற்றது.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 414 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

மேற்கிந்திய தீவு அணி சார்பில் ஷான் டவ்ரிச் சதம் அடித்து 125 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது.

இலங்கை அணியில் சண்டிமால் 44 ஓட்டங்களும். டிக்வெல்லா 31 ஓட்டங்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

மேற்கிந்திய தீவு அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

தொடர்ந்து, மேற்கிந்திய தீவு அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அந்தணி அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 453 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று ஒரு நாள் மீதமுள்ளதால் 277 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், இலங்கை அணி இன்று 50 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்கள் எடுத்து 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி சார்பில் துவக்க வீரர் குசால் மெண்டிஸ் சதம் அடித்து 102 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவு அணி சார்பில் ரோஸ்டர் சேஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவு அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இலங்கையில் மின்னஞ்சல் அனுப்புவோருக்கு அவசர எச்சரிக்கை!!

இணையத்தளம் ஊடாக இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் வர்த்தகர்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வோர், பொருட்களை கொள்வனவு செய்யும் போது கொடுப்பனவு செய்யும் கணக்குகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் தொடர்பான தகவல் உறுதி செய்த பின்னர் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல்கள் ஊடாக வரும் மோசடியாளர்களினால் வழங்கப்படுகின்ற கணக்கு இலக்கங்கள் மூலம் நிதி மோசடி செய்யப்படுவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறு 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா மேலும் தெரிவித்துள்ளார்.

சாத்தானின் பிள்ளை : சிட்னியில் தூக்கத்தில் இருந்த பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தூக்கத்தில் இருந்த 5 வயது சிறுவனை தந்தையே கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், இருமுறை உளவியல் சிகிச்சை மேற்கொண்டவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிட்னியின் வடமேற்கில் அமைந்துள்ள Carlingford பகுதியிலேயே வெள்ளியன்று காலை குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது குடியிருப்பில் இருந்த சிறுவனின் பாட்டி துரிதமாக செயல்பட்டு, சிறுவனை அள்ளிக்கொண்டு குடியிருப்புக்கும் 400 மீற்றர் தொலைவில் சென்றுள்ளார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுவனின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். சிறுவன் சாத்தானின் பிள்ளை என்பதாலையே அவனை கொலை செய்துள்ளதாக பொலிசாரிடம் அந்த நபர் கூறியுள்ளார்.

இருமுறை மனநல சிகிச்சை பெற்ற அந்த நபர் மூன்றாவது முறையாக மருத்துவமனை சென்ற நிலையில், படுக்கை அறை இல்லை என்பதால் சிகிச்சை மேற்கொள்ளாமல் திரும்பியுள்ளார்.

இதன் அடுத்த சில நாட்களிலையே தூக்கத்தில் இருந்த சிறுவனை கத்தியால் கொடூரமாக தாக்கி அவர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவன் சாத்தானின் பிள்ளை என கூறினாலும், தந்தையும் மகனும் நல்ல பிணைப்பிலே இருந்துள்ளனர்.

மகன் மீது பாசத்துடனும் இருந்துள்ளார். சிறுவனும் தந்தையுடன் நல்ல நட்பாகவே இருந்துள்ளார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை காப்பாற்ற அவனது பாட்டி மேற்கொண்ட துணிச்சலான செயலுக்கு பொலிசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் சொந்த மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்!!

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் 3 வயது சிறுமி மர்மமாக இறந்த சம்பவத்தில் அவரது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Trealaw கிராமத்தில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 வயது Carly Ann Harris என்பவரின் குடும்ப நண்பருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவரை, சிறுமியின் சகோதரர் வீட்டின் தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கே வெள்ளை போர்வைக்குள் சிறுமியின் சடலத்தை கண்டு உறைந்து போனதாகவும், உடனையே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் சிறுமியின் தாயாரை கைது செய்துள்ளதுடன் அந்த வீட்டுக்கும் சீல் வைத்துள்ளனர்.

சிறுமியின் தாயாருக்கு மத நம்பிக்கை அதிகம் எனவும், கடவுளிடம் பேசுகிறேன் என பலமுறை தெரிவித்துள்ளதாகவும், அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் இறப்புக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அவர் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்திருக்க கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Carly-கு மேலும் இரு பிள்ளைகள் உள்ளன. இறந்த Amelia மீது அவர் மிகுந்த பாசம் வைத்திருந்தார் என கூறும் அவரது தோழி ஒருவர்,

ஆனால் தற்போது எஞ்சிய இரு பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழும் என்றே அக்கம்பக்கத்தினர் கருதுகின்றனர்.

காரணம், Carly மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது என்றார் அவர்.

சொந்த பிள்ளைகளிடம் ஒரு தாயார் இவ்வாறு நடந்து கொள்வாரா என்று தெரியாது எனக் கூறும் அவர் இது மிகவும் கொடூரமான கனவு என தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் சாலை விபத்தில் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல பாடகர் பப்பு கார்க்கி நண்பர்களுடன் காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரை நோக்கி இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிமுடித்த பின்னர் பப்பு தனது நான்கு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென கார் இழந்த நிலையில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பப்பு மற்றும் அவருடன் இருந்த நண்பர்களான ராஜேந்திரா, புஷ்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் இருந்த மற்ற இருவரான அஜய் ஆர்யா மற்றும் கிஷோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பப்புவின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் டிரிவேண்ட்ரா சிங் ரவாட் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

தாயின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள பணமில்லாததால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஜெட்காயாதவ். இவருடைய மகள் அன்ஸிதேவி (22). இவருக்கும் அகிலேஷ்குமார் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் அகிலேஷ்குமாரும், அன்ஸிதேவியும் தமிழகத்தின் காட்பாடியில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அன்ஸிதேவியின் அம்மா ஜெட்காயாதவ் சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.

இதையடுத்து தாயின் இறுதிசடங்கில் கலந்துகொள்ள உடன் வேலை பார்த்தவர்களிடம் அன்ஸிதேவி பணம் கடனாக கேட்ட நிலையில் கிடைக்கவில்லை.

கணவரிடமும் போதிய பணம் இல்லாததால் அவர் இறுதிசடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் மனம் உடைந்த அன்ஸிதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அன்ஸிதேவியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

“ஜனாதிபதி மாமா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்” : ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்!!

எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர். அக் கோரிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள். எனவே தங்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம். அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.

எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும் ஜனாதிபதி மாமா உதவ வேண்டும் என ஆனந்தசுதாகரனின் மகன் கோரியுள்ளார்.

தாயை இழந்த சோகத்தில் மகளும் பரிதாபமாக மரணம்!!

பிரித்தானியாவில் தாயார் இறந்த அதே வாரத்தில் அவரது 11 வயது மகளும் இறந்த சம்பவம் உறவினர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் 11 வயதான Syira Coutain-Harebin. இவரது தாயார் Mary Coutain கடந்த வாரம் திடீரென்று மரணமடைந்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடந்து முடிந்து உறவினர்களுடன் குடியிருப்பு திரும்பிய அவரது 11 வயது மகள் Syira Coutain திடீரென்று ஆஸ்துமா நோய் அதிகமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி Syira Coutain மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே வாரத்தில் அந்த குடும்பத்தில் இருவேறு துயர சம்பவம் நடந்துள்ளது நண்பர்கள் மற்றும் உறவினர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமி Syira Coutain மிகவும் திறமையானவர் என்றும் அவரது நண்பர்கள் மற்றும் பாடசாலை தோழிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

லண்டனில் Grenfell அடுக்குமாடி குடியிருப்பு தீக்கிரையானபோது Mary Coutain தமது சேமிப்பை நன்கொடையாக அளிக்க முதன் முதலாக முன்வந்தவர் என அவரது நண்பர்கள் பலர் நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மருமகளிடம் சிக்கித்தவிக்கும் மாமியாரின் அவலநிலை : பதைபதைக்க வைக்கும் காட்சி!!

இன்றைய காலத்தில் இளைஞர்கள் தனது தாய், தந்தையை வயதாகிவிட்டால் அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் கொண்டு சென்று விட்டுவிடுகின்றனர்.

அவ்வாறு அங்கு சென்று விடமுடியாமல் இருப்பவர்கள் தனது கோபத்தினை முழுவதும் அந்த முதியோரிடம் காட்டி அடித்து கொடுமைப்படுத்தும் காட்சி தற்போது அதிகமாக பரவி வருகிறது.

இங்கு மருமகள் ஒருவர் மாமியாரின் கையை பிடித்து தரதரவென ரோட்டில் இழுத்து செல்லும் காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. ஒடிசா மாநிலம் தாள்பள்ளி கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தை அங்குள்ளவர்கள் காணொளியாக எடுத்துள்ளனர்

கைதவறி தன்னை தானே சுட்டு கொண்ட 2 வயது சிறுவன் : பின்பு நடந்தது என்ன?

அமெரிக்காவில் 2 வயது சிறுவன் கைதவறி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் உடா (Utah) மாகாணத்தைச் சேர்ந்தவர் Tasman Mail என்பவர் தனது 2 வயது மகனுடன் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது கைத்துப்பாக்கியை படுக்கையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மெய்லின் மகன் அதனை எடுத்து விளையாடிய போது துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து அனுமதியின்றி ஆயுதம் வைத்திருத்தல், ஆயுதங்களை அஜாக்கிரதையாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் மெய்ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகளின் விளையாட்டுத்தனமாக தான் இருப்பார்கள். குழந்தைக்கு முன் எந்த பொருள் வைப்பதற்கும் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

நாங்கள் என்ன மிருகங்களா : மாயமான இளம்பெண்ணின் தங்கை கண்ணீர்!!

கேரள மாணவி மாயமான விவகாரத்தில் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் தீங்கிழைக்க வேண்டாம் என அவரது சகோதரி உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெஸ்னா கடந்த மார்ச் 22 ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில் மாயமானார்.

அவரை தேடும் பணி முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக ஜெஸ்னாவின் சகோதரி ஜெய்ஸ் ஜான் ஜேம்ஸ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெஸ்னா மாயமானதற்கு அவரது தந்தையை விசாரிக்க வேண்டும் என பிரபல அரசியல்வாதி ஒருவர் கூறிய குற்றச்சாட்டு தங்களது குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளது என கூறும் அவர், உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தயவு செய்து உபத்திரவம் தராதீர்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெஸ்னா மாயமாகி 77 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் பொலிசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.தவறான குற்றச்சாட்டுகளால் விசாரணை தாமதப்படுகிறது. ஏன் எங்கள் குடும்பத்தார் மீது இத்தனை வன்மத்தை அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஊடகங்கள் வெளிப்படுத்துகிறது என தெரியவில்லை.

நாங்கள் என்ன மிருகங்களா? எங்கள் கண்ணீரை ஏன் கண்டுகொள்ளாமல் நடிக்கின்றீர்கள். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை மட்டுமே நாங்கள் நம்புகின்றோம்.எங்களுக்கு உரிய நீதியை நீதிமன்றம் வழங்கும் என்றும் ஜெய்ஸ் ஜான் ஜேம்ஸ் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

77 வயது முதியவரை மணந்து மகிழ்ச்சியாக உள்ளேன் : 16 வயதுச் சிறுமி அதிரடி!!

ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஓமனை சேர்ந்த 77 வயது முதியவரை மணந்த நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக உள்ளதாக அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளார்.

ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது (77) என்ற முதியவர் கடந்தாண்டு ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தனது மகளை தனது கணவர், சகோதரி சேர்ந்து ஐந்து லட்ச ரூபாய்க்காக ஷேக்கிடம் விற்றுவிட்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஓமன் காவல்துறையினர் உதவியுடன் ஹைதராபாத் பொலிசார் விசாரணை நடத்தியதில் தான் ஷேக்குடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பமில்லை எனவும் சிறுமி கூறினார்.

இந்நிலையில் மஸ்கட் தூதரகம் மூலம் சிறுமியை மீண்டும் மீட்க தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தூதரக அதிகாரிகள், ஓமன் அதிகாரிகளிடம் சிறுமியை விசாரிக்க கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கணவர் ஷேக்குடன் தான் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், இந்தியாவுக்கு திரும்ப தனக்கு விருப்பமில்லை எனவும் சிறுமி கடிதம் எழுதி கொடுத்ததாக ஓமன் அதிகாரிகள் தூதரக அதிகாரிகளிடம் தற்போது தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது பலருக்கும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதாவது ஒரு பேப்பரில் எழுதியதை வைத்து எப்படி அது சிறுமியின் அறிக்கை என கூறுகிறார்கள்.

தனது தந்தையை விட வயது அதிகமானவருடன் சிறுமி மகிழ்ச்சியாக எப்படி வாழமுடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையில் குழந்தை உரிமை ஆர்வலர் மற்றும் குழந்தை உரிமைகள் மாநில ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் அச்சுத ராவ் கூறுகையில், சட்டப்படி பார்த்தால் சிறுமியின் அறிக்கை என்பது செல்லாது.

இந்திய அதிகாரிகள் மைனர் சட்டம் குறித்து சரியாக தெரிந்து கொள்ள வேண்டும், சிறுமியை ஓமனிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.