இந்தியாவில் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் அவரது குடும்பத்தாரோடு சேர்ந்து தனது தந்தையை கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ளார்.
அந்த இளம் பெண் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது அவரின் தந்தையே அவரை பலாத்காரம் செய்ய முயன்றதால் தற்காப்பிற்காக இந்தக் கொலையை செய்ததாக ஒப்பு கொண்டிருக்கிறார்.
பலாத்காரம் செய்ய முயன்ற போது தான் தடுத்ததால் தந்தை கோடாரியால் வெட்ட வந்ததாகவும், தன்னை காப்பாற்றி கொள்ள அதே கோடாரியை பிடுங்கி அவரது தந்தையை அவரே கண்டம் துண்டமாக வெட்டி கொன்றதாகவும் கொலையை மறைக்க பிணத்தை கட்டிலில் போட்டு அதன் மேல் தான் படுத்து உறங்கியதாகவும் இவர் தெரிவித்த விவரம் காவல்துறையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மேலும் 70 வயது தந்தையின் கொலையை மறைப்பதற்காக உடலை வீட்டில் ஒரு அறையில் வைத்திருந்ததாகவும் துர்நாற்றம் வரவே 15 அடி குழி தோண்டி அவரது உடலை புதைத்ததாகவும் , ஆனால் அதனையும் மீறி தற்போது காவல்துறையிடம் மாட்டி கொண்டோம் என்றும் அந்த இளம்பெண் விசாரணையின் போது கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனைக்கோட்டை சாவற்கட்டைச் சேர்ந்த 35 வயதான க.விஜயா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
பிள்ளைகள் இல்லை என்ற மன உளைச்சல் காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்டுக் குளியலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
எனினும் அதன் வலியை தாங்க முடியாமல் வீட்டுக்குள் ஓடிச் செல்ல அவரது தாயார் தீயை அணைத்துள்ளார். உடனடியாகவே யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தார். எனினும் சிகிச்சை பயனளிக்காது அவர் நேற்று உயிரிழந்தார்.
தமக்குப் பிள்ளை இல்லையே என்று அவர் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இந்தியாவுக்குச் சென்று தீர்வு பெறலாம் என்று அவரது கணவன் கூறியிருந்த நிலையில் இப்படி நடந்துள்ளது. மனைவியின் தவறான முடிவு குறித்து கணவன் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணையை மேற்கொண்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ். குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) உட்பட செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற படகு உரிமையாளர் மற்றும் அவருடன் வேலைபார்க்கும் இருவரும், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தோனிஸ் மல்கன் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாகவும், இந்த தகவலை நயினாதீவு கடற்படையினருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தோனிஸ் மல்கனின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது. இதன்பின்னர், தோனிஸ் மல்கனின் மனைவி நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், கடற்படையின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்
ஐபிஎல் 11 வது இறுதிப்போட்டியில் வட்சனின் அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் அணித்தலைவர் டோனி பந்துவீச்சை தெரிவு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மாவும், ஹைதராபாத் அணியில் கலில் அஹமத் மற்றும் சஹா ஆகியோருக்கு பதிலாக கோஸ்வாமி மற்றும் சந்தீப் சர்மாவும் இடம்பிடித்தனர்.
இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார், அவரைத்தொடர்ந்து அணித்தலைவர் வில்லியம்சன் களமிறங்கினார்.
16-வது ஓவரில் பிராவோ வீசிய ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேற, தீபக் ஹூடா களமிறங்கினார்.
கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீச, கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
முடிவில் 20 ஓவர்களுக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது ஹைதராபாத், இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 179 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
11 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னா மற்றும் வாட்சன் கூட்டணி அமைத்து விளையாடினார்கள்.
16 பந்துகளை கடந்த பின்னர் வாட்சன் தனது அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
பின்னர் ஒரு ஓவரில் 27 ரன்கள் குவித்து ரசிகர்கள் ஆட்டம் போட வைத்தார். ஒரு புறம் ரெய்னா சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் வாட்சன் அதிரடி ரன்களை அள்ளிக்குவித்தது.
அதிரடி ஆட்டம் தொடர, 51 பந்துகளில் வட்சன் சதம் அடித்தார். அரங்கமே அதிர்ந்தது. ராயுடு தொடக்கத்தில் ரன்கள் எடுக்காமல் இருக்க, அவரும் பின்னர் ரன்களை சேர்க்க தொடங்கினார்.
வட்சனின் அதிரடியால் 179 என்ற இலக்கை சென்னை அணி 18.3 ஓவர்களில் எட்டியதையடுத்து, சென்னை அணி கோப்பையை வென்றது.
பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் திருமணம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்திய கோயிலில் நடைபெற்றது மெர்க்கலின் மாமா Johnson தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உருவான யோகா கலையின் மீது மெர்க்கலுக்கு மட்டுமின்றி அவரது தாய் டோரியாவுக்கும் அதிக ஈடுபாடு உண்டு.
மெர்க்கலின் தாய் டோரியா யோகா பயிற்றுவிப்பாளர் ஆவார். இதனால் இவர்கள் திருமணம் இந்திய கோயிலில் நடைபெற்றுள்ளது.
Yogi Paramahansa Yogananda என்பவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டப்பட்ட கோயிலில் வைத்துதான் டோரியா – தாமஸ் மெர்க்கல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
கேரளாவில் இருந்து கொழும்புக்கு 227 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதள விளக்கில் மோதியதால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சியிலிருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று மாலை கொழும்புக்கு புறப்பட்டு சென்றது.
ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியதையடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர், சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, நிலைமை சரிசெய்யப்பட்ட பின்னர் ஓடுதளம் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 18ம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் நினைவேந்தல் நிகழ்வினை செய்தமை தொடர்பில், குறித்த வங்கியின் முகாமையாளர் ஒருவரும் சிற்றூழியர் ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் வி.ஜனகன் ஆகிய நான் குறித்த வங்கியின் நடவடிக்கைக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
போர் நடந்து பல்லாயிரம் மக்கள் இறந்த இடத்தில் இருக்கும் தனியார் வங்கி, மக்களின் மன நிலையினைப் புரிந்துகொள்ளத் தவறியதா என்ற கேள்வியே என் மனதில் எழுகின்றது.
கிளிநொச்சியில் இயங்கும் இந்தக் கிளையில் இருந்த ஊழியர்கள் செய்தது நிறுவனம் ஒன்றின் வரையறைகளுக்குள் வரவில்லை என்றாலும், அதனைக் கையாளும் போது அங்கு உள்ள மக்களின் மனநிலையையும் கருத்தில் எடுத்திருக்க வேண்டும்.
அந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அந்தக் கொடிய போரில் தங்கள் உறவுகளை இழந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு மற்றவர்கள் போல் துக்கம் அனுஸ்டிக்க தேவை ஏற்பட்டிருக்கலாம்.
ஒருவேளை இதனை அந்த வங்கியின் தலைமை விரும்பாமல் இருந்தால் கூட, அப்பிரதேச மக்களின் உணர்வுளுக்கு மதிப்பளித்து அந்த ஊழியர்களை இடைநிறுத்தாது இந்த நிகழ்வு இனிவரும் காலங்களில் தங்கள் கிளைகளில் இடம்பெறாமல் தடுப்பதற்கான அலுவலக ரீதியான கட்டளையைப் போட்டிருக்கலாம்.
அது சரி வங்கியின் தலைமையே, நீங்கள் கூறிய அறிக்கையில் இனமத ரீதியான செயற்பாடுகளுக்கு எமது வங்கி ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளீர்கள்.
அப்படியாயின் கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கு ஏன் உங்கள் கிளைகளை அலங்கரிக்கிறீர்கள்? வெசக், பொசன் வரும்போது அலங்கரிப்பது மட்டும் அல்லாமல் உங்கள் ஊழியர்கள் தன்சல் (அன்னதானம்) வழங்குகிறார்களே? தைப்பொங்கலுக்கு பொங்குகிறீர்கள். சிங்கள, தமிழ் புது வருடத்துக்கு அந்த கொண்டாடங்களையும் செய்கின்றீர்கள்.
அந்த இடத்தில் மாபெரும் துயரச் சம்பவம் இடம்பெற்றதை நினைவுகூர்கிறார்கள். இதே போல் தானே சுனாமியால் மக்கள் இறந்ததும் நினைவுகூரப்பட்டது. அப்போதும் உங்கள் பல கிளைகள் இந்த அனுதாப நினைவுகூரலை செய்தார்கள். அது தவறாகவில்லையா? அப்போ தமிழர்கள் தங்கள் கொத்துக் கொத்தாக இறந்த உறவுகளை நினைவுகூர்ந்தால் தான் அது இனவாதமா?
இவர்கள் என்ன புலிகளின் மாவீரர் நாளையா அனுஷ்டித்தார்கள்? ஒரு சில இனவாத சக்திகளின் சிந்தனை போல் போரில் இறந்த தமிழர்கள் எல்லாம் புலிகள் என்கிறீர்களா? அப்போது தமிழர்கள் எல்லாம் புலிகளாக? பிறகு எதற்கு அந்தப் புலிகளின்(தமிழர்களின்) வைப்புக்கள், கணக்குகள் உங்கள் வங்கியில்?
அந்த பிரசேதங்களில் உங்கள் கிளைகள்தான் எதற்கு? இந்த நடவடிக்கையினை மீள நீங்கள் பெற்றுக்கொள்ளாவிட்டால் தமிழ் மக்கள் உங்கள் வங்கிக்கு எதிராக திரும்புவதினை நீங்கள் தடுக்க முடியாத விடயமாக மாறும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
இந்த விடயம் தொடர்பில் தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், எமது கட்சியின் தலைவருமான கௌரவ அமைச்சர் மனோ கணேசனுடன் பேசியுள்ளேன்.
இந்த நடவடிக்கையானது நிச்சயமாக நல்லிணக்கத்துக்கான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு. மிக விரைவில் இந்த நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் குறித்த தரப்பினருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
வி.ஜனகன்
அமைப்புச் செயலர்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி
வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று (26.05.2018) காலை 10.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்கித்தினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் க.இராஜலிங்கம் தலைமையில் வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்று இருந்தது.
இதன்போது வர்த்தக சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மூடியதன் காரணமாக வவுனியா வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டதோடு, வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள், அரச தனியார் பேருந்து சங்கங்கள் இணைந்து முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்வினை பெறுவதற்கான ஒர் ஒழுங்கினை செய்து தருமாறும் கேட்டிருந்தனர்.
அத்துடன் வவுனியாவில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் வவுனியா நகரில் உள்ளுர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்திற்கு பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் ஏனைய கடைகளை வவுனியாவில் வாழ்கின்ற மூவின மக்களின் சனத்தொகையின்படி விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமையவுள்ள கடைத்தொகுதியின் அருகாமையில் 80 பேஜ் காணி வர்த்தக சங்கத்திற்கு ஒதுக்கித்தருமாறும் வர்த்தக சங்கத்தினால் கேட்கப்பட்டிருந்தது.
வர்த்தக சங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க முதலமைச்சருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக வடமாகாண சபை மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வவுனியா வர்த்தக சங்க தலைவர் க.இராஜலிங்கம், செயலாளர் கோ.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை ஒன்று நேற்று (26.05) வடமாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கே.செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையானது வவுனியா பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் சங்கங்கள், ஆசிரியர், மாணவர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை வினோத நோயால் உயிரிழந்த நிலையில் அது குறித்த வேதனையை குழந்தையின் தாய் பகிர்ந்துள்ளார்.
பவுல் (34) மற்றும் மெலிசா மெட் (31) தம்பதியின் மகன் வில்லியம் (1). வில்லியமுக்கு சில வாரங்களுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது குழந்தை வில்லியமுக்கு sepsis எனப்படும் சீழ்ப்பிடிப்பு சம்மந்தான நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வில்லியமுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நோய் பாதிப்பு குழந்தைக்கு முற்றிய நிலையில் சமீபத்தில் வீட்டின் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போதே அவன் உயிரிழந்துள்ளான்.
இது குறித்து வில்லியமின் அம்மா மெலிசா கூறுகையில், வில்லியம் உயிரிழந்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.
இரவு தூங்குவதற்கு முன்னர் அவனிடம் குட்நைட் செல்லம், ஐ லவ் யூ என கூறினேன், இது தான் அவனிடம் நான் பேசிய கடைசி வார்த்தை என அப்போது எனக்கு தெரியாது.
காலையில் எழுந்து பார்த்தபோது வில்லியம் சலனமற்ற நிலையில் கிடந்தான், இதையடுத்து மருத்துவரை உடனடியாக அழைத்த நிலையில் அவனை சோதனை செய்த மருத்துவர்கள் வில்லியம் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தார்கள்.
என் வாழ்க்கையில் மிக சோகமான மற்றும் மோசமான நாள் அது தான் என சோகத்துடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வேறு நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த பெண் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி எல்லையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
Guatemalan நாட்டை சேர்ந்த Claudia Patricia Gomez Gonzalez (20) என்ற பெண் டெக்சாஸ் எல்லைக்கு வந்துள்ளார். அப்போது எல்லையில் இருந்த பொலிஸ் அதிகாரி அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வந்தார் என கூறி விசாரித்துள்ளார்.
இதையடுத்து Claudia மற்றும் உடனிருந்த மற்ற மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார்.
அப்போது Claudia காவலரை எதோ ஒரு பொருளை கொண்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
பின்னர் அருகிலிருந்த மற்ற காவலர்கள் Claudia-வுக்கு மூச்சு உள்ளதா என சோதித்ததோடு முதலுதவி சுவாச சிகிச்சையளிக்க முயன்றுள்ளார்கள்.
இந்த காட்சியை அந்த பகுதியில் வசித்து வரும் மார்டா மார்டினீஸ் என்ற பெண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அப்போது ஏன் அந்த பெண்ணை சுட்டு கொன்றீர்கள் என பொலிசிடம் அவர் கேட்டுள்ளார்.
இதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலரின் பெயர் இன்னும் தெரியாத நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதனிடையில் Claudia அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தாலும் புலம்பெயர்பவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என Guatemalan அதிகாரிகள் கூறியுள்ளார்.
இந்நிலையில் Claudia சுட்டு கொல்லப்பட்டதற்கு அவர் உறவினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Claudia-ன் அத்தை டோமிங்க விசிண்டீ கூறுகையில், Claudia பட்டப்படிப்பு முடித்த நிலையில் சொந்த நாட்டில் வேலை கிடைகவில்லை.
வறுமையை சமாளிக்க முடியாத அவர் அமெரிக்காவுக்கு வந்தார். புலம்பெயர வருபவர்களை மிருகங்களை போல நடத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.
சக்திவாய்ந்த மற்றும் முன்னேறிய நாடு என்பதால் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலே இருந்த நிலையில் குழந்தை பெற்றெடுப்பதற்கு சில நிமிடங்கள் முன்னரே அதை உணர்ந்துள்ளார்.
பரா ஹேஜ் என்ற பெண் தனது வருங்கால கணவர் டெரிக் உடன் வசித்து வந்த நிலையில் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இதை அவர் உணரவேயில்லை, பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வயிற்று வலி, கால்கள் வீங்குவது போன்ற அறிகுறிகள் ஹேஜ்ஜுக்கும் தோன்றிய நிலையில் மருத்துவரிடம் காட்டியுள்ளார்.
ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்களே கண்டுப்பிடிக்காத நிலையில் சாதாரண வயிற்று வலி என கூறி மருந்து கொடுத்துள்ளனர். அவரின் வயிறு வீங்கிய நிலையில் அதை உப்பசம் என நினைத்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தாங்கமுடியாத அளவுக்கு ஹேஜ்ஜுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது தான் மருத்துவர்கள் ஹேஜ் நிறைமாதம் கர்ப்பமாக இருப்பதையும், இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதையும் கண்டுப்பிடித்தார்கள்.
இதையடுத்து தீவிர கண்காணிப்புக்கு பின்னர் ஹேஜ் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதிர்ஷ்டவசமாக வயிற்றில் உள்ள குழந்தை எந்த கவனிப்பும் இல்லாமல் இருந்த நிலையிலும் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சில பெண்கள் வாயு அல்லது செரிமான கோளாறால் வயிறு வீங்குவதாக நினைக்கிறார்கள்.
அதே போல குண்டாக இருக்கும் பெண்கள் சிலர் தாங்கள் கர்ப்பமாவதால் ஏற்படும் கூடுதல் எடையை சரியாக கவனிப்பதில்லை என கூறியுள்ளனர்.
இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கோண்டா அப்பன்னா (32). இவர் மனைவி நாகமணி (27). அப்பன்னா கடந்த வாரம் தனது தந்தை நூகராஜுவுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அப்பான்னாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது.
இதே மதுவை நூகராஜுவும் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் அப்பன்னாவின் மனைவி நாகமணி தனது கள்ளக்காதலன் வரதிகுமார் (22) உடன் சேர்ந்து மதுவில் சயனைடு கலந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் நாகமணி மற்றும் வரதிகுமாரை கைது செய்தனர்.
நாகமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் வரதிகுமாரை சந்திக்க வேண்டும் என நினைத்தால் மது அல்லது உணவில் அப்பன்னா மற்றும் நூகராஜுவுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிடுவேன், இந்நிலையில் எங்கள் கள்ளக்காதல் விவகாரம் அப்பன்னாவுக்கு தெரிந்த நிலையில் கண்டித்தார்.
இதையடுத்து அவரையும் நூகராஜுவையும் கொல்ல முடிவெடுத்து மதுவில் சயனைடை நானும், வரதிகுமாரும் சேர்ந்து கலந்து கொடுத்தோம் என கூறியுள்ளார். பொலிசார் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் தாய் வனிதா, மகளை இழந்த துக்கம் தாங்காமல் கதறிக் கொண்டிருக்கும் சம்பவம் பார்ப்போரின் மனதை உருக்குகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், அதில் ஒருவர் தான் 18 வயதான ஸ்னோலின்.
தனது தாயுடன் போராட்டக்களத்துக்கு சென்றவரே குறித்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மீனவ குடும்பத்தை சேர்ந்த ஸ்னோலின், தூத்துக்குடியில் போராட்டம் நடைபெறுவதை பார்த்து, தனது தாயை அழைத்துக் கொண்டு களத்துக்கு சென்றுள்ளார்.
சாப்பிடறது, தூங்குறது மட்டும் தான் வாழ்க்கையாம்மா? நம்மளும் போராடணும் என கூறி தாயை அழைத்துச் சென்றுள்ளார்.
100வது நாள் போராட்டம் பெரிய அளவில் உருவெடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த போது இருவரும் பிரிந்து விட்டார்களாம். துப்பாக்கி குண்டு சத்தத்தால் பயந்து போன வனிதா, வீடு வந்து சேர்ந்துள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் ஸ்னோலின் வீடு திரும்பவில்லை, தொலைக்காட்சியில் பார்த்த போது மகள் இறந்து போனது தெரியவந்ததாம்.
பதறிப்போய் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, பின்மண்டையில் குண்டடிபட்டு வாய் வழியா வெளியே வந்திருந்ததாம், இவ்வளவு கோரமா ஏன் கொல்லணும், ஆலையில் பாதிப்பு இருப்பதால் தானே போராடினோம், இப்படி சுட்டுட்டாங்களே, அந்த ஆலையை மூடினால் தான் என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் என அனுதினமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்துடன் நீர் கொண்டு செல்லும் பவுசர் ஒன்று மோதியுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான A-320 எயார் பஸ் ரகத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானம் இந்தியாவில் இருந்து பயண நடவடிக்கைகளை நிறைவு செய்து விட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
பின்னர் இந்த விமானத்திற்கு நீர் கொண்டு சென்ற பவுசர் ஒன்று அந்த விமானத்தின் பின் பக்கத்தில் மோதியுள்ளது. இதனால் ஒன்றரை கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நீர் பவுசரை செலுத்திய ஸ்ரீலங்கன் விமான சேவை சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாரதி தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.